ஒடுக்குமுறைகளை வென்று தலை நிமிர்ந்த தமிழ்த் தேசியம் மதுரை மாநாட்டில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை அச்சிடுக
வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020 11:21

40ஆண்டுகளுக்கு முன்னால் 02-10-1979 அன்று இதே மதுரை மாநகரில் நாம் கூடினோம். தமிழ்நாட்டின் நிலைமைகளையும், தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளாமலும், நமது உரிமைகளை மதிக்காமலும், தில்லியிலிருந்து தன்னிச்சையாக முடிவு எடுத்து நம்மீது திணித்த காங்கிரசுத் தலைமையின் போக்கைக் கண்டித்து அக்கட்சியிலிருந்து விலகி தமிழின உணர்வின் அடிப்படையில் நாம் புதிய அமைப்பினை தோற்றுவித்தோம்.

அன்று கூடிய அந்தப் பெருங்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டு கடந்த 40 ஆண்டு காலமாகத் தொடர்ந்து  எனக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்கும் மூத்த தோழர்கள் பலரும் இங்கே கூடியிருப்பதைக் கண்டு நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அதேவேளையில் மூத்த தோழர்களான எம்.கே.டி. சுப்ரமணியம், தி.சு. கிள்ளிவளவன், திண்டுக்கல் தி. அழகிரிசாமி, கா. பரந்தாமன் போன்ற பலர் இந்த இயக்கத்தை   கட்டி வளர்ப்பதற்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துத் தொண்டாற்றியவர்கள்  இன்று நம் மத்தியில் இல்லை. காலவெள்ளம் அவர்களை அள்ளிச் சென்றுவிட்டது. அந்தத் தோழர்களுக்கு இயக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
கடந்த 40 ஆண்டு காலத்தில் நாம் சந்திக்காத ஒடுக்குமுறைகளில்லை. தேசியப் பாதுகாப்புச் சட்டம், தடாச் சட்டம், பொடாச் சட்டம் போன்ற கொடிய கருப்புச் சட்டங்கள் நம்மீது ஆட்சியாளர்களால் ஏவப்பட்டன.  நம்முடைய மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டன. இறுதியாக நமது இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், நம் உள்ளங்களில் கனன்றுகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கனலை அவர்களால் அணைக்க முடியவில்லை. பட்டம், பதவிகளை எதிர்நோக்காமல் தமிழ்த் தேசியப் பதாகையை  உயர்த்திப் பிடித்தவண்ணம் நமது தோழர்கள் 40 ஆண்டு காலமாக தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் இணையற்றத் தொண்டின் விளைவாக தமிழ்த் தேசியம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழ்த் தேசியப் பேரலை தமிழகமெங்கும் பரவி வீசுகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த இயக்கமும் சந்தித்திராத ஒடுக்குமுறைகளை நமது இயக்கம் சந்தித்த போதிலும் நாளுக்கு நாள் நாம் வளர்ந்தே வருகிறோம்.
தமிழ்த் தேசியம் வெறும் தத்துவமல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நம்முடைய தொன்மையான மொழியும், அம்மொழியின் இலக்கியங்களும் உருவாக்கியிருக்கிற உயரியப் பண்பாடாகும். தமிழ்த் தேசிய இனத்தின் இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் நாம் தொடர்ந்து இயங்குகிறோம். பிற மொழி, இன, பண்பாட்டுப் படையெடுப்புகள் நம்முடைய மொழியையும், இலக்கியத்தையும், இனத்தையும், பண்பாட்டையும் அழிக்க முயன்றன. ஆனால், நமது மொழி, பண்பாடு பொதிந்துள்ள நமது இலக்கியங்களை  நம்முடைய முன்னோர்கள் தொகுத்துப் பேணிப் பாதுகாத்தனர். சங்க இலக்கியங்களானாலும், சங்க மருவிய இலக்கியங்களானாலும், தமிழ்க் காப்பியங்களானாலும், பக்தி இலக்கியங்களானாலும், சிற்றிலக்கியங் களானாலும் அவையெல்லாம் பகுத்து, தொகுத்துப் பாதுகாக்கப்பட்டன. தமிழ்த்  தேசிய இனத்தின் குரல் நம்முடைய இலக்கியங்களில் வலுவாக ஒலிக்கிறது. நம்முடைய இலக்கியங்கள் தொகுக்கப்படாமல் போயிருந்தால் அவை அழிந்திருக்கும். இலக்கியம் அழிந்தால் மொழி அழிந்திருக்கும். மொழி அழிந்தால் இனம்  அழிந்திருக்கும். இனம் அழிந்தால் நமது நாடும் அழிந்திருக்கும்.
