தெற்கே தலை தூக்கும் அபாயம்! - பழ. நெடுமாறன் அச்சிடுக
சனிக்கிழமை, 16 மார்ச் 2019 13:48

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் மத்திய காவல்படையினர் மீது நடைபெற்ற தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் பாலகோட் என்னும் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த இரு நிகழ்ச்சிகள் குறித்து ஆளுங்கட்சியான பா.ச.க.வும், எதிர்க்கட்சிகளும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
புதர் மறைவில் நின்று உறுமும் ஓநாயைக் காட்டிக் கூக்குரலிடுபவர் களுக்கு காலுக்கடியில் ஊர்ந்து கொண்டிருக்கும் கொடிய நச்சரவம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதைபோல, இந்திய அரசும் மற்றும் எதிர்க்கட்சிகளின் போக்கும் அமைந்திருக்கின்றன.
வடஎல்லையில் தலைதூக்கிய அபாயமும் அதை தடுக்கவேண்டிய அவசியமும் இந்திய அரசுக்கு உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதேவேளையில் தெற்கே உருவாகிக் கொண்டிருக்கிற அபாயம் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்திய கடற்படையின் தலைமை தளபதியான அட்மிரல் சுனில் லன்பா 06-03-2019 அன்று பின்வருமாறு எச்சரிக்கை செய்திருக்கிறார்- "இந்தியாவை நிலைகுலையச் செய்யும் நடவடிக்கைகளின் அறிகுறிதான் புல்வாமா பயங்கர தாக்குதலாகும். அதேபோல கடல்வழியாகத் தாக்குதல் நடத்தவும் திட்டங்கள் தீட்டப்பட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மூழ்கி வந்து நமது கடற்படையின் முக்கிய பகுதிகளைத் தாக்குவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து உளவுத் துறையின் மூலம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 2008ஆம் ஆண்டு மும்பையில் அத்தகைய பயங்கரவாதிகளால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.
கடற்படையின் தலைமைத் தளபதியாக இருப்பவர் இதற்குமேல் வெளிப்படையாக எதுவும் பேச முடியாது. பாகிஸ்தானைத் தவிர பிற நாடுகளிலிருந்து தனக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்ற கற்பனையில் இந்திய அரசு திளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் சீனாவும், அதனுடன் கைகோர்த்து பாகிஸ்தானும் ஆழமாக காலூன்றிவிட்டன. இலங்கைக்குத் தேவையான நிதி உதவி மட்டுமல்ல, இராணுவ ரீதியான உதவிகளையும் அந்நாடுகள் அளித்து வருகின்றன எதற்காக? ஏன்? சீனாவின் பொருட்களை விற்பதற்கு இலங்கை என்ன பெரிய சந்தையா? பொருளாதார ரீதியில் இலங்கையின் நட்பினால் சீனாவுக்கு ஏதாவது ஆதாயம் உண்டா? அதைபோல பாகிஸ்தான் இலங்கையுடன் நெருங்கிய நட்புறவு  கொள்வதினால் அந்நாட்டிற்கு  ஏதேனும் ஆதாயம் உண்டா? எதுவும் கிடையாது. ஆனாலும், எதற்காக அவைகள் இவ்வாறு உதவுகின்றன?
இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக இலங்கை நமக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையில் இந்நாடுகள் இலங்கையுடன் நட்புறவுக் கொண்டிருக்கின்றன. ஈழத்  தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அதனுடைய பகைநாடுகளுடன் உறவு கொள்வதே சரியான வழியென இலங்கை கருதி சீன -பாகிஸ்தான் நட்புறவைத் தேடிச் சென்று அடைந்திருக்கிறது. இந்த உண்மையை உணராமல் ஈழத் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுத்தாவது இலங்கை அரசின் நட்பை பெற்றாகவேண்டும் என கடந்தகால காங்கிரசு அரசு செயல்பட்டது.  இப்போதைய பா.ச.க. அரசும் அதே கொள்கையைப் பின்பற்றுகிறது.
