யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் -பழ. நெடுமாறன் அச்சிடுக
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:45

1917-ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் மூண்டெழுந்த புரட்சி உலக வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த அத்தனை தேசிய இனங்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது.

மார்க்ஸ் கனவுகண்ட சோசலிச சமுதாயத்தைச் சோவியத் நாட்டில் உருவாக்கிக் கொடுத்தது. அது மட்டுமன்று; ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் ஊட்டி அவர்களைக் கிளர்ந்தெழ வைத்தது.

ரஷ்யாவிற்கு அருகே இருந்த பல்வேறு ஐரோப்பிய நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் அக்டோபர்ப் புரட்சியைப் பற்றிச் சரியான மதிப்பீடு செய்யத் தவறிவிட்டனர். மாறாக, அந்தப் புரட்சியையே கொச்சைப்படுத்தியும், செய்திகளைத் திரித்தும் பொய்மைச் செய்திகளைப் பரப்பினர். புதிதாகப் பூத்துச் சோசலிச மணம் பரப்பிக்கொண்டிருந்த சோவியத் நறுமண மலரைக் கசக்கி எறியத் துடித்தனர். அதற்காகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் படை திரட்டின.

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களிடம் அக்டோபர்ப் புரட்சியைப் பற்றிய உண்மையான செய்திகள் பரவிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டியது. செய்திகள் திரித்துக் கூறப்பட்டன. வெளியிலிருந்து உண்மையான செய்திகள் வரவிடாமல் தடுக்கப்பட்டன. அந்த நாளில் இந்தியாவில் உள்ள பத்திரிகைகளுக்குச் செய்திகளைத் தருவது ராய்ட்டர் என்னும் செய்தி நிறுவனமேயாகும். இந்நிறுவனம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான செய்திகளை மட்டுமே கொடுத்து வந்தது.

இதற்கிடையில் பாரதி, ரஷ்யாவில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளைப் பற்றித் தொடர்ந்து கவனித்து உண்மையை உணர்ந்து அவ்வப்போது சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ரஷ்யப் புரட்சியை மட்டுமல்ல, உலக நாடுகளில் நடைபெற்று வந்த பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் அவ்வப்போது கருத்துத் தெரிவிக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். எங்கிருந்து பாரதிக்கு இந்தச் செய்திகள் கிடைத்தன என்பதை நாம் ஆராய்வோமானால், பல புதிய உண்மைகள் நமக்குத் தெரியவரும்.

1902-ஆம் ஆண்டு மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலைக்குப் பாரதி சேர்ந்தார். அதற்குப் பிறகு சுதேசமித்திரன் பத்திரிகையில் துணையாசிரியராக பணியாற்றினார். பிறகு அவரே இந்தியா என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்குத் தப்பவும், சுதந்திரமாகத் தமது கருத்துக்களை எழுதி மக்களுக்குத் தெரிவிக்கவும், இந்தியா பத்திரிகை அலுவலகம் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. பத்தாண்டுக்காலம் புதுச்சேரியிலேயே அவர் வாழ்ந்தார். 1921-ஆம் ஆண்டு சென்னையில் அவர் மறைந்தார்.

அதாவது, 1902-ஆம் ஆண்டு மதுரையில் ஆசிரியர் பணியில் சேர்ந்ததிலிருந்து, 1921-ஆம் ஆண்டு அவர் மறைந்தது வரையிலான பத்தொன்பது ஆண்டுகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிற உலக ஞானம் வியப்புக்குரியது. எங்கிருந்து அதை அவர் பெற்றார் என்பது பெரும் புதிராகும். குறிப்பாக, அக்டோபர்ப் புரட்சியைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு யுகப் புரட்சி எனப் பாரதி சரியாகக் கணித்தது எப்படி? என்ற கேள்வி உள்ளத்தைக் குடையும் கேள்வியாகும். இக்கேள்விக்குரிய விடையை நாம் காண்போம்.

