கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மூடு விழா தமிழர் தொன்மையை மறைக்க முயற்சி அச்சிடுக
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 14:35

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
கீழடியில் அகழ்வாராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படுவதாக கிடைத்துள்ள செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.
சிவகங்கை மாவட்டம் வைகைக் கரை அருகே கீழடியில் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லாய்வுத் துறையினால் தொடங்கப்பட்டு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தின்  தடயங்கள் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் முதல் முதலாக நகர்ப்புற நாகரிகத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பெரு வியப்பை ஏற்படுத்திற்று.

வைகைக் கரை நெடுகிலும் 250 கி.மீ. தூரம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தின் தடயங்கள் புதையுண்டு கிடப்பதாக  கண்டறியப்பட்டது. அப்போது முதலே இந்த அகழ்வாராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. மேலும் அகழ்வாராய்ச்சி செய்யவும்  அவற்றுக்கேற்ற நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு முன்வரவில்லை. அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு அரும்சாதனை புரிந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன்  உள்பட அதிகாரிகள் தொலைதூரத்தில் உள்ள அசாமிற்கு மாற்றப்பட்டனர். புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேலை மந்தமாக நடைபெற்றது. இப்போது அகழ்வாராய்ச்சிப்  பணிக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முற்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கிணங்க தமிழக அரசே இந்த அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டும்  என வேண்டிக்கொள்கிறேன்.