தேமதுரத் தமிழோசை உலகமெலாம்... - பழ. நெடுமாறன் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 07 பெப்ரவரி 2020 15:32

"தமிழ் நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வழங்குவதற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் வளர் மையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது”என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் கூறியிருப்பதை உளமாற வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

    "தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
        பரவும்வகை செய்தல் வேண்டும்”
எனப்  பாடிய பாரதியின் கனவு நனவாக நிறைவேறும் காலகட்டம் பிறந்து விட்டது என்பதையே அமைச்சரின் அறிவிப்பு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் இந்தியாவின் பிறமாநிலங்களில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும். பிறமொழிப் பேசும் மாநிலங்களில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே கற்பிக்கும் பள்ளிகளிலேயே சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது. தமிழ்ச் சங்கங்கள் நன்கு செயல்படும் மாநிலங்கள் விடுமுறை நாட்களில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்படுகிறது. சங்கங்கள் அமைக்கப்படாத மாநிலங்களில்  இத்தகைய ஏற்பாட்டிற்கும் வழியில்லை. நமது மொழியை அறியாமலேயே நமது குழந்தைகள் வளர வேண்டிய அவலம் நேர்கிறது.
வெளிநாடுகளில் வாழ நேர்ந்துள்ள குழந்தைகளுக்கு நமது மொழி மட்டுமல்ல, மொழியின் அடிப்படையில் உருவான பண்பாடு, இசை, கலை மற்றும் பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது முற்றிலும் அன்னியமான சூழ்நிலையிலே வளர நேரிட்டுள்ளது. இந்நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் ஓரளவுக்கு இந்தப் பணியை செய்கின்றன.  முழுமையாகச் செய்வதற்குரிய நிதி வசதிகள் இந்த அமைப்புகளுக்குக் கிடையாது.
உலக முழுவதிலும் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம், மொரீசியஸ், ரியூனியன், தென் ஆப்பிரிக்கா, பிஜி, கயானா, சூரினாம், ரொடிசியா போன்ற நாடுகளில் கணிசமான அளவிலும் மற்றும் ஆஸ்திரிலேயா, நியூசிலாந்து,  கனடா, மேற்கு இந்திய தீவுகள், ஐரோப்பிய நாடுகள், அராபிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிலும் தமிழர்கள் பரவி வாழுகின்றனர்.
உலக நாடுகளில் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. ஆனால் தமது தாய்மொழியான தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே போகிறது. ஒரு மொழியின் பயன்பாடு, அம்மொழி பேசும் மக்களிடையே குறைந்துக் கொண்டு  போவது, இறுதியில் அம்மொழியின் அழிவுக்கே வழிவகுக்கும்.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றி ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இவற்றில் சில நாடுகளில் வணிக ரீதியில் தோட்டப்பயிர்கள் செய்து பெரும் பொருள் ஈட்டுவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் கூலித் தொழிலாளர்களாக இலங்கை, பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கப்பல் கப்பலாக ஆங்கிலேய அரசு கொண்டு சென்று குடியேற்றியது. இவ்வாறு குடியேறிய தமிழர்களின் கடும் உழைப்பின் காரணமாக இந்நாடுகளின் தேயிலை, ரப்பர், கரும்புத் தோட்டங்களை அமைத்து கோடி கோடியாக ஆங்கிலேயர் பணம் திரட்டினர். ஆனால் உழைப்பாளிகளான தமிழர்கள் கொத்தடிமைகளாகக் கொட்டடிகளில் வறுமையில் வாடினர். ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளாக இத்தமிழர்களின் உழைப்பு மிக கடுமையாகச் சுரண்டப்பட்டது. இத்தகைய தமிழர்களைக் குறித்து மனம் நொந்து 'விதியே! விதியே! தமிழச்சாதியை என் செய்ய கருதியிருக்கிறாய்?” எனப் பாடினான் பாரதி.
1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றதையொட்டி பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலைப் பெற்றன. ஆனால் இந்நாடுகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் மொழி, பண்பாடு ஆகிய அனைத்தையும் இழந்தோடு மட்டுமல்ல, தாயகம் திரும்பவும் வழியின்றி அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர். இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டையே வளப்படுத்திய தமிழர்களை விரட்டி அடிப்பதில் முனைந்தன.
மொரீசியஸ், ரியூனியன், தென் ஆப்பிரிக்கா, கயானா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் வாழும் தமிழர்கள் மொழியை அடியோடு இழந்தனர். பிரஞ்சு அல்லது ஆங்கிலமே அவர்களின் வீட்டுமொழியாகவும், நாட்டு மொழியாகவும் மாறிவிட்டது, தமிழருக்கேயுரிய தனித்த பண்பாடுகளை சிறிதும் அறியாத தலைமுறையினரே இன்று அந்நாடுகளில் வாழுகிறார்கள். தாய்த் தமிழகத்திற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலுமாக அறுந்து போய்விட்டது.
சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ், கயானா போன்ற நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் களாகவும், உயர் அதிகாரிகளாகவும் பதவிகளை வகித்தப்போதிலும் தமிழ் மொழி, பண்பாடு போன்றவற்றை தமது அரசுகள் மூலமாக வளர்க்க முற்படுவதில் சில தடைகள் அவர்களுக்கு உண்டு அந்தந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை தழுவியும் ஒட்டியும் வாழ வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
சிங்கள இனவெறி வன்முறைத் தாக்குதலின் விளைவாக இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களில் நான்கில் மூன்று பகுதியினர் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழமுடியாத நிலமையில் வெளியேறி உலக நாடுகளில் ஏதிலிகளாக வாழுகின்றனர். நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே  சொந்த மண்ணில் பல்வேறு கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி வாழுகின்றனர். என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
உலக நாடுகளிலும் இந்தியாவின் பிறமாநிலங்களிலும் வாழும் தமிழர்களுக்கு நமது மொழி, பண்பாடு, இசை, கலை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த உறவைப் போற்றி வளர்த்துப் பேணவேண்டிய பெரும் கடமை தமிழ்நாட்டு அரசுக்கு உண்டு. தமிழ்நாட்டின் சார்பில் உலக நாடுகளுக்குத் தனியாகத் தூதர் அலுவலகங்களை அமைத்து இப்பணியைச் செய்ய முடியாது. இந்திய அரசுதான் அதை செய்ய முடியும். கணிசமான அளவு தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கூட இந்தியத் தூதுவராக தமிழர்கள் நியமிக்கப்படுவதில்லை. இந்தியா விடுதலைப்பெற்ற காலகட்டத்தில் மலேசியாவில் இந்தியத் தூதுவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர்    பி. சுப்பராயன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு வேறெந்த தமிழருக்கும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.
இந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழும் பிறமாநிலங்களிலும், பிறநாடுகளிலும் தமிழ் வளர் மையங்கள் அமைக்கும் திட்டம் ஓரளவு இந்தக் குறையை போக்கும். இத்திட்டம் செவ்வனே செயல்படுவதற்குக்  கீழ்கண்டவற்றைப் பரிசீலனைச் செய்து ஏற்க முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம்.
1. தமிழக அரசு அமைத்துள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் பிற மாநிலங்களிலும், பிறநாடுகளிலும் இயங்கி வரும் தமிழ்மொழி, பண்பாட்டு அமைப்புகள் அனைத்தும் பதிவுச் செய்யப்பட வேண்டும். இந்த அமைப்புகள் தத்தமது நோக்கம், வேலைத்திட்டம் ஆகியவற்றை கைவிடவோ, மாற்றிக்கொள்ளவோ அவசியம் இல்லாமல் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணையலாம். இவைகளின் தனித்தன்மைக்கு ஊறு ஏற்படாத வகையில் அவற்றை ஒருங்கிணைத்து அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்மொழி, கலை, இசை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஊட்டுவது நோக்கமாகும்.
2. உலகளவில் தமிழ் ஆய்வினை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழி, தமிழாய்வு நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. எனவே உலகத்தமிழ் சங்கம் உலகத் தமிழர்களை மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பணியை செய்ய வேண்டும். மொழி என்பது ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு வேர்களை, விழுமியங்களைத் தனக்குள் புதைத்து வைத்துக்கொண்டு தலைமுறைத் தலைமுறையாக அவற்றைக் கொண்டுச் செல்லும் உயிர்ப்பு விதையாகும்.
