தமிழ்க் காக்கும் களத்தில் துறவிகள் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 31 மே 2019 14:37

சங்கம் மருவிய காலத்தில் சமணமும், பெளத்தமும் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்தன. சமணத்தின் மொழியான பிராகிருதமும், பெளத்தத்தின் மொழியான பாலியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தின. தமிழ் நலிந்து புறக்கணிக்கப்பட்டது.

கி.பி. 7ஆம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்  தோன்றி சமண, பெளத்ததிற்கு எதிரான போராட்டத்தைத் தொடுத்தார்கள். சைவ சமயத்தை  நிலைநிறுத்துவதற்கான போராட்டமாக அதைப் பார்ப்பதைவிட, தமிழ் மொழியை, பண்பாட்டை, இசை,  நடனம்  போன்ற நுண் கலைகளைப் பாதுகாக்கும் போராட்டமாகப் பார்க்கவேண்டும்.  
தமிழிசை, நடனம், சிற்பம் போன்ற நுண் கலைகள் பாவம் நிறைந்தவை என சமண, பெளத்தர்கள் உரத்தொலித்தனர். அவற்றையே தங்களது ஆயுதங்களாக நாவுக்கரசரும், சம்பந்தரும் கையிலெடுத்தனர். தித்திக்கும்  தேவாரங்களைப் பண்ணோடுப் பாடிப் பரப்பினர்.  இறைவனையே நடன வடிவில் வழிபட்டனர். திருமுறைகள், துதிப்பாடல்கள் மட்டுமல்ல, தமிழுக்கு மேலும் செழுமைச் சேர்த்த செந்தமிழ் இலக்கியமாகவும் திகழ்ந்தன. அப்பரும், ஆளுடைப்பிள்ளையும், தொடுத்த இந்தப் போர்  தமிழ்க் காக்க நடைபெற்றப் போராகும்.
அதைபோல, இப்போது  தமிழ்நாட்டில் தமிழ் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மொழியாக, பயிற்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் இல்லை. இதற்கு எதிராக தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், தவத்திரு. குமரகுருபர அடிகளாரும் தமிழ்க் காக்க முன்வருமாறு நமக்கு அறைகூவல் விடுத்துள்ளனர். இவர்களுக்குத் துணை நிற்கவேண்டியது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் கடமையாகும். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எவ்வாறு வெற்றி பெற்று தமிழை, தமிழ்க் கலைகளை, தமிழ்ப் பண்பாட்டை நிலை  நிறுத்தினார்களோ அதைபோல,  இந்த இரு துறவிகளின் தலைமையில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நின்று தமிழ்க்காக்கும் போரில் வெற்றி பெறுவோம்.