தோழர் நாக. இரகுபதி மறைவு அச்சிடுக
திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013 12:21

மயிலாடுதுறை தோழர் நாக. இரகுபதி அவர்கள் காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.


தூய்மையான தொண்டுள்ளம், இன்னார் இனியர் என்று பாராமல் அனைவரிடமும் நட்பு பாராட்டும் நல்லவர். மயிலாடுதுறை பகுதியில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைவரையும் இணைத்து போராடும் வல்லமை வாய்ந்தவர்.

Naagaragupathy
நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் திறப்பு நிகழ்ச்சியில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். பிற மாநில தமிழர் கருத்தரங்கிற்கு நெறியாளராக இருந்து சீராக இயக்கினார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தபோது திடீரென்று மயங்கி சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சென்று நாம் பார்த்த போது நினைவிழந்த நிலையிலேயே இருந்தார். அந்நிலையிலேயே அவர் மறைந்தார்.

நான் மேற்கொண்ட பணிகள் எதுவாயினும் அதற்குத் தோள்கொடுத்து துணை நின்றார். 26 தமிழர்கள் உயிர்காக்கும் பிரச்சினை, தமிழீழப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிதி திரட்டுதல் போன்ற எல்லாவற்றிலும் முன்நின்று அரும்பாடுபட்டார். திறப்பு நிகழ்ச்சியின்போது அதற்காகத் திரட்டிய நிதியையும் மீதமுள்ள பற்றுச்சீட்டுகளையும் பத்திரமாக என்னிடம் ஒப்படைத்த அவரது நேர்மை முன்மாதிரியாக அனைவராலும் பின்பற்றத் தக்கது.

திருச்சி சிறையில் இருந்த போது அவரது மறைவுச் செய்தி அறிந்து சொல்லொண்ணாத் துயரத்தில் அனைவரும் ஆழ்ந்தோம். அங்கேயேகூடி அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம் தோழர் நாக. இரகுபதியைப் போன்ற உண்மையும் நேர்மையும் எதையும் எதிர்பாராது தொண்டாற்றும் தூய உள்ளமும் நிறைந்த ஒருவரை இனி காண்பது அரிது. அவரது இழப்பு மயிலாடுதுறை பகுதிக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்திற்கு நேரிட்ட பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லாவகையிலும் துணை நின்ற அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவருடைய துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.