ஈழத்தமிழ் ஏதிலியர் உரிமையுடன் வாழ ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசே கையெழுத்திடு - பூங்குழலி அச்சிடுக
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:38

அய். நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் நடக்கும் ்குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இது உலக அளவில் மனித உரிமைகள் சார்ந்து நடக்கும் முகாமையானதும் ஆக்கரீதியானதுமான செயற்பாடு ஆகும்.

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகள் தத்தமது நாட்டின் மனித உரிமைச் சூழலை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும். இதனையே ்குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு” – Universal Periodic Review (UPR) என்று அழைப்பார்கள். இந்த ஆய்வுக்கு ஒவ்வொரு நாடும் மிகுந்த முகாமையைக் கொடுக்கும்.


அய். நா. மனித உரிமை ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் நடக்கும் இந்த ஆய்வில், மனித உரிமை ஆணையம் ஒவ்வொரு நாட்டில் நிலவும் மனித உரிமை சூழ்நிலைகளையும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளிக்கும். அந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து எவற்றை ஏற்பது – விடுவது என்ற முடிவினை அந்தந்த நாடுகள் எடுக்கும். ஆனால், ஏற்றுக் கொண்டப் பரிந்துரைகளை அடுத்த ஆய்விற்குள் செயற்படுத்திக் காட்ட வேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடப்பாடு ஆகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, 2012-ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாவது ஆய்வுகள் நடந்தன. அதற்கு பிறகு, இந்த ஆண்டு மூன்றாவது ஆய்வு நடக்க உள்ளது.

மனித உரிமை ஆணையம் தனது பரிந்துரைகளை அளிப்பதற்கு முன் அந்தந்த நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்கும். அவர்களும் தங்கள் பார்வையில் தங்கள் நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டிய முகாமை வாய்ந்த மனித உரிமைகள் சார்ந்த பரிந்துரைகளையும் அதற்கான காரணங்களையும் அறிக்கைகளாக அளிப்பார்கள். இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே அய். நா. மனித உரிமை ஆணையம் அந்த நாட்டிற்கான தனது பரிந்துரைகளை வரையும்.

இந்த ஆண்டு நடக்க உள்ள மறு ஆய்வினை முன்னிட்டு இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் தத்தமது பரிந்துரைகளை அளிக்கத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில், கடந்த இரு முறை நடந்த ஆய்வுகளின் போதும், "இந்தியா அய். நா. ஏதிலிகள் பட்டயத்தில் (Refugees Convention) கையெழுத்திட வேண்டும்'' என்ற பரிந்துரை இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர்களால் முன் வைக்கப்பட்டது. அய். நா. மனித உரிமை ஆணையமும் அதை ஏற்றுக் கொண்டு தனது பரிந்துரையில் இணைத்திருந்தது. ஆனால் இந்தியா அந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்து விட்டது.

இதற்கு காரணம் அறிக்கைகள் மற்றும் அரங்கக் கூட்டங்கள் அளவில் மட்டுமே இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அது ஒரு பரவலான மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஆய்வு நடக்க உள்ள சூழலில், இந்தியா ஏதிலிகள் பட்ட யத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறுமானால் அது இந்தியாவின் மீதான அழுத்தமாக இருக்கும். அதனால் மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை இந்தியா ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இந்தியா ஏதிலிகள் பட்டயத்தில் கையெழுத்திட வேண்டியது ஏன் இன்றியமையாதது என்பதைப் புரிந்து கொள்ள நாம் இந்தியாவில் உள்ள ஏதிலியர் குறித்து இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் குடிபெயர்பவர்களை இந்தியச் சட்டம் நான்கு விதமாகப் பார்க்கிறது.

