தமிழ்த் தேசியக் காப்பியமான சிலப்பதிகாரமே என்னைக் கவர்ந்த இலக்கியம் - பழ. நெடுமாறன் |
![]() |
சனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:24 |
மனிதப் பண்பாட்டு வாழ்வின் இலக்கணம் கூறுவது திருக்குறள். இந்த இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த இலக்கியம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமே ஆகும்.
சங்க இலக்கிய மரபின் விரிவாக்கமாக இளங்கோவடிகள் இந்தக் காப்பியத்தைப் படைத்துள்ளார். "தமிழ் இலக்கிய வகைமை வரலாற்றில் எந்தவொரு இலக்கியத்துடனும் ஒப்பிட்டுக் கூறமுடியாத வகையில் ஒரு தனித்த இலக்கியமாக சிலப்பதிகாரம் விளங்குகிறது.'' என எனது பேராசிரியர் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார். சிலப்பதிகாரக் காப்பியத்தில் சோழன் கரிகால் பெருவளத்தான், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் ஆகிய மன்னர்கள் வருகிறார்கள். ஆனால் இக்காப்பியம் இம்மன்னர் மூவரைப் பற்றியதன்று. இது முடிமக்கள் காவியமல்ல. முடிமக்களின் வரலாறே ஆதி காவியங்களாக பிறநாடுகளில் அமைந்திருக்க குடிமக்கள் வரலாறே ஆதிக்காப்பியமாக தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. "கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோரின் வாழ்க்கைச் சித்திரமே இக்காவியமாகும். உலகிலேயே குடிமக்கள் காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம் ஒன்றே'' என பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ. அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார். அடித்தள மக்களின் நாட்டார் பாடல்களை காப்பியத்தோடு இளங்கோ அடிகள் இணைக்கிறார். கானல் வரி, வேட்டுவ வரி, ஆச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகியவை அடித்தள மக்களின் குரலாக வெளிப்படுகின்றன. மக்கள் இலக்கியப் பாடல்கள் காப்பியத்தின் அடித்தளமாக அமைந்துள்ளன. சிலப்பதிகாரம் கவிதை நயம் பற்றி எடுத்துக்கூற எழுந்த நூல் அல்ல. அக்கால தமிழர் நாகரிகத்தை எடுத்துக்காட்டும் வரலாற்று நூல் ஆகும். 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தமிழகம் என்ற தலைப்பில் கனகசபை பிள்ளை எழுதிய நூல் சிலப்பதிகாரத் தமிழகத்தைப் பற்றியதே ஆகும். சோழ, பாண்டிய சேர நாடுகள் ஆகிய தமிழகத்தின் முக்கூறுகளின் தலைநகரங்களின் பெயர்களான புகார், மதுரை, வஞ்சி, ஆகியவற்றை மூன்று காண்டங்களின் தலைப்புப் பெயர்களாக இளங்கோவடிகள் சூட்டியுள்ளார். தமிழகத்தின் இம்மூன்றுக் கூறுகளையும் இணைக்கும் தேசியத் தெய்வமாக கண்ணகி விளங்குகிறாள். சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழ்க் காப்பியமாகும். இளங்கோ கண்ட இலட்சியக் கனவின் கவிதை வடிவம். கண்ணகி என்னும் கற்பு நல்லாளை தெய்வமாக்கும் சேரனின் செயலைப் பாடுவதே அவரது நோக்கமாகும். தமிழ்த் தேசிய தெய்வமாக கண்ணகியைப் படைத்து பத்தினி தெய்வ வழிபாட்டை இளங்கோவடிகள் தனது நூலின் மூலம் தொடக்கி வைத்தார். காப்பியக் காலத்தினை அடுத்து உருவாகிய பக்தி இலக்கியக் காலம் சமயப் பூசல் மலிந்த காலமாகும். தொலைநோக்கோடு வரப்போவதை உணர்ந்து சமயங்களுக்கு அப்பால் தேசியத் தெய்வம் ஒன்று தமிழர்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து இளங்கோவடிகள் கண்ணகியைப் படைத்தார். இளங்கோவடிகள் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய எல்லா சமயங்களையும் ஒப்ப