ஆழக் கால்பதித்த சீனா அகலமாகவும் கால் பதிக்கிறது அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 01 செப்டம்பர் 2013 14:23

அம்பாந்தோட்டையில் கால் பதித்த சீனா, கொழும்பிலும் தனது அகலக்காலைப் பரப்பியுள்ளது.
வருடமொன்றிக்கு 2.4 மில்லியன் கொள்கலன்களை கையாளக்கூடிய வகையில் கொழும்புத் துறைமுகத்தில் பாரிய கொள்கலன் மையமொன்றினை சீன அரசின் நிறுவனமான "சைனா மெர்சண்ட் ஹோல்டிங் இன்டர் நேசனல்' நிர்மாணித்துள்ளது.


500 மில்லியன் டாலர் முதலீட்டில் 2011 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட
இம் மையத்தின் 85% பங்கு சீன நிறுவனத்திற்கு சொந்தம். மீதமுள்ள 15% பங்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று உத்தியோகபூர்வமாக இம் மையம் திறந்து வைக்கப்பட்டது.
இவை தவிர, இதற்கு அருகாமையில் பிறிதொரு கொள்கலன் மையத்தினையும் துறைமுக அதிகாரசபை நிர்மாணித்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக இக் கொள்கலன் மையம், அடுத்த வருட ஆரம்பத்தில் செயற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு ஆசியாவிற்கும், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்குமிடையே கேந்திர முக்கியத்துவமிக்க மையப்புள்ளியில் நிலைகொண்டுள்ள இக் கொள்கலன் துறைமுகம், சீனாவின்  கடல் போக்குவரத்துப் பாதையில் ஒரு முத்தாக அமையும். ஏற்கெனவே சென்ற ஜனவரியில், பாகிஸ்தானின் குவடோர் துறைமுகத்தைக் கையேற்கும் ஒப்பந்தமொன்றிற்கான அத்திவாரம் இடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள இந்த குவடோர் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிகளுக்கு சீன அரசே முதலீடு செய்தது.
பின்னர் அத் துறைமுகம்  சிங்கப்பூர் நிறுவனமொன்றினால் தற்போது நிர்வகிக்கப்படுகிறது.
மேற்குலகப் புவிசார் அரசறிவிய லாளர்களால்  முன்வைக்கப்பட்ட "இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் முத்துமாலை வியூகம்' என்கிற மூலோபாயக் கருத்துருவத்தின் அடுத்த படிநிலையை, துறைமுகங்களை கையேற்க முற்படும் சீனாவின் நகர்வுகளிலிருந்து பார்க்க வேண்டும்.
வளர்ந்து வரும் ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்போது, மொத்த உள்ளூர் உற்பத்தி குறைவாகவுள்ள நாடுகளில்தான் சீனாவின் முதலீடுகள் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கின்றது.
வெளிப்பார்வைக்குப் பூதாகரமாகத் தெரிவது துறைமுக அபிவிருத்திக்கான முதலீடு மட்டுமே. ஆனால், உள்ளூர் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களிலும், மின்சார உற்பத்தியிலும், கனரக தொழிற்சாலை
(திருக்கோணமலை) நிர்மாணிப்பிலும் சீனாவின் முதலீடுகள் காத்திரமான பங்கினை வகிக்கிறது.
மலாக்கா நீரிணைக்கு அண்மித்த நாடுகளில், 'கிழக்கு நோக்கிய பார்வை' என்கிற புதிய வியூகத்துடன், அமெரிக்க ஆதரவுடன் நுழையும் இந்தியாவின் மூலோபாய நகர்வினை சமநிலைப்படுத்தும் வகையில், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கனதியான முதலீட்டு ஆதிக்கத்தை முன்னெடுக்க சீனா முற்படுவது போல் தெரிகிறது.
2005-லிருந்து இற்றைவரை 3.7 பில்லியன் டாலர்களை இலங்கையில்
சீனா முதலீடு செய்துள்ளது. கூடுதலான நிதியினை சீனாவின் அரச நிறுவனமான 'எக்ஸிம்' வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பாந்தோட்டைத் துறைமுகம், இரண்டாவது சர்வதேச விமான நிலையம் (மாத்தல) மற்றும் இலங்கையின் முதலாவது நான்கு பாதைகள் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை என்பன எக்ஸிம் வங்கியின் உபயத்தில் கட்டப்பட்டவையே.
இலங்கையின் சரிந்துவரும் பொருளாதார நிலைமையினையும், அதன் எதிர்கால இயங்குநிலை எந்தப்புள்ளியில் தேக்கமடையும் என்பதையும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரிச் செயலாளர் ஜெயசுந்தராவை விட, சீன வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் கவனமாகக் கணித்து வைத்துள்ளார்கள்.
