இராசீவ் கொலை - எங்களுக்குத் தொடர்பில்லை விடுதலைப் புலிகள் - மீண்டும் அறிவிப்பு --பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 11:42

"முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் படுகொலைக்கும், தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பிய பிறகும்,  மீண்டும் மீண்டும் புலிகள் மீது அந்தக் கொலைக்கான பழி தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகிறது.

இதை நாங்கள் அடியோடு மறுக்கிறோம்” என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 01-12-2018  அன்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- "இந்திய தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவைத் தாக்கும் திட்டமோ புலிகளிடம் என்றும் இருந்ததில்லை. குறிப்பாக,  எந்தவொரு  இந்திய தேசியத்  தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை. 2009ஆம் ஆண்டில் எங்களின் ஆயுத மெளனிப்பு அறிவிப்பு வெளியான பிறகு 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதற்குப் பிறகும் புலிகளையும், தமிழீழ மக்களையும் இராசீவ்காந்தி கொலையுடன் தொடர்புப்படுத்துவது தமிழீழ மக்கள் மீது பழி சுமத்தி அவர்களை அழிக்க வகுக்கப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது. தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எமது மக்கள் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை இனியும் சுமத்தவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறோம். இந்தப் படுகொலைக்கும், எமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்று பலமுறை எமது இயக்கம் மறுத்துள்ளது.
இப்படுகொலை நிகழ்ந்து சில நாட்களில் விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராக இருந்த கிட்டு "இப்படுகொலைக்கும், புலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை அனைத்து இதழ்களிலும் வெளிவந்திருக்கிறது.
கொழும்பில் பி.பி.சி. செய்தியாளராக இருந்த கிரிஸ் மோரிஸ் என்பவருக்கு 01-09-1991 அன்று விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்                                 வே. பிரபாகரன் அளித்த நேர்காணலில் "இராசீவ்காந்தி படுகொலையில் எமது இயக்கத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை” எனத்  தெளிவாக அறிவித்தார்.
மீண்டும் 10-04-2002இல் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் நேர்காணல் ஒன்றில் "இராசீவ்காந்தி படுகொலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு "அது ஒரு துன்பியல் நிகழ்வு” என்று பிரபாகரன் பதிலளித்தார்.
1983ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாளில் டில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசும்போது தலைமையமைச்சர் இந்திராகாந்தி                             அம்மையார் இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே என இந்திய அரசின் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார். இனப்படுகொலைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கும் வகையில் சிங்கள அரசு செயல்பட்டபோது, தமிழீழ மக்களின் விருப்பம் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசே என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டப் பிறகுதான் இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான போரில் எமக்கு உதவ முன் வந்தது.
இந்திராகாந்தி அம்மையார் மறைவிற்குப் பிறகு, அவரது புதல்வரான இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளோடு இரகசிய உறவைப் பேணி வந்துள்ளார் என்பதையும்  இக்கட்டத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். இந்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் உள்நோக்கத்துடன் இலங்கை அரசும், அதற்குத்  துணையாக அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே இராசீவ்காந்தி அவர்களின் படுகொலை என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். விடுதலைப்புலிகளின் மீது சுமத்தப்படும் பொய்மை நிறைந்த படுகொலைப் பழி உடனடியாக துடைத்தெறியப்படவேண்டும். புலிகள் மீதான இந்த களங்கம் நீங்குமானால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இராஜீவ் கொலை
பதிலில்லாத கேள்விகளும் - தீராத ஐயப்பாடுகளும்
1. இராசீவ்காந்தி கொலையை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட 26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தடாச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டதே செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதன் விளைவாக 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டார்கள். மூவருக்கு ஆயுள் தண்டனையும், நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.  தடாச்சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கே செல்லாது என்ற தீர்ப்புக்குப் பிறகு, அந்தச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மட்டும் எப்படி செல்லுபடியாகும்? அதன்மீது அளிக்கப்பட்ட தண்டனை சட்டப்படி சரியானதா?
