மாணிக்கவாசகரின் காலமும் - கருத்தும் வரலாற்று உண்மைகளை நிலை நிறுத்தும் சிறந்த ஆய்வு - பழ.நெடுமாறன் அச்சிடுக
வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018 11:34

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம், வரலாறு குறித்த ஆராய்ச்சியினைப் பல்வேறு அறிஞர்கள் பல காலகட்டங்களில் செய்துள்ளனர். வரலாறு என்பது காலத்தோடு தொடர்புடையது.

காலமும் வரலாறும் அவ்வப்போது கிடைக்கும் ஆதாரங்களின் மூலம் மாற்றமடையும்.  தான் கண்டறிந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் ஒரு அறிஞர் எடுக்கும் முடிவு அவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மற்றொரு அறிஞரின் ஆய்வின்போது கிடைக்கும் புதிய ஆதாரங்களின் மூலம் மாற்றமடையும். புதிய ஆய்வு களின் மூலம் கண்டறியப்படும் உண்மைகளை ஏற்றுக் கொள்வதுதான் வரலாற்று ஆய்வினை வளர்க்கும், பெருக்கும்,  தெளிவினையூட்டும்.
மாணிக்கவாசகர் கோயில் என்பதற்கும், மாணிக்க வாசகர் பாடிப் பரவிய கோயில் என்பதற்கும் உரிய வரலாறுகளைத் தக்கச் சான்றுகளுடன் விளக்கி மாணிக்க வாசகர் காலத்தைக் கண்டறிந்து சிறந்த ஆய்வு நூலாக ஆக்கித் தந்துள்ளார் தொல்லியல்  ஆய்வாளர்  முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள். அவரின் இந்த ஆய்வு நூல் இதுவரை மாணிக்கவாசகர் பற்றிச் சொல்லப்பட்ட செய்திகள், வரலாறு ஆகியவை அடியோடு மாற்றப்பட வேண்டியவை என்பதை நன்கு ஆய்ந்துத் தக்க ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.
ஆவுடையார்க் கோயில் திருப்பணி குறித்த செய்தி அக்கோயிலில் உள்ள பஞ்சாட்சர மண்டபக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அதில் யோக நாயகி, கோபுர வேலவன், விநாயகர், மாணிக்கவாசகர்  என்னும் இவர்கள் திருப்பணி செய்வித்தனர் என்ற செய்தி உள்ளது.  இதன்மூலம் இவர்களின்  அருளால் திருப்பணி செய்யப்பட்டது என்பதை உணராமல் மாணிக்கவாசகர் கட்டியது என குறிப்பிடப்படுவதை நன்கு தெளிவுபடுத்தி கல்வெட்டு செய்திகளை விரிவாக ஆராய்ந்து தந்துள்ளார் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள்.
ஆத்மநாதசுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஆவுடையார்க் கோயில், குதிரை வாங்குவதற்காகப் பாண்டிய  மன்னன் அளித்தப் பணத்தில் மாணிக்கவாசகர் கட்டிய கோயில் என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால்  இக்கோயிலில் காணப்படும் கட்டடக் கலை மிகவும் பிற்காலத்தியது என்பதை நேரில் கண்டறிந்து ஆசிரியர் உறுதி செய்துள்ளார். இக்கோயிலில் பழமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தூண்களிலும், பிரகாரங்களிலும், குதிரை வீரர்களும், வாள் ஏந்திய வீரர்களின் உருவங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.
அதே ஊரைச் சேர்ந்த வடக்கூர் என்னும் பகுதியிலுள்ள சிவன் கோயிலையும் இவர் பார்த்தறிந்துள்ளார். ஆத்மநாதர் கோயிலைவிட இது பழமையானது. இக்கோயிலின் பெயர் ஆதி கயிலாசநாதர் கோயில் என்பதாகும்.                                                இக் கோயிலின்  அருகே மிகப் பழைய ஆறு ஒன்று ஓடியதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு இருந்ததைக் கண்டறிந்  துள்ளார். இக்கோயிலே பழைய சிவன்கோயிலாக இருந்திருக்கவேண்டும். குலோத்துங்கச் சோழனால் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதினார்.
