தமிழா ஒரு வழக்கு - கவிவேந்தர் கா. வேழவேந்தன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 12:13
ஓ, ஓ, தமிழா! ஓ, ஓ, தமிழா!
வா, வா! உன்மேல் வழக்கொன்றுரைப்பேன்!
இமய நெற்றியில் இலக்கினை பொறித்தே
நிமிர்ந்த மறவன் உன் நெடும் புகழ்ப் பாட்டனா?
முறத்தைக் கொண்டே முரட்டுப் புலியினைத்
துரத்திய மறத்தி உன் சொந்தப் பாட்டியா?
கடாரம் வென்றவன், கங்கையைக் கொண்டவன்,
அடாத சிங்களர் ஆணவம் அழித்தவன்
சாவகம், புட்பகம், நாவலர் தீவெலாம்
காவல் செய்தவன் கால்வழி உன்னதா?
ஆயிர மாயிரம் ஆண்டுமுன் இலக்கியப்
பாயிரம் படைத்தோன் பரம்பரையா ,நீ?
என்ன கதைக்கிறாய்? இவையெலாம் உண்மையா?
இன்றுன் நிலையினை என்னிடம் கேட்கிறேன்!
உலகம் முளைத்ததும் ஓங்கித் திளைத்தன
'உயர்தனிச் செம்மொழி' ஒருசில! அவற்றுள்
சீரிளந் தமிழன் சிறப்பெலாம் கொஞ்சமா?
'சீசர்' பேசிய சீர் 'இலத்தீன்' எங்கே?
'சாக்ரடீஸ்' அன்று தத்துவம் வழங்கி
மாக்குரல் தந்த 'கிரேக்கம்' உள்ளதா?
'சகுந்தலை' மொழிந்த 'சமக்கிருதம்' எங்கே?
புகழ்மொழி இவற்றில் பொழுதெலாம் பேசிட
அகழ்ந்தெடுத்தாலும் ஆள்களோ ஏது?
வள்ளுவர், இளங்கோ, வளமார் பாரி
தெள்ளிய கண்ணகி, சேரன் குட்டுவன்
அன்னோர் பேசிய அழகுத் தமிழிலே
இன்னமும் முத்தனும், முனியனும் பேசுவார்!
ஆறு கண்டத்தின் ஐம்பது நாடுகளுடன்
தாறு மாறாகத் தமிழினம் பிரிந்துளோம்!
மொத்தமாய்த் தமிழர் பத்து கோடிப் பேர்
இத்தரை மீதோ இருக்கிறோம், கணக்கில்!
பூமியாம் சந்தின் பொந்தெல்லாம் ஓடி
ஆமையாய், ஊமையாய், அடிமையாய் வாழினும்
தாய், முலைப் பாலுடன் தந்தசீர்த் தமிழினை
வாய்மொழி பேசவும் வஞ்சகம் செய்வதா?
தமிழிலே பேசவும், தமிழிலே எழுதவும்
தயங்கியே கூசுவோன் தமிழினின் விதையா?