உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கு உயிரூட்டுக! தஞ்சை மாநாட்டில் பழ.நெடுமாறன் வேண்டுகோள் அச்சிடுக
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:50

1916ஆம் ஆண்டு மறைமலையடிகள் தொடக்கிய தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை நேற்று நாம் கொண்டாடினோம். நேற்றுப் பல்வேறு கருத்தரங்குகளில் பேசிய தமிழறிஞர்கள் மறைமலையடிகளின் தொண்டு குறித்தும், தனித்தமிழ் இயக்கத்தின் சிறப்புக் குறித்தும் நிறையவே பேசியிருக்கிறார்கள். நேரம் அதிகமின்மையின் காரணமாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் கூறியதை மட்டும் கூறி எனது பேச்சினைத் தொடங்குகிறேன்.

"தமிழுக்காகப் பிறந்து தமிழுக்காக வாழ்ந்து, தமிழுக்காகவே மறைந்தவர் மறைமலையடிகள் ஒருவரே'' என அவர் கூறியது எல்லா வகையிலும் தமிழர்கள் அனைவராலும் என்றும் நினைவு கூறத்தக்கது என்று கூறினார் அவர்.

"தமிழக அரசும், தமிழறிஞர்களும், தமிழர் தலைவர்களும் எத்தகைய வேறுபாடுமின்றி இணைந்து நின்று கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றுமாறு வற்புறுத்த வேண்டும். அவற்றை ஏற்று நடைமுறைக்குக் கொண்டுவர தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

"1964ஆம் ஆண்டு இந்தியத் தலைநகரான தில்லியில் அகில உலக கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு நடைபெற்றபோது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் அம்மாநாட்டில் பங்கேற்றனர். எனவே, உலக முழுவதிலிமிருந்து வந்திருந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தமிழ் ஆராய்ச்சிக்கென உலக அமைப்பு ஒன்றினை உருவாக்குவது குறித்து முனைவர் தனிநாயகம் அடிகளாரும், முனைவர் வ.அய்.சுப்பிரமணியமும் கலந்து பேசி 7-12-1964ஆம் நாளில் உலகத் தமிழறிஞர்கள் கூட்டத்தைக் கூட்டினர். அக்கூட்டத்திற்கு மூத்தத் தமிழறிஞர் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இம்மன்றத்தின் தலைவராக பேராசிரியர் ழான். ஃபிலியோசா அவர்களும், துணைத் தலைவர்களாக பேரா. தாமஸ் பரோ, பேரா. கியூட்டன், பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேரா. மு. வரதராசனார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பேரா. கமில் சுவலபில், பேரா. சேவியர் தனிநாயகம் ஆகியோர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் முதல் மாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, மொரிசியஸ், தஞ்சை ஆகிய நகரங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
1995ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் இதுவரை நடைபெறவில்லை. உலகத் தமிழராய்ச்சி மன்றமும் செயலிழந்து கிடக்கின்றது. உலக மொழிகளில் சிறந்ததாகத் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், இந்த அமைப்பு இன்னும் வலிவுடனும் பொலிவுடனும் திகழவேண்டும். இந்த அமைப்பிற்கு இதுவரை நிரந்தரமான தலைமை அலுவலகம் எதுவும் இல்லை. இந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ அந்த நாட்டில் அவருடைய அலுவலகமே இந்த அமைப்பின் அலுவலகமாக இருந்து வருகிறது. இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு இது உதவி செய்யாது. எனவே உலகத் தமிழராய்ச்சி மன்றத்திற்கு நிரந்தரமான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். நிரந்தரமான அலுவலர்களும் நியமிக்கப்பட வேண்டும். சென்னையில் அல்லது தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைந் திருக்கும் தஞ்சையில் உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அல்லது மதுரையில் அமைக்கப்பட்டிருக்கிற உலகத் தமிழ்ச் சங்கத்தில் இதற்கு இடமளிக்கப்பட வேண்டும். எனவே உலகத் தமிழ் அறிஞர்களை அழைத்துப் பேசி இம்மன்றத்தினை மீண்டும் செயல் படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

1968ஆம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது அம்மாநாட்டில் தமிழ் உயர் ஆய்வு மையமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை கூறிய முனைவர் தனிநாயகம் அடிகளாரே இந்நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்படுவார் என உலகத் தமிழறிஞர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. இதன் விளைவாக இந்நிறுவனம் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை. இந்நிறுவனம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது. இது மாற்றப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். உலக தமிழறிஞர்களின் பிரதிநிதிகள், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆட்சிக்குழுவில் இடம் பெறவேண்டும். அரசு தலையீடீன்றி தன்னாட்சி உரிமையுடன் இந்த அமைப்பு செயற்பட்டால்தான் உலகத் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை முறையாக நெறிப்படுத்தவும், வளர்க்கவும் முடியும்.

