இராசராசன் சிலை களவு! - பின்னணியில் யார்? யார்? அச்சிடுக
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 12:14

முன்னாள்  அமைச்சர் வி. வே. சாமிநாதன் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்திகள்!
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக தஞ்சையில் எழுப்பிய கோவில் இன்னமும் பொலிவுத் தோற்றம் குன்றாமல் வானளாவ எழுந்து நின்று தமிழர்களின் சிற்பக் கலையின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 

இக்கோவிலின் சிறப்புக் குறித்து வரலாற்றாசிரியர்களான தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி போன்றவர்கள் தங்களின் நூல்களில் விவரமாக எழுதியுள்ளனர்.  நம் மத்தியில் இன்றும் வாழ்ந்து வரும் வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் இராசராசசேச்சரம் என்ற தலைப்பில் அனைத்து விவரங்களும் அடங்கிய பெரு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.  
இந்நூலின் 438-439ஆம் பக்கங்களில் இக்கோயிலின் சிறீ காரியம் என்னும் தலைமை உயர் அலுவலர் பதவி வகித்த பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான  தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் 13 செப்புத்  திருமேனிகளை இக்கோயிலுக்கு செய்தளித்துள்ள விவரம் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றில்  பெரிய பெருமாள் என அழைக்கப்பட்ட மாமன்னன் இராசராசன் செப்புச் சிலை, பெரிய பெருமாள் நம்பிராட்டியார் என அழைக்கப்பட்ட உலகமாதேவியார் என்ற பட்டத்தரசியின் செப்புச் சிலை ஆகியவையும் உள்ளடங்கியவையாகும். இச்செப்புத் திருமேனிகள் குறித்து  38, 40, 43 ஆகிய எண்களைப் பெற்ற மூன்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இத்திருமேனிகளுக்குரிய அணிகலன்களையும்  அவன் அளித்துள்ளான் எனக் குறித்துள்ளார்.  
11ஆம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில் செய்யப்பட்ட இச்செப்புச் சிலைகள் தஞ்சை பெரியகோயிலிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னால் களவாடப்பட்டுவிட்டன. இவ்விரு சிலைகளின் பழமை மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் பெறும். தமிழக அரசின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரியான பொன். மாணிக்கவேல் அவர்கள் குசராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளை - காலிகோ அருங்காட்சியகத்திலிருந்து மீட்டுள்ளார். இவ்விரு சிலைகளும் இப்போது மக்களின் பேராதரவுக்கும், பெரும் வரவேற்புக்கும், உற்சாகத்திற்குமிடையே தஞ்சை பெரியகோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு வைக்கப்பெற்றுள்ளன.  
"மாமன்னனான இராசராச சோழனே இக்கோயிலுக்கு மீண்டும் திரும்பியதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது” என வரலாற்றாய்வாளர் குடவாயில்  பாலசுப்பிரமணியன் கூறியிருப்பது அனைத்து வகையிலும் பொருந்துவதாகும். மேலும் அவர் கூறுகையில், "இராசராசன் வாழ்ந்த காலத்திலேயே அவரின் அனுமதியுடன் உயர் அதிகாரி ஒருவரால் இவ்விரு சிலைகளும் செய்யப்பட்டு கோயிலுக்குள் வைக்கப்பட்டன என்பதும், வரலாற்றுச் சிறப்பும், சமுதாய பண்பாட்டுப் பெருமையும் இவ்விரு சிலைகளுக்கும் உண்டு என்பதும் தமிழருக்குப் பெருமையளிப்பவை” என்றார்.
இவ்விரு சிலைகளும் மீட்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் வி.வே. சாமிநாதன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கே அடிப்படைக் காரணமாகும். இச்சிலைகளை மீட்கும்படி சிலை கடத்தல் தடுப்புக் காவல் பிரிவுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் விளைவாகவே இச்சிலைகள் மூன்று மாத காலத்திற்குள் மீட்கப்பட்டன. தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி இங்கு 66 செப்புத் திருமேனிகள் இருந்தன என்பது தெரிகிறது. அவற்றில் பல இப்போது காணப்படவில்லை. அவற்றையும் மீட்கவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.  
இச்சிலைகள் திருட்டு, மீட்பு ஆகியவைக் குறித்து முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வே. சாமிநாதன் அவர்களிடம் பேசியபோது, அவர் கூறிய விவரங்கள் அதிர்ச்சி தரத்தக்கவையாகும். பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் உள்ள பலர் இச்சிலைகளின் திருட்டில் தொடர்புடையவர்கள். திருட்டையே மூடி மறைக்க பல முயற்சிகள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் தாண்டி கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக  வி.வே. சாமிநாதன் அவர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார். அவரே கூறிய விவரங்கள் கீழே  குறிக்கப்பட்டுள்ளன.