தென் இலங்கையில் அம்பன்தோட்டா என்னும் துறைமுகத்தை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீனா உருவாக்கி அங்கு தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது. மியான்மர், வங்காளதேசம்,  மாலத்தீவுகள் ஆகிய நாடுகளிலும் சீனா கடற்படைத் தளங்களை அமைத்திருக்கிறது. பாகிஸ்தான் ஏற்கெனவே  சீனாவின் மிக நெருங்கிய கூட்டாளியாகத் திகழ்கிறது. இதன் விளைவாக இந்துமாக் கடலில் சீனாவின் ஆதிக்கம் கைஓங்கி நிற்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்துமாக் கடல் அதன் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றப் பிறகு இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்துமாக் கடல் இருந்தது. இந்துமாக் கடல் வழி, உலகின் பிற கடல் வழிகளைவிட மிக முதன்மை வாய்ந்ததாகும். மேற்கு நாடுகளின் சரக்குக் கப்பல்களும், அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளின் எண்ணெய் கப்பல்களும், கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்குரியது இந்தக் கடல்வழியாகும். சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இந்த கடல்வழி சிக்குவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, மேற்கு நாடுகளுக்கும் அபாயமாகும்.
1962ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது சீனா படையெடுத்தது. உலக நாடுகளின் எதிர்ப்பால் பின்வாங்கியது. ஆனாலும், அப்போது சீனப்படைகள் கைப்பற்றிய பகுதிகள் இன்னமும் அதனிடம் உள்ளன. அந்த காலகட்டத்தில் தலையமைச்சராக இருந்த நேரு அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்தார். என்றைக்கு இருந்தாலும்  வடஎல்லையில் சீனாவும், மேற்கு எல்லையில் பாகிஸ்தானும் பகை நாடுகளாகும். அவைகள் திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டால் முதலில் வடமாநிலங்களில் உள்ள இராணுவக் கட்டமைப்புகளை குறிவைப்பார்கள். எனவே, இராணுவக் கட்டமைப்புகளைத் தென்னிந்தியாவுக்கு மாற்றுவதுதான் பாதுகாப்பானது என கருதினார். அவ்விதமே தற்போது தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட இராணுவ ரீதியான கட்டமைப்புகள் உள்ளன. தெற்கே இலங்கையை தவிர வேறு நாடு கிடையாது. இலங்கை நமது நட்பு  நாடு எனக் கருதி நேரு இவ்வாறு செய்தார்.
இந்துமாக் கடலில் இயற்கையான முதன்மை வாய்ந்த பகுதியாக இலங்கை அமைந்துள்ளது. இந்த கடல்வழியே செல்லும் விமானத் தடங்களுக்கும், கப்பல்  தடங்களுக்கும் நடு மையமாக இலங்கை உள்ளது.  எனவே, இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொறுத்ததாக அமைந்துள்ளது. ஆனால், இதுகுறித்து  இலங்கை கவலைப்படவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அதன் பகை நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை தயங்கவில்லை. இலங்கையின் இந்தப் போக்கினைக் கண்டிக்கும் வகையில் இந்தியக் கடற்படையின் முன்னாள் தலைமை தளபதியான இரவி கவுல் என்பவர் "இந்துமாக்கடலும், இந்தியாவின் முதன்மை வாய்ந்த நிலையும்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.- "பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைபோல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை முதன்மை வாய்ந்ததாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்படவேண்டியதில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பிடியில் இலங்கை சிக்குமானால் அத்தகைய நிலைமையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால்  இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்” என எச்சரித்துள்ளார்.  
