போராடும் மக்களின் அறச்சீற்றமும் காவல் துறையின் கொலை வெறியும்! - பழ. நெடுமாறன் அச்சிடுக
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 11:39

1908-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆங்கிலேயருக்கு உரிமையான கோரல் பஞ்சாலையில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளர்கள் நாள் தோறும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டனர்.

வார விடுமுறை கிடையாது. சிறு தவறுகளுக்குக் கூட சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது. நிறத் திமிருடன் தொழிலாளர்களை ஆங்கிலேய முதலாளிகள் அவமானப்படுத்தினர். இவற்றிற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டத்திற்கு வ. உ. சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும் தலைமை தாங்கினர். இப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு தூத்துக்குடி இணை ஆட்சியராக இருந்த ஆஷ் துரை வெறித்தாண்டவம் ஆடினான். ஆனாலும் தொழிலாளர்களையோ அவர்களின் தலைவர்களையோ மிரட்டி ஒடுக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் வ. உ. சி. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்களின் ஊதியம் அரை மடங்கு உயர்த்தப்பட்டது. உணவு இடைவேளை விடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது. அப்போது பணிந்த ஆங்கிலேயர் ஆட்சி சற்றுக் காலம் கழித்து வ. உ. சி. மீது தேச விரோத வழக்குத் தொடுத்து அவரை சிறையில் அடைத்துப் பழிவாங்கியது என்பது வரலாறாகும்.
110 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தூத்துக்குடி நகரில் அதே பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. முந்தைய போராட்டம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரானப் போராட்டமாகும். தற்போதையப் போராட்டம் தூத்துக்குடியின் நிலம், நீர், காற்று ஆகியவை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு படுத்தப்பட்டு மக்களின் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பதற்கு எதிரானப் போராட்டமாகும்.
1994-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் 1083 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இதன் விளைவாக அங்கு ஸ்டெர்லைட் உட்பட பல தொழிற்சாலைகள் உருவானதைத் தொடர்ந்து தூத்துக்குடியின் இயற்கை வளம் சீரழியத் தொடங்கிற்று. சங்க காலத்திலிருந்து முத்துக் குளிப்புக்குப் பெயர் போன தூத்துக்குடியின் கடல் நீரில் தொழிற்சாலைகளின் வேதியியல் கழிவுகள் கலக்கப்பட்டதின் விளைவாக முத்துக் குளிப்பு அறவே நின்று விட்டது. மீன் பிடித்தலும் குறைந்துவிட்டது. நகரத்திலும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் நச்சு கலந்ததாக மாறியது. காற்றும் மாசுபட்டது. மக்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள், புற்று நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பரவின. குறிப்பாக குழந்தைகள் உடல் குறையுடன் பிறந்தன.
இந்திய நிலவியல் கழக மாதாந்திர வெளியீட்டின் 2017 சூலை இதழில் பிரசுரமான ஆய்வுக் கட்டுரை ஒன்று பின் வருமாறு கூறுகிறது. "தூத்துக்குடியில் உள்ள ஆலைக் "கழிவுகளின் விளைவாக நிலத்தடி நீர் குடிக்கத் தகுதியற்றதாகிவிட்டது. உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள அளவுக்கும் மிக அதிகமான அளவில் நீர் கெட்டுவிட்டது. ஸ்டெர்லைட், கன நீர் ஆலை, நிலா கடல் உணவு ஆலை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளையோ அல்லது குடிநீர்ச் சட்ட விதிமுறைகளையோ சிறிதளவும் மதியாமல் ஸ்டெர்லைட் தாமிர ஆலை தன்னுடைய வேதியியல் கழிவுகளை வெளியேற்றி நிலம், நீர், காற்று ஆகியவற்றை பேரளவிற்கு மாசு படுத்திவிட்டது என கூறியுள்ளது. தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு நிலையம் 1998, 1999, 2003 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளிலும் மேலே கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளது.
1991-ஆம் ஆண்டில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இரத்தினகிரியில் இந்த ஆலையை அமைப்பதற்கான முயற்சி நடைபெற்றது. அங்குள்ள மக்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னால் கோவாவில் அமைக்க முயற்சி நடைபெற்றது. அங்கும் மக்களின் எதிர்ப்பின் காரணமாக இறுதியில் தூத்துக்குடியில் அமைக்க அனுமதிக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக 23 ஆண்டு காலமாக இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாளில் இந்த ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு தடையாணையை நிர்வாகம் பெற்றது.
2013-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ரூ. நூறு கோடி அளிக்க வேண்டுமென ஆணையிட்டது. ஆனால் இந்தத் தொகையில் வெறும் ரூ. 2.5 கோடியை மட்டும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாலைகள் போடுவதற்கு தமிழக அரசு பயன்படுத்தியது. இப்போது இந்தத் தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ. 140 கோடியாக உள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிக்காகவோ, அவர்களுக்கு நல்ல குடிநீர் வழங்குவதற்காகவோ இந்தப் பணத்தைச் செலவழிக்க அரசு முன் வரவில்லை. இதற்கிடையில் இந்த ஆலையின் உற்பத்தியை இரு மடங்காக்கும் திட்டத்துடன் விரிவாக்க முயற்சிகளை நிர்வாகம் தொடங்கிய போது மக்கள் போராட்டம் மூண்டது.