இந்தியாவில் நடைபெற்ற தேசத் துரோகம் பற்றி ஆராய்வதற்காகப் பிரிட்டிஷ் அரசினால் நீதி அரசர் எஸ்.எ.டி. ரெளலட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்தியாவில் புரட்சி வீரர்களின் நடவடிக்கைகள் பற்றித் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

“1907-ஆம் ஆண்டில் வங்கத் தலைவரான விபின் சந்திரபால் தமிழ்நாட்டில் செய்த சுற்றுப்பயணம்தான் தமிழகத்தில் புரட்சி நடவடிக்கைகளுக்கு வித்திட்டது. சென்னை மாகாணத்தில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் நீலகண்டப் பிரம்மச்சாரியும், வ.வே.சு. அய்யரும் ஆவார்கள்”என்று இக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

தமிழ்நாட்டிற்கு விபின் சந்திரபாலரை அழைத்துவந்து கூட்டங்களில் பேசச் செய்தவர் பாரதியாரே என்பது நினைவுகூரத்தக்கதாகும். ஆகத் தமிழ்நாட்டில் புரட்சிகர நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் பாரதியாரும் இருந்தார் என்பது தெளிவாகிறது.

பாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்தியா வார இதழின் மேலாளராக விளங்கிய எம்.பி. திருமலாச்சாரியா புதுச்சேரியிலிருந்து இலண்டனுக்குச் சென்று அங்கிருந்த புரட்சி வீரர்களான சியாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், வ.வே.சு. அய்யர், டி.எஸ்.எஸ். இராசன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். பிறகு பாரிசுக்குச் சென்று மேடம் காமாவுடனும், பெர்லினுக்குச் சென்று வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, முகமது பரக்கதுல்லா, பூபேந்திரநாத் தத்தா, செண்பகராமன், சந்திரகாந்த் சக்கரவர்த்தி ஆகியோருடனும் இணைந்து செயல்பட்டார். 1917-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டாக் ஹோம் நகரில் இந்தியப் புரட்சிக் குழுவின் கிளை அமைக்கப்பட்டது. அதில் திருமலாச்சாரியும், வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயும் முக்கியப் பங்காற்றினார்கள். இந்தக் காலகட்டத்தில் ரஷ்ய சோசலிச ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்தனர். இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினரான டிராயனாவ்ஸ்கி என்பவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர். லெனின் தலைமையில் இயங்கிய இந்தக் கட்சிதான் போல்ஷ்விக் கட்சி என அழைக்கப்பட்டது. 1917-ஆம் ஆண்டு அக்டோபர்ப் புரட்சி வெற்றி பெற்று லெனின் தலைமையில் அரசு அமைக்கப்பட்ட பிறகு, 1919-ஆம் ஆண்டில் திருமலாச்சாரியும், பிற புரட்சியாளர்களும் மாஸ்கோ சென்று லெனினைச் சந்தித்தனர்.

ஸ்டாக் ஹோமில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப் புரட்சிக் குழுவின் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பாளராகத் திருமலாச்சாரியா இருந்திருக்கிறார். அவருக்குப் போல்ஷ்விக் கட்சியின் முன்னணி உறுப்பினரான டிராயனாவ்ஸ்கி என்பவருடன் இருந்த நெருக்கமான தொடர்பின் விளைவாக ரஷ்யப் புரட்சியைப் பற்றியும், அதன் தலைவரான லெனினைப் பற்றியும் சகல விவரங்களையும் அவர் அறிந்திருக்க வேண்டும். மேலும், 1921-ஆம் ஆண்டு மூன்றாம் அகிலத்தின் மாநாடு நடைபெற்ற போது அதில் கலந்துகொள்வதற்காக அனுப்பிய கடிதத்தில் தன்னை ஒரு உறுதியான கம்யூனிஸ்டு எனத் திருமலாச்சாரியா பதிவு செய்திருக்கிறார். ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியமானவர்களான யா.இசட். சுரிக்ட்ஸ், ஐ.எம்.ரேய்ஸ்னர் ஆகியோர் தம்மை ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக உறுதி கூறியுள்ளனர் என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிக்குக் கிடைத்த இதழ்கள்

புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த போது, இந்தியா (நாளிதழ்), விஜயா, சூர்யோதயம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளையும், பால பாரத் என்னும் ஆங்கில வார இதழையும் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, வெளிநாட்டுப் பத்திரிகைகள் சிலவும், வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியப் புரட்சியாளர்கள் நடத்திய பத்திரிகைகளும் அவருக்குத் தவறாமல் கிடைத்திருக்கின்றன. சென்னையில் பாரதி இருந்திருந்தால் இந்த பத்திரிகைகள் அனைத்தையும் ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்திருக்கும். பிரெஞ்சு ஆட்சியில் உள்ள புதுச்சேரியில் அவர் வாழ்ந்ததால், அவருக்கு இந்த பத்திரிகைகள் தங்குத் தடையில்லாமல் கிடைத்தன.

