காலத்தை வென்ற காவிய நட்பு "ரஷ்ய - இந்திய உறவின் கையேடு'' நீதிநாயகம் கே. சந்துரு ஆற்றிய உரை அச்சிடுக
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:34

அனைவருக்கும், வணக்கம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் தப்பித் தவறி கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கையை யாராவது வைத்திருந்தால் அவர்கள் மீது சட்டக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

1921-இல் லாகூர் சதி வழக்கும், கான்பூர் சதி வழக்கும் மிகப்பெரிய சதி வழக்குகளாகப் போடப்பட்டன. அன்றைக்கு கம்யூனிஸ்டுக் கட்சி மிகப்பெரிய கட்சியல்ல.
அதன் விளைவு இந்தியாவில் பொதுவுடைமை தத்துவமும் அது சார்ந்த இயக்கமும் வளர்வதற்கு முன்னாலேயே அதனை நசுக்குவதற்கு மிகப்பெரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

கொஞ்ச நஞ்சம் இருந்த பொதுவுடைமை யாளர்களையும் ரஷ்யாவில் அன்றைக்கிருந்த ஜார் அரசாங்கம் மிகக் கடுமையான அளவில் நசுக்கியது. ஜார் மன்னன் போல்ஷிவிக், மென்ஷிவிக் என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டான். போல்ஷிவிக் என்றால் பெரும்பான்மை. மென்ஷிவிக் என்றால் சிறுபான்மை என்று பொருள்.

லெனின் தலைமையில் இயங்கிய இயக்கம் போல்ஷிவிக் என்றழைக்கப்பட்டது. ஜார் மன்னனின் இரகசிய உளவாளிகள் "போல்ஷிவிக் போல்ஷிவிக் என்று அடிக்கடி சொல்கின்றார்கள். அவர் யாரென்று தெரியவில்லை' என்று மன்னருக்கு இரகசிய குறிப்பனுப்பினார்கள்.

அவ்வார்த்தைக்கான பொருள் பெரும்பான்மை என்பதைக் கூட அறியாமல் ஒருவார்த்தைக்காக அச்சமடைந்த அரசாங்கம் “போல்ஷிவிக்கை கைதுசெய்து வாருங்கள் என உத்தரவிட்டதை கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிலபேருக்கு சில பெயரைக் கேட்டாலே பயம் வந்துவிடும். நமது ஊரில் பலருக்கு“பிரபாகரன் என்று சொன்னால் பயம் வந்துவிடும். தர்மபுரி ஊத்தங்கரையில் 14 வயது பையன் பிரபாகரன் எனப்பெயர் தாங்கி இருந்ததால் அவனைப் புகைப்படம் எடுக்கச் சொன்னது அரசு. ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் ஒவ்வொரு விதமான பயம் எல்லா காலக்கட்டங்களிலும் இருந்தது.

அப்படிப்பட்ட பயத்தில்தான் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நமக்கு பொதுவுடைமை சம்பந்தமான கருத்துகள் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் உலக யுத்தத்திற்குப் பிறகு பெரிய அளவில் இன்றைக்கு இருக்கக்கூடிய பொதுவுடைமைத் தலைவர்கள்- இலக்கியத்திலோ,வரலாற்றிலோ,அரசியல் பொருளாதாரத்திலோ கற்றுக்கொண்ட அனைத்தும் - சோவியத் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட புத்தகங்களால்தான் அவ்வறிவைப் பெறமுடிந்தது.

மிகத் தரமான முறையில் குறைந்த விலைக்கு நூல்கள் கிடைக்கக்கூடிய சூழல் அன்றைக்கு இருந்தது. இதுபற்றி கூறும்போது, ஒருநிகழ்வு என் நினைவுக்கு வருகின்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுந்தரய்யா அவர்கள் “சட்டக் கல்லூரியில் படிக்கின்ற 45 மாணவர்கள் மூலதனத்தைப் படிப்பது எப்படி சாத்தியம், நம்புகிற காரியமா அது? - என கேட்டார்.

அப்பொழுது நாங்கள் சொன்னோம் : "140 ரூபாய்க்கு 7 தொகுப்புகளும் கிடைக்கிறது. இதனால் எல்லோரும் வாங்கிவிட்டோம் என்றோம்''. இது ஒரு கட்டம். குறைந்த விலைக்கு மிகத் தாராளமாக கிடைக்கும் பொழுது அதை வாங்கும் நுகர்வோரிடம் அதில் என்ன சொல்கிறார்கள். இந்த நாட்டிற்கு எப்படி அந்தக் கருத்துக்கள் பயன்படும், என்ற சிந்தனை ஏற்படும். ஆகவே, இப்படிப்பட்ட நூல் அறிமுகக் கூட்டங்களை நாம் ஏற்பாடு செய்யவேண்டும்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து வந்து கொண்டிருந்த புத்தகங்கள் எல்லாம் இப்பொழுது வருவதில்லை. நல்ல தமிழில் கடல் கடந்த நாட்டைப் பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ளார். சோவியத் ஒன்றியம் - இந்திய உறவால் நிகழ்ந்த சம்பவங்களையெல்லாம் நாம் அறிந்து கொள்ள மிகப்பெரிய கையேடாக இந்நூல் திகழுகிறது.

சோவியத் ஒன்றியம் பற்றிக் கூறும்பொழுது ஒன்றை என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அன்றைக்கு மாணவராக இருந்த என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய ஆதர்ஷ சக்தியாக இருந்த சோவியத் ஒன்றியம் திடீரென்று மறைந்து விட்டது என்று சொன்னபோது பலருக்குஅதிர்ச்சி. பல மாணவ தோழர்களுக்கு உளவியல் துன்பங்கள் ஏற்பட்டன. பொதுவுடைமை இயக்கத்தில் அதன் தத்துவத்திற்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.

எதற்கெடுத்தாலும் சோவியத் ஒன்றியம் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இனி நாம் எதை பற்றிக் கொண்டு இருப்போம்! என்ற நிலை ஏற்பட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. பலர் தம் நாட்குறிப்பில் நான் அனாதையாக்கப்பட்ட நாள் என்றெல்லாம் எழுதி வைத்திருந்தனர்.

சோவியத் ஒன்றியம் - இந்திய உறவு என்பது இயற்கை உறவாக இருக்கலாம், கலாச்சார உறவாக இருக்கலாம். அதை மறுபடியும் நினைவுகூரும் பொழுது, அது சம்பந்தமான நினைவுகள், அது சம்பந்தமான கொள்கைகள் மீண்டும் துளிர்த்தெழும் என்ற நம்பிக்கையில் இந்நூல் மிகப்பெரிய ஆவணமாக, வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறி அமர்கின்றேன்.

(உரை எழுத்து வடிவில் - நா. செண்பகலெட்சுமி)