ஆதிபத்திய அரசியல் சட்டம்
மொழி ஒரு தேசிய இனத்தை உருவாக்கியதை போல, அம்மொழியின் இலக்கியங்கள் அந்த தேசிய இனத்தின் பண்பாடுகளை உருவாக்குகின்றன என்ற உண்மையை உணர்ந்து போற்றிய நமது முன்னோர்களைப் பின்பற்றி நாமும் நமது மொழியையும், பண்பாட்டினையையும், இனத்தையும், நமது மண்ணையும் பாதுகாக்க தமிழ்த் தேசிய உணர்வை நெஞ்சில் ஏந்தி மக்களிடம் பரப்பி வரும் பெருந் தொண்டினை ஆற்றி வருகிறோம். ஆனால், மொழிவழித்  தேசிய உணர்வையே முற்றாக ஒடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியைத் தவிர குறிப்பாக, தமிழ் உள்பட பிற தேசிய மொழிகளை அடியோடு விலக்கி ஒற்றை மொழி அரசை உருவாக்கும் வகையில் இச்சட்டம் எழுதப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம் தமிழர்களை மொழிவழியாக அடையாளப்படுத்துவதற்கு எதிரானதாகும். இதைப் பயன்படுத்தி பெரும்பான்மையினரின் மொழி என்ற பெயரில் இந்தி மொழியையும், பெரும்பான்மையினரின் மதம் என்ற பெயரில் இந்து மதத்தையும் உயர்த்திப் பிடித்து பிற மொழிவழித் தேசிய இனங்களையும், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களையும் அடக்கி ஆளும் நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.
அண்டைய நாடான இலங்கையில் அதுதான் நடந்தது. பெரும் பான்மையினரான சிங்களரின் மொழியையும், மதமான பெளத்தத்தையும்  ஆட்சியில்  அமர்த்தியிருக்கிறது. சிறுபான்மையினரான தமிழர்கள் மொழி ரீதியிலும்,  மதரீதியிலும் ஒடுக்கப்படுகிறார்கள். இதே நிலையை இந்தியாவில் ஏற்படுத்த  இந்துத்துவா முயலுகிறது. இத்தகைய ஆதிக்கப் போக்குக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாவலாக இருக்கிறது. இச்சட்டம் கூட்டாட்சி சட்டமல்ல. மத்திய அரசிடமே அதிகாரங்களை குவிக்கிற சட்டம். மாநில அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறிக்கிற சட்டம். அதுமட்டுமல்ல, மாநிலங்களையே இல்லாமல் செய்கிற அதிகாரம் படைத்த சட்டம்.  அதைத்தான் காசுமீரில் அண்மையில் நாம் பார்த்தோம். இன்று காசுமீருக்கு ஏற்பட்ட நிலைமை, நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். தமிழ் நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரித்து தமிழ்த் தேசிய உணர்வை அழிக்க முற்படலாம். இதுவெறும் யூகமல்ல, நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தி ஆகும் என்பதை நாம் உணரவேண்டும்.
ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்! ஒரே பண்பாடு!
மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடுமையாக எதிர்த்தது. மாநிலங்களோ, மாநில அரசுகளோ தேவையற்றவை. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதே. இந்தியா முழுவதையும் நூறு சனபாதங்களாகப் பிரிக்கவேண்டும். ஒரேயொரு இந்திய ஆட்சி மட்டுமே இருக்கவேண்டும். ஒரேயொரு மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, நீதிமன்ற மொழியாக எல்லாமுமாக இருக்கும். அவ்வாறு முதலில் இந்தியும், இறுதியில் சமற்கிருதமும் அரியணை ஏற்றப்படுவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிக்கோளாகும்.
