நீதி தேவதை நடுங்குகிறாள்! - பழ. நெடுமாறன் |
![]() |
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:31 |
உலக நாடுகளில் மிகச் சிறந்த நூறு பல்கலைக் கழகங்களில் ஒன்றாக புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 பல்கலைக் கழகங்களுடன் உறவு பூண்டு மாணவர்கள் பரிமாற்றம், ஆய்வுகள் பரிமாற்றம் போன்றவற்றில் நிகரற்று விளங்குகிறது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக மிகப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி கற்கிறார்கள். பருவம் ஒன்றிற்கு 220 ரூபாய் கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் வாங்கப்படுகிறது. சிறார் பள்ளிகளில்கூட பல்லாயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் இக்காலக்கட்டத்தில் உயர் கல்வி குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் கிடைப்பது மாபெரும் சாதனையாகும். 1969ஆம் ஆண்டு இந்திய அரசினால் தொடங்கப்பட்ட இப்பல்கலைக் கழகம் மிகக்குறுகிய காலத்தில் உலகப் புகழ்பெற்றது. 650 ஆசிரியர்களும் 1276 அலுவலர்களும் 8,309 மாணவர்களும் இங்கு அமைதியான சூழலில் புதிய புதிய துறைகளில் கல்வி கற்கிறார்கள். ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். ஆனால், அண்மையில் இப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கின்றன. மனித உரிமைப் பிரச்சினைகள், தேசிய இனப் போராட்டங்கள், மரண தண்டனை ஒழிப்புப் போன்ற சமுதாய நல பிரச்சினைகள் குறித்து இப்பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் மனம் திறந்து விவாதிக்கிறார்கள். கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். தங்கு தடையில்லாமல் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் உரிமை அளிக்கப்படுகிறது. சனநாயக முறையில் பல்கலைக் கழக மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சனநாயக ரீதியில் முடிவெடுக்கப் பயிற்சி பெறுகிறார்கள். மறுநாள் அவர் நீதிமன்றத்திற்கு காவலுடன் அழைத்து வரப்பட்டபோது அவ்வளாகத்திற்குள்ளாகவே வழக்கறிஞர்கள் சிலரால் தாக்கப்பட்டார். இதை படம்பிடித்த ஊடகத்தினரும் செய்தியாளர்களும் தாக்குதல்களுக்குத் தப்பவில்லை. நீதிபதியின் கண்ணுக்கு எதிராகவே இத்தகைய காலித்தனம் நடத்தப்பட்டது. அதற்கடுத்த நாள் இந்நிகழ்ச்சி குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவும் கல்லெறிக்கு மட்டும் அல்ல தேசத் துரோகிகள் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளானது. நீதிமன்றத்திற்கு வெளியே மாணவர் ஒருவரை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகத் தாக்கினார். அத்தனையும் ஊடகங்களில் வெளியாயின. ஆனால், அங்கு ஆணையாளர் தலைமையில் அணிவகுத்து நின்ற காவல்துறையினர் கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் வாய்களைப் பொத்தியும் சேவகம் புரிந்தனர். இதைக் கண்டு திடுக்கிட்ட நீதிதேவதை நடுநடுங்கினாள். பா.ஜ.க. மாணவர் அமைப்பைச் சேர்ந்த மூன்று தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டு தாங்கள் வகித்துவந்த பொறுப்புகளில் இருந்து விலகி போராடும் மாணவர்களோடு சேர்ந்திருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா அவர்களின் மகள் உள்பட 20 மாணவர்கள் மீதும் பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. அந்த மாணவியை சுட்டுத் தள்ள வேண்டும் என இந்துத்துவா தலைவர் ஒருவர் வெறிக்கூச்சல் இட்டுள்ளார். தேசத் தந்தை காந்தியடிகளையே தீர்த்துக்கட்டிய கொலை வெறி இன்னமும் தொடர்கிறது. நாடெங்கும் இந்த நிகழ்ச்சிகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதை பா.ஜ.க.