வள்ளல் பச்சையப்பரின் நோக்கம் செவ்வனே நிறைவேற வேண்டும் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 12:33

ஆறு கல்லுரிகளையும், ஏழு உயர்நிலைப் பள்ளிகளையும் பராமரிப்பதற்காக வள்ளல் பச்சையப்பர் அளித்த பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்கள் முறையாகவும், நேர்மையாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

நிர்வாகச் சீர்கேடுகள் அடியோடு களையப்பட வேண்டும். இந்த திரண்ட செல்வத்தை வைத்து வள்ளல் பச்சையப்பர் பெயரில் பல்கலைக் கழகம் ஒன்றினை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-06-2017 தினமணி நாளிதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன்.  
பச்சையப்பர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்களும் இவ்வாறே வலியுறுத்தியதையொட்டியும், அறங்காவலர் குழுவுக்குரிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் பட்டியலில் பல தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததையொட்டியும் சென்னை உயர்நீதிமன்றம்  கீழ்க்கண்ட ஆணையை 14-06-2018 அன்று பிறப்பித்தது. இந்த ஆணையின்படி பச்சையப்பர் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியாக முன்னாள் நீதியரசர் பி. சண்முகம் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
கடந்த 7 மாதங்களாக நீதியரசர் பி. சண்முகம் அவர்களும், அவருக்கு துணையாகநியமிக்கப்பட்ட அலுவலர்களும் பச்சையப்பர் அறக்கட்டளை நிர்வாகத்தில் நடைபெற்றவை குறித்து நுணுகி ஆராய்ந்து 31-03-2018 அன்று இடைக்கால அறிக்கைஒன்றினை அளித்துள்ளனர்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளநிதி முறைகேடுகளும்,நிர்வாகச் சீர்கேடுகளும்அதிர்ச்சித் தருகின்றன.    
பச்சையப்பர் அறக்கொடையாக அளித்த திரண்ட செல்வத்தை நிர்வகிப்பதற்காக1841ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தலையிட்டு ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது. பச்சையப்பரின் சொத்துக்கள் மட்டுமல்ல,  மற்றும் 28 கொடையாளிகள் அளித்த சொத்துக்களும் பச்சையப்பர் அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதற்குப் பிறகு பல காலகட்டங்களில் ஒன்பது முறை உயர்நீதிமன்றம் தலையிட்டு காலத்திற்கேற்ற மாறுதல்களை தனது ஆணையில் செய்துள்ளது. இறுதியாக 24-09-2008 அன்று உயர்நீதிமன்றம் புதிய திட்டம் ஒன்றினை வகுத்தது. அதன்படி பச்சையப்பர் அறக்கட்டளையின் நிறுவனர் நாளை ஆண்டுதோறும் தக்கவாறு அறங்காவலர்கள் கொண்டாடவேண்டும். பச்சையப்பருக்கு நன்றி செலுத்துவதற்காக இந்த விழாவை நடத்துவது மட்டுமல்ல, அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகளை அதிகாரப்பூர்வமான கணக்காயரின் சான்றிதழுடன் அச்சடித்து மக்களுக்கு வழங்குவதோடு அறக்கட்டளையின் செயற்பாடுகளை விளக்கிக் கூறவும் வேண்டும் என திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு  நிறுவனர் நாள் கொண்டாடப்படாததோடு 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதி ஆண்டுகளுக்குரிய வரவு-செலவுக் கணக்குகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், உயர் நீதிமன்ற ஆணையின்படி வரவு-செலவுத் திட்டத்தை சரிபார்க்க அறக்கட்டளைக்கு உள் கணக்காயரும், வெளி கணக்காயரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் விளைவாக அறக்கட்டளையின் நிர்வாகத்தில் ஊழலும், முறைகேடுகளும் எவ்விதத்  தங்குதடயமுமின்றி நடத்தப்பட்டுள்ளன.
2016-17 க்குரிய வரவு-செலவுத் திட்டத்தில் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட வெளி கணக்காயரான முகுந்தன் & கோ., அதில் சான்றொப்பம் இடவில்லை. அதற்கு முன்னும் 7 ஆண்டு காலமாக அந்நிறுவனம் வரவு-செலவுத் திட்டம் எதிலும் சான்றொப்பம் இடவில்லை. அறங்காவலர்கள் நடத்திய நிறுவனர் நாள் விழாக்களில் வரவு-செலவுத் திட்டங்கள் கணக்காயரின் சான்றொப்பம் இல்லாமலேயே அளிக்கப்பட்டன. அவற்றில்கூட அறக்கட்டளையோடு இணைக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றின் வரவு&செலவு கணக்குகள் இணைக்கப்படவில்லை.
முறையான கணக்குகளோ அல்லது விதிமுறைகளோ பின்பற்றப் படவில்லை. திரண்ட சொத்துக்கள், வங்கிகளில் நிரந்தர வைப்புநிதி ஆகியவை இருந்தபோதிலும்                    அறக்கட்டளையின் நிதிநிலை பெரும் சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகத்திலுள்ள சொத்துக்கள் மற்ற அற நிலையங்களின் நிதிகள் கண்டபடி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளன.அறக் கட்டளைகளின் நோக்கங்களுக்கு எதிராக இவைகள் செலவழிக்கப் பட்டுள்ளன. பச்சையப்பர் அறக்கட்டளையின் கீழ் இருந்த கோவிந்த நாயக்கர் சொத்துக்களின் வாடகை வருமானத்தில் ரூ. 50 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.  