முதலாவதாக, நாடு திரும்பும் இந்திய மரபுவழி மக்கள். எடுத்துக்காட்டாக, இலங்கையின் மலையகத் தமிழர்கள் இந்த வகையினைச் சேர்ந்தவர்கள். இந்திய--இலங்கை உடன்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவால் திரும்பப் பெறப்பட்டவர்கள், போர்க் காலங்களில் இந்தியா திரும்பி வந்தவர்கள், பல பிற காரணங்களுக்காக இந்தியாவிற்கு மீண்டும் குடிபெயர்ந்தவர்கள் என மலையகத் தமிழர்கள் பல் வேறு காலக்கட்டங்களில் பல்வேறு சூழல்களில் இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களை சட்டம் தாயகம் திரும்பியோர் (repatriates) என அழைக்கிறது. இவர்கள் இயற்கையாகவே இந்தியக் குடியுரிமைக்கு தகுதி உடையவர்கள். ஏனெனில் இவர்களது முன்னோர்கள் இந்தியர்கள்.

இரண்டாவதாக, பொருளாதாரக் காரணங்களுக்காக, அதாவது வேலைவாய்ப்பு, வணிகம் இவற்றிற்காக இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் சட்டப்படியான அனுமதியோடு இந்தியாவில் வாழ்பவர்கள். எனவே இவர்களுக்குக் குடியுரிமை என்பது தேவை இல்லை.

மூன்றாவதாக, "அடைக்கலம் கோரியோர்''– (asylum seekers) என அறியப்படுபவர்கள். இவர்கள் இந்திய அரசிடம் அடைக்கலம் கோரி, இந்திய அரசால் சட்டப்படியான அடைக்கலம் அளிக்கப்பட்டவர்கள். எடுத்துக்காட்டாக, திபெத் தலைவரான தலாய்லாமா இவ்வாறு இந்திய அரசிடம் அடைக்கலம் கோரி ஏற்கப்பட்டவர்தான். அவரும் அவர் வந்த போது அவருடன் வந்தவர்களும் இத்தகைய சட்டப்படியான ஏற்பினைப் பெற்றவர்கள்.

மேற்குறிப்பிட்டவாறு சட்டப்படியான ஏற்பினைப்பெற்று அடைக்கலம் கோரியோர், தாயகம் திரும்பிய இந்திய மரபுவழியினர், சட்டப்படியான நுழைவு அனுமதியோடு வருபவர்கள் ஆகியோர் தவிர இந்தியாவிற்கு குடிபெயர்ந்துள்ள அனைத்து பிற நாட்டினரும் "சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள்'' என்றே இந்தியச் சட்டம் சொல்கிறது. இவர்கள்தாம் நான்காவது வகையினர்.

இலங்கையில், போரினால் துன்புற்று இந்தியாவிற்குத் தப்பி ஓடி வந்த, ஈழத்தைத் தொல் தாயகமாகக் கொண்ட தமிழர்கள், இந்தியச் சட்டப்படி "சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்'' – (illegal immigrants) என்றே கருதப்படுகிறார்கள்.

இதன் காரணமாகவே இவர்களுக்கு பல உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டில் அவர்கள் வாழ வேண்டிய அழுத்தம் உள்ளது. முகாம்களுக்கு வெளியே வசிப்பவர்களும் கூட காவல்துறையில் தங்களைக் கட்டாயமாக பதிவு செய்யவும், தங்கள் இருப்பிடத்தை மாற்றும் போதோ, வெளியூர்களுக்குச் செல்லும் போதோ காவல் துறையினரின் அனுமதியைக் கண்டிப்பாகப் பெற வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

அது மட்டுமல்லாது, "சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்'' என்ற முத்திரையின் காரணமாகவே ஈழத் தமிழ் ஏதிலியருக்கு அரசின் நலத் திட்டங்களும் சலுகைகளும் கூட சரி வர கிடைக்காத நிலை உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்ற தகவல்களின்படி, 1.12.2012 அன்றைய நிலையில் தமிழ்நாட்டில் 112 ஈழத் தமிழ் ஏதிலியர் முகாம்கள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 67,117 ஏதிலியர் உள்ளனர்.