2. "சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட இந்திய அரசைக் கவிழ்ப்பதற்கோ அல்லது மக்களை பயங்கரவாதம் மூலம் அச்சுறுத்துவதற்கோ மக்களிடையே நிலவும் ஒற்றுமையைக் குலைப்பதற்கோ இந்தக் கொலை நடத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியதோடு, மேற்கண்ட நோக்கங்களுடன் புலிகள் செயல்பட்டார்கள் என்பதற்கான எத்தகை சாட்சியமும்,  நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. இந்திய - இலங்கை உடன்பாட்டை புலிகள் கடுமையாக கண்டித்தப் போதிலும்,  இந்திய அரசைக் கவிழ்க்க ஒருபோதும் முற்படவில்லை” என நீதிபதிகளின் ஆயத்தின் தலைவர் நீதியரசர் கே.டி. தாமஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
3. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு, இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனும் சீராய்வு மனுவை அளிக்கத்தக்க தீர்ப்பாக இது அமையாததால், அத்தகைய மனுவை அளிக்க வேண்டியதில்லை என அப்போதைய நடுவண் அரசின் அட்டர்னி ஜெனரல் ஆன சோலி சொராப்ஜி, சட்ட அமைச்சராக இருந்த இராம்ஜெத்மலானி, உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி ஆகியோர் முடிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கின் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் அவர்களின் வற்புறுத்தலின்பேரில் சீராய்வு மனு அளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தடாச் சட்டம் பிற்காலத்தில் நடுவண் அரசால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இப்போது அந்தச் சட்டம் நடைமுறையில் இல்லை.
4. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவின் தலைவர் பொட்டம்மான் ஆகியோருக்கும்,  சிவராசனுக்கும் இடையே நடைபெற்ற இரகசியக் குறியீட்டு மொழியில் நடைபெற்ற செய்திப் பரிமாற்றங்களைக் கண்டறிந்திருப்பதாகப் புலனாய்வுக் குழு கூறியதை உறுதிப்படுத்தும் சான்று எதுவும் இல்லை. புலிகளின் இரகசிய மொழிகளுக்கான குறியீடுகளோ அல்லது அந்தச் செய்தியை தெரிந்துகொண்டதற்கான ஆவணங்களோ நீதிமன்றத்தில் அளிக்கப்படவில்லை. இச்செய்திகளை கண்டறிந்தவர்கள் நீதிமன்றத்தில் சாட்சிகளாக நிறுத்தப்படவோ அல்லது குறுக்கு விசாரணை செய்யப்படவோ இல்லை. ஆனாலும் இவை ஏற்கப்பட்டது ஏன்?
5. தலையமைச்சராக இராசீவ்காந்தி இருந்தபோது அவரது அமைச்சரவைச் செயலாளரான டி.என். சேஷன் அவர்களால் இலங்கைக்கு டி.ஆர். கார்த்திகேயன் அனுப்பிவைக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் - இந்திய அமைதிப்படை ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டது ஏன்? என்பதை ஆராய்ந்து அறிக்கைத் தருவதே அவரை அனுப்பியதின்  நோக்கமாகும். அவ்வாறே அவர் சென்று நிலைமைகளைக் கண்டறிந்து அரசுக்கு அளித்த அறிக்கையில்- "இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் மிக்கச் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.  அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். வட-கிழக்கு மாகாண முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்தபோதிலும், மக்களிடம் அவருக்கு செல்வாக்கு இல்லை. இந்திய  அமைதிப்படை எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டது? என்பது நம்முடைய வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் புரியவில்லை. சிங்களருக்கும், தமிழருக்கும்  இடையில் உள்ள பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என நமது இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் கருதுகிறார்கள். எனவே இந்திய அமைதிப்படையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். பிராந்திய நலன்களுக்கான  காரணத்திற்காக இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியா தொடர்ந்து ஈடுபட விரும்பினால் புலிகளுடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை” என திட்டவட்டமாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறு புலிகளை உயர்வாக மதிப்பீடு செய்துள்ள ஒருவர் இராசீவ்காந்தி கொலைவழக்குப் புலன் விசாரணையின் போது, புலிகளின் மீது  குற்றம்சாட்டியவராக மாறியது ஏன்? அவரை சாட்சிக் கூண்டில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை. சர்வதேசச் சட்டங்களின்படியும், சட்ட முறைமையின்படியும் வேறு நாடுகளாக இருந்தால் இந்தப் பிரச்சனை ஒன்றே மறு புலனாய்வுக்கும், மறு நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையப் பட்டயம் எத்தகைய குற்ற வழக்கிலும் இயற்கையின் நீதியும், நேர்மையான முறைகளும் கடைப்பிடிக்கப்படவேண்டும் எனகூறியுள்ளது. இந்தப் பட்டயத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இராசீவ் கொலை வழக்கில் இவை கடைப்பிடிக்கப்படாதது ஏன்?
