துரோகம் செய்தது யார்? - பழ. நெடுமாறன் |
![]() |
வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:46 |
"ராஜீவ்காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன் ராஜீவ்காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் கூறியுள்ளார்.
பிரபாகரனை ராஜீவ்காந்தி ஏமாற்றினாரா? அல்லது ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை? எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்? திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகிவிடாது. 1987ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாள் யாழ்ப்பாணத்திற்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ்காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே. நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள். பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள். இந்திய-இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதின் காரணத்தை எம்.ஜி.ஆர். கேட்டார். பிரபாகரனும், பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள். அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர். "இந்தப் பிரச்சினையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ?'' அதற்கு எனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார். அதற்குப் பிறகு பிரபாகரனை தானே சந்தித்துப் பேசுவது என ராஜீவ் காந்தி முடிவு செய்தார் அதற்கிணங்க 1987 ஜூலை 28ஆம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அதிகாரிகள் அழைத்துச் சென்றார்கள். அவர்களிடம் ராஜீவ்காந்தி மனம்திறந்து பேசினார். "உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதிலுள்ள குறைபாடுகளைக் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். பாலசிங்கம் உடன்பாட்டில் உள்ள குறைகளை விளக்கமாகச் சுட்டிக்காட்டினார். "ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப்பகிர்வு செய்வதென்பது இயலாத காரியமாகும். மேலும் மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது. எனவே இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று கூறினார். அதற்கு ராஜீவ்காந்தி "உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் எடுத்த முடிவையோ கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்த உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார். இறுதியாக வட-கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு அதில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விசயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார். தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல்துறை நிலையங்களை திறக்கக்கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார். "ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்சினையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும். முழுமையாக ஒப்படைக்கவேண்டியதில்லை'' என ராஜீவ் கூறினார். இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில் அருகேயிருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம் "ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடமிருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த இரகசிய உடன்பாட்டிற்கு வலிமை சேர்க்கும்'' என கூறினார். இதற்குப் பதிலளித்த ராஜீவ் "நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார். அதற்குப் பிறகு, "புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால் ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டிற்கு வந்திருக்கமாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார். இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்தபோது அவரைத் தட்டிக்கேட்கவில்லை. 1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யவில்லை. 2. வட-கிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே போலீஸ் நிலையங்கள் திறக்கப்படவேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன. 3. புலிகளிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெற்றதைப் போல, சிங்கள ஊர்க்காவல்படையிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை. உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்தபோது திலீபன் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்திய அரசுக்கு எதிராக அவர் போராடவில்லை. மாறாக சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ்காந்தி வாயைத் திறக்கவில்லை. இதன் விளைவாக திலீபன் உயிர்த் தியாகம் செய்ய நேரிட்டது. சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலி செய்து அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய இராணுவத் தளபதியின் அனுமதிபெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி மறித்த சிங்களக் கடற்படை அவர்களைக் கைது செய்தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத்சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார். சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளை காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை. "17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால் அதன் விளைவு மிகமோசமானதாக இருக்கும்' என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ் யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். "எதிலும் தலையிட வேண்டாம்' என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார். இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்து வந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள இராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக் கொண்டனர். ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடமிருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ்காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய இராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். விடுதலைப்புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ்காந்திக்கு இருந்திருந்தால் துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்? ராஜீவ் காந்தியின் இரட்டைவேடம் இதன் மூலம் அம்பலமானது. இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த தீபிந்தர் சிங் "இலங்கையில் இந்திய அமைதிப்படை'' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்றன. பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துச் செய்யப்போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார். இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ்காந்தி இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி. பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர்சிங்கும் சென்றிருந்தார். இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த் உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். அதன் விளைவாக இந்திய அமைச்சரையும் இந்திய இராணுவ உயர் தளபதிகளையும் தனது அருகில் வைத்துக்கொண்டு செய்தியாளர்களிடம் சில அறிவிப்புகளை ஜெயவர்த்தனா செய்தார். 1. வட-கிழக்கு மாநிலத்தில் இடைக்கால அரசு இனி இல்லை. 2. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவருக்கு ரூ.10 இலட்சம் பரிசு அளிக்கப்படும். 3. இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படை எனது ஆணைப்படியே செயல்படும். இதைத் தொடர்ந்து புலிகளுடன் போர்த் தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிட்டது. ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கெளரவத்தை நிலை நிறுத்த இந்திய நாட்டின் கெளரவம் சீரழிக்கப்பட்டது. போஃபர்ஸ் பிரச்சினையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக் கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது. துரோகம் செய்தது ராஜீவே தவிர பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. நன்றி : ஜூனியர் விகடன் |