இக்கோயில் குறித்து மத்திய தொல்லியல்  துறை வெளியிட்டுள்ள கல்வெட்டு ஆண்டறிக்கையில் "பாண்டியன் கொடுத்தப் பணத்தில் மாணிக்கவாசகர்  இக்கோயிலைக் கட்டினார் என்று கூறப்படுகிறது என்றாலும், முற்காலக் கல்வெட்டுகள் ஒன்றும் காணப்படவில்லை. மாணிக்கவாசகர் வரலாறு கூறும் திருப்பெருந்துறை ஊர் இதுவல்ல.  அது மேலை கடற்கரையில் உள்ள வைக்கம்  என்ற ஊருக்கு அருகில் உள்ளது என்றும் சில அறிஞர்கள் வாதித்திருக்கின்றனர். செந்தமிழ் தொகுதி XII பக்கம் 428யிலும் தொகுதி XIII பக்கம் 102-24 ஆகியவற்றில் இது குறித்த கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.  இக்கோயிலில் உள்ள சில கல்வெட்டுகளின் மூலம் கி.பி.  12ஆம் நூற்றாண்டு  முதலே இக்கோயில் இருந்ததென்று கூற முடிகிறது.
ஆனால், ஆவுடையார்க் கோயிலில் பழைய கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. இப்போதுள்ள கட்டட அமைப்பு கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கொண்டு செல்ல முடியாது.  இக்கோயிலில் அம்மனும், லிங்கமும் சந்நிதிகளில் இல்லை. ஆனால், ஆகம முறையிலான வழிபாடு ஆவுடையாருக்கு நடக்கிறது. பரிவாரத் தேவதைகளாகிய நந்தியும், சண்டேசுவரர் சிலைகள் கூட இல்லை. ஆனால், கடைசி பிரகாரத்தில் உள்ள கோபுரத்தில் கணேசர், சுப்ரமணியர் சிற்பங்கள் உள்ளன. எனவே இக்கோயில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது என ஒருபோதும் கூற முடியாது. ஆனால், இக்கோயிலில் மாணிக்க வாசகருக்கென்று தனி சந்நிதி உள்ளது. ஆண்டுவிழா நடக்கும் 10 நாட்களில் மாணிக்கவாசகர் உருவமே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதையும் மத்திய தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.  இங்கு காணப்படும் கல்வெட்டுகள் கி.பி. 1599 மற்றும் 1603 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை. இங்குள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கனகசபை மண்டபம், ஆபத்சகாய மண்டபம் என்றெல்லாம் கூறப்படும் இந்த மண்டபம் மிகச்சிறந்த கொடுங்கை அமைப்புடன் காணப்படுகிறது. இந்த மண்டபத்தின் உத்தரக்கல்லில் சுற்றிலும் நான்கு திசையிலும் தொடர்ச்சியாக கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  இந்த மண்டபத்தின் பணியை யோகநாயகி, கோபுர வேலவன், விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோர் செய்வித்தனர் என்ற பொருள் பொதிந்த வரிகள் உள்ளன.  மற்றொரு பாடல் "பதிக்கச் செய்தான் எங்கள் மாணிக்கவாசகனே” என்று முடிகிறது. சகம் 1524 எனக் கொண்டால் கி.பி. 1602 என்பதாகும். மாணிக்கவாசகரை இறைவனோடு சேர்த்து மக்கள் துதிக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. இக்கோயில் உள்ள அனைத்து கல்வெட்டுகளுமே சரியான கால கணிப்புகளைக் குறிப்பிடுகின்றன. கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருப்பணி தொடங்கி 17ஆம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் கி.பி. 1603இல் முடிந்திருக்கிறது என்பது தெரிகிறது. இவ்வாறு அக்கோயிலில் காணப்படும் சிற்ப அமைதிகளையும், அவற்றிற்குரிய விளக்கங்களையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுவது சிறப்பாக உள்ளது.