திருமதி. காமா அம்மையார் நடத்திய வந்தே மாதரம், தால்வார் என்னும் இதழ்கள் பாரிசிலிருந்து வெளியிடப்பட்டன. இந்த பத்திரிகைகளை அச்சிடுவதற்கும், வெளியிடுவதற்குமான பொறுப்பை திருமலாச்சாரியா ஏற்றிருந்தார்.

மற்றொரு புரட்சிக்காரரான சியாம்ஜி கிருஷ்ணவர்மா, இந்தியன் சோசியாலஜிஸ்ட் என்ற பத்திரிகையைப் பாரிசிலிருந்து நடத்தினார்.

மேற்கண்ட பத்திரிகைகள் அனைத்தையும் புதுச்சேரியில் உள்ள இந்தியா பத்திரிகை அலுவலகத்திற்கும் மற்றும் இந்தியாவில் உள்ள பிற புரட்சியாளர்களுக்கும் அனுப்பும் பொறுப்பை திருமலாச்சாரியா ஏற்றுக்கொண்டு அவற்றைத் தவறாமல் அனுப்பினார்.

அமெரிக்காவில் உள்ள அயர்லாந்து தேசியவாதிகள் கெய்லிக் அமெரிக்கன் என்ற பத்திரிகையை நடத்தினார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக அப்பத்திரிகையில் கட்டுரைகள் வெளியாயின. இந்தியாவில் உள்ள புரட்சிக்காரர்களோடும் அவர்களுக்கு தொடர்பு இருந்தது. 1906-ஆம் ஆண்டு புதுச்சேரியில் திருமலாச்சாரியா இருந்த காலத்திலிருந்தே இந்தியா பத்திரிகை அலுவலகத்திற்கு இந்தப் பத்திரிகை தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது. இந்தியா பத்திரிகையிலும், கெய்லிக் அமெரிக்கன் இதழில் வெளிவந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

இலண்டனில் வாழ்ந்த வ.வே.சு. அய்யர், 1908-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாரந்தோறும் “இந்தியா” பத்திரிகைக்குக் கடிதங்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார். அக்கடிதங்களில் உலக அரசியல் நிலை குறித்தும், புதுச்சேரியில் உள்ள தேசப் பக்தர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்தும் அவர் எழுதினார். இக்கடிதங்களின் மூலமும் பாரதிக்கு உலக அரசியல் நிலைமைகள் தெரிந்திருக்கவேண்டும்.

இலண்டனிலிருந்த வ.வே.சு. அய்யர், புதுச்சேரியில் உள்ள இந்தியா பத்திரிகை அலுவலகத்திற்குக் கடிதங்கள், அரசுக்கு எதிரான வெளியீடுகள், புத்தகங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார் என்றும், அவற்றை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்து கைப்பற்றியது என்ற விவரம் பிரிட்டனின் வெளியுறவுத் துறை இரகசிய குறிப்புகளில் காணப்படுகிறது.

எனவே, மேற்கண்ட வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான ரஷ்யப் புரட்சி மற்றும் பிற நாட்டு முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளைப் பாரதி படித்திருக்கவேண்டும்.

மேலும் இலண்டனிலிருந்து Northern Daily Telegraph, London Times, Hind-Swaraj, Justice, Truth, Manchester Guadian, Daily-Chronicle ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளும், பிரெஞ்சு சோசலிஸ்டுக் கட்சி நடத்திய Humanite, பிரிட்டிஷ் சோசலிஸ்டுக் கட்சி நடத்திய Eastern Post ஆகிய பத்திரிகைகளும் தவறாமல் கிடைத்திருக்கின்றன. இவற்றின் மூலம் பாரதி ரஷ்யப் புரட்சிகளைப் பற்றியும், உலக நிகழ்ச்சிகளைக் குறித்தும் தெளிவாக அறிந்துகொண்டிருக்க முடியும்.