இவர்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குகிறது. குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 1000- வழங்கப்படுகிறது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 750 வழங்கப்படுகிறது. அதில் 12 வயதிற்கு குறைவானவர்கள் என்றால் ரூ. 400 மட்டுமே வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு தங்குமிடத்துடன், மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் வழங்கப்படுகின்றன. அரிசியைப் பொறுத்த வரையில், 8 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு மாதம் ஒன்றிற்கு 6 கிலோ வரை பெறலாம். அதற்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒன்றிற்கு 12 கிலோ வரை பெறலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 20 கிலோ வரை அரிசி கட்டணமின்றி கொடுக்கப்படுகிறது. அதற்கு மேல் எனில் ஒரு கிலோ ரூ.0.57 என்ற விலையில் அளிக்கப்படுகிறது. அதாவது ஒரு வயது வந்த மனிதரும் ஒரு 8 வயதுக்குட்பட்ட குழந்தையும் இருந்தாலே அதிகளவாக 18 கிலோ அரிசி வாங்கலாம். கூடுதலாக ஒருவர் என்றால் கட்டணமில்லா வரம்பான 20 கிலோவைத் தாண்டிவிடும். இவற்றைத் தவிர பிற பொருட்களை அரசின் நியாய விலைக் கடைகளில் பிற பொதுமக்களுக்கு உண்டான விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏதிலியர் குழந்தைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் கல்லூரிகளில் கட்டணம் உண்டு. பொறியில் படிப்பிலும் பிற கலை அறிவியல் கல்லூரிகளிலும் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம். மருத்துவப் படிப்பிலோ, வேளாண்மைப் படிப்பிலோ சேரவே முடியாது. இது போக மாநில அரசின் சில குறிப்பிட்ட நலத் திட்ட உதவிகள் அவர்களுக்கும் உண்டு.

மற்றபடி அடிப்படை சுகாதார வசதிகள் கூட அற்ற முகாம்களில், திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் இருப்பதை போன்றே ஈழத் தமிழ் ஏதிலியர் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வு முற்றிலும் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் கைகளில் சிக்கியுள்ளது. இந்த இரு துறை அதிகாரிகளும் நினைத்தால் எந்த ஒரு ஏதிலியரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையே உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 6-ஆம் நாள் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இரவீந்திரன் என்பவர் வருவாய்த் துறை அதிகாரிகளின் அடாவடித்தனத்தால் மனமுடைந்து அங்கிருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாதந்தோறும் ஆய்வுக்கு வரும் வருவாய்த் துறை அதிகாரிகள் அச்சமயத்தில் யாரேனும் முகாமில் இல்லையெனில் அவர்களுக்குரிய உதவித் தொகையை நிறுத்தி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். நோய்வாய்ப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரவீந்திரனின் மகன், அதன் காரணமாக வருவாய்த் துறை அதிகாரி வரும் போது முகாமில் இருக்க முடியவில்லை. ஆனால் சிகிச்சை பெற்று வருவதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் காட்டியும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவருக்கான உதவித் தொகையை தர மறுத்து விட்டனர். இதனாலேயே இரவீந்திரனின் தற்கொலை நிகழ்ந்துள்ளது.

முகாமில் இருப்பவர்கள் சிகிச்சைக்காகவோ, வேலை செய்யவோ முகாமை விட்டு வெளியே செல்ல வேண்டுமெனில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் தயவிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

திபெத், பர்மா போன்ற பிற நாடுகளிலிருந்து வந்துள்ள ஏதிலியருக்கும் இதுதான் நிலைமையா என்றால் இல்லை. அரசு உதவிகளும், முகாம்களின் வாழ் நிலைகளும் கூட திபெத்திய ஏதிலிகளுக்கும் ஈழத் தமிழ் ஏதிலியருக்கும் மிகுந்த பாகுபாட்டுடனே உள்ளன. கடந்த 2006-ஆம் ஆண்டு, "விழிப்புணர்வு'' எனும் வார இதழ் திபெத்திய ஏதிலியர்கள் முகாம்களையும் ஈழத் தமிழ் ஏதிலியர் முகாம்களையும் ஒப்பிட்டு ஓர் ஆய்வறிக்கையினை வெளியிட்டது. அதில் இந்தப் பாகுபாடுகள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. பத்தாண்டுகளாக இந்த நிலைமைகள் மாறவில்லை என்பது மட்டுமல்ல, முன்னிலும் சீர்கேடாக மாறியுள்ளன.

