நெடுமாறன் அறிக்கைகள் : கைதாகும் முன்பு! கைதான நொடியில் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:08
கைதாகும் முன்பு
சிறைச்சாலை என்ன செய்யும்?

'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை

மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”

எனப் பாடினார் புரட்சிக் கவிஞர்.

கொடிய பொடா சட்டத்தின் கீழ் ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ, புதுக்கோட்டை பாலாணன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொழிவழித் தேசிய உணர்வாளர்களைத்தான் அன்று தடாச் சட்டம் குறி வைத்தது, பொடா சட்டமும் அவர்களயே குறி வைக்கிறது, தடாவும், பொடாவும் ஒன்றே.

குசராத் மாநிலத்தில் அரக்கத்தனமான படுகொலைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை ஒருவர் மீது கூட பொடா பாயவில்லை. பாய மறுக்கிறது.

மனித உரிமை ஆர்வலர்கள், தேசிய இன உணர்வாளர்கள் தவறாது குறி வைக்கப்படுகின்றனர்.

பொடா சட்டத்திற்கு எதிராக மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். பொடா சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது. தேசிய இனங்களின் வாழ்வுரிமையை நசுக்குவது. எனவே சகல ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கொடிய பொடாவை எதிர்த்து அணி திரள வேண்டும்.

நண்பர்கள் வைகோ, பாவாணன் மற்றுமுள்ளவர்களுக்குச் சிறை வாசமும் புதிதல்ல. அடக்குமுறைகளைச் சந்திப்பதும் முதல் தடவை அல்ல.

புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்களாக அவர்கள் வெளியே வருவார்கள். முன்னிலும் வீறு கொண்டு உலா வருவார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களின் தியாகம் தமிழ்கூறும் நல்லுலகால் மதித்துப் போற்றப்படும்.


கைதான நொடியில்

பொடா சட்டம் வரும்போதே தமிழ்த்தேசிய உணர்வாளர்களூக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம்.

அதற்கிணங்க கைது செய்யப்பட்டிருக்கிறேன்

உலகத்தமிழர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக இந்தச் சிறைவாசம் என்றால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

இயக்கத் தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் தங்கள் கடமைகளைத் தொடர்ந்து செய்து வரவேண்டுகிறேன். எதற்கும் அஞ்சவேண்டாம்.

அடக்குமுறைகள் ஒரு போதும் வென்றதில்லை.

உரிமை காக்கும் வீரர்கள் தோற்றதாக வரலாறு இல்லை.