ஒரே தேசம்    -    பாரத வர்சம்
ஒரே மொழி    -    சமற்கிருதம்
ஒரே பண்பாடு    -    பாரதப் பண்பாடு
ஒரே மதம்        -     இந்து மதம்
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் கோட்பாடாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மட்டுமல்ல, காங்கிரசுக் கட்சி உட்பட பல அகில இந்தியக்  கட்சிகள்  மொழிவழித் தேசியத்தை மறுப்பவை.
இந்தியா முழுமையும் ஒற்றையாட்சியின் கீழ் இருந்தால்தான் தங்களின் சுரண்டலுக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்ற காரணத்தினால் ஒரே இந்தியக் கொள்கைக்கு பொருளியல் அடிப்படையில் ஆதரவுத் தருவது இந்தியப் பெரு முதலாளியமும், அதனுடன் கைக்கோர்த்து நிற்கும் பன்னாட்டு முதலாளியமும் ஆகும்.
இந்தியத் தேசிய கருத்தாளர்களுக்கும், இந்து தேசிய கருத்தாளர் களுக்குமிடையே அதிக வேறுபாடு கிடையாது. உலகமயமாதல் கொள்கையை இருவருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் இருவரின் கொள்கையும் ஒன்றே. பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறிய மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை காங்கிரசுக் கட்சி கிடப்பில் போட்டது. பா.ச.க. வெளிப்படையாக எதிர்த்தது.  
வலிமையான மத்திய அரசு என்ற கோட்பாட்டை நிலைநிறுத்துவதிலும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், மத்தியில் அதிகாரங்களை குவித்துக் கொள்வதிலும் இவர்களுக்கிடையே வேறுபாடுகள் கிடையாது. மொழிவழித் தேசிய உணர்வை ஒடுக்குவதிலும், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களிடையே மத மோதல்களையும், சாதிச் சண்டைகளையும் உருவாக்கி  மொழிவழித் தேசியத்தை அழிப்பதற்கு இருதரப்பினருமே தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.
ஈழத் தமிழர்  சிக்கலில் காங்கிரசுக் கட்சி சிங்கள அரசுக்கு இராணுவ உதவி உள்பட அனைத்தையும் செய்து ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது. இப்போது பா.ச.க.  அரசும் அதே கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
திராவிடக் கட்சிகளுக்கு இவையெல்லாம் புரியாமல் இல்லை. ஆனால், காங்கிரசுடனும், பா.ச.க.வுடனும் மாறி மாறி கூட்டு சேர்ந்து தங்களின் ஊழலாட்சியைக் காப்பாற்றிக்கொள்ள இரு திராவிடக் கட்சிகளும்  தவறவில்லை.  கொள்கையற்ற சந்தர்ப்பவாதம், இந்திய ஆட்சி எதிர்த்துப் போராடத் துணிவற்றக் கோழைத்தனம், பதவியை வைத்துப் பணம், பணத்தை  வைத்துப் பதவி என்னும் நச்சு சூழலைச் சுற்றிசுற்றிவரும் அதிகார வெறிப்  போக்கு ஆகியவற்றைத் திராவிடக் கட்சிகள் கடைப்பிடிக்கின்றன.
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்டுவரும் திராவிடக் கட்சிகள் தமிழை ஆட்சிமொழியாகவோ, கல்வி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ ஆக்கவில்லை. எங்கும், எதிலும் ஆங்கிலமே ஆட்டிப்  படைக்கிறது. ஆங்கிலேய ஆட்சி விரட்டியடிக்கப்பட்டப் பிறகும், ஆங்கிலம் இன்னமும் தமிழர்கள் மீது  ஆதிக்கம் செலுத்துகிறது. திராவிடக் கட்சிகளின் இந்தி எதிர்ப்பு வெற்று முழக்கமாகும். இந்தியைத் திணிக்கும் மத்திய ஆட்சிக்கு திராவிடக் கட்சிகள் வெண்சாமரம் வீசுகின்றன.
திராவிடக் கட்சிகள் திராவிடத்தைக் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமல்ல, இந்திய தேசியத்திற்கும், இந்து தேசியத்திற்கும்  அடிபணிந்துவிட்டன. இந்திய அரசை ஏகாதிபத்திய அரசு என எதிர்த்தவர்கள் அதே இந்திய அரசில் அமைச்சர் பதவிகளை ஏற்கத்  தயங்கவில்லை. இந்தியத்திற்கு தரகர்கள் ஆக மாறிய திராவிடக் கட்சிகள் தமிழ்த்  தேசியர்களுக்கு எதிராக அடக்குமுறைச் சட்டங்களை ஏவ கொஞ்சமும் தயங்கவில்லை. இந்தியப் பெரு முதலாளித் துவத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிபணிந்து தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாற்றிவிட்டன.
