தஞ்சை அ. இராமமூர்த்தி மறைவு! – முற்போக்காளர்களுக்குப் பேரிழப்பாகும் அச்சிடுக
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 11:41

தஞ்சையார் என அன்புடனும், மதிப்புடனும் தோழர்களால் அழைக்கப்பட்ட இனிய நண்பர் தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆறாத் துயரமடைந்தேன்.

1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சித் தோல்வியடைந்தப் பிறகு ஏராளமான மாணவர்களை காமராசர் தலைமையின்கீழ் அணி திரட்டியப் பெருமைக்குரியவர் தஞ்சை    அ. இராமமூர்த்தி ஆவார். காமராசரிடம் மட்டுமல்ல, அன்னை இந்திராகாந்தி அவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டப் பெருமைக்குரியவர்.

1979ஆம் ஆண்டில் தமிழர் தேசிய இயக்கத்தினை நான் தொடங்கிய போது, தோள் கொடுத்துத் துணை நின்ற பெருமை அவரைச் சாரும். ஈழத் தமிழர் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை போன்றவற்றில் அவர் காட்டிய ஈடுபாடு நாடு அறிந்ததாகும்.

தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு அமைப்புகள் அனைத்துடனும் நெருங்கிய தோழமைப்பூண்டு செயலாற்றினார். இலங்கை, சோவியத் ஒன்றியம் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர். அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியவர். அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழக முற்போக்காளர் அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும். அவரின் பிரிவினால் வருந்தும் அவரது துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.