இதற்கிடையே, அண்மையில் பா. ச. க. அரசு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை முன் மொழிந்துள்ளது. அதன்படி அண்டை நாடுகளான "பாகிசுதான், வங்காளதேசம், ஆப்கானிசுதான் ஆகிய நாடுகளில் மத சிறுபான்மையினராக இருந்து, அதனால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்துள்ள் ஏதிலியர்கள் இனி இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஆகியோர் இச்சட்டத்தின்படி குடியுரிமை பெற தகுதி பெறுவார்கள். ஆனால் அதே நாடுகளிலிருந்து வரும் இசுலாமியர்கள், "பொருளாதாரக் காரணங்களுக்காகக் குடிப்பெயர்ந்தவர்கள்'' என்று காரணம் காட்டப்பட்டு அவர்கள் இச்சட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். வங்காள தேசத்திலிருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த இசுலாமியர்களை விரட்டும் மறைமுக செயற்பாட்டில் இந்திய அரசு ஈடுபட்டு வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்துத்துவா கொள்கையை இந்நாட்டின் மீது திணிக்க பல வகையிலும் திட்டமிட்டு செயற்பட்டு வரும் பா. ச. க அரசு, பாகிசுதான், வங்காளதேசம், ஆப்கானிசுதான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும் இச்சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம் மிக வெளிப்படையானது. "இந்தியா இந்துக்களின் இயற்கையான தாயகம்'' என்று சங் பரிவார் தொடர்ந்து வலியுறுத்துவதை இச்சட்டம் முன்னெடுக்கிறது.

மேலும், பாகிசுதான், வங்காளதேசம், ஆப்கானிசுதான் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள "மதச் சிறுபான்மையிராக'' உள்ள அகதிகள், மீண்டும் அந்நாடுகளுக்குச் செல்லும் எண்ணம் அற்றவர்கள். அந்நாடுகளில் உள்ள "மதச் சிறுபான்மையினராக'' கருதப்படும் அனைவரும் இந்தியாவிற்கு வந்தாலும் அவர்களை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்ள இந்திய அரசு, அதிலும் தற்போதைய பா. ச. க. அரசு தயாராகவே உள்ளது.

ஆனால் இந்தியாவில் பெருமளவில் அகதிகளாக தங்கியுள்ள திபெத் மக்கள், தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், என்றேனும் விடுதலை பெற்ற தங்கள் நாட்டிற்கு திரும்பிப் போகும் எண்ணம் கொண்டவர்கள். எனவே, இந்திய அரசின் பல சலுகைகளை அவர்கள் பெற்றிருந்த போதிலும், ஒரு போதும் குடியுரிமை கோரவில்லை. அதே நிலையிலேயே ஈழத் தமிழ் ஏதிலியரும் உள்ளனர்.

ஒரு புறம் பாகிசுதான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிசுதானிலிருந்து வரும் ஏதிலியருக்கு குடியுரிமை. மற்றொரு புறம் திபெத் ஏதிலியருக்குச் சிறப்பான சலுகைகளுடன் கவனிப்பு. இங்கோ ஈழத் தமிழ் ஏதிலியருக்கு மிக மோசமான நிலை. இந்திய அரசு தனது சிந்தைப் போக்கிற்கு ஏற்ப ஏதிலியரை தரம் பிரித்து நடத்துகிறது. ஆனால் இந்தப் பாகுபாடுகளை சட்டத்தின் உதவியினால் கூட கேள்வி கேட்க முடியாது என்பதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை.

இத்தகைய சட்டப் பாதுகாப்பற்ற நிலை காரணமாகவே, இந்தியாவிலிருந்து ஈழத் தமிழ் ஏதிலியர் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு உயிரைப் பணயம் வைத்தேனும் தப்பிச் செல்ல முனைகின்றனர். கடந்த சூன் மாதம் அவ்வாறு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 44 ஈழத் தமிழர்கள் இந்தோனேசியாவில் கரை ஒதுங்கி பன்னாட்டுச் சட்டச் சிக்கலுக்குள் மாட்டினர்.