திராவிடக் கட்சிகள் உள்கட்சி சனநாயகத்தை அழித்ததோடு, நாட்டின் சனநாயகத்தையும் அழிக்க முற்படுகின்றன. ஊழல் பணத்தை அள்ளிவீசி மக்களை ஏமாற்றி சனநாயகத்தை பணநாயகமாக ஆக்கிவிட்டன. திராவிடக் கட்சிகள் குடும்பக் கட்சிகளாகவும், சர்வாதிகாரக் கட்சிகளாகவும்  மாறிவிட்டன.
வள்ளுவருக்கு மாபெரும் சிலையை அமைத்தவர்கள் நாங்கள் என மார்தட்டிக்கொண்டு மறுபுறம் குறள் கொள்கைகளுக்கு எதிராக மதுக் கடைகளைத் திறந்து வைத்து இளைய சமுதாயத்தைச் சீரழித்துவிட்டன. தமிழர் பண்பாட்டை சிதைக்கின்றன. தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. தமிழக அரசின் நிர்வாகத்தில் மேலிருந்து கீழ் வரையிலும் லஞ்சமும், ஊழலும் புரையோடிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் காசு கொடுத்தால் சட்டவிரோதச் செயல்கள் எதையும் செய்யலாம் என்ற நிலை பரவியுள்ளது.  இதன் விளைவாக பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் தொழில், வணிகம் புரிவது மட்டுமல்ல, தமிழ் மண்ணையும் ஆக்கிரமித்துள்ளனர். திருத்தணி முதல் குமரிமுனை வரை ஏராளமான நிலங்களும்,  வீடுகளும் அந்நியர்களுக்கு சொந்தமாக உள்ளன. பிற மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் தங்குதடையின்றி தமிழ்நாட்டில் கொலை, களவு போன்றவற்றை அச்சமின்றி செய்கின்றனர். அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகளும், மக்களுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுக் குப்பைகளும் எவ்விதத் தங்குதடையுமின்றி தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுக் கொட்டப்படுகின்றன. ஊழல் மிகுந்த நிர்வாகத்தினால் இவற்றைத் தடுக்க முடியவில்லை.
2009ஆம்  ஆண்டில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள  இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ்நாட்டில் கொதித்தெழுந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதில் திராவிடக் கட்சிகள் முழுக் கவனம் செலுத்தின. அடக்குமுறைகளை ஏவி அப்போராட்டங்களை ஒடுக்கின. திராவிடக் கட்சிகளின் மறைமுகமான ஆதரவு இருந்த துணிவினால்தான் இந்திய அரசு சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை செய்து ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு துணை நின்றன. இந்திய  அரசில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்கள் இதைத் தட்டிக் கேட்கவோ, எதிர்க்கவோ முன்வரவில்லை.
கடந்த 50ஆண்டு காலமாக மத்திய ஆட்சியில் பதவி வகித்த காங்கிரசு, ஜனதா, பா.ச.க. போன்ற அகில இந்தியக் கட்சிகளுடன் மாறிமாறி கூட்டு சேர்ந்து மத்திய அரசில் அமைச்சர் பதவிகளை ஏற்க இரு திராவிடக் கட்சிகளும் தயங்கவில்லை. ஊழல் புரிந்து கொள்ளையடிப்பதற்கு ஏற்ற அரசுத் துறைகளை வற்புறுத்திப் பெற்றார்களே தவிர, தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அதிகாரம் படைத்த துறைகளை அவர்கள் ஒருபோதும்  கேட்டுப் பெறவில்லை. நீர்ப்பாசனத் துறையை கேட்டுப் பெற்றிருந்தால், காவிரி, பெரியாறு, பாலாறு பிரச்சனைகளை தீர்த்திருக்க முடியும். வெளியுறவுத் துறையையோ, பாதுகாப்புத் துறையையோ கேட்டுப் பெற்றிருந்தால், ஈழத் தமிழர் பிரச்சனைக்கும், உலகத்  தமிழர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருக்க முடியும்.  
