எனது பேராசிரியர்கள் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 13:40

நான் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையில் இடைநிலைப் படிப்பை முடித்துவிட்டு பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினேன். அப்போது அதற்கான வசதி சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை யிலுள்ள சில கல்லூரிகளிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மட்டுமே இருந்தன. 1957ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., (ஹானர்ஸ்) படித்தேன். தமிழ் இலக்கியத் தேனை சுவைபட வாரி வழங்கி எனக்கு தமிழறிவு ஊட்டிய பேராசிரியர்கள் குறித்த பசுமையான நினைவுகளை நன்றியோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அப்போது தமிழ்த்துறை தலைவராக இருந்தவர் பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் ஆவார். நெடிதுயர்ந்த சிவந்த நிறமும், எடுப்பான தோற்றமும் கொண்ட அவர் எங்களுக்குக் கற்பிப்பதிலும் மிகச்சிறந்தவராகத் திகழ்ந்தார். மாணவர்களுக்குப் புரியும்படியும் சுவையாகவும் பாடம் நடத்துவதில் அவருக்கு இணை அவரேதான். சிலப்பதிகாரத்தை எங்களுக்கு முற்றிலும் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தினார். மூவேந்தர்கள் ஆண்ட மூன்று நாடுகளாகப் பிரிந்து கிடந்த தமிழகத்தையும், தமிழர்களையும் ஒன்றுபடுத்துவதற்காகவும் பல்வேறு சமயங்களைப் பின்பற்றி தமக்குள் பிணக்குகள் கொண்ட தமிழ் மக்களுக்கு சமயம் கடந்த தெய்வம் ஒன்றை அறிமுகப்படுத்து வதற்காகவும், சிலப்பதிகார காப்பியத்தை இளங்கோவடிகள் படைத்தார். சிலம்பு ஒரு தமிழ்த் தேசியக் காப்பியம். கண்ணகி தமிழ்த் தேசியத் தெய்வம் என்பதை எங்களின் உள்ளங்களில் பதியவைத்தவர் அவரே.

மேலும், பழந்தமிழரின் தமிழிசை, நடனம் மற்றும் இசைக் கருவிகள் ஆகியவற்றை அழியாமல் பாதுகாத்துத் தந்தது சிலப்பதிகாரமே ஆகும் என்பதையும் அவர் எடுத்துக்காட்டி விளக்கிய விதம் இன்னமும் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது.

முதலாண்டின் இறுதியில் எங்கள் பேராசிரியர் சிதம்பரநாதனார், ஆசிரியர் தொகுதிக்கான மேலவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனவே, பேராசிரியர் தமது பதவியிலிருந்து விலகினார். இது எங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவரிடம் அழுது மன்றாடினோம். ஆனால், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தேர்தலில் அவர் வெற்றிபெற நாங்கள் முனைந்து வேலை செய்தோம். அவரும் வெற்றிபெற்று மேலவை உறுப்பினரானார். பிற்காலத்தில் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றினார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. எனவே தன்னிடம் படித்த மாணவர்களையே தனது குழந்தைகளாகக் கருதி அவரும் அவருடைய துணைவியாரும் அன்பை அள்ளிச் சொரிந்த அந்த நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது.

அதற்கடுத்த இரண்டாண்டுகள் பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் எங்களுக்குப் பேராசிரியராக இருந்தார். மிகச் சிறந்த தமிழறிஞரான அவருக்கு இருபதுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். எங்களுக்கு தொல்காப்பியம், மொழியியல், நற்றிணை ஆகியவற்றை கற்பித்தார். வகுப்பு நடத்துவதில் அவருக்கு எல்லையற்ற ஆர்வம் இருந்தது. எங்களுக்குரிய பாடத்திட்டத்தையும் தாண்டி அதற்கு மேலாக எத்தனையோ புதியபுதிய செய்திகளை எங்களுக்கு ஊட்டினார். மாணவர்கள் கேள்விகேட்பதை அவர் மிகவும் விரும்புவார். மாணவர்களின் ஐயப்பாடுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை பொறுமையாகத் தீர்த்து வைப்பார்.

அவர் எங்களுக்குப் பேராசிரியராக வந்த புதிதில் அவரைப் பற்றி எங்களுக்கு சரியான புரிதல் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். எனவே அவர் காங்கிரசுக்காரராகத் தான் இருக்கவேண்டும் என நாங்கள் தவறான கருத்தைக் கொண்டிருந்தோம். அறிஞர் அண்ணாவின் பேச்சினால் கவரப்பட்டு தி.மு.க.வின் மீது ஆர்வம் கொண்டவர்களாக நாங்கள் அப்போது இருந்தோம். ஆனால், எங்கள் பேராசிரியர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது காந்திய முறையில் எங்களை சிறிதுசிறிதாக தன்வயப்படுத்தினார். காலப் போக்கில் அவரை நாங்கள் புரிந்துகொண்டபோது அவரின் பெருமை எங்களுக்குத் தெரிந்தது.