99 நாட்களாக அமைதியாக மக்கள் போராடிய போது தமிழக அரசு தலையிட்டு இந்த ஆலையை மூடவோ அல்லது மக்களின் குறைகளைத் தீர்க்கவோ எதுவும் செய்ய முன் வரவில்லை. நூறாவது நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு சென்ற போது வரலாறு காணாத வகையில் அவர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை ஏவப்பட்டது. குடும்பம் குடும்பமாக பெண்களும் குழந்தைகளும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபடுவது அவர்கள் நோக்கமாக இருந்தால் பெண்களும் குழந்தைகளும் தவிர்க்கப்பட்டிருப்பார்கள். ஆனால் திரும்பத் திரும்ப மக்கள் மீது அரசு குற்றம் சுமத்துகிறது. சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். பெருந் திரளாக மக்கள் கூடும் போது சமூக விரோதிகள் ஊடுருவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல் துறைக்கு உண்டு. ஆனால் தனது கடமையைச் செய்யத் தவறிய காவல்துறை மக்களை கண்மூடித்தனமாகச் சுட்டதை மறைப்பதற்கும் திசைத் திருப்புவதற்கும் சமூக விரோதிகள் என பழி போடுகிறது. அதற்கு முதலமைச்சரும் துணை போவது பெரும் வெட்கக் கேடாகும். தனது ஆதாயத்திற்காக பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வை அழிக்க முற்படும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்தான் மிகப் பெரிய சமூக விரோதியாகும்.
இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கும் திசை திருப்புவதற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பெரு முயற்சி செய்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆலையின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கையாட்களை ஊர்வலத்தில் ஊடுருவ வைத்துக் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டை மறுப்பது எளிதல்ல. இந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற வேண்டும்.
தூத்துக்குடியில் கலவரத்தை ஒடுக்குவதற்குக் காவல்துறை கையாண்ட வழிமுறைகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானதாகும் என்பதை கீழே கண்டுள்ள உண்மைகள் அம்பலப்படுத்துகின்றன. வாகனத்தின் மீது ஏறி நின்றும் கட்டடங்களின் மீது நின்றும் காவலருக்குரிய சீருடை அணியாமல் மாற்றுடைத் தரித்தும் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட 13 பேரில் 8 பேர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள். சுடப்பட்டவர்கள் அனைவரும் இடுப்புக்கு மேல்தான் காயமடைந்திருக்கிறார்கள். வயிற்றிலும் மார்பிலும் வாயிலும் தலையிலும் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். குறி தவறாமல் சுடுபவர்களைக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களின் உடல்களை அவசரம் அவசரமாக பிணப் பரிசோதனை செய்ததும் குடும்பத்தினர் வாங்க மறுத்ததால் அதை தாங்களே எரித்து விடுவோமென காவல் துறை மிரட்டியதும் ஏன்? வழக்கறிஞர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றதால் இறந்தவர்களின் உடல்களை தாங்கள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்றம் நியமித்த மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் நெல்லை மருத்துவமனையிலும் சேர்த்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு பலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய முழுமையான விவரங்கள் மறைக்கப்படுகின்றன.
காவல் துறையினால் கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி காவல் நிலையங்களிலோ திருமண மண்டபங்களிலோ வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடிக்கு அப்பால் வெகு தூரத்தில் உள்ள வல்லநாடு துப்பாக்கி சுட்டுப் பழகும் திடலுக்கு 95 பேர் கொண்டு போகப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்ததின் நோக்கம் என்ன? இந்த நடவடிக்கைக்கு யார் காரணம்? வழக்கறிஞர்களின் கூட்டு முயற்சியால் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டு அவரும் உடனடியாகச் செயல்பட்டு துணை நீதிபதி ஒருவரை வல்லநாட்டிற்கு அனுப்பி உண்மையைக் கண்டறிந்து அனைவரையும் பிணையில் விடுதலை செய்ய ஆணையிட்டுள்ளார். வல்லநாட்டில் வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதி தக்க சமயத்தில் தலையிட்டிருக்காவிட்டால் இவர்களில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக் கூடும்.
தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் அவசர கால நிலை பிறப்பிக்கப்பட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இணையம் முழுமையாக முடக்கப்பட்டது. எந்த செய்தியும் இம்மாவட்டங்களுக்கு வெளியே பரவாமல் திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. சனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் இச்செயலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.