1920-ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற புத்தமத மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிங்காரவேலர், அங்கிருந்து கம்யூனிஸ்டுப் பிரசுரங்களைக் கொண்டு வந்தார். அந்தப் பிரசுரங்களைப் பாரதி படித்திருக்கவேண்டும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல பத்திரிகைகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வெளியாயின. புனாவில் இருந்து திலகர் நடத்திய கேசரி, சித்ரமய ஜகத், மராட்டா ஆகியவற்றுடன், கேசரி இதழின் இந்திப் பதிப்பாக இந்தி கேசரி என்ற இதழ் நாகபுரியிலிருந்து வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியராக பண்டித மாதவராவ் ஷப்ரே என்பவர் பொறுப்பேற்றார். லாகூரிலிருந்து மதன்மோகன் மாளவியா லீடர் என்னும் இதழை வெளியிட்டார். கல்கத்தாவிலிருந்து சித்தரஞ்சனதாஸ் பார்வர்டு என்னும் இதழையும், பாபு சுரேந்திரநாத் பானர்ஜி பெங்காலி என்னும் இதழையும், பாலகிருஷ்ண நாராயண பதக் நடத்திய பிகாரி, பிரபாசி, மாடர்ன் ரெவ்யூ ஆகிய இதழ்களையும், விபின் சந்திரபால் நியூ இந்தியா, வந்தே மாதரம் ஆகிய இதழ்களையும் வெளியிட்டனர். மேலும் விபின் சந்திரபால் இலண்டனிலிருந்து ஸ்வராஜ், டிரிபியூன் ஆகிய ஆங்கில இதழ்களையும் வெளியிட்டார். ம. சிங்காரவேலர் லேபர் அண்ட் கிசான் கெசட் என்னும் இதழை சென்னையிலிருந்து வெளியிட்டார்.

வங்கத்தில் உள்ள புரட்சிக்காரர்கள் நடத்திய யுகாந்தர், சந்தியா, லாகூரிலிருந்து வெளிவந்த நேஷன், பஞ்சாபி, பிரபோத், பம்பாயிலிருந்து பி.ஜி. ஹர்னிமான் நடத்திய பம்பாய் குரோனிக்கல் ஆகிய பத்திரிகைகளும், கல்கத்தாவிலிருந்து அமிர்தபஜார் பத்திரிகா என்ற நாளிதழும் வெளியிடப்பட்டன. மேலே கண்ட இதழ்கள் அனைத்தும் பாரதிக்குத் தவறாமல் கிடைத்தன. ர~;யப் புரட்சியைக் குறித்து இப்பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளும், மற்றும் உலக நாடுகளைப் பற்றிய செய்திகளையும் பாரதி படித்தறிந்தார். இவற்றில் பலவற்றை, தான் நடத்திய பத்திரிகைகளில் வெளியிட்டார். பல செய்திகளை தன்னுடைய கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் கருவாகக் கொண்டு எழுதினார்.

கால வரிசைப்படுத்தப்பட்ட “பாரதியின் படைப்புகள்” என்னும் நூலில் வெளியாகியுள்ள பாரதியின் கட்டுரைகளில், மேலே கண்ட பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இந்நூலின் 15ஆவது பாகத்தில் 13ஆவது அத்தியாயமாக ‘ரஷ்யப் புரட்சியும் - திலகரின் கேசரி’யும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் முழு விவரங்கள் உள்ளன. ரஷ்யப் புரட்சி, லெனின் பற்றி வெளியான கட்டுரைகளைப் பாரதி படித்து, உள்வாங்கிக் கொண்டிருக்கவேண்டும்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரும், அக்டோபர்ப் புரட்சியை “உலகைக் குலுக்கியப் புரட்சி” என வர்ணித்தவருமான ஜான் ரீட் நடத்திய தி லிபரேட்டர் என்னும் இதழில் அக்டோபர்ப் புரட்சிக் குறித்தும், சோவியத் அரசின் கொள்கைக் குறித்தும் எழுதிய கட்டுரைகளை இராமானந்த சட்டர்ஜி நடத்திய மாடர்ன் ரெவ்யூ இதழில் தொடர்ந்து வெளியிட்டார். இந்த இதழ் பாரதிக்கு தவறாமல் கிடைத்தது. அவற்றை அவர் படித்தறிந்தார்.

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பத்திரிகைகளைத் தவிர ஏராளமான வெளியீடுகளும், நூல்களும் பாரதிக்கும் மற்றும் இந்தியாவெங்கிலும் இருந்த எழுத்தாளர்கள், தலைவர்கள், புரட்சிக்காரர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்களின் முகவரிகளைத் தொகுக்கும் பணியையும், வெளியீடுகளை அனுப்பும் பணிகளையும் ஒரு குழு செய்தது. இக்குழுவில் திருமலாச்சாரியா முக்கிய பங்கு வகித்தார். பாரிசில் இருந்த கோவிந்த் அமின் என்பவருக்குத் திருமலாச்சாரியா எழுதிய கடிதத்தில் இந்த முகவரிப் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் உளவுத்துறை இதைக் கைப்பற்றியது.

மணியாச்சியில் ஆங்கிலேய அதிகாரியான ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பின்னணிக் குறித்து ஆராய்வதற்காக ஆங்கிலேய அரசு அமைத்த இராஜத் துரோக விசாரணைக் குழுவின் அறிக்கையில் பின்வருமாறு சொல்லப்பட்டிருந்தது. “புதுச்சேரியில் உள்ள “இந்தியா” பத்திரிகை அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 1910-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமலாச்சாரியா எழுதிய கடிதம் இந்த கொலைக்குப் பின்னணியாக இருக்கலாம்” என்று கூறியுள்ளது. இந்தியா அலுவலக மேலாளராக இருந்த திருமலாச்சாரியா வெளிநாடுகளுக்குச் சென்ற பிறகும் கூட தனது அலுவலகத்தில் இருந்தவர்களுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. அத்தகைய கடிதங்களின் மூலமும் பாரதிக்கு பல உண்மைகள் தெரிந்திருக்கக் கூடும்.

1919-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்த திருமலாச்சாரியா, புதுச்சேரியில் இருந்த வ.வே.சு. அய்யருக்கு எழுதிய கடிதத்தை பம்பாயில் உள்ள உளவுத் துறைக் கைப்பற்றியது. இதைப் பற்றிய குறிப்பு உளவுத்துறையின் கோப்புகளில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள தனது தோழர்களுடன் திருமலாச்சாரியா தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்தியா அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் மூலமும், தனக்கு எழுதப்பட்டுக் கிடைத்த கடிங்களின் மூலமும் பாரதி பலவற்றை அறிந்துகொண்டிருக்க முடியும்.

1910-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐரோப்பாவிலிருந்த வ.வே.சு. அய்யர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். பாரதிக்கு நெருக்கமான மண்டையம் சீனிவாசாச்சாரியுடன் தங்கினார். பாரதி, அரவிந்தர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றவர்களுடன் அவர் நெருங்கிப் பழகினார். அப்போது அவர் மூலமாகவும், ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைப் பற்றிய செய்திகள் பாரதிக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

குருமணி சந்திப்பு

1906-ஆம் ஆண்டு டிசம்பரில் கல்கத்தாவில் கூடிய காங்கிரசு மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். அப்போது விவேகாநந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியைச் சந்தித்துப் பேசினார். அவரைப் பற்றித் துதிப் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். இத்தகைய சிறப்புடைய நிவேதிதா தேவியைப் பாரதி தன்னுடைய குரு மணியாக ஏற்றுக்கொண்டார். அவரே பதிப்பித்து வெளியிட்ட ஸ்வதேச கீதங்கள் (1908), ஜன்ம பூமி (1909), ஞான ரதம் (1910) ஆகிய இந்த மூன்று நூல்களையும் நிவேதிதா தேவிக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

மாஜினியைப் பற்றிய கவிதையை 1908-ஆம் ஆண்டு ஜனவரியில் இயற்றிருக்கிறார்.

விவேகாநந்தரின் சகோதரரும், புரட்சி வீரருமான பூபேந்திரநாத் தத்தா சிறைப்படுவதற்கு முன், 1908-ஆம் ஆண்டு அவரை சந்தித்துப் பேசிய நிவேதிதா தேவி, “ரஷ்யப் புரட்சியின் உண்மையான தன்மை என்பது செல்வர்களுக்கு எதிராக ஏழைகள் கொடுத்துள்ள போராட்டமாகும் என்பதை விளக்கியுள்ளார். அவருக்கு இத்தாலியத் தலைவர் மாஜினியின் சுயசரிதையையும், ரஷ்யப் புரட்சியாளரான பீட்டர் குரோம் போப்கின் எழுதிய ஒரு புரட்சியாளரின் நினைவுகள், ரஷ்ய மற்றும் பிரஞ்சுச் சிறைகளில் என்ற இரு நூல்களையும் அளித்துள்ளார்.

எனவே, நிவேதிதா தேவியைப் பாரதியார் சந்தித்த போது ரஷ்யப் புரட்சியின் உண்மைத் தன்மை குறித்து விளக்கியிருக்க வேண்டும், மற்றும் மாஜினியின் சுயசரிதையையும், பீட்டர் குரோம் போப்கின் எழுதிய நூல்களையும் அளித்திருக்கவேண்டும். நிவேதிதா தேவியைத் தமது குரு மணியாகப் பாரதி ஏற்றுக்கொண்டு, அவரைப் பற்றிப் பாடியதற்கும், மாஜினியைப் பற்றிய ஒரு நீண்ட கவிதையைப் பாரதி எழுதியதற்கும் இதுவே காரணமாகும்.

சக்லத்வாலா

அக்டோபர்ப் புரட்சியைப் பற்றித் தவறான செய்திகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கப் பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கம்யூனிஸ்டு உறுப்பினராக இருந்த சக்லத்வாலா, Peoples Russian Information Bureu என்ற அமைப்பை இலண்டனில் ஏற்படுத்தி அதன் மூலம் உண்மைச் செய்திகளைப் பரப்பினார்.

சக்லத்வாலாவைச் சென்னைக்கு வரவழைத்தவர் சிங்காரவேலரே ஆவார். இருவருக்குமிடையே கடிதப் போக்குவரத்து இருந்தது. எனவே, சக்லத்வாலா அமைத்த ‘ரஷ்யாவைப் பற்றிய தகவல்களைத் தரும் மக்கள் நிலையம்’ மூலம் அவருக்குத் தொடர்ந்து ரஷ்யப் புரட்சி பற்றிய செய்தி அறிக்கைகள் கிடைத்திருக்கவேண்டும். சிங்காரவேலரின் நூலகத்தை அவரின் நெருங்கிய நண்பரான பாரதி முழுமையாகப் பயன்படுத்தினார். எனவே, சக்லத்வாலா அனுப்பிய செய்தி அறிக்கைகளையும் அவர் படித்திருக்கவேண்டும். அதன் மூலமும் ரஷ்யப் புரட்சி பற்றிய பல செய்திகளை அவர் அறிந்திருக்கவேண்டும்.

சர்வதேசக் கம்யூனிச அமைப்பிலிருந்து சிங்காரவேலருக்கு வரும் கடிதங்கள், இந்து பத்திரிகையின் ஆசிரியருக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்குள் வைக்கப்பட்டு, அனுப்பப்பட்டு வந்தன. இக்கடிதங்களை உடனுக்குடன் சிங்காரவேலருக்கு இந்து நிர்வாகம் அனுப்பிக்கொண்டிருந்தது. உளவுத் துறை இதைக் கண்டுபிடித்த காரணத்தினால், இந்துப் பத்திரிகையின் நிர்வாகம் 1923-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கம்யூனிஸ்டுப் பிரச்சாரம் நடத்துவதற்குரிய ஓர் அஞ்சலகமாகச் செயல்பட நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியது.10 இந்த அறிக்கையின் மூலம் சிங்காரவேலருக்கு வெளிநாடுகளிலிருந்து கம்யூனிஸ்டுப் பிரச்சார அறிக்கைகளும், வெளியீடுகளும் கிடைத்து வந்தன என்பது தெரிகிறது. எனவே, அவரின் நெருங்கிய நண்பரான பாரதி இவற்றைப் படித்திருக்கவேண்டும்.

“சோவியத் ரஷ்யாவில் இந்தியப் புரட்சி வீரர்கள்” என்ற தலைப்பில் எம்.எ. பெர்சிட்ஸ் எழுதிய நூலின் 29-ஆம் பக்கத்தில் சிறையிலிருந்த வங்கப் புரட்சி வீரர்கள், அமிர்த பஜார் பத்திரிகையின் மூலமே சோவியத் புரட்சியைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டார்கள் என்ற குறிப்பு உள்ளது. சீனி. விசுவநாதன் தொகுத்துள்ள ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ முதல் தொகுதியில் 342-ஆம் பக்கத்தில் “அமிர்த பஜார் பத்திரிகை யோசனையின்றி” எழுதியிருப்பது என்ற தலைப்பில் பாரதி எழுதிய கட்டுரை, இந்தியா பத்திரிகையில் (28-7-1906) வெளியாகி உள்ளது. எனவே, அமிர்த பஜார் பத்திரிகையைப் பாரதி தொடர்ந்து படித்து வந்திருக்கிறார் என்பது புலனாகிறது. வங்கப் புரட்சி வீரர்கள் அமிர்த பஜார் பத்திரிகையின் மூலம் தெரிந்துகொண்ட ரஷ்யப் புரட்சி பற்றிய செய்திகளைப் பாரதியும் படித்துத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

