சிதம்பரம் நடராசர் கோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்! |
![]() |
வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:35 |
மய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிதம்பரம் நடராசர் கோவிலை தனிச்சட்டம் மூலம் தமிழக அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி நடத்திய போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது. இந்தக் கோவிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலை உலகப் பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இறைவன் நடனமாடிய சிதம்பரம் நடராஜர் கோயில் மிகவும் புனித மானது என்று உலகில் வாழும் அனைத்து இந்துக்களால் கருதப்படுகின்றது. அத்துடன் பிரபஞ்சத்தின் மையமாகவும் இந்த கோயில் திகழ்கிறது. இந்த கோவிலின் வரலாறு 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கோவிலின் கருவறையான சித்சபை கடந்த 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில் கோப்பெரும் சோழன் மற்றும் சுந்தர பாண்டியன் கோவிலை மாற்றம் செய்யாமல், புதிய கட்டமைப்புகளை கட்டினர். புகழ்பெற்ற விஜயநகரத்தை ஆட்சி செய்து வந்த கிருஷ்ண தேவராயர், வடக்கு கோபுரத்தில் எந்த புதிய அமைப்புகள் இல்லாமல் கட்டினார். உலகப்புகழ் பெற்ற நினைவு சின்னம் மொழி, இலக்கியம், நடனம், இசை, தத்துவம் மற்றும் மதத்துக்காகவே கட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக எந்தவித மாற்றமும் செய்யாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மன்னர்களின் மொத்த சிந்தனைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதை 12 ஆண்டுகளுக்கு முன்பு இடித்துவிட்டு, புனரமைக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இடித்த இடத்தில் கிழக்கு நோக்கிய கட்டிடத்தில் ஒரு கட்டிடம் கீழ்நோக்கி குறுகலாக கட்டப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் அதிக அளவில் நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களுக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசும் இதனை பார்வையிட்டு முறையாக மாற்றியமைக்க வேண்டும். புகழ் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க, மத்திய தொல்லியல் ஆய்வு துறையும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. |