முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் - மாவீரர் நாள் நிகழ்ச்சி அச்சிடுக
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 11:04

27-11-2021 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 9ஆவது ஆண்டு தொடக்கமும் நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு மன்னார்குடி தமிழோசைக் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். மாவீரர் நாள் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட செய்தியை ஜோ. ஜான்கென்னடி வாசித்தார். சரியாக 6 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறந்தவெளியில் மாவீரர்களுக்கு சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்த அனைவரும் கூடினர். மாவீரரான மணிமாறன் அவர்களின் துணைவியார் நந்தினி அவர்கள் சுடரை ஏற்றினார். தொடர்ந்து கூடியிருந்த அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். மாவீரர்களின் நினைவு சின்னத்திற்கு மலர்கள் தூவி அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து பல நாட்களாக பெருமழை பெய்துகொண்டிருந்த போதும் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது திரளான மக்கள் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த திரண்டிருந்த காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்தது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பெரும் கூட்டம் கூடியிருந்தது.