இங்கு வாழப் பிடிக்காமல் இலங்கைக்குத் திரும்பச் செல்வது என்பது வேறு. ஆனால் ஆஸ்திரேலியாவும் இந்தியாவைப் போல அவர்களுக்கு வெளிநாடே! அங்கும் அவர்கள் ஏதிலியரே! பின் ஏன் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து அங்கு செல்ல முயல வேண்டும்? இந்தியாவில் "சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள்'' என்ற பெயரில் குற்றவாளிகளாக வாழ்வதைக் காட்டிலும் ஆஸ்திரேலியா போன்று அய். நா. ஏதிலியர் பட்டயத்தில் கையெழுத்திட்ட நாட்டில் அய். நா. பாதுகாப்புடனாவது வாழலாம் என்று எண்ணியே அவர்கள் இத்தகைய உயிருக்கே உலை வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆக, அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தியச் சட்டப்படி ஈழத் தமிழ் ஏதிலியர் மீது "சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்'' என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பதுதான். எனவே நமது முதன்மையான பணி இந்த முத்திரையை நீக்க முனைவதேயாகும்.

அதற்காக நாம் வைக்கும் கோரிக்கை ஏதிலியருக்கு துணை செய்வதோடு அரசியல் ரீதியாக சரியானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெனில் நாம் வைக்க வேண்டியது இந்திய அரசு அய். நா. ஏதிலியர் பட்டயத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதே.

ஏனெனில், இந்த ஏதிலியர் பட்டயம். ஏதிலியர் என்றால் யார் என்பதை வரையறுப்பதோடு, அவர்களுக்கான உரிமைகளையும், அவர்களைப் பாதுகாப்பதற்கு, இந்தப் பட்டயத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு உள்ள கடப்பாடுகளையும் வரையறுக்கிறது.

1951-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஏதிலியர் பட்டயம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் எழுந்த ஏதிலியர் குறித்த சிக்கல்களைக் கையாளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. 1954-ஆம் ஆண்டு முதன் முதலாக இதனை ஏற்றுக் கையெழுத்திட்ட ஆஸ்திரேலியா தொடங்கி இது வரை 144 நாடுகள் இந்தப் பட்டயத்தை ஏற்றுக் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால், இந்திய அரசு இது வரை அய். நா. ஏதிலியர் பட்டயத்தில் கையெழுத்திடவில்லை. அதனாலேயே தன் விருப்பப்படி ஏதிலியரைத் தரம் பிரித்து நடத்துவது இந்திய அரசுக்குச் சாத்தியமாகிறது.

"மதம், தேசிய இனம், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் சார்ந்து இருத்தல் அல்லது அரசியல் கருத்தியல் போன்ற காரணங்களால் தனது சொந்த நாட்டில் உயிர் ஆபத்து உள்ள நிலையில் தனது சொந்த நாட்டிற்கு மீண்டும் செல்ல இயலாமலோ அல்லது விரும்பாமலோ இருக்கும் ஒருவர் ஏதிலி எனப்படுவார். இந்த விளக்கத்திற்கான நோக்கம் தனி நபர்களை உயிர் ஆபத்திலிருந்து பாதுகாப்பதே.'' என்று ஏதிலியர் பட்டயம் வரையறுக்கிறது.

இலங்கையில் தங்களுக்கு உள்ள உயிர் ஆபத்திலிருந்து தப்பிக்கவே ஈழத் தமிழ் ஏதிலியர் இந்தியா வந்துள்ளனர். எனவே அவர்கள் அய். நா. ஏதிலியர் பட்டயம் வரையறுக்கும் "ஏதிலியர்'' என்ற தகுதி உடையவர்கள். ஆனால், இந்தியா அப்பட்டயத்தில் கையெழுத்திடாததினால் மட்டுமே அவர்கள் "சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்'' என்று வரையறுக்கப்படுகின்றனர். இந்தியா அப்பட்டயத்தில் கையெழுத்திடுமானால் இவர்கள் அனைவரும் அய். நா. வால் ஏற்கப்பட்ட ஏதிலியர் என்ற தகுதியினைச் சட்டப்படி பெறுவார்கள்.

