"தமிழீழம் சிவக்கிறது" - நூல் அழிப்புத் தீர்ப்பு எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் - தலைவர்கள் கடும் எதிர்ப்பு நீதிக்குத் தண்டனை - வைகோ அறிக்கை அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 14:17

1994ஆம் ஆண்டு தமிழீழம் சிவக்கிறது என்ற நூலை, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எழுதியதற்காக, அவர் மீதும், புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்த திரு. சாகுல் அமீது மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு 124 (ஏ) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 10 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 34, பிரிவு 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், 2006 அக்டோபர் 18ஆம் நாள், தி.மு.க. ஆட்சியில், தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். எனவே, தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், புத்தகங்களைத் திருப்பித் தரவில்லை. அவற்றைத் திரும்பப் பெற வேண்டி, திரு. நெடுமாறன் அவர்கள், குடிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 11 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. விசாரணையைத் தள்ளிப்  போட்டுக்கொண்டே வந்தனர்.
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவின் கீழ், கருத்து உரிமை, பேச்சு உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது.  உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பின்படி, தமிழீழம் சிவக்கிறது என்ற இந்த நூலில், தமிழீழம் என்ற கொள்கை வலியுறுத்தப்படுவதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இருப்பதால், இந்த நூலின் கருத்துகள், அந்த இயக்கத்திற்கு ஆதரவான மனப்பான்மையை மக்கள் மனங்களில் ஏற்படுத்தும் என்றும், அது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கூறி, நெடுமாறன் அவர்கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு மட்டும் அல்லாமல், காவல்துறையினர் பொறுப்பில் உள்ள புத்தகங்களை உடனே அழிக்க வேண்டும் என்று ஒரு அதிர்ச்சி தரத்தக்கத் தீர்ப்பைத் தந்துள்ளார்.
புத்தகங்களைத் திருப்பித் தருவதா? கூடாதா? என்ற நிலை எடுக்கவேண்டிய வழக்கில், புத்தகங்களை அடியோடு அழிக்கச் சொன்னது, இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும்.
நெடுமாறனின் நூலை அழிப்பதா? - முத்தரசன்
தமிழீழம் பிறக்கிறது என்ற பழ. நெடுமாறனின் நூலை அழிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
தமிழீழம் என்ற கொள்கை நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை. ஏற்கவில்லை. ஆனால், அந்தக் கருத்துள்ளவர்கள், தங்கள் நிலையை மக்களின் சிந்தனைக்கு வைப்பதற்குரிய, மறுக்க முடியாத உரிமை ஜனநாயக அரசியல் அமைப்பின் சாரமாக இருந்து வருகிறது.
எனவே, அத்தகைய ஜனநாயக உரிமையை, சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துகிற உரிமையை மறுப்பது ஜனநாயக அடிப்படைகளை நிராகரிப்பதாகும். சென்னை உயர்நீதிமன்றமே கருத்துக்களை அழிக்கவேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருப்பது, அரசியல் சாசன உள்ளடக்கத்தை காப்பாற்றுகிற அதன் நம்பகத் தன்மையை கேள்விக் குள்ளாக்கிவிட்டது.
இத்தகைய தீர்ப்பை உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, பழ. நெடுமாறனின் படைப்பு நூலை முழுமையாக அவருக்குத் திரும்ப வழங்கவேண்டும் என்று அறிக்கை ஒன்றில் மாநிலச் செயலாளர்  இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 கலை இலக்கியப் பெருமன்றத்தின் கண்டனம்
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் இரா. காமராசு, பொருளாளர் ப.பா. இரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை...
பழ. நெடுமாறன் எழுதிய தமிழீழம் சிவக்கிறது எனும் நூலுக்காக 2002ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பெற்றார்.
நூல்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பெற்றது. வழக்கு நடைபெற்றது. 2006ஆல் இவ்வழக்கைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நூல்களை அழித்துவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகப் பண்பின் அடிப்படை உணர்வுகளான சிந்திக்கும், கருத்து தெரிவிக்கும், விவாதிக்கும் உரிமை சார்ந்தது கருத்துச் செயற்பாடு. கடந்த காலங்களில் படைப்பாளர் சுதந்திரம் சார்ந்து  நேர்ந்த தளைகளை நீதி மன்றங்கள் தலையிட்டு நீக்கி, கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றி உள்ளன. எனவே மேற்படி ஆணையை மாண்பமை நீதி மன்றம் மறுஆய்வு செய்து, படைப்புச் சுதந்திரம் காத்திட வேண்டுகிறோம்.       
