தமிழர்களே! வருக தஞ்சைக்கு - பேராசிரியர் அறிவரசன் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 16:00

அக்கரை ஈழத்தில் நேர்ந்த அவலத்தை
இக்கரையில் கண்டுபே ரெழுச்சி பெறுதற்கு

நெஞ்சில் கனல்ஏந்தி நேராகச் சென்றிடுவோம்
தஞ்சை மாநகரில் தமிழரெலாம் கூடிடுவோம்

முள்ளிவாய்க் கால்நினைவு முற்றத்தைக் கண்டுநம்
உள்ளத்தில் பகைவெல்லும் உறுதியினை ஏற்றிடுவோம்

இன்றமிழ் உறவுகளை இரக்கமிலாச் சிங்களவர்
கொன்றொழித்த கொடுமையினைச் சிற்பமாய் ஓவியமாய்க்

கண்டு மனம்பதைத்துக் கலக்கமுடன் நீள்நிலத்தில்
உண்டோ இதுபோல் ஒருகொடுமை என்றேங்கி

இன்றுள்ள வேற்றுமைகள் இல்லாமல் நாம்எல்லாம்
ஒன்றாகித் தமிழ்ஈழ விடுதலைக்கே உரமேற்றத்

தஞ்சையைச் சென்றடைவோம் "தமிழர்களே வருக''என
நெஞ்சார அழைக்கின்றார் நெடுமாறன், உறவுகளே!

முள்ளிவாய்க்கால் பின்னடைவால் தமிழ்வீரம் முடியவில்லை
துள்ளிஎழுந் தோம்என்று உள்ளத் துடிப்புடனே

இனமானம் காத்திடவும் இனப்பகையை வீழ்த்திடவும்
துணிந்தோம் எனமுழங்கித் தோள்தட்டித் தஞ்சையிலே

இணைந்திடுவோம் வாரீர் எழுந்து