மதித்து தம் நூலில் விளக்கிய பாங்கு அவரது சமயப் பொறையைக் காட்டும். இந்திர விழாவில் எல்லா சமயத்தினரும் கலந்து கொண்டு தம் தம் கடவுளரை வழிபாடு செய்தனர். இந்திர விழா ஒரு குறிப்பிட்ட சமய விழா அல்ல. இளங்கோவடிகள் எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பத்தினி வழிபாட்டினை முன்னிறுத்துகிறார். "கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது மாதவியோ அவளை "குலப்பிறப்பாட்டி'' என புகழ்கிறாள். "கொங்கச் செல்வி, குடமலையாட்டி, இக்காப்பியத்தின் முடிபாக பத்தினித் தெய்வ வழிபாட்டினை இளங்கோவடிகள் வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் பிற வழிபாட்டிற்கு முரணாகாமல் எவர் மனமும் கோணாமல் இளங்கோவடிகள் கூறிப்போகிறார். கதை மாந்தர்களில் பலரும் பல சமயத்தவர். கோவலன் - சாவக நோன்பி இங்ஙனம் கதை மாந்தர்கள் பலரும் வெவ்வேறு சமயத்தைப் பின்பற்றினாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தமிழ்த் தெய்வமாக கண்ணகியை உருவாக்குகிறார் இளங்கோவடிகள். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் அவ்வழிபாடு மாரியம்மன் வழிபாடாகத் திரிந்தது. ஆனால், இன்னமும் பழம் சேர நாடான கேரளத்தில் பகவதி வழிபாடாக நின்று நிலவுகிறது. கர்நாடகத்தில் மங்கள தேவி வழிபாடாக நின்று நிலவுகிறது. ஈழப் பகுதியில் இன்னமும் கிராமம் தோறும் கண்ணகி கோவிலும் வழிபாடும் உள்ளன. சிங்களரும் பத்தினித் தெய்யோ என்ற பெயரில் கண்ணகியை வழிபடுகிறார்கள். அனுராதபுரத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான பெரஹரா என்பது இரண்டு யானைகள் மீது இரண்டு தங்க அம்பாரிகள் வைக்கப்பட்டு ஒன்றில் புத்த பெருமானின் பல்லும், மற்றொன்றில் கண்ணகியின் காற்சிலம்பும் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் வழிநெடுக நின்று வழிபடுகிறார்கள். கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து கண்ணகி சீறுகிறாள். தீமையை ஒடுக்கும் நெறி தோன்றுகிறது. ஆனால், இறுதியில் மாறுகிறது. வாழ்த்துக் காதையில் "தென்னவன் தீதிலன் தேவர்தன் கோவில் - என கண்ணகி கூறுகிறாள். பாண்டியன் மேல் அவளுக்கு இருந்த சினம் பறந்தோடிப்போகிறது. அவனைத் தன் தந்தை என்கிறாள். கண்ணகி தெய்வத்தன்மை அடைந்ததற்கு இதுவே சான்றாகும். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் போன்ற நூல் அதற்குப் பின் தமிழில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். காப்பியத்தின் ஊடே இசை, இலக்கண செய்திகளை பதிவு செய்த ஓர் இலக்கிய ஆசிரியனை உலக இலக்கியங்களில் காண இயலவில்லை. சிலப்பதிகாரம் தமிழிலக்கிய வரலாற்றில் திருப்புமுனையான நூல். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தன்உணர்ச்சி தனிப்பாடல்களாகும். ஆனால், சிலப்பதிகாரம் அவற்றின் விரிவாக்கமாக ஒரு நீண்ட தொடர்நிலைச் செய்யுளாக, காப்பியமாக உருவாகியுள்ளது. சங்க மரபின் விரிவுக் காப்பியம் அது. சிலப்பதிகாரத்தின் சிறப்பை அடுக்கிக்கொண்டே போகலாம் என முனைவர் க. கைலாசபதி கூறுகிறார். 1. தலையாய முத்தமிழ்க் காப்பியம் தமிழர் தம் பண்பாட்டு வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் ஒருங்கேகூறும் ஒப்பிலாத நூலான சிலப்பதிகாரமே என்னை மிகவும் கவர்ந்த இலக்கியமாகும். (தினமணி நாளிதழும் சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய தமிழ்த் திருவிழாவில் ஆற்றிய உரை) |