மதிப்புரை: ஈழம் அமையும் |
![]() |
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:34 |
தொன்மையும், பெருமையும் மிக்க தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் 2009ஆம் ஆண்டில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலையைப் போன்ற அவல நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. என்றென்றும் தமிழர்களால் நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறச் செய்யும் இந்நிகழ்ச்சியை நெக்குருக வைக்கும் ஆவண ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நண்பர் கா. அய்யநாதன் அவர்கள். சிறந்த ஊடகவியலாளராக தமிழர்களால் அறியப்பட்ட அய்யநாதன் அவர்கள் சிறந்த வரலாற்றாய்வாளராகவும் திகழ்கிறார் என்பதை இந்நூல் நிறுவுகிறது. தமிழர் வரலாற்றின் ஒரு முக்கியமான காலப்பகுதியைப் பதிவு செய்துள்ள இந்நூல் எதிர்காலத்தில் வரலாற்றுப் பெட்டகமாக நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அதிகாலை இலங்கையின் வடபகுதியில் முல்லைத் தீவு மாவட்டத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் என்னும் இரண்டு சிறிய கிராமங்களில் தப்பியோடிவந்த தமிழர்கள் குவிந்திருந்தனர். சிங்கள இராணுவத்தின் பீரங்கி தாக்குதலுக்கும், விமானப் படையின் கொத்துக் குண்டு வீச்சிற்கும் தப்பி இறுதியாக அங்கு அடைக்கலம் புகுந்திருந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே பல நாட்களாக உணவோ, குடிநீரோ இன்றி வாடி வதங்கிப் போயிருந்த அந்த மக்கள் ஈவுஇரக்கமில்லாமல் அழித்தொழிக்கப்பட்டனர். உலகத் தமிழினம் கண்ணீர் விட்டு கதறி அழுதபோது அசோகனின் சக்கரத்தை தனது தேசியக் கொடியில் பொறித்துக்கொண்ட இந்திய அரசு, வாய் மூடி மெளனம் சாதித்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக அப்போதிருந்த திரு. கருணாநிதி அவர்கள் மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். இந்த இரு அரசுகளின் கள்ளமெளனத்திற்குப் பின்னர் ஒரு மாபெரும் சதி மறைந்து கிடந்தது. உண்மையில் தமிழர்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை பின்னிருந்து நடத்தியது இந்திய அரசே என்பதையும் அதற்கு தி.மு.க.அரசு துணைநின்றது என்பதையும் இலங்கை அதிபர் இராசபக்சே அம்பலப்படுத்தினார். போர் முடிந்தபிறகு இந்திய ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் "இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன்' என்று இறுமாப்போடு கூறியது மட்டுமல்ல, இந்தியாவின் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் அவர்கள் அளித்த ஆதரவிற்காக வெளிப்படையாக நன்றி தெரிவித்தார் என்ற உண்மை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உலகின் மனசாட்சி மரத்துப்போய்விடவில்லை. அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் செயற்பட்டு வந்த அரசு சாராத நீதி அமைப்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து 2010ஆம் ஆண்டு சனவரி 14,15,16நாட்களில் விசாரணை நடத்தியது. இலங்கையில் போர்க் குற்றமும், மனித குலத்திற்கு எதிரான அநீதியும் இழைக்கப்பட்டுள்ளன என இந்த அமைப்பு தனது தீர்ப்பில் அப்பட்டமாகக் குறிப்பிட்டதை இந்நூல் ஆசிரியர் அப்படியே பதிவு செய்துள்ளார். புவிசார் அரசியல் நலன்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சிக்கிக்கொண்டதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணம் ஆகும். இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதியான தீர்ப்பைவிட தனது புவிசார் நலனை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் முக்கியமாகக் கருதி விடுதலைப் புலிகளின் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துத் தடை செய்தன. இந்துமாக் கடலின் கட்டுப்பாடு சீனாவின் கைக்குப் போய்விடக் கூடாது என்பதுதான் இந்நாடுகளின் அந்தரங்கமான நோக்கமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்நாடுகள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டன, எவ்வாறெல்லாம் புலிகளுக்கு நெருக்கடி கொடுத்தன, எப்படியெல்லாம் சீன அரசுக்குப் பேராதரவு தந்தன என்பதையெல்லாம் இந்நூல் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறது. நார்வேயின் முன் முயற்சியோடு