பச்சையப்பர் அறக்கட்டளையோடு இணைக்கப்பட்டிருந்த செங்கல்வராய நாயக்கரின் சொத்துக்களைத் தனியாக நிர்வகிக்க வேண்டுமென 1996ஆம் ஆண்டிலேயே உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், அதை மீறி அதிலிருந்து ரூ.4கோடியே 24 இலட்சத்திற்கு மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை அலுவலர்களின் நலன் நிதி, ஜி.எஸ்.டி., சேவை வரி ஆகியவற்றில் 9 கோடியே 17 இலட்சம் முறையின்றி எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அம்மா அரங்கம் என்ற பெயரில் பெரிய கட்டடம் ஒன்று 28 கோடியே 93இலட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. கல்வி நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட  இது திருமண விழாக்கள்,  குடும்ப விழாக்கள், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு, இது தனிப்பட்ட ஒருவருக்கு ஆண்டிற்கு 1.50 கோடி ரூபாய் குத்தகைக்கு 20 ஆண்டுகளுக்கு விடப்பட்டது. இதன்மூலம் குத்தகைதாரர் மட்டுமே ஆதாயம் அடைவார். பள்ளியின் விளையாட்டுத் திடல், விழாவுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது. இதன்மூலம் அறக்கட்டளைக்கு 8கோடியே 36இலட்ச ரூபாய் இதுவரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகும். அதுமட்டுமல்ல, அறக்கட்டளையின் மற்ற  அங்கங்களின் கணக்குகளிலிருந்து ரூ. 8கோடியே 77இலட்சம் அம்மா அரங்க கட்டட செலவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அறக்கட்டளையில் உள்ள பல்வேறு அங்கங்களிலிருந்து 2017-18 நிதியாண்டில் மட்டும் ரூ. 23கோடியே 15இலட்சம் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் பிற அங்கங்களின் நிதிகள் ஒருபோதும் மாற்றப்படக் கூடாது. என்ன நோக்கத்திற்காக அவைகள் அளிக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும். ஆனால் அறங்காவலர்கள் தங்கள் விருப்பம்போல் பல்வேறு நிதிகளை மாற்றிச் செலவழித்துள்ளனர். இத்தகைய முறைகேடுகள் மேலும் பலவற்றை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பச்சையப்பர் அறக்கட்டளை நிர்வாகம் முறையான கணக்கு வழக்கு வைத்துக்கொள்வதற்கான வழியையோ அல்லது வரிச் சட்டங்களின் விதிகளையோ பின்பற்றவில்லை. ஆண்டுதோறும் வரவு-செலவுக் கணக்குகளை அளிக்கவில்லை. வருமான வரி அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் அனுப்பவேண்டிய கணக்குகளையும்  அனுப்பத் தவறியுள்ளனர், அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களைக்  குறைந்த  வாடகைக்கோ, குறைந்த குத்தகைக்கோ அளித்து அறக்கட்டளைக்குப்  பெரும் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதியாக தனது அறிக்கையில் நீதியரசர் பி. சண்முகம் அவர்கள் கீழ்க்கண்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அவற்றில் முக்கியமானவை வருமாறு-
கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் மூலம் மட்டுமே அறங்காவலர்கள்  தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது  நியாயமானதல்ல. அறக்கட்டளையினால் பயன்பெறுவோரும் அறங்காவலர்  குழுத் தேர்வில் பங்கெடுக்கும் வகையில்  அறக்கட்டளையின் சட்டம் திருத்தப்படவேண்டும்.
அறங்காவலராகப் போட்டியிடுபவர் சென்னை மாநகரில் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறையாமல் சொத்துவரி செலுத்துபவராக இருக்கவேண்டும் என்ற விதிமுறையின் மூலம் செல்வம் படைத்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இது மாற்றப்படவேண்டும்.
சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இப்போது வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியும். திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவேண்டும்.
கடந்த காலத்தில் அறங்காவலர்களாக இருந்து பல்வேறு நிதி முறைகேடுகளிலும், நிர்வாக முறைகேடுகளிலும் ஈடுபட்டவர்கள் மீண்டும் அறங்காவலர்களாகப் போட்டியிடுவது தடை செய்யப்படவேண்டும். கடந்த 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை பச்சையப்பர் அறக்கட்டளையினால் கட்டப்பட்ட கட்டடங்களை மற்றும்  கட்டட வேலைகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்பீடு என்ன? என்பதை ஆராய பொறியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் சொத்துக்களின் இப்போதைய சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகைகள் வாங்கப்படவேண்டும். அறக்கட்டளைக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவை சரியான முறையில் மதிப்பிடப்படவோ, பட்டியலிடப்படவோ இல்லை. எனவே நிலங்கள் கட்டடங்களாக மாற்றப்பட்டு நாளடைவில் ஆவணங்களிலிருந்து அகற்றப்படும் அபாயம் உள்ளது. பல்வேறு கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நகைகளின் மதிப்பீடு எவ்வளவு என்பது இதுவரை பட்டியலிடப் படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பச்சையப்பர் அறக்கட்டளையின் நிர்வாகம் கல்லூரிகள், அசையும் சொத்துக்கள், அறக்கட்டளை என மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் இந்த அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட அறிவுரைகளை உயர்நீதிமன்றம் ஆராய்ந்து உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் வரை பச்சையப்பர் அறங்காவலர் குழுவுக்கான தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டு, மறு தேர்தல் வரை உயர்நீதிமன்றம் நியமித்த இடைக்கால நிர்வாகம் தொடர்வது பச்சையப்பரின் நோக்கங்களைச்  செம்மையாக நிறைவேற்ற உதவும்.
- நன்றி - தினமணி - 14-02-2019