தமிழ்த்துறையில் மற்றும் பல சிறந்த பேராசிரியர்கள் இருந்து எங்களுக்கு பாடம் நடத்தினார்கள். பேராசிரியர் அ. இராமசாமிப்பிள்ளை, மகாவித்வான் தண்டபாணி தேசிகர், முனைவர்கள் ஆறுமுகனார், சுப. இராமநாதன், செ. வைத்தியலிங்கம், சிவ. திருநாவுக்கரசு, ப. அருணா சலனார், முத்துச் சண்முகனார், மு. அண்ணாமலை, ச. மெய்யப்பன், செ.வை. சண்முகம், கு. தாமோதர னார், புலவர்கள் இராமலிங்கனார், சோம. இளவரசு போன்றோர் எங்களுக்கு பல்வேறு பாடங்களைக் கற்பித்தார்கள். அவர்களில் இப்போதும் வாழ்கிற பேராசிரியர்கள் வைத்தியலிங்கம், செ.வை. சண்முகம் ஆகிய இருவரையும் அண்மையில் சிதம்பரத்தில் அவர்கள் வீடுகளுக்குச் சென்று சந்தித்தபோது அவர்கள் என்மீது காட்டிய அன்பை கண்டு மிகவும் நெகிழ்ந்துபோனேன். அவர்கள் எழுதிய நூல்களை எனக்கு அளித்து மகிழ்ந்தனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதியின் பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். எங்கள் பேராசிரியர் ஒருநாள் என்னை அழைத்து தமிழறிஞர் ரா. பி. சேதுபிள்ளை அவர்களுக்கு மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தவேண்டுமென கூறினார். அதை ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடத்துவதற்குத் திட்டமிட்டோம். ஆனால் எதிர்பாராதவிதமாக விழா அழைப்பிதழில் மாணவர் பொதுச் செயலாளரான எனது பெயருக்குப் பதில் பல்கலைக்கழகப் பதிவாளரின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்த போது அனைத்து மாணவர்களும் ஆத்திரம் அடைந்தோம். உடனடியாகக் கூடிப் பேசினோம். விழாவைப் புறக்கணிப்பது என முடிவெடுத்தோம். இளம்பருவத்தினராக நாங்கள் இருந்ததால் அதனுடைய விளைவுகள் பற்றி அறியாதவர்களாக இருந்தோம். உடனடியாக எனது பெயரால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

"இந்த விழாவுக்கும் மாணவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழறிஞர் சேதுப்பிள்ளை அவர்களுக்கு மாணவர்களின் சார்பில் உண்மையான பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும்'' என அதில் குறிப்பிட்டு அறிவிப்புப் பலகைகளில் ஒட்டிவிட்டோம். இதைக்கண்டு நிர்வாகம் பதற்றமடைந்தது. துணைவேந்தராக இருந்த தி.மூ. நாராயணசாமிப் பிள்ளை அவர்களும் கலங்கிப் போனார்.
ஏனென்றால் அதற்கு முந்திய ஆண்டு இறுதியில் மாணவர்கள் விடுதியில் இருந்த சில பிரச்சினைகளின் காரணமாக நாங்கள் ஒரு போராட்டத்தையே நடத்தி இருந்தோம். பிரச்சனை முற்றியது. காவல்துறையின் தடியடிக்கு நாங்கள் ஆளானோம். நானும் மற்றும் ஐந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டோம். பல்கலைக்கழகம் மூன்று மாதக் காலத்திற்கு மூடப்பட்டது. பத்திரிகைகளில் பரபரப்பாக மாணவர் போராட்டம் குறித்த செய்திகள் வெளியாயின.

எனவேதான் மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்து விடுமோ என துணைவேந்தர் கவலையடைந்தார். ஆனால் எங்கள் பேராசிரியர் தெ.பொ. மீ. அவர்கள் துணைவேந்தரிடம் "நீங்கள் கவலைப்படாதீர்கள். மாணவர்களிடம் பேசி சரிசெய்கிறேன்" என்று உறுதியளித்துவிட்டு எங்களைப் பார்ப்பதற்கு விடுதியில் உள்ள எனது அறைக்கே வந்துவிட்டார். எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மற்ற மாணவர்கள் நான் எதுவும் பேசிவிடக் கூடாது எனக் கண்டிப்பு செய்திருந்தார்கள். எனவே நான் எதுவும் பேசவில்லை.