விடுதலைப்புலிகளுக்கும், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்காவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையும், செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளையும் சீர்குலைப்பதற்கு, இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அதற்கு இணங்கி செயல்பட்ட அதிபர் சந்திரிகாவின் நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான விவரங்களை இந்நூல் ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ளது. ஆழிப்பேரலை நடத்திய ஊழிக்கூத்தின் விளைவாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்குக் கடற்கரை மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்தவேளையில், உலக நாடுகளின் உதவிக்கரங்கள் நீண்டன. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் கோபி அன்னன் இலங்கைக்கு வருகைபுரிந்தபோது பெரும் பாதிப்பிற்குள்ளான தமிழர் பகுதிகளுக்கு அவர் செல்வதை அதிபர் சந்திரிகா அனுமதிக்காததையும் நிவாரண உதவி என்ற பெயரில் அமெரிக்கப் படைகள் இலங்கை வந்து இறங்கியதையும் இவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் விரிவாக இந்நூல் கூறுகிறது. தெற்காசிய நாடுகள் குறித்து அமெரிக்காவின் அந்தரங்க நோக்கமும், அதற்கு அடிபணிந்து தனது தேவையை நிறைவு செய்துகொள்ள இந்தியா முயன்றதையும் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. 1990ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கைக்கு அதிகமான ஆயுதங்களை விற்ற நாடு என்ற பெருமைக்குரிய சீனா, தென்னாசிய நாடுகளில் தனது கடற்படைத் தளங்களை அமைத்த முத்துமாலைத் திட்டம் குறித்த அனைத்து செய்திகளும் இவற்றின் விளைவாக இந்தியா எதிர்நோக்க வேண்டிய பேராபத்துக் குறித்தும் இந்நூல் பல செய்திகளை ஆதாரப்பூர்வமாகக் கூறுகிறது. இலங்கை இனப் பிரச்சனையில் நடுவராகச் செயல்பட்ட நார்வே தனது முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு இந்தியாதான் காரணம் எனக் குற்றம் சாட்டியது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் - ஒவ்வொரு திருத்தத்திற்குப் பின்னரும் இந்திய அரசிடம் காட்டப்பட்டு அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்று உருவாக்கப்பட்டது என நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் கூறினார். மேலும், வேறு எந்தவொரு மேற்கத்திய நாடும் இலங்கையில் கால் பதித்துவிடக் கூடாது என்பதுதான் இந்தியாவின் ஒரே இலட்சியமாக இருந்துள்ளது. அமைதி முயற்சியை சீர்குலைக்க இலங்கை அதிபர் சந்திரிகா மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தியா தடுத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால் அவ்வாறு செய்ய அது விரும்பவில்லை. எரிக் சோல்ஹிம் வெளிப்படுத்திய மற்றொரு உண்மை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். "நீங்கள் (நார்வே) அவர்களோடு மிகவும் நட்பாக இருக்கிறீர்கள் என்று கண்டித்ததுடன் விடுதலைப்புலிகளை வைக்கவேண்டிய இடத்தில் வையுங்கள் என்ற அறிவுரையையும் இந்திய அரசு எங்களிடம் கூறியது" என்றார். இந்திய அயல் உளவுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஜே.கே. சின்ஹா என்பவர் இதை உறுதிசெய்யும் வகையில் "விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணப் போக்கும் அந்த இயக்கத்திற்கு எதிராகத் தேவையற்ற அறிக்கைகளை இந்திய அரசு வெளியிட்டதும், அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இனச் சிக்கலுக்கு தீர்வுகாணும் சாத்தியப்பாடுகளை முழுமையாக அடைத்துவிட்டது. அமைதி முயற்சியில் நேரடியாக பங்கேற்காமல் வெளியே நின்றதனால் அம்முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை இழந்து போவதற்கு இந்திய அரசே காரணமாகிவிட்டது'' எனக் கூறினார். மகிந்த இராசபக்சே அதிபரானதும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அவர் மேற்கொள்வதை இந்தியா ஊக்கப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் நிலம் மற்றும் கடல் நடமாட்டங்கள் பற்றிய உளவுத் தகவல்களை இரகசியமாக இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வந்தது. விடுதலைப்புலிகளை