இனவெறிக்கு வித்திட்டவருக்கு அஞ்சல் தலையா? - பழ. நெடுமாறன் |
![]() |
புதன்கிழமை, 19 நவம்பர் 2014 11:55 |
சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அநாகரிக தர்மபாலா என்ற புத்த இனவெறியரின் அஞ்சல் தலையை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஏற்கெனவே ஈழத் தமிழர்கள் தொடர்ந்து சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகி வருவதைக் கண்டு பதைத்து கண்ணீர் சிந்தி வரும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இந்நிகழ்ச்சி வேலைப் பாய்ச்சி இருக்கிறது. அநாகரிக தர்மபாலா புத்தத் துறவி வேடம் பூண்ட சிங்கள பேரினவாதியாவார். அவரது துறவுக்கோலத்திற்கும் அவருடைய செயற்பாட்டுக் கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதை கீழ்க்கண்ட அவரது பேச்சு நிரூபிக்கிறது. "எழில் மிக்க இந்த இலங்கைத் தீவானது ஆரிய சிங்களர்களால் சொர்க்க பூமியாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிய காட்டுமிராண்டிகள் படையெடுத்துக் கைப்பற்றி அதை அலங்கோலமாக்கிவிட்டார்கள். சிங்கள மக்களுக்கு மதவிரோதம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், கிறிஸ்தவமும், பல தெய்வ வழிபாடு கொண்ட இந்து மதமும் இங்கு நுழைந்து விலங்குகளைப் பலிகொடுத்து, திருடுதல், விபச்சாரம், ஒழுக்கச் சீரழிவு, மது போன்றவற்றைப் பரப்பி சிங்கள மக்களை மயங்கிக் கிடக்க வைத்தன. பண்டைய வரலாற்று பெருமையும் நாகரிகமும் உடைய சிங்கள மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பேய்த்தனமான பிறமத கோட்பாடுகளுக்கு ஆளாகி தற்போது தங்கள் நிலையிலிருந்து சரிந்துவிட்டனர்''. மற்றொரு பேச்சில் முகமதியர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. பின்வருமாறு கடுமையாகச் சாடியிருக்கிறார். "அந்நியர்களான முகமதியர்கள் கல்நெஞ்சக் கடும் வட்டியாளரான ஷைலக்கைப் பின்பற்றி யூதர்களைப் போல நம்முடைய நாட்டில் செல்வர்களாக வாழ்கிறார்கள். ஆனால், 2358 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணின் மைந்தர்களும் நம்முடைய முன்னோர்களுமான சிங்கள மக்கள் அந்நிய படையெடுப்பார்களை எதிர்த்துப் போராடியதில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தென்னிந்தியர்களான முகம்மதியர்கள் இலங்கைக்கு வந்து அப்பாவிகளான நம்முடைய மக்களை ஏமாற்றி வணிகத் துறையில் கொள்ளை லாபம் அடித்தார்கள். ஆனால் நமது மக்கள் பின்தள்ளப்பட்டார்கள்.'' பிற நாட்டு மக்களையும் பிற இன மக்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. எல்லோரையுமே இழிவுபடுத்திப் பேசினார். ஆப்பிரிக்க மக்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்: "ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள் காட்டுமிராண்டித்தனம் நிறைந்த பாதி விலங்குகள்'' என இழிவாகப் பேசினார். அநாகரிக தர்மபாலவும் அவருடைய கூட்டாளிகளும் தங்களுடைய நாட்டை இன வெறி நாடாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இட்லர் எப்படி தன்னுடைய ஜெர்மானிய இனம், பிற இனக் கலப்பற்ற தூய்மையான இரத்தம் நிறைந்த ஆரிய இனம் என்றும் அதுவே உலகில் உயர்ந்த இனம் என்றும் தன்னுடைய மக்களுக்கு வெறியேற்றி யூதர்கள் உள்பட பிற இன மக்களை கொன்று குவித்தான். சிங்கள இனம் தூய்மையான ஆரிய இனம் என தர்மபாலா நம்பினார். எனவே சிங்களப் பெண்கள் பிற இனத்தவரோடு தகுதியற்றத் திருமணங்கள் செய்துகொண்டு சிங்களத் தூய்மையைக் கெடுத்துவிடக்கூடாது என போதித்தார். இந்தியாவிலும் இலங்கையிலும் பிரம்மஞான சபையை தோற்றுவித்த திருமதி பிளாவட்ஸ்கி, கர்னல் ஆல்காட் ஆகிய இருவரும் இலங்கை வந்து புத்த மதத்தில் சேர்ந்தார்கள். இலங்கையில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கி புத்த போதனைகளைப் பரப்பினார்கள். தொடக்கத்தில் அவர்களுடன் இணைந்துச் செயல்பட்ட தர்மபாலா பிறகு அவர்களை அந்நியர்களாகக் கருதி வெறுத்தார். "பிரம்ம ஞான சபை என்பது கிருஷ்ண வழிபாட்டைப் பரப்புவதற்கான ஒரு அமைப்பு எனக் கூறி கடுமையாகச் சாடினார். 1893ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் உலக சர்வசமய மாநாடு நடைபெற்றபோது விவேகானந்தர் அதில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். அந்த மாநாட்டில் அநாகரிக தர்மபாலாவும் கலந்து கொண்டார். எனவே அவரை விவேகானந்தரோடு ஒப்பிட்டு அஞ்சல் தலை வெளியிட்டதை நியாயப்படுத்த பா.ஜ.க. முயலுகிறது. சிகாகோ மாநாட்டில் பேச எழுந்த விவேகானந்தர் சகோதர, சகோதரிகளே எனத் தொடங்கியபோது அங்கு குழுமியிருந்த அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களும் கையொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். பிற சமயங்களைச் சேர்ந்தவர்களையும் சகோதர, சகோதரிகளாகக் கருதிய பேருள்ளம் படைத்த விவேகானந்தரும், பிற மதத்தினரை வெறுத்த தர்மபாலருடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் பொறுத்தமானதல்ல. இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த அத்தனை அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணமான சிங்கள இனவெறித் தந்தையான அநாகரிக தர்மபாலா, ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்து சமயத்திற்கும் எதிராகச் செயல்பட்டவர். அவருக்கு அஞ்சல் தலையை வெளியிடுகிற பா.ஜ.க. அரசு ஒட்டு மொத்த தமிழர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அதே இலங்கையில் அதே காலக்கட்டத்தில் பிறந்த தமிழரான ஆனந்த குமாரசாமி இலண்டனில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டில் அமராவதியில் தான் கண்டெடுத்த சிலைகளைக் கொண்டு யாழின் வடிவம் இதுதான் என்பதை முதல் முதலாக வரையறுத்துக்கூறிய பெருமைக்கு உரியவர். சிங்கள இனவெறியின் தந்தையான அநாக தர்மபாலாவிற்கு அஞ்சல் வெளியிடுவதின் மூலம் சிங்கள இனத்தைத் திருப்திசெய்ய இந்திய அரசு முனைகிறது. கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க இந்தியா முயல்கிறது. நன்றி : ஜூனியர் விகடன் |