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் & கலைஞர்கள் கண்டனம்
பழ. நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது புத்தகப் படிகளை அழித்துவிட வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் தனது ஆணையை மறுஆய்வு செய்யவேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன்  தீட்சண்யா இருவரும் வெளியிட்ட அறிக்கை வருமாறு-
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய "தமிழீழம் சிவக்கிறது" என்ற நூலின் படிகளை அழித்துவிட வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், அந்தத் தடையை நீட்டித்துக் கொண்டே வந்திருக்கிறது என்றும் கூறி, ஏற்கெனவே அந்தப் புத்தகத்தை அவரிடம் ஒப்படைக்க இயலாது என்று கீழ்நிலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அங்கீகரித்ததுடன், ஒரு படி மேலே சென்று காவல்துறையினர் தங்களிடம் உள்ள அந்தப் புத்தகத்தின் படிகளையே அழித்துவிடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டில் அந்தப் புத்தகப் படிகள் அவரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. ஆயினும்  2006ஆம் ஆண்டில் அந்த வழக்கை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. ஆனால் புத்தகங்கள் திருப்பித் தரப்படவில்லை. வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டதைக் காட்டி புத்தகப் படிகளைத்  திரும்ப ஒப்படைக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் மேற்கூறிய காரணங்களைக் கூறி புத்தகங்களைத் திருப்பித்தர ஆணையிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து நெடுமாறன் உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். அதில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு புத்தகப் படிகளை அழிக்க ஆணையிட்டுள்ளது.
குறிப்பிட்ட புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளலாம். அரசாங்கத்திற்கும் அந்த புத்தகத்துடன் உடன்பாடு இல்லாமல் போகலாம். புத்தகத்தின் செய்திக்கு எதிரான கருத்துகளை மக்களிடையே வலுவாகச் சொல்வதற்கான அனைத்து சட்டபூர்வ வசதிகளும் அரசுக்கு இருக்கிறது. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையே மக்கள் தெரிந்துகொள்ளவிடாமல் தடுப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
கடந்த காலத்தில் இவ்வாறு பல்வேறு புத்தகங்கள் மீதான தடை நடவடிக்கைகள் வந்தபோதெல்லாம் நீதிமன்றத்தின் துணையோடுதான் அந்தப் புத்தகங்கள் மக்களைச் சென்றடைந்தன. இப்போதோ, ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகப் படிகளை அடையாளமின்றி அழித்துவிட வேண்டும் என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது அண்மைக்காலமாக அரசு எந்திரமும் சில அமைப்புகளும் தொடுத்து வருகிற தாக்குதல்களுக்கு வலுச்சேர்ப்பதாக வந்துள்ளது.
உயர்நீதிமன்றம் தனது ஆணையை மறுஆய்வு செய்யவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர் சங்கம் கோருகிறது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்
பழ. நெடுமாறன் அவர்களது தமிழீழம் சிவக்கிறது நூலின் பிரதிகளை அழிக்க ஆணையிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண. குறிஞ்சி, பொதுச் செயலாளர் க. சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை&
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள், இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம், 1989ஆம் ஆண்டு காலகட்டத்தின் போர் நிலவரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 1993ஆம் ஆண்டு தமிழீழம் சிவக்கிறது எனும் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்.
2002ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் 2,000  பிரதிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட இருந்த நிலையில், நூலாசிரியர் பழ. நெடுமாறன் அவர்களும், புத்தகங்களை வைத்திருந்த சாகுல் அமீது அவர்களும்  கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் தேச துரோகக் குற்றப்பிரிவு 124(ஏ), 153(பி) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவு 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு, தமிழக அரசின் 2004 ஆம் ஆண்டின் அரசாணையின்படி இந்திய தண்டனைச் சட்டத்தின் 505  பிரிவும் சேர்க்கப்பட்டது.