ஒழித்தபிறகுதான் இனச் சிக்கலுக்கு தீர்வு என்ற கொள்கையுடன் தீவிரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இராசபக்சேக்கு முழுமையான ஆதரவளித்தது இந்தியாதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தினை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்குமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து அதன்மூலம் பல்வேறு நாடுகளைத் தடைவிதிக்க வைத்ததும் இந்திய அரசுதான் என்பது போன்ற பல அதிர்ச்சிகரமான உண்மைகள் ஆதாரப்பூர்வத்துடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராசபக்சேயின் ஆலோசகராக இருந்தவர் இந்திய அமைதிப் படையின் முன்னாள் அதிகாரியான லெப்டினன்ட் - ஜெனரல் சதீஷ் நம்பியார் ஆவார். இவருடைய இளைய சகோதரர்தான் ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த விஜய் நம்பியார் ஆவார். இந்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன், நிரூபமா மேனன், இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே. ஏ. நாயர், சோனியாகாந்தியின் செயலாளர் ஜார்ஜ் போன்ற மலையாளிகளின் கும்பல் ஈழத் தமிழர்களின் அழித்தொழிப்புக்கு எவ்வாறெல்லாம் துணை நின்றார்கள், இந்திய அரசுக்கும், இலங்கை சிங்கள அரசுக்கும் ஆலோசனைகளைக் கூறினார்கள் என்பதை பற்றியெல்லாம் விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி சிங்கள அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் எல்லாவகையான உதவிகளையும் செய்து துணை நின்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல, தங்களுடைய நட்பு நாடுகளையும் ஆதரவாகத் திரட்டிக்கொண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு மனித உரிமைக் காப்பாளர் என்ற நற்சான்றிதழை பெற்றுத்தருவதில் இந்நாடுகளின் பங்கு மிகப் பெரியது. ஊடகங்கள், செய்தியாளர்கள், செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள், ஐ.நா. பிரதிநிதிகள் என அனைவரையும் இலங்கையிலிருந்து வெளியேற்றிவிட்டு சாட்சிகளே இல்லாத ஒரு கொடுமையான போரை நடத்தி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த சிங்கள அரசை போர்க் குற்றத்திலிருந்தும், மனித உரிமை மீறல்களிலிருந்தும் காப்பாற்றுவதற்கு இந்தியா என்னென்ன செய்தது என்பதை விரிவாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டத்தக்கதாகும். சர்வதேச கடல் மார்க்கத்தில் இந்துமாக்கடல் மார்க்கம் மிகமிக முக்கியமானது. ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்களும், சீனா, ஜப்பான் போன்ற கிழக்கு நாடுக்கு மேற்கு நாடுகளுக்கு சரக்குகளைக் கொண்டுசெல்லும் கப்பல்களும் இந்துமாக்கடல் வழியில் தான் செல்லவேண்டும். இந்த வழியின் நடுவே அமைந்திருக்கிறது இலங்கை. எனவே, இலங்கையில் தனது ஆதிக்கத்தை சீனா வலுப்படுத்திவிடுமானால் மேற்கு நாடுகளை அது மிகவும் பாதிக்கும். எனவே சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான முயற்சியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈடுபட்டிருக்கின்றன. வல்லரசுகளின் மோதல் களமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது. தன் வசம் இருந்த இந்துமாக்கடல் ஆதிக்கத்தை பறிகொடுத்துவிட்டு இந்தியா தற்போது செயலற்றுக் கிடக்கிறது. ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் பலிகொடுத்தாவது இலங்கையைத் திருப்திசெய்ய இந்தியா செய்யும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. இவற்றிற்கான அத்தனை ஆதாரங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. நூலாசிரியர் கா. அய்யநாதன் அவர்களின் கடுமையான முயற்சியும், உழைப்பும் இந்நூல் நெடுகிலும் காணக் கிடைக்கின்றன. நான்காம் ஈழப் போராட்டத்தில் வெளிப்படையாகவும், திரை மறைவிலும் என்னென்ன நடந்தது, யார்யார் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதையெல்லாம் முறையாகப் பதிவு செய்து சிறந்ததொரு ஆவணமாக இந்நூல் மலர்ந்துள்ளது. இத்தகையதொரு சிறந்த ஆவணக் களஞ்சியம் ஒவ்வொரு தமிழர் கையிலும் இருக்கவேண்டும். தமிழ்கூறும் நல்லுலகம் இந்நூலை வரவேற்றுப் பாராட்டும் என நம்புகிறேன். - நெடுமாறன் நூல் கிடைக்குமிடம் |