பாரதியின் மிக நெருங்கிய தோழர்களாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணிய சிவா ஆகியோர் கம்யூனிசக் கருத்தோட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த நாட்டில் கம்யூனிசத்தை முதன்முதல் பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவராக நீலகண்ட பிரம்மச்சாரி விளங்கினார். சிங்காரவேலருடன் இணைந்து அவர் கம்யூனிஸ்டுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். இந்தியக் கம்யூனிஸ்டு சமஷ்டிக் கழகம்’ என்ற அமைப்பையும் உருவாக்கினார். நீலகண்ட பிரம்மச்சாரி பாரதியுடன் புதுச்சேரியில் தங்கியிருந்தார். எனவே, கம்யூனிசத் தத்துவம் குறித்து அவர் மூலமும் பாரதி அறிந்துகொண்டிருக்க வேண்டும்.

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் ஒரு முக்கியச் செய்தியைத் தெரிவித்துள்ளார். “புதுச்சேரிக்கு ரஷ்யப் பிரசுரங்கள் வருவதற்கு எவ்விதத் தடையும் இல்லை. எனவே, அப்படி வந்த பிரசுரங்கள் மூலம் ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாரதி தெரிந்துகொண்டார்”.

சிங்காரவேலரின் மிக நெருங்கிய நண்பராக சுப்ரமணிய சிவா விளங்கினார். சிவாவின் முதல் சீடரான மதுரை தியாகி எம்.சிதம்பர பாரதி, தமிழ்நாட்டில் பொதுவுடைமைத் தத்துவத்தை பரப்புவதற்காகச் சிவாவுடன் சேர்ந்து ஓர் அச்சகத்தை நிறுவுவதற்கு முயற்சி செய்தார். மேலும், சிதம்பர பாரதி தொகுத்து வெளியிட்ட மதுரை மாவட்டத் தியாகிகள் மலரில், பொதுவுடைமை இயக்கத்தின் பால் சிவா காட்டிய அக்கறை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சிவாவின் சீடரும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான சீனிவாச வரதன் ஒரு முக்கியமான தகவலைத் தெரிவித்திருக்கிறார். “1925-ஆம் ஆண்டில் கான்பூர் நகரில் தமது தோழர் சிங்காரவேலர் தலைமையில் நடைபெறவிருந்த கம்யூனிஸ்டுக் கட்சி மாநாட்டில் சிவா கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்”என்று அவர் கூறியிருந்தார்.

சுப்ரமணிய சிவா, பாரதியின் மிக நெருங்கிய தோழர் என்பது அனைவரும் அறிந்ததாகும். எனவே, சிவாவின் மூலமும் பாரதி ரஷ்யப் புரட்சி பற்றியும், கம்யூனிசத் தத்துவம் குறித்தும் பல விவரங்களைத் தெரிந்துகொண்டிருக்க முடியும்.

சர்வதேசப் பார்வையுடன் சோசலிசக் கருத்துக்களைப் புரிந்துகொண்டு, அவற்றின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்ட முதலாவது இந்தியத் தேசப் பக்தர் மேடம் காமா அம்மையார் தான். ரஷ்யப் புரட்சியின் தளபதியாக மட்டுமல்ல, எதிர்கால உலகப் புரட்சிக்கும் வழிகாட்டியாக விளங்கப் போகிறவர் லெனின் என்பதையும், மேடம் காமா தெளிவாக உணர்ந்து கொண்டார். தம்மைச் சந்திக்கும் இந்தியப் புரட்சி வீரர்களுக்கு இவற்றையெல்லாம் விளக்கிக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடன் சில காலம் தங்கியிருந்து விட்டு வ.வே.சு. அய்யர் புதுச்சேரிக்குத் திரும்பினார். அவர் மூலமும் பாரதி ரஷ்யப் புரட்சியைப் பற்றித் தெளிவு பெற்றிருக்க முடியும்.

வங்காளப் புரட்சி வீரர்கள் வெளியிட்ட பிரசுரங்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் ரஷ்யப் புரட்சி இயக்கத்தையே முன் மாதிரியாகக் கொண்டிருந்தன. வங்கப் புரட்சி வீரர்களின் முக்கியப் பத்திரிகையான ‘யுகாந்தர்’ வெளியிட்ட பல கட்டுரைகளில் ரஷ்யப் புரட்சி இயக்கம் குறித்து ஏராளமான குறிப்புகள் வெளியாகி உள்ளன. பாரதிக்கு இந்தப் பத்திரிகை தவறாமல் கிடைத்திருக்கிறது.

