நூல் மதிப்புரை படித்தேன்! படியுங்கள்! அச்சிடுக
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:41

"ஊரின் நடுவே அழகான குளம். தாமரையும் அல்லியும் பூத்துக் கிடக்கின்றன. பூக்களின் மீது வண்டுகளும், தேனீக்களும், தேன்சிட்டுகளும் ரீங்கரிக்கும். மீன் குஞ்சுகளைக்  கவ்வ நீர்ப்பறவைகளும் வருகின்றன. குளத்தின் அழகு மனதைக் கவர்கிறது. ஆனால் நீரின் அடியில் கிடப்பது சகதியும் மலர்களின் தண்டுகளும்தான். இவை மலர்களின் அழகிற்கு ஆதாரம். குளத்தின் அடியிலுள்ள சேற்றை யாரும் விரும்புவதில்லை.  அது மக்களுக்கு எந்தப் பயனும் தருவதில்லை. அந்த சேற்றைப் போன்றதுதான் என் வாழ்க்கை.'' என "லட்சுமி என்னும் பயணி' என்று எழிலுறத் தொடங்கும் இந் நூலில்  நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றுள்ளன.

அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வரலாற்றை எழுதியுள்ளனர். அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் தோழர்கள் அந்தத் தலைவர்களின் வரலாறுகளை எழுதியுள்ளனர்.  நானறிந்த வரை எந்தத் தலைவரின் மனைவியும் தன் வரலாற்றை எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

தன் வரலாற்று நூல்களில் இது முற்றிலுமாக வேறுபட்டது. எந்தவிதமான அழகுப்பூச்சும், ஆரவாரமும் இல்லாமல் இந்நூல் எளிய நடையில் உள்ளத்தை உருக்கும் வகையில்  எழுதப்பட்டுள்ளது. பிறந்து விவரம் அறிந்த நாளிலிருந்து புறக்கணிப்பையும், அவமதிப்பையும் தவிர வேறு எதையும் அறியாத பெண்ணின் துயரமிக்க வாழ்க்கையை இந்நூல்  சித்தரிக்கிறது.

"உழைப்பையே இலட்சியமாகக் கொண்ட பெண்களே என் வளர்ச்சிக்குக் காரணம்'' என்ற இலட்சுமி அம்மையாரின் கூற்றில் அவரது வாழ்வின் சாரம்அ டங்கியுள்ளது. வறுமையில் வாடிய தாயின் வயிற்றில் பிறந்து குடிகாரத் தந்தையால் புறக்கணிக்கப்பட்டு பசியும் பட்டினியுமாகத் தொடர்ந்த இளம் இலட்சுமியின் வாழ்க்கை மேலும் மேலும்  இன்னல்களைச் சந்திக்கிறது. அருகில் உள்ள வீட்டுப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்கும் போது தானும் படிக்க வேண்டும் என அந்தப் பிஞ்சு உள்ளம் விரும்புகிறது.

ஆனால் பெற்றோரின் அக்கறையற்றப் போக்கையும் மீறி தன்னுடைய தோழியின் உதவியால் பள்ளியின் ஆசிரியையைச் சந்தித்து அவரது அரவணைப்பால் பள்ளியில்  சேர்கிறாள் சிறுமி இலட்சுமி.

பிறகு கிறிஸ்துவ மடத்தில் சேர்ந்து அனாதைக் குழந்தையாக வளர்க்கப்பட்டு பள்ளி இறுதிவரை படிக்க இலட்சுமி பட்டபாடு அவரது உள்ளத்தை உறுதியுள்ளதாக
மாற்றுகிறது.

பெற்றோர் இருந்தும் தன் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் வளர்ந்த இலட்சுமி பின்னர் அதற்கும் வழியில்லாமல் இரக்கம் நிறைந்த மற்றொரு குடும்பத்தில் அடைக்கலம்  புகுந்து அக்குடும்பத்தின் உதவியால் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு உழைத்துப் பிழைக்க முற்படுகிறார். ஆனால், குடிகாரத் தந்தைக்கு அதுவும்  பிடிக்கவில்லை. ஆனாலும் வேலையை விடாமல் தொழிற்சங்கத்தில் சேர்ந்து புதிய அனுபவங்களைப் பெறுகிறார்.

தொழிற்சங்கமே அவருக்கு திருமணம் செய்து வைக்கிறது. சாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட எளிய திருமணம். மார்க்சியவாதியான மணியரசனை இலட்சுமி கரம்  பற்றுகிறார். கழுத்தில் தாலியில்லாமல் வந்த இலட்சுமியை ஊர் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. கண்டபடி பேசுகிறது. ஆனால், யாரைப் பற்றியும் எதைப்பற்றியும்  கவலைப்படாமல் இல்லத்தரசியாக வாழ்வைத் தொடர்கிறார்.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான இன்னல்களும், இழப்புகளும் இலட்சுமிக்கும்  நேரிடுகின்றன. இவற்றை விரிவாகவே இந்நூல் பதிவு செய்துள்ளது.

குடும்பம் நடத்துவதற்கு தான் உழைத்தே தீரவேண்டும் என்னும் நிலையில் இலட்சுமி தொடர்ந்து உழைப்பின் உருவமாகவே மாறுகிறார். அவரது ஏழ்மையைப் போக்க  தோழர்கள் பலவகையிலும் உதவுகிறார்கள். மகனும் மகளும் பிறந்து வளர்கிறார்கள். கொடும் நோயினால் மகளை இழக்க நேரிடுகிறது. "மகளின் இனிய பேச்சு, துறுதுறு நடையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டன. என் கண் முன், என் பெண் விடைபெற்றுக்கொண்டிருந்தாள். காலன் அவளை என்
கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டிருந்தான்'' என்ற வரிகள் இலட்சுமியின் சோகத்தின் சிகர வரிகளாகும்.

இந்நூலின் நெடுகிலும் தனது உள்ளத்தில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே இலட்சுமி அம்மையார் எழுதியிருக்கும் பாங்கு படிப்பவர்களின் உள்ளங்களை  ஊடுருவும் என்பதில் ஐயமில்லை.

தமிழகம் அறிந்த ஒரு தலைவரின் மனைவி எழுதியுள்ள இந்த நூல் தன்வரலாற்று நூல்களில் குறிப்பிடத்தக்க இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

- நெ.

நூல் கிடைக்குமிடம் : மைத்ரி புக்ஸ், 491, பி, ஒமேகா பிளாட்ஸ், 4வது இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை-600 091.
அலைப்பேசி: 94455 75740 . விலை ரூ.180