3. பிறநாடுகளிலும், பிறமாநிலங்களிலும் உலகத்தமிழ்ச் சங்கத்தின் மூலம் அமைக்கப்படவிருக்கும் தமிழ் வளர் மையங்கள் தமிழ்மொழி – பண்பாட்டுத் தொடர்பு மையங்களாக விளங்க வேண்டும். இம்மையங்கள் தமிழ்மொழிப் பயிற்சி, தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் கற்பித்தல், தமிழர் பண்பாட்டு விழாக்களை நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
4. தமிழ் நாட்டிலிருந்து இசைவாணர்கள், நடனக் கலைஞர்கள், நாடகக் குழுக்கள், கிராமிய கலைஞர்கள் போன்றவர்கள் அடங்கிய கலைக்குழுக்கள் அவ்வப்போது இந்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அந்நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வளர்க்க வேண்டும்.
5. தமிழ், இலக்கியம், வரலாறு, சமயநெறிகள் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்த தமிழறிஞர்கள் இந்நாடுகளுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
6. அதைப்போலவே இந்நாடுகளைச் சேர்ந்த தமிழர்களின் கலைக்குழுக்கள், அறிஞர் குழுக்கள், மாணவர் குழுக்கள் போன்றவற்றைத் தமிழகத்திற்கு அழைத்து மக்களோடு கலந்து உறவாட வைக்க வேண்டும்.
7. பிறநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ளுவதற்கு தேவையான அரசுப் பேருந்து பயணச்சலுகைகள், அரசு தங்கும் விடுதிகளில் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
8. தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க முன்வரும் பிறநாட்டு தமிழ் மாணவர்களுக்கு இட ஒதுக் கீடும், உதவி தொகையும் அளிக்கப்பட வேண்டும்.
9. பிறநாடுகளில் தமிழ்மொழிக் கற்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்களை அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கி இலவசமாக வழங்க வேண்டும்.
10.முந்திய தமிழக அரசு மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம், தை முதல் தமிழ்ப்புத்தாண்டு திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு முன் உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களைக் கலந்துகொண்டு செய்யப்படவில்லை அதன் விளைவாக பிறநாட்டு தமிழர்கள் அவற்றை கடைப்பிடிக்க முன்வரவில்லை. தமிழ்நாட்டுத் தமிழருக்கு மட்டுமே தமிழ்மொழி உரியதல்ல. இன்று அது உலகளாவிய மொழியாகப் பேருருவம் எடுத்துள்ளது. எனவே தமிழகத்தில் அரசு மூலமும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வரும் சொற்குவைத் திட்டம், அகரமுதலித் திட்டம், அறிவியல் சொற்களை உருவாக்கும் திட்டம், கணினி எழுத்துருத்திட்டம் போன்றவற்றுக்கான குழுக்களில் பிறநாட்டுத் தமிழறிஞர்களும் இடம் பெற வேண்டும். அதன் மூலம்  உலகம் முழுவதிலும் தமிழின் வடிவமும், சொற்களும் ஒரே மாதிரியாக அமையும். இல்லையென்றால், காலப்போக்கில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான தமிழ் உருவாகிவிடும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என உயர்ந்த நோக்குடன் உலக மக்களுடன் உறவு கொண்டாடிய இனம் தமிழினம் மட்டுமே. சங்க இலக்கியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உலகு, உலகம் என்ற சொற்களைப் பதிந்து உலக கண்ணோட்டத்துடன் வாழ்ந்த தமிழர்கள், இன்று மொழியையும், பண்பாட்டினையும் சிறிது சிறிதாக இழந்து வாழும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். உலக மொழிகளில் இன்றளவும் தனது சீரிளமைத் திறன் குன்றாது உயிர்ப்புடன் வாழும் செம்மொழி நமது மொழியே. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மொழியில் எழுதினார்களோ, பேசினார்களோ அந்த மொழியில் இன்றளவும் நாமும் பேசுகிறோம், எழுதுகிறோம் என்பதுதான் நமக்குள்ள தலையாயப் பெருமையாகும். இந்த பெருமை நீடித்து வளர்ந்தோங்க செயல்பட வேண்டியது நமது நீங்காத கடமையாகும்.
-நன்றி - தினமணி - 21-01-2020