6. இராசீவ்காந்தி கொலைக்குப் பிறகு தடாச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தக் கொலை வழக்கில் தடாச்சட்டத்தைப் பயன்படுத்தியது செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்குப் பிறகு தடாச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடையை நீடிப்பது அப்பட்டமான நீதி முரணாகுமே? இது தொடரலாமா?
7. இராசீவ்காந்தி படுகொலையின்போது மத்தியில் சந்திரசேகர் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. இப்படுகொலை குறித்து விசாரணை நடத்த நீதியரசர் வர்மா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்ரமணியசுவாமியும், உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் தேசாய் ஆகிய இருவருமே இராசீவ்காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா? என்பது பற்றிதான் வர்மா ஆணையம் விசாரிக்கும் என்றும், இந்தக் கொலைக்கான சதியின் பின்னணிப் பற்றி ஆராயாது என்றும் திட்டவட்டமாகக் கூறினர். ஆனால், சதி பற்றிய விசாரணையையும் இதில் சேர்க்கவேண்டுமென எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதாக் கட்சி, காங்கிரஸ், தேசிய முன்னணி ஆகியவை வற்புறுத்திய போதிலும் இந்தக் கோரிக்கை ஏற்க மறுக்கப்பட்டது ஏன்?
8. 1992ஆம் ஆண்டு சூன் மாதம் நீதியரசர் வர்மா தனது அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை வைக்கப்பட்டது. உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்பதற்கு முற்றிலுமாக மறுத்தார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக மூத்த அமைச்சர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்தக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த மூத்த அதிகாரிகள் பதவிகளிலிருந்து ஒய்வு பெற்றப் பிறகே அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் உடனடியாக மத்திய நிர்வாக மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். ஓய்வு பெற்றவர்களிடம் விளக்கம் கேட்பது முறையற்றது என அம்மன்றம் ஆணை பிறப்பித்தது. பதவியில் இருந்தபோதே இந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படாதது ஏன்? இவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏன் நடுவண் அரசுக்கு ஏற்பட்டது?
9. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் இராசீவ்காந்தியைக் கொலை செய்ய சதி நடைபெறுகிறது என எச்சரித்திருந்தார். இந்தியாவில் உள்ள தன்னுடைய தூதுவரை நேரில் அனுப்பி இராசீவ்காந்தியிடம் இச்செய்தியை தெரிவிக்கச் செய்தார். அதாவது, கொலை நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இது நடைபெற்றது. ஆனாலும் அப்போதைய இந்திய அரசு இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? இந்த விவரம் குறித்த கோப்புகளை ஜெயின் ஆணையம் கேட்டப்பிறகும் அவற்றை இந்திய அரசு இறுதிவரை தராமல் மறைத்தது ஏன்?
10. இராசீவ்காந்திப் படுகொலை செய்யப்பட்டதற்கான பின்னணிகள், காரணங்கள், தொடர்புடையவர்கள், நிறுவனங்கள், அடங்கியிருந்த சதிகள் ஆகியவைக் குறித்து விசாரணை நடத்த நீதியரசர் ஜெயின் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அளித்த  இடைக்கால அறிக்கையில் இந்தக் கொலையில் தொடர்புடைய பலரிடம் மீது விசாரணை நடத்தப்படவே இல்லை. குற்றப்பத்திரிக்கையில் அவர்கள் பெயர்களும் இடம்பெறவே இல்லை. புலன் விசாரணையில் பல அம்சங்கள் விடுப்பட்டுள்ளன. பல அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, இவைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியும் எனக் கூறியது. அது மட்டுமல்ல, தான் கேட்ட பல ஆவணங்கள், செய்திகள், கோப்புகள் ஆகியவற்றை இந்திய அரசு தரவில்லை என்றும், விசாரணையில் பல முட்டுக்கட்டைகளை போட்டது என்றும், ஒத்துழையாமை  போக்கினை கடைப்பிடித்தது என்றும் ஜெயின் ஆணையம் குற்றம் சாட்டியது ஏன்? இக்குற்றச்சாட்டுக்கு இறுதிவரை இந்திய அரசின் சார்பில் பதிலளிக்கப்படாதது ஏன்?