இந்த ஆலைக்கான தாமிரத் தாது ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் தொகை குறைவாகவும் பரப்பளவில் பெரிதாகவும் உள்ள நாடு அது. அங்கு தாமிர உற்பத்தி ஆலை அமைக்காமல் தாமிரத் தாதுப் பொருட்களை தமிழகத்திற்கு அனுப்பி இங்குள்ள தாமிர ஆலையில் உற்பத்தி செய்து மீண்டும் அங்கு அனுப்புவது ஏன்? தன்னுடைய நாட்டில் நிலம், நீர், காற்று மாசுபட அந்நாடு அனுமதிக்கவில்லை. நம்முடைய நாட்டில் ஏன் இத்தகைய நச்சு ஆலை அனுமதிக்கப்பட்டது? ஏற்கனவே இந்தியாவின் பிற மாநிலங்கள் அனுமதிக்க மறுத்த நிலையில் தமிழகத்தில் அனுமதித்தது ஏன்? தமிழ்நாட்டில் காசை விட்டெறிந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், எதை வேண்டுமானாலும் பாழ்படுத்தலாம். கேள்வி கேட்பார் கிடையாது என்ற நிலை நீடிப்பது காரணமா?
சுற்றுச் சூழல், இயற்கை வளம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. ஆனால் அவற்றை சிறிதும் மதியாது சுற்றுச் சூழலை மாசுபடுத்தி இயற்கை வளத்தை அழித்து, மக்களையும் பேரழிவுக்கு உட்படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதித்தது யாருடைய தவறு? இந்த பேரழிவை உருவாக்கும் ஆலையை எதிர்த்து மக்கள் போராடினால் நாட்டின் தொழில் வளம் சீர் குலைந்து போகும், எந்த தொழிற்சாலையும் தமிழ்நாட்டிற்கு வராது என சிலர் பெருங்குரல் எழுப்புகின்றனர். நாள்தோறும் செத்துச் செத்துப் பிழைக்கும் தூத்துக்குடி மக்களின் பதற்றத்தையும் அவர்களுக்கு ஆதரவாகக் கொதித்தெழுந்துள்ள தமிழக மக்களின் அறச்சீற்றத்தையும் இவர்கள் உணரவில்லை.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் பவானி ஆற்றின் கரையில் செயற்கைப் பட்டு இழை உற்பத்தி செய்யும் விஸ்கோஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையின் வேதியியல் கழிவு நீரால் பவானி ஆறு பாழ்பட்டது. 20 ஆண்டு காலமாக மக்கள் போராடி, அதன் விளைவாக இத்தொழிற்சாலை மூடப்பட்டது. திருப்பூர் பின்னலாடைக்கு சாயமூட்டும் ஆலைகளின் விளைவாக நொய்யலாறு பாழ்பட்டது மட்டுமல்ல. அந்த ஆற்றின் நீர் பாய்ந்த நிலங்களும் பாழ்பட்டு விட்டன. வேலூர் மற்றும் சுற்றுப்புறமுள்ள ஊர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பாலாற்றில் விடப்பட்டு அது பாழாறு ஆகிவிட்டது. தமிழகத்தின் ஒரே வற்றாத ஆறான தாமிரபரணியின் கரையில் கோக், பெப்சி குளிர்பானத் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டு நமது மக்களுக்கும் வேளாண்மைக்கும் தேவையானத் தண்ணீர் உறியப்பட்டு காசாகிறது. கேரளா, இராஜஸ்தான், மராட்டியம் உட்பட ஏழுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பன்னாட்டு குளிர் பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமான தமிழ்நாட்டில் அவர்களுக்குத் தங்குத் தடையில்லாத அனுமதி அளிக்கப்படுகிறது. கையூட்டு வாங்கும் கரங்களும் இயற்கையை அழிக்கும் கரங்களும் கைகோர்த்து நாட்டைச் சூறையாடுகின்றன.
முன்னேறிய நாடுகளில் இயற்கை வளத்தை மாசுபடுத்தும் எந்தத் தொழிற்சாலைகளும் அமைக்காமல் பின் தங்கிய நாடுகளில் அமைத்து அவற்றின் இயற்கைச் சூழலைக் கெடுத்து, உற்பத்திப் பொருளை மட்டும் அந்நாடுகள் பெற்றுக் கொள்கின்றன. நமது நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ இயற்கைச் சூழலைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத உள்நாட்டுத் தரகு முதலாளிகள் இத்தகைய தொழிற்சாலைகளைத் தொடங்குகிறார்கள். கோடி கோடியாக செல்வம் சேர்க்கிறார்கள். அதில் ஒரு பகுதியை அரசியல் கட்சிகளுக்கு அள்ளி அள்ளித் தருகிறார்கள். ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாக சாகிறார்கள். மக்களைச் சாகடித்தும்"," இயற்கைச் சூழலை அழித்தும் நமது தொழில் வளம் பெருக வேண்டும் என்று சொன்னால் அந்தத் தொழில் வளம் நமக்குத் தேவையில்லை.
நன்றி! தினமணி - 05-06-2018