தமிழுக்கென்றுத் தனியாக ஒரு பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில் நிறைவேறியது. தஞ்சையில் அமைக்கப்பட்ட இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் பொறுப்பேற்றார். தொலைநோக்குப் பார்வையுடனும் திட்டமிட்டும் இப்பல்கலைக் கழகத்திற்கான உறுதியான அடித்தளத்தை அவர் அமைத்தார். தமிழ்நாட்டில் உள்ள மற்றப் பல்கலைக்கழகங்களைப் போல இப்பல்கலைக் கழகம் தன்னாட்சி உரிமையுடன் இயங்கவில்லை. தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இயங்க வேண்டிய இரங்கத்தக்க நிலை நீடிக்கிறது.

உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகமாக உருவாக வேண்டிய இப்பல்கலைக் கழகம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமாக சுருங்கிப்போய்விட்டது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து இது முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அங்கம் வகிக்கும் வகையில் இதன் ஆட்சிக்குழு திருத்தியமைக்ப்பட வேண்டும். இதன் துணைவேந்தர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆகியோர் தேர்விலும், நியமனத்திலும் உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் கண்காணிப்பு இருக்க வேண்டும். பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி முதல் பேராசிரியர் பதவி வரை பொறுப்பேற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது. அப்போது தான் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உரிமையான பல்கலைக் கழகமாக இது திகழமுடியும். இதற்கான நிதியை யுனெஸ்கோ அமைப்பு, இந்திய அரசு, தமிழக அரசு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்க போன்று தமிழர்கள் கணிசமாக வாழும் நாட்டரசுகளும் உதவ வேண்டும்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த நிறு வனத்தை செம்மையாக நடத்துவதற்கு உரிய திட்டங்களை வகுத்து, போதுமான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் பெற்று இதற்கு புத்துயிர் அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

கீழ்க்கண்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

1. தமிழ்நாடு உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சங்க கால முதல் வணிகம், சமயம் ஆகிய நோக்கங்களுக்காக பல்வேறு நாடுகளுடன் தமிழர்கள் வைத்திருந்த தொடர்புக்கான தடயங்கள் உலக நாடுகளில் கிடைக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பல இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இலங்கை, பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றில் குடியேறி பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவைகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் சேகரிக்கப்பட்டு உலகத் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்.

2. அதைப்போல உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் இலக்கியங்கள் படைத்து வருகிறார்கள். அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு உலக தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும்.

3. இதைப்போலவே உலகத் தமிழர் பண்பாட்டு வரலாறும் தொகுக்கப்பட வேண்டும்.

4. கணினிக்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை சீர்திருத்த வேண்டும்.

5. தமிழ் இலக்கியங்களின் செம்பதிப்புகளை வெளியிடும் பணி பல நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டு ஒரே நிறுவனத்திலிருந்து இவை வெளியிடப் படவேண்டும்.

6. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள், தமிழ் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இவையெல்லாம் தொகுக்கப்பட்டு உலக தமிழாய்வுகள் தொகுப்பு என்ற பெயரில் வெளியிடப்படவேண்டும்.

7. தமிழ் வழங்கும் நாடுகளில் அறிவியல் - கலைச் சொற்கள் ஆகியவை ஒரே மாதிரியாக உருவாக்கப்பட வேண்டும்.

8. உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகள் சேகரிக்கப்பட்டு நுண்நிழல் படிப்பிரதி தொகுக்கப்பட வேண்டும்.

9. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆய்வு அடங்கல்கள் ஆகியவை உள்பட நோக்கு நூல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

10. உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் இயங்கி வந்த தமிழ்த் துறைகள் போதுமான நிதி ஆதாரம் இன்றி மூடப்பட்டு வருகின்றன. இத்துறைகள் மீண்டும் தொடங்கவும். மேலும் பல பல்கலைக் கழகங்களில் புதிதாகத் தொடக்கவும். தேவையான நிதி உதவியை தமிழக அரசு அளிக்கவேண்டும்.

மேலே கண்ட திட்டங்களை நிறைவேற்றும் பணியை தலையாய பணியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வற்புறுத்த தமிழ் மக்கள் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் அணி திரள வேண்டும்.

உலகத் தமிழர் பேரமைப்பு 5 மீட்பு பணிகளை தனது தலையாய நோக்கங்களாக கொண்டிருக்கிறது.

1. பிற மொழிகளின் கலப்பிலிருந்து நமது மொழியை மீட்கவேண்டும்.

2. பிற பண்பாடுகளின் தாக்கத்திலிருந்து தமிழர் பண்பாடு மீட்டு காக்கப்பட வேண்டும்.

3. பிற இனங்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழினம் மீட்கப்பட வேண்டும்.

4. பிற இனத்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் மண் மீட்கப்பட வேண்டும்.

5. தமிழர்கள் பெருமைமிக்க வரலாற்றினை மறு உருவாக்கம் செய்து நமது குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற அனைத்துத் தமிழர்களும் எத்தகைய வேறுபாடுமின்றி உலகத் தமிழர் பேரமைப்பின் கொடியின் கீழ் அணிதிரள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.