"கி.பி. 985 சூன் 25ஆம் நாள் இராசராச சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றார். அதன் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1984ஆம் ஆண்டு தஞ்சை பெரியகோயிலில் பெரியதொரு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையமைச்சர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இராசராசன் சிலைக்குச் சூட்டுவதற்காக காஞ்சி சங்கர மடாதிபதி சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் வைரக் கீரிடம் ஒன்றினை அளித்திருந்தார். இதைச் சூட்டுவதற்காக தலைமையமைச்சரும், முதல்வரும் கோயிலுக்குள் நுழைந்தபோது தமிழ் ஆர்வலர்கள் சிலர் குறுக்கிட்டு "வைரமுடி சூட்டப்பட இருக்கிற இராசராசன் சிலை உண்மையான சிலை அல்ல. அதைக் களவாடிவிட்டுப் போலியான சிலையை உள்ளே வைத்திருக்கிறார்கள்” என முறையிட்டனர்.
1986-87இல் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக வி.வே. சாமிநாதன் அவர்கள் இருந்தபோது காஞ்சி சங்கரமடத்திற்குச் சென்றிருந்தார். அப்போது  பெரியவர் சங்கராச்சாரியார் தஞ்சை கோயிலில் களவுபோன இராசராசன் மற்றும் உலகமாதேவி ஆகிய சிலைகள் இரண்டும் குசராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் மிருணாளினி சாராபாய்க்கு சொந்தமான காலிகோ அருட்காட்சியகத்தில் இருப்பதாக முழு விவரத்தையும் கூறியுள்ளார். எனவே, உடனடியாக இச்சிலைகளை மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவார காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மூத்த வழக்கறிஞரான கோவிந்தசாமிநாதன் அமைச்சரைச் சந்தித்திருக்கிறார். காலிகோ அருங்காட்சியகத்தின் உரிமையாளரான மிருணாளினி சாராபாய் தனது சகோதரி என்றும், இச்சிலைகள் விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டார். ஆனால் அமைச்சர் அதற்கிணங்க மறுத்துவிட்டார்.  இதற்குள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்தார், ஆளுங்கட்சி பிளவுபட்டது.  பின்னர் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் குசராத் அரசுடன் பேச்சு நடத்தி இச்சிலைகளை மீட்க செய்யப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. எனவே சிலை மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
1963ஆம் ஆண்டில் டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் நாயகமான சிவமூர்த்தி என்பவர் எழுதிய South  Indian Copper statues என்ற நூலிலும், 1983ஆம் ஆண்டு தேசிய அருங்காட்சியகம் வெளியிட்ட The Great Tradition of Indian Bronze Master Pieces என்னும் ஆங்கில நூலிலும் இராசராசன் சிலை, உலகமாதேவி சிலை ஆகியவற்றின் படங்களும் அவை தற்போது காலிகோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றன என்ற செய்தியும் பதிவாகியுள்ளது. இச்சிலைகள் தஞ்சை பெரியகோயிலில் இருந்த சிலைகள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை காலிகோ அருங்காட்சியகம் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி என்று ஐயந்திரிபற நிரூபிக்கவேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உண்டு. அதைப்போல களவுப் பொருட்களை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு எப்படி  அப்பொருள் கிடைத்தது என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் காட்டிவேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், மிருணாளினி சாராபாய் குடும்பத்தினர் இதுவரை அத்தகைய ஆதாரங்கள் எவையையும் காட்டவில்லை.  
இராசராசன் முடிசூடிய ஆயிரமாவதாண்டு விழா 1984ஆம் ஆண்டு நடைபெற்றபோது  இந்தியத் தமையமைச்சரும், தமிழக முதல்வரும் இராசராசனின் சிலைக்கு வைரமுடி சூட்டுவதற்காக சென்ற போது அங்குள்ள சிலை போலியான சிலை என்று உள்ளூரைச் சேர்ந்த சான்றோர்கள் சொல்லும் வரை யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாராட்டப்பெற்ற தஞ்சைக் கோயிலில் நடந்த இந்த சிலைக் களவு அதுவும் கோயிலைக் கட்டிய இராசராசன் மற்றும் உலகமாதேவியின் சிலைகளே களவுபோன விவரம் அறநிலையத்துறைக்குத்  தெரியாமல்  இருந்தது எப்படி? அல்லது  தெரிந்தும் அலட்சியம் செய்தார்களா?  என்ற கேள்விகள் நம்மைக் குடைகின்றன.
"கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக களவுப்போன இந்தச் சிலைகளை மீட்பதற்கான பணியில் வி.வே. சாமிநாதன் தொடர்ந்து ஈடுபட்டார். இதற்காக காவல்துறையிலும், அறநிலையத்துறையிலும் அவர் புகார் செய்தும் எந்தப் பயனுமில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு விண்ணப்பத்தை அளித்தார். எனது வழக்கில் 28&11&2016 அன்று தலைமை நீதிநாயகமாக இருந்த சஞ்சய் கிஷன் கெளல் அவர்களும், நீதிநாயகம் ஆர். மகாதேவன் அவர்களும் பின்வரும் தீர்ப்பினை அளித்தார்கள். "பொது வழக்காக இம்மனுவை நாங்கள் ஏற்கவில்லை. ஆனாலும், இந்த மனுவை அரசு ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என விரும்புகிறோம். எனவே, இம்மனுவை அளித்த வி.வே. சாமிநாதன் தமிழக அரசை மீண்டும் அணுகலாம்” என தீர்ப்பளித்தனர்.
எனவே, 2016ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசு தலைமைச்  செயலாளர் முதல் அறநிலையத்துறை அமைச்சர் வரை தொடர்ந்து புகார்களை அனுப்பினார். இதன் விளைவாக 2018ஆம்  ஆண்டில் இச்சிலைக் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளும்படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவரான பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ஆணையிட்டார்.
தமிழகக் கோயில்களிலிருந்து களவுப் போன ஏராளமான சிலைகளைத் திறமையாக மீட்டெடுத்த உயர் அதிகாரியான பொன். மாணிக்கவேல் மற்றும் இப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கட்ராமன், இராஜாராம், அசோக் நடராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர். 29-05-18 அன்று அகமதாபாத் காலிகோ அருங்காட்சியகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.  இதன் விளைவாக பல உண்மைகள் வெளிப்பட்டன.
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயிலிலிருந்த உயர்நிலை அலுவலர்களால் இச்சிலைகள் களவாடப்பட்டுள்ளன.  தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பகுதி சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி மூலமாக சென்னையில் இருந்த கெளதம் சாராபாயிடம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்பட்டது.  மேலும்,  இவ்வழக்கில் தொடர்பானவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிறகு காலிகோ அருங்காட்சியகத்திலிருந்து இச்சிலைகள் கைப்பற்றப்பட்டு தஞ்சை பெரியகோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்ப் பெற்ற தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய இராசராசப் பேரரசன் மற்றும் பேரரசி உலகமாதேவி ஆகியோரின் சிலைகளையே களவாடியவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்தக் களவை திறமையாகப் புலனாய்வு செய்து மீட்டெடுத்த பொன். மாணிக்கவேல் உட்பட அதிகாரிகள் அனைவருக்கும் உயர் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தப்படவேண்டும்.
தஞ்சை பெரியகோயிலுக்கு மராட்டிய அரசப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டிருப்பது ரத்து செய்யப்படவேண்டும். மேலும் இந்த வழக்கில் அந்த குடும்பத்தையும்  சேர்க்கவேண்டும்” என முன்னாள்  அமைச்சர்  வி.வே. சாமிநாதன் வற்புறுத்தியுள்ளார்.
1986ஆம் ஆண்டில் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தும் பதவியில் இல்லாதபோதும் தொடர்ந்து 32 ஆண்டு காலத்திற்கும் மேலாக இச்சிலைகளை மீட்க அரும்பாடுபட்ட  இனிய நண்பர் வி.வே. சாமிநாதன் அவர்களை  தமிழக மக்கள் சார்பில்  மனமாறப் பாராட்டுகிறேன். இந்தியாவில் உள்ள அருங் காட்சியகங்களிலும், உலக நாடுகளில் உள்ள அருங்காட்சிய கங்களிலும் காட்சிப் பொருள்களாக வைக்கப்  பட்டிருக்கும் தமிழகக்  கலைக் கருவூலங்கள் அனைத்தையும் மீட்கும் முயற்சி பேரியக்கமாக மக்களால் உருவாக்கப்பட வேண்டும். காலம் நமக்கு இடும் கட்டளை இதுவாகும்.                
-நெ.