தமிழா, எப்போதுதான் எழுவாயோ? - கவிஞர் தெசிணி அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:12

மொழியின் பெருமை தொன்மை நவின்றும்
மூழ்கியும் மகிழ்ந்தோம் இடைநாள்;
மொழியில் உண்மை ஆர்வம் அதனால்
முகிழ்க்கும் என்றெதிர் பார்த்தோம்!
கண்ட விளைவினை என்னெனச் சொல்வேன்?

மொழியைக் கருவியாய் ஆக்கியே,
சண்டை யிட்டனர், அரியணை ஏறிடத்
தரமிலார் அலைந்தனர், அய்யோ!
அரசியல் சார்ந்தவர் மொழிகைக் கொள்வது
அறியா மக்களை ஏய்க்கவே!
அரசிய லாளர் சூழ்ச்சியை உணர்ந்திடில்
ஆக்கம் பற்றிநாம் கருதுவோம்!
நேற்றொரு செய்தியை நாளேடு தந்தது;
நினைத்தேன், தமிழாநின்னை!
வேற்று மொழியினர் தத்தம் மொழிகளை
வளர்த்திடும் விதம்வகை பாராய்!
இந்தியை உலக மன்ற மொழியாய்
ஏற்றிடும் அரும்பணிக் கன்னவர்
முந்திப் பெருந்தொகை வழங்கிட முனைவதாய்
மொழிந்துளார் அமைச்சர் ஒருவர்!
அத்தகு உணர்வு நம்மினத் தெவர்க்கும்
ஆர்த்தெழக் காணேன் இன்னும்!
மெத்தன மானோம்; உட்பகை வளர்த்தோம்;
விடுத்திடு; விழித்தெழு, எழுவாய்!