முதல்வரை மீறிச் செயல்படும் காவல்துறை - பழ. நெடுமாறன் |
![]() |
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 13:31 |
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் இலங்கையில் போர்க் காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
1948ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து தொடர்ந்து 66 ஆண்டு காலத்திற்கு மேலாக எந்தவிதமான தடையுமின்றி சிங்கள அரசுகள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், சித்திரவதைகள், சிறைக்கொடுமைகள், பாலியல் வன்முறை, நிலப் பறிப்பு, தமிழர் நிலத்தில் குடியேறுதல் போன்ற அநீதிகளையும் கொடுமைகளையும் தொடர்ந்து இழைத்து வந்தனர். இதைத் தட்டிக்கேட்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் முதல் தடவையாக சிங்கள அரசிற்கு அறைகூவல் விடுத்தது. 12 உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தை அது அமைத்தது. 2014 சூன் முதல் 2015 ஏப்ரல் வரை 10 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் வரையறுத்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமை விசாரணை ஆணையத்தை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என இராசபக்சே திட்டவட்டமாக மறுத்துவிட்டார். "இராசபக்சே அனுமதித்திருந்தாலும் விசாரணையில் தமிழர்கள் பங்கெடுப்பது ஐயத்திற்குரியதே'' என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: "அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாளரான கெலியா ராம்பக்வெலா என்பவர் "விசாரணை ஆணையத்தின் முன் சாட்சியம் அளிக்க முன்வருபவர்கள் யாராக இருந்தாலும் மிகக் கடுமையாகக் கவனிக்கப்படுவார்கள்.' எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும் இலங்கையில் எந்த வழக்கிலும் சாட்சி கூறுபவர்களைப் பாதுகாக்கும் சட்டம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.'' ஆனால், இதற்கு முன்னால் இதுபோன்ற நிலைமையில் விசாரணை ஆணையம் சம்பந்தப்பட்ட அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் விசாரணையைப் பலவிதங்களிலும் நடத்தி உண்மைகளைக் கண்டறிந்து அறிக்கை அளித்திருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்தது. இலங்கைக்கு அருகேயுள்ள தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் இந்திய அரசை அணுகியபோது அதற்கு இந்திய அரசு இசைவு தெரிவிக்கவில்லை. இதன் மூலம் இராசபக்சேயின் குற்றங்களை மறைப்பதற்கு இந்திய அரசு துணைபோயுள்ளது. இவ்வாறெல்லாம் இந்திய அரசு இராசபக்சே அரசை காப்பாற்றுவதற்கு துணை நின்றபோதிலும் சிங்களர்களின் கோபம் குறையவில்லை. இராசபக்சே அரசில் அங்கம்வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி என்னும் அமைப்பு பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கொழும்பில் நடத்தியுள்ளது. 13வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதாக இராசபக்சே கொடுத்த வாக்குறுதியை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இராசபக்சேயிடம் மோடி கூறியதால் அவர்மீது சிங்கள வெறியர்களுக்குக் கடும் கோபம். அதைப்போல இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐ.நா. விசாரணை ஆணையத்திற்கு இந்தியா வருவதற்கு விசா வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை வற்புறுத்தி வருவதால் அவர்மீதும் சிங்கள வெறியர்களுக்குக் கடும் கோபம். எனவே அவர்கள் மேற்கண்ட இருவருக்கும் எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கொழும்பில் நடத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்டு 22ஆம் தேதியிலிருந்து டில்லியில் பிரதமர் மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்துப் பேசியபொழுது "இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களைத் திட்டமிட்டுச் சிங்கள அரசு அழிக்கிறது. இதிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முன்வரவேண்டும்'' என அவர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனாலும் இராசபக்சே அரசிற்கு எதிராக எவ்விதத்திலும் செயல்பட இந்திய அரசு தயாராக இல்லை என்பது வெளிப்படையானதாகும். ஐ.நா. பேரவையால் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான மாநாட்டில் இலங்கையும் கலந்துகொண்டு அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளது. எனவே இந்திய அரசு சர்வதேச நீதி மன்றத்தில் இலங்கை அரசின் மீது வழக்குத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. 2009ஆம் ஆண்டில் ஏறத்தாழ 1,40,000/- தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டனர். சிறீ பெர்னிக்காவில் 8000 போஸ்னியர்களை செர்பியர்கள் படுகொலை செய்தபோது அவர்கள்மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டது. செர்பிய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த மிலோசெவிக் ஐ.நா. படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னாலேயே சிறையில் உயிரிழந்தார். ஆனால், அதைவிட பலமடங்கு அதிகமான தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கும் போது சிங்கள அரசின்மீது குற்றம் சாட்டவோ அல்லது கண்டிக்கவோ இந்திய அரசு தயங்குவது ஏன்? குறைந்தபட்சம் ஐ.நா. விசாரணை ஆணையத்தை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக்கூட மறுப்பது ஏன்? இரண்டாம் உலகப் போர் முடிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு சப்பானியப் படைகள் இந்தோனேசியா, கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களைக் கடத்திச் சென்று தங்கள் முகாம்களில் அடைத்துவைத்துப் பாலியல் கொடுமைகள் புரிந்ததாகக் குற்றச்சாட்டினை வரலாற்று அறிஞர்கள் எழுப்பினர். இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைக் குழு கடந்த சூலை மாதம் விசாரணை நடத்தி இக்குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகக் கூறியதோடு இதற்காக ஜப்பானிய அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக்கூறியது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் படைகள் இழைத்த போர்க் குற்றங்களுக்காக 22 ஜெர்மானிய முக்கியத் தளபதிகள் மீது சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டனர். அதைப் போல ஜப்பானியப் படைத் தளபதிகள் இழைத்த போர்க் குற்றங்களுக்கான சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி இராதா விநோத் பால் என்பவரும் அங்கம் வகித்தார். இங்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. 1971ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட வங்காள தேசத்தில் பாகிஸ்தான் இராணுவம் வங்க மக்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகள் குறித்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது விசாரணை நடத்தப்பட்டு பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வங்காள தேசம் வற்புறுத்தி வருகிறது. இந்த வரலாறுகள் அனைத்தையும் பிரதமர் மோடியோ பா.ஜ.க. தலைவர்களோ அறியாதவர்கள் என்று கூறமுடியாது. காலங்காலமாக இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு பூண்டிருக்கும் ஈழத் தமிழர்களைப் பலிகொடுத்தாவது இராசபக்சேயுடன் உறவு கொள்ளத் துடிப்பது தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை அவமதிக்கும் போக்காகும். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி இதே தவறை செய்து தமிழக மக்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு தொகுதியைத் தவிர அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் பொறுப்புத் தொகையைப் பறிகொடுத்த அவமானத்தைச் சந்தித்தது என்பதை தில்லியில் உள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாடெங்கிலும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் ஆங்காங்கே உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று விசாரணைக் குழுவிற்கு மின்னஞ்சல் மூலமாகவோ அஞ்சல் மூலமாகவோ தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை எழுதி அனுப்புமாறு வேண்டி வருகின்றனர். இதற்கான படிவங்களையும் அவர்களிடையே வழங்கி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கியூ பிரிவு காவல்துறை இந்த மனிதநேய நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. சாட்சியம் கூற முன்வரும் அகதிகள் மிரட்டப்படுகின்றனர். இதற்கான மனிதநேயத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களும் மிரட்டப்படுகின்றார்கள். ஐ.நா. விசாரணைக் குழுவை இந்தியாவிற்குள் அனுமதித்து உண்மைகளைக் கண்டறிவதற்கு உதவ வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். ஆனால் அவரின் கீழ்உள்ள கியூ பிரிவு காவல்துறை முதலமைச்சரின் கருத்துக்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. முதலமைச்சர் இதை அறிந்திருக்கிறாரா? இல்லையா? என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். 1955ஆம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் "சோசலிச சமுதாயம் அமைப்பதே குறிக்கோள்'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறிய ஒரு கருத்தை இங்கு பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகிறேன். "நாட்டில் உருவாகி வரும் சோசலிசச் சிந்தனையோட்டத்தை காவல்துறையும் உளவுத்துறையும் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். சுற்றிலும் நடப்பதற்கு எதிராக அவர்களின் செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. நாட்டில் உருவாகி வரும் புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல'' பிரதமர் நேரு 49 ஆண்டுகளுக்கு முன்னால் கூறியதை தமிழக காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழக முதல்வர் ஈழத் தமிழர் பிரச்சினையில் சட்டமன்றத்திலும் வெளியிலும் என்ன கூறுகிறாரோ அதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியும். அதற்கு எதிராகக் காவல் துறை செயல்படுமானால் அந்தக் காவல்துறை கட்டுப்பாடு இல்லாத தான்தோன்றித்தனமான துறையாகத்தான் கருதப்படும். அவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு. - நன்றி : தினமணி |