"மிகப்பெரிய தமிழறிஞர் நமது பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். அவரை அவமதிக்கும் வகையில் இப்படி நடந்துகொள்ளலாமா" என எங்கள் பேராசிரியர் கேட்டார். "மாணவர்கள் சார்பான விழாவில் ?எங்கள் பொதுச்செயலாளர் பெயரில் அழைப்பிதழ் அச்சடிக்காமல் பதிவாளர் பெயரில் எப்படி அழைப்பு தயாரிக்கலாம்" என கோபமுடன் மாணவர்கள் கேட்டனர்.

"பதிவாளர் செய்தது தவறுதான். அவரை அழைத்து துணைவேந்தர் கண்டித்துவிட்டார். எனவே நீங்கள் அதை பொருட்படுத்தாமல் விழாவைச் சிறப்பாக நடத்த ஒத்துழைக்கவேண்டும்" என பேராசிரியர் கூறினார்.

"தவறு செய்தவருக்குத் தண்டனை என்ன?' என மாணவர்கள் கேட்டபோது, பேராசிரியர் புன்னகையுடன் "என்ன தண்டனை விதிக்கலாம் என நீங்களே கூறுங்கள்' என்றார்.

"விழா மேடையில் மட்டுமல்ல, விழா நடக்கும் மண்டபத்தின் பக்கமே பதிவாளர் வரக்கூடாது" என மாணவர்கள் நிபந்தனை விதித்தனர். அதையும் எங்கள் பேராசிரியர் ஏற்றுக்கொண்டார்.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து விழா நடைபெற்ற மண்டபம் வரை அவரைத் தோளில் தூக்கிக்கொண்டு மாணவர்கள் வாழ்க முழக்கமுடன் ஊர்வலமாக அழைத்துவந்தோம். விழா மிகச் சிறப்பாக நடந்தது. எங்கள் பேராசிரியர் பெருமிதத்துடன் எங்களையெல்லாம் பாராட்டி மகிழ்ந்தார்.

காமராசர் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக பி. பக்தவச்சலம் அவர்கள் இருந்தார். கும்பகோணத்தில் உள்ள ஒரு கல்லூரியின் விழாவில் பேசும்போது, "நீங்கள் மிக நல்ல பையன்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மிக மோசமானவர்கள்" என அவர் பேசியிருந்த செய்தி சுதேசமித்திரன் பத்திரிகையில் வந்திருந்தது. அதைப்படித்த நாங்கள் கொதித்துப் போனோம். அவருக்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டுமெனத் துடித்தோம்.

விரைவிலேயே அதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத்துறையைத் தொடக்கி வைப்பதற்கு அமைச்சர் பி. பக்தவத்சலம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். குறித்த நாளில் விழா நடைபெற்றது. வேளாண்மைத்துறை பேராசிரியர் ரெங்கசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைவேந்தர் தலைமை வகித்தார். தொடக்கவுரை ஆற்ற அமைச்சர் எழுந்தார். நான் மேடையில் ஏறி "கும்பகோணத்தில் எங்களை அவமதித்துப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டுப் பேசவேண்டும்'' என்று கூறினேன். அவர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார். இது தொடர்பாக மாணவர்கள் சார்பில் அச்சிடப்பட்டிருந்த துண்டறிக்கை ஒன்றினை அவருக்கும், மேடையில் இருந்த துணைவேந்தருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு அமைதியாக வெளியேறும்படி மாணவர்களை வேண்டிக்கொண்டேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆசிரியர்களைத் தவிர அனைத்து மாணவர்களும் வெளி நடப்புச் செய்தோம்.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூடி என்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தது. அமைச்சரை அவமதித்ததற்காக என் மீது நடவடிக்கை எடுத்து விலக்கவேண்டுமென பதிவாளர் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், குறுக்கிட்ட எங்கள் பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் "மாணவர்கள் தாங்கள் செய்தது இன்னதென புரியாமல் செய்திருக்கிறார்கள். அவர்களை சொல்லித்தான் திருத்தவேண்டுமே தவிர நடவடிக்கை என்று போனால் பிரச்சினை மிகவும் பெரிதாகும்'' என கடுமையாக எதிர்த்து வாதாடி இருக்கிறார். அவருக்குத் துணையாக எங்கள் விடுதியின் காவலர் பேராசிரியர் பாலையா அவர்களும் பேசியிருக்கிறார். எனவே அந்தப் பிரச்சனை அப்படியே கைவிடப்பட்டது.