வைச் சேர்ந்த மாணவர்களும் வழக்கறிஞர்களும் தங்களின் கரங்களில் எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட விதம் சனநாயகத்திற்கு எதிரான போக்காகும். உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளரான நோம் சோம்ஸ்கி பல்கலைக் கழக துணைவேந்தருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பல்கலைக் கழக வளாகத்திற்குள் காவல் படை நுழைவதற்கு அனுமதித்தது ஏன்? - என கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் நேரு பல்கலைக் கழகத்தில் எழுந்துள்ள பிரச்சினை அரசால் உருவாக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கண்டித்துள்ளார். மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்கள் கடும் கண்டனத்தை அரசுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்திவரும் போராட்டத்திற்கு நாடெங்கும் பேராதரவு திரண்டு வருகிறது. பத்திரிகைகளும் தங்கள் கண்டனக் குரலை எழுப்பியுள்ளன. அரசியல் கட்சிகளும் ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க முயன்றதற்காக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவிற்கு ஆதரவாக மாணவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். இது தேசத்திற்கு எதிரானது என பா.ஜ.க. சாட்டும் குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படியே மாணவர்கள் தேசத் துரோகமாக நடந்துகொண்டார்கள் என்றால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்திற்குள்ளாகவே புகுந்து தாக்குவது என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத ஆணவ வெறிப் போக்காகும். அப்பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நாள்தோறும் கரங்களில் தேசியக் கொடிகளை ஏந்திவந்து வெறிக் கூச்சலிடுகிறது திடீர் தேசபக்த கூட்டம். நாஜிக் கட்சியினரும் இதைத்தான் ஜெர்மனியில் செய்தார்கள். நாஜிகளின் எஸ்.ஏ. அதிரடிப் படை பல்கலைக் கழக வளாகங்களில் புகுந்து யூத ஆசிரியர்களையும் மாணவர்களையும் மட்டுமல்ல இடதுசாரி சிந்தனை படைத்தவர்களையும் தாக்கிக் கைது செய்தது. அவர்களின் கதி என்னாயிற்று? - என்பது யாருக்கும் தெரியாது. பாடப் புத்தகங்கள் ஃபாசிச கொள்கைக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்டன. வரலாறு திரிக்கப்பட்டது. இளைஞர்களும் மாணவர்களும் நாஜிக் கட்சியின் இளைஞரணியில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இட்லர் கடைப்பிடித்த அதே பாணியை இப்போது பா.ஜ.க.வும் கடைப்பிடிக்கிறது. நேரு பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பல காலத்திற்கு முன்பே பா.ஜ.க. தலைவர்களான சுப்பிரமணிய சுவாமி, சாக்ஷி மகாராஜ் போன்றவர்கள் அப்பல்கலைக் கழகம் குறித்து பல அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் பரப்பி வந்தனர். அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுப்பிரமணிய சாமி நியமிக்கப்படப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களாகவும் இந்துத்துவா எதிர்ப்பாளர்களாகவும் இருப்பது இவர்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. சமயம் வாய்த்தவுடன் இப்பல்கலைக் கழகத்தை முடமாக்க முயல்கின்றனர். உயர்ந்த நோக்கங்களுடன் சமய சார்பற்ற வகையிலும் சனநாயக நெறிமுறைகளை உயர்த்திப் பிடிக்கவும் தொண்டாற்றிவரும் நேரு பல்கலைக் கழகத்தின் மீது ஏவப்பட்டுள்ள இந்த அடக்குமுறையை மக்கள் திரண்டுவந்து தடுக்காவிட்டால் நாளை இந்தியா முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்களை காவி மயமாக்கும் முயற்சி துணிச்சலுடன் தொடரப்படும். உயர் கல்வியும், உயர் ஆய்வும் பின்னோக்கிச் செலுத்தப்படும். சனநாயக நெறிமுறைகளில் நம்பிக்கை, மதச்சார்பின்மைக்கு அர்ப்பணிப்பு, முற்போக்கான கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இணைந்து இத்தகைய போக்குகளுக்கு எதிராகப் போராட முன்வராவிட்டால் ஃபாசிச வெறி மிக எளிதாக சனநாயகத்தை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிடும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி |