முள்ளிவாய்க்கால் முற்றம் முதலிடம் பெற்றிட அள்ளி வழங்கினேன் வாழ்த்து - ஆ. நெடுஞ்சேரலாதன் அச்சிடுக
வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014 15:06

அல்லும் பகலும் அயரா துழைத்தீர்கள்
வெல்லும் செயலால் புலிபோல் விரைந்தீர்கள்
நல்லவர் வல்லவர் நாளும் துணைநிற்கப்
பல்லவர் பாதை சென்றீர் புலியானீர்.

காலக் காட்சி கற்கள் காட்டும்
கோலக் கூடம் கொள்கை காட்டும்
ஞாலம் போற்ற முற்றம் நிற்கும்
பாலம் போன்று பாது காக்குமே!

வாடிய மக்கள் வளங் காண
வாழ்நிலை முற்றம் வழங்கிட்டீர்

பாடிய பண்கள் பரவல்போல்
பார்புகழ் முற்றம் பரப்பிட்டீர்!

தேடிய செல்வம் தெளிநீராய்த்
தேங்கிய முற்றம் தெரிவித்தீர்!

கூடிய மக்கள் குலம்மீட்போம்!
கொற்றவர் முற்றக் கொடி காப்போம்!

கடுங்கயவர்

எந்தவித நெறிமுறையும் ஏற்கா துங்கள்
எண்ணத்தைக் கேட்காமல் ஏட்டி யாகச்
செந்தமிழர் கலங்கரையாம் முள்ளி வாய்க்கால்
சிறந்திருந்த முன்பகுதி இடித்துத் தள்ளி
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி விட்ட வர்கள்
வீழ்ச்சி பெறச் சூளுரையை ஏற்றுக் கொள்வோம்
கந்தகமாய்க் கனல் மழையாய்க் காற்றாய் வீசிப்
கடும்கயவர் பகையொழித்து வெற்றி கொள்வோம்!