விவேகாநந்தரின் சகோதரரான பூபேந்திரநாத் தத்தா அவர்களைக் குறித்து, பூபேந்திர விஜயம் எனப் பாரதி பாடிய கவிதையில், “காழ்த்தமன வீரமுடன் யுகாந்தரத்தின் நிலை இனிது காட்டி நின்றான்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து யுகாந்தரப் பத்திரிகையைப் படித்திருக்கிறார் என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மதன்மோகன் மாளவியா நடத்திய ‘லீடர்’ (10-1-1918) என்னும் இதழில், லெனினும் - அவரது நோக்கங்களும்” என்னும் கட்டுரை வெளியாயிற்று. பம்பாய் குரோனிக்கல் என்னும் இதழ் அதை மறு பிரசுரம் செய்தது. இக்கட்டுரையில், லெனினின் வாழ்க்கை வரலாறும், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என்ற அவருடைய நோக்கமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

மாளவியாவின் லீடர் இதழோ, பம்பாய் குரோனிக்கல் இதழோ பாரதியின் பார்வைக்குக் கிடைத்திருக்கவேண்டும். அதன் மூலம் அவருக்கு ரஷ்யப் புரட்சி பற்றிய செய்திகள் கிடைத்திருக்கவேண்டும்.

புதுச்சேரியில் பாரதி, அடைக்கலம் புகுந்திருந்த காலத்தில் அரவிந்தரோடு நெருங்கிப் பழகினார். பிரெஞ்சு நாட்டுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் எவ்விதத் தடையும் இல்லாமல் தாராளமாகப் புதுச்சேரிக்கு வந்துகொண்டிருந்தன. இந்தியாவில் கிடைக்காது தடுக்கப்பட்ட செய்திகளை அவை தந்தன. எனவே, பிரெஞ்சுப் பத்திரிகைகளின் வாயிலாகவும் பல செய்திகளைப் பாரதி பெற்றிருக்கவேண்டும்.

1917-ஆம் ஆண்டு அக்டோபர்ப் புரட்சி வெடித்தெழுந்து உலகையே குலுக்கிய போது அதனை சரியான முறையில் இனம் கண்டு கணித்தவர் பாரதியேயாகும். பல்வேறு பத்திரிகைகளின் மூலமும், நண்பர்கள் மூலமும் அவருக்கு தொடர்ந்து கிடைத்த செய்திகளை அலசி ஆராய்ந்து தொலை நோக்குடன் பார்த்து தீர்க்கமான முடிவு கண்டு உலகிற்கு அறிவித்தவர் பாரதி.

லெனின் தலைமையில் மூண்டெழுந்து வெற்றி பெற்ற அக்டோபர்ப் புரட்சி ரஷ்யாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளின் எதிர்காலத்தையே தலை கீழாகத் திருத்தியமைத்தது. நாகரிக உலகை அடிமைகொள்ளப் புறப்பட்ட பாசிச வல்லரக்கனை வீழ்த்திய பெருமை அக்டோபர் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்த சோசலிச நாடான சோவியத் நாட்டிற்கே உண்டு.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் நாடு வல்லரசாக எழுந்தது. அதன் விளைவாக உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்கள் நம்பிக்கையும், எழுச்சியும் பெற்றனர். அவர்களின் வாழ்வில் விடிவெள்ளி முளைத்தது.

ஐரோப்பிய ஏகாதித்தியங்களின் காலனி நாடுகளாக பன்னெடுங்காலம் திகழ்ந்து சுரண்டப்பட்ட ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகள் தங்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிந்து விடுதலைக் கொடியை உயர்த்திப் பிடிக்கத் துணையாக நின்றது சோவியத் நாடே ஆகும்.

இத்தகைய பல தொடர் மாற்றங்களை உலக நாடுகளில் ஏற்படுத்தப் போகும் புரட்சியாக அக்டோபர் புரட்சியை தனது தொலை நோக்கால் இனங்கண்ட பாரதி அதை யுகப் புரட்சி எனப் பாடியுள்ளார். கல்லின் மீது பொறிக்கப்பட்ட சொல் போல பாரதியின் யுகப் புரட்சி என்ற சொல் உலகத்தார் உள்ளங்களில் பதிந்துவிட்டது. நேற்றும் இன்றும் நாளையும், என்றென்றும் உலகம் உள்ளளவும் மறையாது; புரட்சி உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.

(பழ. நெடுமாறன் எழுதிய “காலத்தை வென்ற காவிய நட்பு” நூலிலிருந்து சில பகுதிகள்)