முள்ளிவாய்க்கால் படுகொலை - 10ஆம் ஆண்டு நினைவு அச்சிடுக
புதன்கிழமை, 01 மே 2019 12:22

தஞ்சை, புதுச்சேரி, திருச்சி, மதுரை நகரங்களில் சிறப்பாக நடத்தத் திட்டம்
உலகத் தமிழர் பேரமைப்பு - ஆட்சிக்குழுத் தீர்மானங்கள்
28-04-2019 ஞாயிறு அன்று உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

உ.த.பே. பொறுப்பாளர்களும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை தமிழகமெங்கும் சிறப்பாக நடத்தி மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஊட்டுவது குறித்து விவாதம் நடைபெற்றது. அனைவரின் கருத்துக்களை கேட்டப்பிறகு, பழ. நெடுமாறன் உரையாற்றினார். பின்னர், கீழ்க்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
இரங்கல்  தீர்மானம்
உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் முனைவர் க.பா. அறவாணன்,  புலவர் கி.த. பச்சையப்பன், புலவர் நன்னன், சிலம்பொலி செல்லப்பனார், வெண். முருகு. வீரசிங்கம், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரின் மறைவிற்கு இக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர்.
தீர்மானங்கள்
1.    முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சூலை 6, 7 ஆகிய இரு நாட்களில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்பாக நடத்துவது எனவும், அதற்குப் பின்னர் புதுச்சேரி, திருச்சி, மதுரை ஆகிய மாநகரங்களில் நடத்துவது என ஆட்சிக்குழு முடிவு செய்கிறது.
2.    தமிழர் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத அளவில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பை தமிழக மக்களுக்குக் குறிப்பாக, இளைய  தலைமுறையினருக்கு ஊட்டி, அவர்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறு வெளியீடுகள், குறும்படங்கள் போன்றவற்றை வெளியிடுவது என்றும், நினைவு நாள் கொண்டாடப்படும் நகரங்களில் ஒவிய-புகைப்படக்  கண்காட்சி, புத்தகக் கண்காட்சி ஆகியவற்றை நடத்துவது எனவும் இக்குழு முடிவு செய்கிறது.
3.    முள்ளிவாய்க்கால் படுகொலைக் குறித்து மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள்  வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கலந்துகொண்ட அனைவருக்கும் செயலாளர்&நாயகம் திரு. ந.மு. தமிழ்மணி நன்றி தெரிவித்தார்.