ஞானசேகரன் சாவுக்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! அச்சிடுக
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:40

பொதுத்துறை வங்கியில் பெற்ற கடனை விவசாயி ஞானசேகரன் உரிய காலத்தில் திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காகக் குண்டர்களை ஏவி அவரின் சாவுக்குக் காரணமாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும், குண்டர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் வலியுறுத்தியும்கூட, இன்னமும் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மறைந்தவரின் குடும்பத்திற்கு உதவ முன்வர வேண்டியது தமிழக முதல்வரின் கடமையாகும். உடனடியாக அதை அவர் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதின் நோக்கமே ஏழை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உதவுவதற்காகவேதான். ஆனால், பெரு முதலாளிகள் பல்லாயிரம் கோடி கடன் பெற்று வங்கிகளை ஏமாற்றுவதே நடைமுறையாக உள்ளது. ஆனால், அரசுத் துறை வங்கிகள் விவசாயிகளுக்குக் கொடுத்தக் கடனை திரும்பப் பெறுவதற்குக் குண்டர்களை ஏவும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் அவர்களின் மறைவால் வருந்தும் அவரின் மகள் திருமதி. மங்கையர்க்கரசிக்கும் அவரின் கணவரும் தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான திரு. தமிழ்வேங்கை அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்