அதாவது, சர்வதேச தேயிலைச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, ஐரோப்பாவின் பொருளாதார மந்த நிலையினால் உல்லாசப்பயணத் துறையில் ஏற்படும் சரிவு,  ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழப்பினால் ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்ட முடக்கமும் தொழிற்சாலைகளின் மூடுவிழாக்களும்,  ஈரான் மீதான
அமெரிக்காவின் எண்ணெய்த்தடையால் உருவாகும் எரிபொருள் பற்றாக்குறை, வங்குரோத்து நிலைமையில் தள்ளாடும் அரச நிறுவனங்கள், மத்திய கிழக்கில் பரவலாக ஏற்பட்டுள்ள அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியினால் அங்கு பணிபுரியும் குடிமக்களால் வரும் வருவாயில் வீழ்ச்சி என்கிற, திறைசேரியின் வருவாய் ஊற்றுக்களை ஆழமாகப் பாதிக்கும் பல விடயங்களை சீனா
தனது சொந்த ஆய்விற்கு உட்படுத்தியிருக்கும். அண்மையில் வெளியாகிய சீனாவின் நீல நூலில் சொல்லப்படாத விவகாரங்களாக இவை இருக்குமென நம்பலாம்.
இதனடிப்படையில், தனது எதிர்கால பிராந்திய நலன்சார்ந்த துறைகளில் முதலீடுகளை அதிகளவில்  குவிக்கும் யுக்தியை சீனா பிரயோகிப்பது போலுள்ளது.
துறைமுக அபிவிருத்தி ஊடாக வரும் மாற்றங்கள்,  மற்றவர்கள் தம்மில் தங்கி நிற்கும் சூழலை உருவாக்கும் என்று இலங்கை நம்புவதை சீனா கவனத்தில் கொள்ளும்.
வெளிநாட்டு நேரடி முதலீடு, துறைமுகங்களைக் கடந்து உள்ளே நுழையாவிட்டாலும், துறைமுகத்திலும் அதனை அண்டி உருவாக்கப்படும் சுதந்திர வர்த்தக வலயங்களிலும் வந்து குவியுமென்று மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது.
உதாரணமாக, 2 பில்லியன் டாலர் பெறுமதிமிக்க தனியார் முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு துறைமுக அபிவிருத்தி பெரிதும் உதவியிருப்பதாக, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் விக்கிரம அண்மையில் தெரிவித்த கருத்து, இந்த எதிர்பார்ப்பினை உறுதி செய்கின்றது.
இதனடிப்படையில், கடந்த வாரம் சுதந்திரத் துறைமுகங்களாக
அம்பாந்தோட்டையும், கொழும்பும் அரசால் பிரகடனப்படுத்தப்பட்டதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு சட்ட மூலத்தின் பிரகாரம் இவை சுதந்திர துறைமுகங்களாக அறிவிக்கப்பட்டதோடு, கட்டுநாயக்கா மற்றும் கொக்கல ஏற்றுமதி வலயம், மாத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என்பன, வரி அறவிடப்படாத சரக்குகளை தேக்கி வைக்கும் (கிடங்கு) இடங்களாக (bர்ய்க்ங்க் ஹழ்ங்ஹ) மாற்றப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் முதலீடு செய்பவர்கள், தொழிற்சாலைகளை அமைப்பவர்கள் அங்கு உற்பத்தியாகும் பொருட்களை மீள் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் இப்பொருட்களை நாட்டின் உள்ளூர் சந்தையில்  விற்பனை செய்ய முடியாது என்கிற நிபந்தனையும் உண்டு.
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைசாத்திட்ட இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும், ஆசிய - பசுபிக் வர்த்தக உடன்பாட்டில் இணைந்தவர்களும், இச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் நிதியமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் எக்கநாயக்க.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தோடும் இவ்வகையான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொள்ள இலங்கை பல காலமாக முயற்சித்து வருவதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனாலும் ஒன்றியத்துடன்  உடனான நீண்ட உரையாடல்களின் பின்னர், இந்தியாவானது இதேவிதமான வர்த்தக உடன்பாடு ஒன்றினை விரைவில் மேற்கொள்ளப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆகவே, விரிந்த பார்வையூடாக இந்த மாறுதல்களை அவதானித்தால், திறைசேரியில் அபரிமிதமாக குவிந்திருக்கும் டாலர்களின் சொந்தக்காரராகிய ஆசியாவின் பொருண்மிய ஜாம்பவான் சீனா, இலங்கை  அரசின் பலவீனமான பக்கங்களைத் துல்லியமாக கணித்து வைத்திருக்கும் அதேவேளை, அந்தப் பலவீனங்களைத் தனதாக்கிக் கொள்ளும் நகர்வினை விரைவுபடுத்துகிறது என்பதை மறுக்க முடியாதுள்ளது.
- வீரகேசரி