இலங்கையில் தமிழர் பகுதிகளை தனது முழுமையான ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரம் கட்டுவதற்கும் தான் அளித்த உதவிகளாலும் இலங்கை தனது நட்பு நாடாக இறுதிவரை விளங்கும் என கடந்தகால காங்கிரசு அரசு கருதியது. ஆனால், அது இன்றைக்கு பகற்கனவாய் பொய்த்துப் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இனி இந்தியாவின் தயவு இலங்கைக்குத் தேவையில்லை. அணுஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் தனக்குத் துணை நிற்கும்போது இந்தியாவின் துணை ஒருபோதும் தேவையில்லை என சிங்கள அரசு கருதுகிறது
காங்கிரசு அரசு இலங்கை அரசை நம்பி ஏமாந்ததைப்போல இப்போதைய பா.ச.க. அரசும் நம்பி ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளது. இதன் விளைவாகவே தெற்கே பேரபாயம் தலைதூக்கி உள்ளது. இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தலைமை தளபதி இரவி கவுல் விடுத்த எச்சரிக்கையை காதில் வாங்கிச் செயல்பட முந்திய அரசு தவறியது. தற்போதைய தலைமை தளபதி சுனில் லன்பா அதே எச்சரிக்கையை செய்திருக்கும் இந்த வேளையிலாவது இந்திய அரசு செவிசாய்த்து எச்சரிக்கையாக  இருக்கவேண்டும்.  
திபெத்திலிருந்து ஆயிரக்கணக்கான  மைல்களுக்கப்பால் உள்ள தென்னிந்திய இராணுவக் கட்டுமானங்களை சீனா தாக்குவதைவிட 20கல் தொலைவில் அமைந்திருக்கும் இலங்கையிலிருந்து குறி பார்த்து தாக்குவது என்பது மிக எளிது. இதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட மறுத்தால் வேண்டாத விளைவுகளுக்கும், அழிவுகளுக்கும் தமிழ்நாடும், பிற தென்மாநிலங்களும் ஆளாகும் என்பதில் ஐயமில்லை.
நான்காண்டுகளுக்கு முன் நடைபெற்ற இலங்கைக் குடியரசுத் தேர்தலில் தோற்ற இராசபக்சே 'தனது தோல்விக்கு இந்தியாதான் காரணம் என குற்றம் சுமத்தத்  தயங்கவில்லை.  இந்திய 'ரா' உளவுத் துறைதான் தனது எதிரிகளுக்கு உதவியது என கூறினார். அத்தேர்தலில் வெற்றிபெற்ற தற்போதை குடியரசுத்  தலைவர்  சிறீசேனா தன்னை கொலை செய்ய இந்திய 'ரா' உளவுத்துறை திட்டமிட்டுள்ளது என அண்மையில் குற்றம்சாட்டத்  தயங்கவில்லை. தேர்தலில் தோற்றுப்போனவர் தனது தோல்விக்கு இந்தியாதான் காரணம் என குற்றம் சாட்டினார்.  வெற்றிபெற்றவர் தன்னை கொலை செய்ய இந்தியா முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டுகிறார். யார் கூறுவது உண்மை? என்பது ஒருபுறம்  இருக்கட்டும். ஆனால், உலக  அரங்கில் இந்தியா அவமானப்பட்டுத்  தலைகுனிந்து நிற்கிறது.  
சின்னஞ்சிறிய நாடான இலங்கையின் இராச தந்திரம், மிகப்பெரிய நாடான இந்தியாவின் இராச தந்திரத்தை முறியடித்துவிட்டது. சின்னஞ்சிறிய நரி தந்திரமாக சிங்கத்தை ஏமாற்றி பாழும் கிணற்றில் பாய வைத்ததைப் போல இலங்கை இந்தியாவை ஏமாற்றி அபாயத்தின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது.  
மொத்தத்தில் தென்னாசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றுகூட இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக இருக்கவில்லை. அனைத்தையும் சீனா தன் பக்கம் ஈர்த்துக்கொண்டுவிட்டது. முற்றிலுமாக தனிமைப் படுத்தப்பட்டுத் தவிக்கும் இந்திய அரசு, இந்த காலகட்டத்திலாவது உணரவேண்டியதை உணர்ந்து செயல்படவேண்டும்.