2006ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, வழக்குத் திரும்பப் பெறப்பட்டு, மேற்கண்ட இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், புத்தகங்கள் திருப்பித் தரப்படவில்லை. எனவே பறிமுதல் செய்யப்பட்ட 10இலட்சம் ரூபாய் மதிப்புடைய நூல்களைத் திரும்பத் தரக்கோரி, நூலாசிரியர் பழ. நெடுமாறன் அவர்கள், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எனக்கூறி, 2007 மார்ச் 2ஆம் நாள் இம்மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அதே ஆண்டில் தாக்கல் செய்தார். 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கடந்த 14.11.2018 அன்று தீர்ப்பு வெளியானது. "தமிழீழம் சிவக்கிறது" நூல், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாலும், புத்தகங்கள் திருப்பியளிக்கப்பட்டால், அவை மக்களுக்குச் சென்று சேர்ந்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதாலும், இம்மனுவைத் தள்ளுபடி செய்து ஆணையிட்ட உயர்நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு, 452ன்  கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி , இந்தப்  புத்தகங்கள் அனைத்தையும் உடனே சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அழித்துவிடுமாறும் ஆணையிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மனு தள்ளுபடி செய்யப்படுவது இயல்பானது. ஆனால் புத்தகங்களை அழித்துவிட ஆணையிட்டது விந்தையாக உள்ளது. குறிப்பிட்ட புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எவரும் வேறுபாடு கொள்ளலாம். ஆனால், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையே மக்கள் தெரிந்துகொள்ளவிடாமல் தடுப்பது ஏற்கத்தக்கதல்ல. வெளியிடப்பட்ட புத்தகத்தின் மீது தடையெதுவும் இல்லாத சூழலில், புத்தகத்தின் உள்ளடக்கம் என்னவாக இருந்தாலும், அதைப் படித்துத்  தேவையான கருத்துக்களை எடுத்துக்கொள்ளும் பகுத்தறிவு கற்றவர்களுக்கு உண்டு என்று நம்புவதே நாகரிகச் சமூகத்தின் சிந்தனையாக இருக்க முடியும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 19ஆவது பிரிவின் கீழ் குடிமக்களுக்குக் கருத்து உரிமை, பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி நீதிமன்றத் தீர்ப்புகளும் வெளிவந்துள்ளன. இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு, அந்நியரான ஆங்கிலேயர் ஆட்சியில்கூட, அரசின் கட்டமைப்பை மாற்றவேண்டும். தூக்கி எறிய வேண்டும் என்ற பேசியவர்களின் கருத்துரிமையை நீதிமன்றங்கள் தூக்கிப் பிடித்த எடுத்துக்காட்டுகள் (Krishna v. Emperor, AIR 1835 Cal 636; Niharendu Dutt Majumdar v. Emperor, AIR 1942 FC 23) உண்டு. சுதந்திர இந்தியாவில், அரசின் முக்கியக்  கொள்கையான இட ஒதுக்கீட்டை விமர்சித்த ஒரே ஒரு கிராமத்திலே என்ற தமிழ்ப் படத்தின்  U சான்றிதழை ரத்து செய்ய மறுத்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வரலாறு (S. Rangarajan Etc vs P. Jagivan Ram on 30 March, 1989) இங்கு உண்டு.
1026இல்  தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" மற்றும் அதன் ஆங்கில வடிவான ‘One Part Woman’ புத்தகங்களைப் பறிமுதல் செய்ய மறுத்து, படிப்பதற்கான முடிவு எப்போதுமே வாசகருடையது. ஒரு புத்தகத்தை நீங்கள் விரும்பவில்லையெனில், தூக்கி எறியுங்கள் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது நமக்கு நினைவிருக்கும். கடந்த செப்டம்பரில்தான் நாம் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம். சுதந்தரமாக நமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்று மலையாள புத்தகமான மீசா விற்குத் தடை விதிக்க மறுத்து, அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து கருத்துரிமையை உயர்த்திப் பிடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே அரசிடமிருக்கும் தமிழீழம் சிவக்கிறது புத்தகங்களை அழிப்பது என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணை, கருத்துரிமையைக் காப்பதற்கு எதிரான முன்னுதாரணமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் பொழுது, கருத்துரிமை காக்கப்பட்டு உரிய நீதி கிடைக்கும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் உறுதியாக நம்புகிறது.