வீரசிங்கம் மறைந்தார் அச்சிடுக
வியாழக்கிழமை, 16 மே 2019 12:38

தஞ்சை வெண்.வீர.முருகு.வீரசிங்கம் அவர்கள் 214-19-அன்று காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம். 1982-ஆம் ஆண்டில் நான் இலண்டனுக்கு முதன்முதலாக சென்றபோது அகமும் முகமும் மலர என்னை வரவேற்றவர்களில் முன்நின்றவர் நண்பர் வீரசிங்கம் ஆவர்.

இலண்டன் வாழ் தமிழர்களை ஒன்று திரட்டி தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினை நிறுவித்  தொண்டாற்றினார். திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியையும் நிறுவி தமிழ்க்குழந்தைகள் நமது மொழியைக் கற்க வழிவகை செய்த பெருமை இவருக்கு உரியது. இலண்டனில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவான தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட வழிக்காட்டினார்.
1985-ஆம் ஆண்டில் தமிழகம் திரும்பிய போது ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைத் தொடங்கி ஏழை, எளிய மக்கள் கற்கத் தொண்டாற்றினார். கொடைக்கானல் மலையில் மஞ்சம்பட்டி எனும் பழங்குடி மக்கள் வாழும் சிற்றூரில் முதன்முதலாக பள்ளியினை நிறுவி பழங்குடி சிறுவர்களின் அறிவுக்கண்களை திறந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட முழுமையாகப் பாடுபட்டார். அதன் காரணமாக கொடிய தடாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது மன உறுதிகுன்றாமல் தனது தொண்டினைத் தொடர்ந்தார்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கும் பணியில் எங்களுடன் தோள் கொடுத்துத் துணை நின்றார். அதன் வளர்ச்சியின் மிகுந்த ஈடுபாடு காட்டினார். முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தினார். இவ்வாறு என் தொண்டுகள் அனைத்திற்கும் துணை நின்று பணியாற்றிய அவருக்கு உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பாக வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.       
-பழ. நெடுமாறன்