11. தலைமையமைச்சராக நரசிம்மராவ் இருந்தபோது இராசீவ்கொலை தொடர்பான பல முக்கிய அரசு கோப்புகள் காணாமல் போய்விட்டன. குறிப்பாக, சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்புகொண்டு பேசியபோது, இடைமறித்துக் கேட்கப்பட்ட செய்திகளைக் கொண்ட முக்கியமான கோப்பு, இராசீவ்கொலை குறித்து நடுவண் அரசின் உளவு நிறுவனங்கள், உள்துறை அமைச்சருக்கு தெரிவித்தக் கருத்துகள் தொடர்பான கோப்பு போன்ற முக்கிய கோப்புகள் மறைந்த மர்மம் என்ன?
12. இராசீவ் கொலை வழக்கு விசாரணை, நாட்குறிப்பு மற்றும் ஆவணங்களை ஜெயின் ஆணையம் கேட்டபோது அவற்றை அளிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக்குழுத் தலைவர் கார்த்திகேயன் மறுத்தது ஏன்? இந்தக் கொலையை சதித்திட்டம் தீட்டிய முக்கியப் புள்ளிகள் குறித்த உண்மைகளை மறைக்க நடுவண் அரசும், உளவு நிறுவனங்களும், அதிகாரிகளும் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறதா? இல்லையா?
13.  21-05-1991 அன்று இராசீவ்கொலை நடைபெற்றது. ஆனால், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 05-03-1991 அன்று விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக கவிஞர் காசிஆனந்தன் இராசீவ்காந்தியை அவரது இல்லத்திலேயே சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நல்ல நட்புறவுடன் நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம் புலிகள் இயக்கத்திற்கும், இராசீவ்காந்திக்குமிடையே நல்லுறவு உருவானது. இராசீவ்காந்தி மீண்டும் தலைமையமைச்சர் ஆவதின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு உறுதியான முயற்சிகளை மேற்கொள்வார் என விடுதலைப்புலிகள் நம்புவதாக காசி ஆனந்தன் இராசீவ்காந்தியிடம்  தெரிவித்தார். இராசீவ்காந்தி மிக்க மகிழ்ச்சியுடன் பிரபாகரனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தச் சுமூகமான சூழ்நிலையில் இராசீவ்காந்தியை கொலை செய்யவேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு அறவே இல்லை. இந்த நல்லுறவை கெடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டவர்கள்தான் இந்தப் படுகொலைக்குப் பின்னணியில் இருக்க முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
14. ஜெயின் ஆணையம் அளித்தப் பரிந்துரைக்கேற்ப இராசீவ்காந்தியின் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து விசாரித்து அறிய 1998ஆம் ஆண்டு டிசம்பரில் பல்நோக்கு விசாரணைக்குழு ஒன்றினை நடுவண் அரசு அமைத்தது. கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த விசாரணை இன்னமும் தொடர்கிறது. இந்த நீண்டகால தாமதத்தின் விளைவாக முக்கிய குற்றவாளிகள், சாட்சிகள் ஆகியோர் இறந்துவிட்டார்கள். தனது விசாரணையின் இறுதி அறிக்கையை தரவோ அல்லது புதிய குற்றப்பத்திரிகை அளிக்கவோ பல்நோக்கு விசாரணைக்குழு முன்வராமல் காலம் கடத்துவது என்பது உண்மைகளை ஆழமாகப் புதைப்பதற்கே என்ற ஐயப்பாடு இயற்கையாக அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த நிலைமையில் விடுதலைப்புலிகள் மீது கொலைப் பழியைச் சுமத்தி அந்த இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை இன்னமும் தொடர்வது நீதியா? உண்மைக் குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியைப் பல்நோக்கு விசாரணைக் குழு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் போது 27 ஆண்டுகாலமாக 7பேரை இன்னமும் சிறையில் அடைத்து வைத்திருப்பது இயற்கை நியதிக்கு முற்றிலும் எதிரானதா? இல்லையா?
    மேற்கண்ட பதிலில்லா கேள்விகளுக்கும், தீராத ஐயப்பாடுகளுக்கும் உரிய தீர்வுதான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் கிடத்தப்பாடில்லை.