பெரியார்  வைத்த கொள்ளி
ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தை திராவிட நாடாகக் கருதி தனிநாட்டுக் கோரிக்கையை பெரியார் எழுப்பினார். திராவிட இனமாக அவர் கருதிய தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களின் மொழியின் பெயரால் அழைத்துக் கொணடார்களே தவிர, திராவிடர் என்று இன்றுவரையிலும் அழைத்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் மட்டும் தங்களை திராவிடர் என அழைக்கவேண்டும் என திராவிடக் கட்சிகள் கூறுவது ஏன்?
வடமொழி உள்பட பிற மொழிக் கலப்பை ஏற்க மறுத்து தமிழின் தூய்மையையும், தனித் தன்மையையும் காப்பாற்றிப் போற்றி வருபவர்கள் தமிழர்கள். ஆனால், சமற்கிருதத்தை ஏற்றுக் கலப்பு மொழிகளாக மாறிப் போனவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவைதான். வடமொழிப்  பண்பாட்டையும் இவர்கள்  ஏற்று முற்றிலுமாகத் திரிந்துபோய்விட்டனர். இந்தியையும் ஏற்றுக்கொண்டு அதற்கு அடிமைப்பட்டுவிட்டனர்.  ஆனால், இவர்களையும் சேர்த்து திராவிடம் என்று சொல்வது ஏன்?
மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாட்டிற்குரிய எல்லைப் பகுதிகளை தமிழரிடமிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவைப் பறித்துக் கொண்டன. காவிரிப் பிரச்சனையில் கர்நாடகமும், பாலாற்றுப் பிரச்சனையில் ஆந்திரமும், பெரியாற்றுப் பிரச்சனையில் கேரளமும் நம்மை வஞ்சிக்கின்றன. நமக்கு இயற்கை நீதியின்படியும், சர்வதேசச் சட்டங்களின் படியும் நியாயமாக உரிய நீரை அளிக்க மறுத்து, தமிழ்நாட்டைப் பாலைவனமாக ஆக்க முயலுகின்றன. தமிழர்களைப் பகைவர்களாகவும், தமிழ்நாட்டைப் பகை நாடாகவும் இம்மூன்று மாநிலங்களும் கருதுகின்றன.  இந்நிலையில் அவர்களையும் சேர்த்துக்கொண்டு திராவிடம் பேசுவது நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் மரணக் குழியாகும்.
நாம் இந்தியரோ, திராவிடரோ அல்ல, நாம் தமிழர்கள் எனப் பேசுவதை மறைக்கவே திராவிடக் கட்சிகள் முயலுகின்றன. வல்லாதிக்க இந்திய அரசை தமிழ்த் தேசியர்கள் மட்டுமே துணிந்து எதிர்த்துப் போராடுகிறோம். திராவிடக் கட்சிகள் பதுங்கிவிட்டன. தில்லியை எதிர்த்துப் போராடத் திராவிடக் கட்சிகள் தயாராக இல்லை என்ற உண்மை அம்பலமாகிற கோபத்தினால் நம்மீது அவர்கள் பாய்கிறார்கள். இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்தான் தமிழ்த் தேசியர்கள் மீது ஒடுக்குமுறைகள் ஏவி விடப்பட்டன. நம்மை ஒடுக்குவதின் மூலம் தில்லி எஜமானர்களை திருப்திப்படுத்த திராவிடக் கட்சிகள் முயலுகின்றன.  
பெயரில் மட்டுமே திராவிடத்தைச் சூட்டிக்கொண்டுள்ள திராவிடக் கட்சிகள், செயலில் திராவிடத்தை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. இக்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் தமிழினத் தலைவர், உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டங்களைச் சூட்டிக்  கொள்கிறார்களே  தவிர, திராவிடத் தலைவர் எனச் சூட்டிக் கொள்வதில்லை. திராவிட நாடு கோரிக்கையை முதன்முதல் எழுப்பிய பெரியார் அவர்களே மொழிவழியாக ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை பிரிந்துபோன பிறகு திராவிட நாடு கோரிக்கை இனி பயன்படாது எனத்  தூக்கியெறிந்தார். ்தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பேசுபவர்களுக்கு இன உணர்வு கிடையாது.  அவர்கள் பிரிந்துபோனது  நல்லதே”  என்று கூறிய பெரியார் தமிழ்நாடு தமிழர்க்கே என்னும் முழக்கத்தை எழுப்பினார்.
26&11&1958இல் சுதந்திரத் தமிழக மாநாடு நடத்தினார். 05&06&1960இல் சுதந்திரத் தமிழ்நாட்டை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு நீங்கலாக உள்ள இந்திய தேசியப் படத்தை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார். தமிழ்நாடு நீங்கலாக இந்தியத் தேசியப் படத்தைப் பெரியார் எரித்த போது ஆந்திரம், கன்னடம், கேரளம் ஆகிய திராவிடப் பகுதிகளையும் சேர்த்துதானே எரித்தார். பெரியாரின் கரங்களினாலேயே கொள்ளி வைக்கப்பட்டு எரிந்து சாம்பலான திராவிடத்தை திராவிடக் கட்சிகள் கட்டி அழுவது ஏன்?
 தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியம், கம்பராமாயணம் ஆகியவை முதல் 17ஆம் நூற்றாண்டு வரை திராவிடம் என்ற சொல்லே தமிழில் வழங்கப்படவில்லை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் ்ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்”  என்றுதான் பாடினார். ஆரியன் கண்டாய்! திராவிடன் கண்டாய்! எனப் பாடவில்லை. ஆரியன் என்ற சொல்லுக்கு எதிர்  சொல் தமிழனே தவிர, திராவிடன் அல்ல. ஆரிய மொழிக்கு மாற்று தமிழ்மொழியே.
மொழிச் சிறுபான்மையினர்
தமிழ்நாட்டில் கடந்த 500 ஆண்டு காலத்தில் கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர், செளராட்டியர், உருது பேசுவோர் முதலிய பிற மொழியினர் பல்வேறு காலகட்டங்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். வீட்டிற்குள் அவர்கள் மொழியை பேசிக் கொண்டாலும், வெளியே தமிழ்தான் பேசுகின்றனர். அவர்களுடைய  பேச்சு வழக்கு என்பது தமிழ் கலப்பினால் திரிந்த மொழிகளாகும். எந்தப் பகுதியிலிருந்து வந்து தமிழ்நாட்டில்  தாங்கள் குடியேறினோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் இனி எக்காலத்திலும் அவர்கள் அங்கு திரும்பிப் போக முடியாது. இந்த நிலையில் தமிழ்நாட்டையே  தங்களது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய மொழிச் சிறுபான்மையினர் தமிழ்மொழியை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டை  தங்கள் தாயகமாகக் கருதி வாழவேண்டும். இதற்கு மாறாக நடப்பது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும். மொழிச் சிறுபான்மையினர் பலர் சிறந்த வகையில் தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
எடுத்துக்காட்டாக, பழந்தமிழரின் வேர் கீழடி என்ற மாபெரும் வரலாற்றுத் தடயத்தைக் கண்டறிந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் செளராட்டிரர் என்பதையும், அவர் தனது அறிவு, ஆற்றல் அத்தனையையும் பழந்தமிழரின் வரலாற்று மூலங்களைக் கண்டறிவதற்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டு அருந்  தொண்டாற்றியுள்ளார். அத்தொண்டின் விளைவாக கீழடி தடயமும், தமிழரின் தொன்மையும் உலகம் உணர்ந்தது. தமிழரின் பாராட்டிற்கும், போற்றுதலுக்கும் நன்றிக்குமுரியவர் அவர்.
எந்தவொரு நாட்டிலும் ஒரேயொரு மொழிவழித் தேசிய இனத்தவர் மட்டுமே வாழும் நிலை இல்லவே இல்லை. அனைத்து நாடுகளிலும் மொழிச் சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் எந்த  மாநிலத்திலும் ஒரேயொரு மொழிவழித் தேசிய இனம் மட்டுமே வாழவில்லை. அனைத்து மாநிலங்களிலும்  சிறுபான்மை மொழிப் பேசுகிற இனங்களும் வாழ்கின்றன. இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். ஆனால்,  அவர்கள் வாழும்  அந்த மாநிலங்களின் மொழி களிலேயே நமது குழந்தைகள் கல்வி கற்கிறார்கள். தங்களின் வாழ்விற்குரிய மொழியாகவும் அந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர். அதைபோல  தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினர் தமிழைத் தங்களது வாழ்விற்குரிய  மொழியாக ஏற்றுக்கொண்டு தமிழரோடு  இரண்டறக் கலந்து வாழவேண்டும்.