அது மட்டுமல்லாது, அய். நா. ஏதிலியர் பட்டயத்தின் இந்த விவரணையின்படி ஏதிலிகளாக ஏற்கப்பட்டவர்கள் அனைவரும் அய். நா. வின் ஏதிலிகள் ஆணையத்தின் பாதுகாப்பின் கீழ் வருவார்கள். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கென சில உரிமைகளையும் சில சலுகைகளையும் அய். நா. ஏதிலியர் பட்டயம் வழங்குகிறது.

  • அடையாள அட்டைகள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லத்தக்க பயண ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்
  • ஏதிலியராக வாழும் நாட்டில் உள்ள குடிமக்களுக்கு உரிய கீழ்க் காணும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
    • மதத்தைப் பின்பற்றவும் மதக் கல்வியைப் பயிலவும் பயிற்றுவிக்கவுமான உரிமை
    • நீதிமன்றங்களை அணுகவும் சட்ட உதவி பெறவுமான உரிமை
    • தொடக்கக்கல்வி பெறுவதற்கான உரிமை
    • பொது நிவாரணங்கள் மற்றும் உதவிகள் பெற உரிமை
    • சமூகப் பாதுகாப்பு உரிமை
    • அறிவு சார் காப்புரிமை
    • கலை, இலக்கிய மற்றும் அறிவியல் உருவாக்கங்கள் மீதான உரிமை
    • வரி விதிப்பின் முன் சம உரிமை
  • பிற வெளிநாட்டவருக்கு உள்ள கீழ்க் காணும் உரிமைகள்
    • தொழிற்சங்கங்களில் உறுப்பினராக சேரும் உரிமை
    • அரசியல் சாராத ஆதாய நோக்கு இல்லாத அமைப்புகளில் சேரும் உரிமை
    • ஊதியம் ஈட்டும் பணி உரிமை
  • பிற உரிமைகள்
    • சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை
    • தொழில் செய்யும் உரிமை
    • தற் சார்பு தொழில் செய்யும் உரிமை
    • வீடு கட்டிக் கொள்ளும் உரிமை
    • உயர் கல்விக்கான உரிமை
    • தங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை
    • நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடும் உரிமை

மேலே குறிப்பிடப் பட்டுள்ள பல உரிமைகள் தற்போது, ஈழத் தமிழ் ஏதிலியருக்கு மறுக்கப்பட்டு வருவதை நாம் நேரடியாகவே அறிவோம். குறிப்பாக உயர் கல்வி உரிமையும், சொத்து உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு இரு சக்கர வாகனம் கூட அவர்கள் தங்கள் பெயரில் வைத்துக் கொள்ள முடியாது. மேலும் முகாம்களில் வசிக்கும் ஏதிலியருக்கு தங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையோ, நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடும் உரிமையோ, ஊதியம் ஈட்டும் பணி செய்யும் உரிமையோ கிடையாது.

ஏதிலிகள் பட்டயத்தில் இந்தியா கையெழுத்திடுமாயின், இந்த நிலை மாறி, அந்தப் பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் ஈழத் தமிழ் ஏதிலியர் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஏதிலிகளுக்கும் கிடைக்கும். மேலும், அனைத்து ஏதிலியரையும் ஒரு சேர நடத்த வேண்டிய கடப்பாட்டை இந்தியா ஏற்றுக் கொள்வதாகவே அது பொருள் தரும். அது மட்டுமல்லாது, ஏதிலிகளின் நிலை மற்றும் முகாம்களின் நிலைகளுக்கு அய். நா. ஏதிலிகள் ஆணையத்திற்கு அது பதில் கூற வேண்டும். மேலும் அய். நா. ஏதிலிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் பன்னாட்டு உதவிகளும் ஏதிலிகளுக்குச் சென்றடையும். இதுவே உண்மையில் அரசியல் ரீதியாகச் சரியான தீர்வாக அமையும்.

இந்தச் சூழலிலேயே இந்தியா அய். நா. வின் ஏதிலிகள் பட்டயத்தில் கையெழுத்திடுவது முகாமை பெறுகிறது. அதிலும் தற்போது, "குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு'' இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், நாம் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

எனவே இதனை உணர்ந்து, ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் "அய். நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்'' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மக்கள் இயக்கத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.