இக்கோயிலில் கருவறையும், அம்மன் சந்நிதியும் வெறுமையாக உள்ளன. சிவன் கருவறையில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. அம்மன் சன்னதியில் தீபம் மட்டுமே எரிகிறது. எனவேதான் ஆவுடையார்க் கோயில் என அழைக்கப்படுகிறது. ஆகம முறைப்படி சிவலிங்கம் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவலிங்கமும் இல்லை, எதிரே நந்தியும், கொடி மரமும் இல்லை. ஆவுடையார் முன்னர் ஒரு கல்லில் சோறு சூடாகக் கொட்டிப் படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
கருவறை நடுவே சிவலிங்கம் பொருத்தப்பட்டிருப்பதற்கான துளை  இல்லை. அதுவொரு பீடம் மட்டுமே. அது யாருக்கான பீடம்? கருவறை உருவாக்கப்பட்டபோதே வெறும்  பீடமா? அல்லது  பீடத்தில் இருந்த உருவம்  அகற்றப்பட்டதா? அப்படியானால் யாருடைய உருவம்? ஏன் அகற்றப்பட்டது? என்ற  கேள்விகளை ஆசிரியர் எழுப்பி நிறைவான பதில்களையும்  தருகிறார்.  
மாணிக்கவாசகர் சந்நிதி முன்னர் உள்ள கனகசபை என்றும், ஆபத்சகாயர் மண்டபம் என்றும் கூறப்படும் மண்டபத்தில்தான் வழிபாடு செய்யப்பட்டதாக கி.பி. 16ஆம்  நூற்றாண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்த வழிபாடு மாணிக்கவாசகருக்காக நடத்தப்பட்டுள்ளது.10 நாட்கள் திருவிழாவும் மாணிக்கவாசகருக்காக நடைபெறுகிறது. இந்தக் கோயிலை 16ஆம் நூற்றாண்டில் மடமே நிருவகித்துள்ளது. அதன்பின்னர் இன்றுவரை திருவாவடுதுறை ஆதீனமே  நிருவகித்து வருகிறது. எனவே இது மாணிக்கவாசகருக்கான கோயில் என ஆசிரியர் உறுதிபடப் பதிவு செய்துள்ளார்.
அதே  ஊரின் வடக்குப் பகுதியில் உள்ள ஆதி கயிலாச நாதர் கோயிலில் 3ஆம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டின் காலம்  கி.பி. 1212ஆம் ஆண்டாகும்.  இக்கோயில் ÿ கயிலாசத்து ÿ குவலய சந்திர ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் என அழைக்கப்பட்டிருக்க, தற்காலத்தில் ஆதி கயிலாச நாதர் என அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் தமது செத்திலா பத்து பதிகத்தில் திருப்பெருந்துறையுடைய சிவனைப் பற்றி கூறும்போது "கயிலை மலை மேவிய கடலே” என்கிறார். கயிலாசத்தில் குடிகொண்ட சிவன் என்று பொருளாகும். அவரால் பாடப்பட்ட சிவன் இக்கோயில் சிவனாகத்தான் இருத்தல் வேண்டும். இக்கோயிலில் உள்ள சண்டிகேசுவரர் சிலையும், சப்தமாதர் சிலைகளில் சிலவும் கி.பி. 9ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தவை. செங்கல் தளியாக இருந்த  இக்கோயில் 3ஆம் குலோத்துங்க காலத்திலோ, அதற்கு முன்னரோ கற்றளியாக புதுப்பித்திருக்கப்பட்டிருக்கவேண்டும்.
குவலய சந்திரன் என்பது இரண்டாம் வரகுண பாண்டியனின் பெயராக இருத்தல்வேண்டும். அவனே மாணிக்கவாசகரின் சமகாலத்தில்                                         வாழ்ந்தவன் என்பது உணரமுடியும். இவ்வூருக்கு அருகே உள்ள பெரமண்டூர் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது வடவெள்ளாற்று நாடு என்றொரு நாடு இருந்திருக்கிறது. அதனால் தென்வெள்ளாறும் ஓடியிருக்கவேண்டும்.                                       அந்த தென்வெள்ளாற்றங்கரையிலேயே திருப்பெருந்துறை உடையார் கோயில்  அமைந்திருக்கிறது. இக்கோயில்தான் மாணிக்கவாசகர் பாடி வணங்கிய கோயில் என்பது தெரியாமல், பாண்டிய மன்னன் கட்டிய கோயில் என்பதையும் அறியாமல் மூலக்கோயிலான இந்தக் கோயிலைப் புறக்கணித்துவிட்டு, பின்னர் எழுந்த மாணிக்கவாசகருக்காக எழுப்பப்பட்ட கோயிலை மட்டுமே மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் தக்கச் சான்றுகளுடன் நன்கு நிறுவிவுள்ளார்.  
மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுண பாண்டியனின் காலத்தில் வாழ்ந்தவர் என்பதை பாண்டிக் குலோதயம் என்னும் வடமொழி நூலினை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் நிறுவியுள்ளார். இரண்டாம் வரகுண பாண்டியன் சிவபக்தனாக விளங்கியதை தளவாய்புரச் செப்பேடு குறிப்பதையும், மாணிக்கவாசகர் தில்லையில் இறைவனோடு கலப்பதற்கு முன்னர் பாடிய பதிகத்தில் வரகுணனை சிறப்பித்துப் பாடியுள்ளதையும் எடுத்துக்காட்டி நரி-பரி என்பது மாணிக்கவாசகர் தண்டிக்கப்பட்ட வரலாற்றுக்குரியதல்ல என்பதையும் முனைவர் ஆ.பத்மாவதி தெளிவு படுத்தியுள்ளார்.
வரலாற்றறிஞரான பேரா. நீலகண்ட சாஸ்திரி மாணிக்கவாசகரின் காலம் மிகவும் முந்தியது என முதலில் கருதினார். ஆனால், தளவாய்புரச் செப்பேட்டின் சான்று கிடைத்தப் பிறகு தனது கருத்தை மாற்றிக்கொண்டு இரண்டாம் வரகுணனின் காலமே அவரின் காலமாகும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். தளவாய்புரச் செப்பேட்டில்  
"கோவரகுணன் பிள்ளை பிறைச்
சடைக்கணிந்த பினாகபாணி எம்பெருமானை
உலகாய் காக்கின்ற நாளில்..."
எனகுறிக்கப்பட்டுள்ளது. உண்மையானஆராய்ச்சி அறிஞர்கள் புதிய சான்றுகள் கிடைத்தால் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
இரண்டாம் வரகுணன் சிறந்த சிவநேசச் செல்வனாக வியங்கியதை தளவாய்புரச் செப்பேடு எடுத்துக்காட்டுகிறது. அத்தகையவன் சிவனடியாரான மாணிக்கவாசகரைத் தண்டிக்கத் துணிவானா? என்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவதோடு, நரி-பரி வரலாறு என்பது மாணிக்க வாசகர் தண்டிக்கப்பட்ட வரலாற்றுக்குரியதல்ல என்பதையும்,  இது தத்துவார்த்த சிந்தனையுடன் எழுதப்பட்டது என்பதையும் ஆசிரியர் தெளிவு படுத்தியுள்ளார்.
நரி&பரி வரலாற்றை திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலியோர்  கையாண்டுள்ளனர்.  மாணிக்கவாசகரும் கையாண்டுள்ளார். வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பெரியோர்கள் இதை கையாண்டுள்ளனர். புராண கதையாக இருந்தால் திரும்பத்திரும்ப அவ்வித நியதி நடைபெறவேண்டும் என்பது இல்லை. தத்துவ முறையில் காணும்போது அந்நிலையை அறிந்து அனுபவிக்க முடியும். மாயாவாதம், மீமாம்சை, லோகாயுதம் போன்றவற்றால் மனம் பிறழ்ந்து அலையும் நரி  போன்ற மக்கள் மனதை குதிரைக்குக் கடிவாளம் பூட்டி அதன் மனத்தை ஒருமுகப்படுத்துவது போல, மக்கள் மனதில் சிவபக்தி என்னும் ஒருமுகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் என்கிறார்  மாணிக்கவாசகர்.  
திருமந்திரம், வாலை, ஞானக்கும்மி, சுந்தரர் தேவாரம், திருநாவுக்கரசர் தேவாரம் ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளை கூறி நரி-பரி தத்துவத்தை ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.
தனது கருத்தை எடுத்துக்காட்டி நிலைநிறுத்தியதோடு மாற்றுக்கருத்து கொண்டோர் எழுதிய கட்டுரைகளையும் பின்னிணைப்பாக தனது நூலில் இணைத்துள்ளார்.
மாணிக்கவாசகர் காலம் குறித்த ஆய்வில் நிலவிய குழப்பங்களைப் போக்கிப் புதிய செய்திகளோடு திட்டவட்டமான, தெளிவான சிறந்த ஆய்வு  நூலை எழுதி வெளியிட்டுள்ள முனைவர் ஆ. பத்மாவதி  அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பாராட்டுமாக.