தமிழ்த் தேசியர் கடமை
 தமிழர்கள் நாம் தனி தேசிய இனம் என்பதை உணரவேண்டும், பதிவு செய்யவேண்டும். சமற்கிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து தமிழையும்,  தமிழர்களையும் மீட்கவேண்டும்.  சாதி வேறுபாடுகளை அடியோடு களைந்து தமிழ்த் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும். சமுதாயப் பொருளாதார அடிமைத் தனத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதின் மூலமே தமிழ்த் தேசிய இனத்திற்கு மீட்சி என்பதை உணரவேண்டும்.
தமிழைத் தாய்மொழியாகவும், தமிழ்நாட்டையே தாயகமாகவும் கொண்டவர்களுக்கு மட்டுமே  இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, வணிகம், தொழில் நடத்த அனுமதிக்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழரல்லாதார் நிலம் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்குத் தடை விதிக்கவேண்டும். காவிரி, பாலாறு, பெரியாறு ஆற்றுப் பிரச்சனைகளை நமது தேசியப் பிரச்சனைகளாகக் கருதி  தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனைகளாகக் கருதி அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
தமிழ்நாட்டின் இழந்தப் பகுதிகளை மீட்பதும், இருக்கும் பகுதிகளை காப்பதும் தமிழர்களின் தலையாய கடமைகளாகும். பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வாழும்  தமிழர்களின் உரிமைகளையும், நலன்களையும் காப்பது நமது கடமையாகும். உலகத் தமிழர்களின் விடிவுக்கான போராட்டத்தின் முதல் கட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை உணர்ந்து அப்போராட்டத்திற்கு முழுமையாக துணை நிற்கவேண்டும்.  
தமிழ்நாட்டில் வாழும் முசுலீம்கள், கிறித்துவர்கள் மற்றும் சிறுபான்மை சமயங்களைச் சார்ந்தவர்கள் இந்துத்துவாதிகளால் பாதிக்கப்படும்போது அவர்களைப் பாதுகாப்பது தமிழ்த் தேசியர்களின் மாபெரும் கடமையாகும்.
மொழிவழித் தேசியத்திற்குக் குறிப்பாக, தமிழ்த் தேசியத்திற்கு மாபெரும் அறைகூவலாக இந்து தேசியம் விளங்குகிறது. தொல் காப்பியர் காலத்திலிருந்து வடமொழியையும், அதன் பண்பாட்டையும் எதிர்த்துப் போராடி வந்திருக்கக்கூடிய நாம், இந்த அறைகூவலை ஏற்று முறியடித்தாகவேண்டும்.
மொழிவழித் தேசியம்தான் உண்மையானது, நிலைத்து நிற்பது, அழிக்க முடியாதது.மதவழித் தேசியம் ஒரு மாயை. ஒருபோதும் வெற்றிபெற முடியாதது. இன அழிவிற்கே அது வழிவகுக்கும்.
இந்தச் சூழ்நிலையில் கூடும் இம்மாநாடு தமிழக வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் மாநாடாகும்.  இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாம் எதையும் எதிர்பாராது  தொண்டு, துன்பம், தியாகம் ஆகியவற்றை ஏற்றுக் களத்தில் இறங்கி தமிழ்த் தேசியத்தைப் பரப்பவும், தமிழ் மக்களையும், தமிழ் மண்ணையும் காக்க ஒன்றுபட்டு நின்று போராட வேண்டியது இன்றியமையாததாகும்.
40ஆண்டு கால நமது தொண்டின் விளைவாக தமிழ்த் தேசியம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இக்கால கட்டத்தில் இம்மாநாட்டினை மதுரையில் கூட்டி மிகச் சிறப்பாக நடத்தியுள்ள வரவேற்புக் குழுத் தலைவர் வெ.ந. கணேசன் அவர்களையும், அவருக்குத் துணை நின்று தொண்டாற்றிய வரவேற்புக் குழுவின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், இவர்களுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டி துணை நின்ற மூத்த தோழர்களான எம்.ஆர். மாணிக்கம், பிச்சை கணபதி உள்பட அனைவரையும் உளமாரப் பாராட்டி அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.