கம்யூனிஸ்டு தலைவராக விளங்கிய பாலதண்டாயுதம் அவர்கள் 1945ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராக படித்துக்கொண்டிருந்தபோது போராட்டம் ஒன்றிற்குத் தலைமைதாங்கி நடத்தினார் என்பதற்காக அப்போது துணைவேந்தராக இருந்த சீனிவாச சாஸ்திரி அவர்கள் பாலதண்டாயுதம் மீது நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கினார். அதைப்போலவே நானும் நீக்கப்பட்டிருப்பேன். பட்டமும் வாங்கியிருக்க மாட்டேன். அவ்வாறு நேராமல் தடுத்து என்னைக் காப்பாற்றிய பெருமை எங்கள் பேராசிரியரையே சாரும்.

தனது மாணவர்களின் சிறப்பறிந்து அவர்கள் மேலும் உயர்வதற்கு உதவி செய்து மகிழும் பேருள்ளம் எங்கள் பேராசிரியரிடம் குடிகொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழியான கெளசல்யா முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அவரை மொழியியல் மேற்படிப்புக்காக எங்கள் பேராசிரியர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதைப்போல எனது வகுப்புத் தோழரான இ. அண்ணாமலை அவர்கள் பிற்காலத்தில் மைசூரில் அமைந்திருந்த மொழியியல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கவும் உதவியவர் எங்கள் பேராசிரியராவார். யுனஸ்கோ நிறுவனம் பல்வேறு உலக மொழிகளில் யுனஸ்கோ கூரியர் என்னும் இதழை வெளியிட்டது. அதன் தமிழ்ப் பதிப்பிற்கு ஆசிரியராக தனது மாணவர் மணவை முஸ்தபா அவர்களை நியமிக்கப் பரிந்துரைத்தவர் எங்கள் பேராசிரியரே. அவரால் உயர்வு பெற்ற மாணவர்களின் பட்டியல் விரிக்கின் பெருகும்.

பிற்காலத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவருக்கு மதுரையில் மிகப்பெரிய வரவேற்பு அளித்தோம். மதுரைப் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கிவருவதற்கு அடித்தளமிட்டவர் அவரே.

தலைவர் காமராசர் மதுரைக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்க எங்கள் பேராசிரியர் விரும்பினார். காமராசர் தங்கியிருந்த இடத்திற்கு அவர் வந்தார். அறையில் இருந்த அனைவரையும் சிறிதுநேரம் வெளியில் இருக்கும்படி கூறி நானும் வெளியே செல்ல அடியெடுத்து வைத்தேன். ஆனால் எங்கள் பேராசிரியர் "நீ வெளியே போகவேண்டாம். கூடவே இரு' என்று சொன்னபோது எதுவும் புரியாமல் திகைத்தேன். தலைவர் காமராசரும் என்னை இருக்கும்படி கூறினார்.

1969ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிளவுபடும் சூழல் தோன்றியிருந்த காலகட்டம் அதுவாகும். தலைவரிடம் பேராசிரியர் பின்வருமாறு கூறினார். "மகாத்மா காந்தி காங்கிரசில் நாலணா உறுப்பினராகக்கூட இல்லை. ஆனாலும், காங்கிரசையும் தேசத்தையும் அவர் வழி நடத்தினார். அவருக்குப் பிறகு உங்களைத்தான் காங்கிரஸ் தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரசை பிளவுபடுத்த அனுமதிக்கா தீர்கள். காங்கிரசிலிருந்து விலகி நின்று நீங்கள் அறிவுரை கூறினால் எல்லோரும் கேட்பார்கள். மகாத்மா காந்திக்குப் பிறகு நாட்டிற்கு வழிகாட்டவேண்டிய பொறுப்பும், கடமையும் தகுதியும் உங்கள் ஒருவருக்கே உண்டு'' என்று கூறிவிட்டு விடைபெற்றார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக உடன் சென்று அனுப்பிவிட்டு மறுபடியும் தலைவரின் அறைக்கு வந்தபோது ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருப்பதை பார்த்தேன். பேராசிரியர் கூறிய சொற்கள் அவரது சிந்தனையைக் கிளறிவிட்டன போலும்.

பெருந்தலைவர் காமராசருக்கே ஆலோசனை சொல்லக்கூடிய தகுதியுடையவராகவும், தனது மனதில் பட்டதை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் கூறும் நேர்மையாளராகவும் எங்கள் பேராசிரியர் திகழ்ந்ததை அன்று கண்டேன். அவரின் மாணவனாக கற்கும் பேறு எனக்குக் கிடைத்தது பெறற்கரிய பேறாகும்.

நன்றி : புதிய தலைமுறை-கல்வி