அரசியல் சட்டத்தை மாற்ற ஆர்.எஸ். எஸ். முயற்சி -அன்றே அறிஞர் அம்பேத்கர் எச்சரித்தார்! -பழ. நெடுமாறன் அச்சிடுக
புதன்கிழமை, 15 டிசம்பர் 2021 13:38

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்கப் பரிவாரம் 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது.

அவர்கள் நிறுவ திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு முறையைப் பற்றி அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது. வெள்ளை அறிக்கையின் முன் பக்க அட்டையில் இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றைச் சீர்குலைத்தது யார்? இது முதல் கேள்வி.

பட்டினி, வேலையின்மை, இலஞ்ச ஊழல், மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார்? இது எழுப்பப்பட்டிருந்த இரண்டாவது கேள்வி. அதற்கான பதில் வெள்ளை அறிக்கையின் தலைப்பில் அளிக்கப்பட்டது. வெள்ளை அறிக்கையின் தலைப்பு ‘தற்போதைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்’.

இந்தி மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் “இந்தியன் என்ற சொல் ஒரு காரணத்துடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் இந்தியத் தன்மை வாய்ந்தது. அது இந்துக்களின் அரசியல் சாசனமல்ல என்பதை உணர்த்துவதற்கே அவ்வாறு குறிப்பிடப்பட்டது”. அந்த வெள்ளை அறிக்கையின் முன்னுரையில் சுவாமி ஹீரானந்த் எழுதுகிறார்:

“நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது”. இந்த ஆவணத்தைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டு அவர் கூறுகிறார். “இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்த பிறகுதான் நம்முடைய பொருளாதாரக் கொள்கை நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புள்ள மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதனை முழுமையாக ஒதுக்கித்தள்ளுவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செய்தி. இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும்போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது. உலகம் முழுவதும் தற்போது இந்தியர்கள் என்றே அறியப்படுகிறோம்” என்று வருத்தப்படுகிறார்.

இந்துஸ்தானத்தைப் பெறுவதற்காக விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. வந்தே மாதரம் தான் தேசிய கீதமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உருவான இந்தியாவில் இந்துஸ்தானமும் வந்தே மாதரமும் அழிக்கப்பட்டு விட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காகப் பாடப்பட்ட பாடல் தேசிய கீதமாக மாறியுள்ளது”.

உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக அந்தப் பிரசுரம் எழுதப்பட்டதாகக் கருதக் கூடாது. முழுமையான விவாதத்திற்குப் பிறகு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சுவாமி ஹீரானந்த் ஒரு பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். சுவாமி வாமதேவ் மஹாராஜ§ம் அவருடன் பேட்டியில் கலந்துகொண்டார்.

இந்து எதிர்ப்பு அரசியல் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தேசத்திற்கு அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டின் சட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதுக்கள் நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவின் இயற்கையான குடிமக்கள் என்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் கூறுவது ஒரு மோசடி ஆகும்”. ஒரு வாரம் கழித்து ஹீரானந்தின் பிரசுரம் வெளியிடப்பட்டது. 

சங்பரிவாரின் தாய் அமைப்பான ஆர்.எஸ்எஸ். தான் வெள்ளை அறிக்கை பற்றி கருத்துக்களை முதலில் வெளியிட்டது. 1993ஆம் ஆண்டு ஜனவரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த இராஜேந்திர சிங் பின்வருமாறு எழுதினார்:

“இந்தியாவின் இன்றியமையாத தேவைகளை ஈடு செய்யும் வகையிலோ, அதன் பாரம்பரியம், அது உயர்வாகப் போற்றும் அம்சங்கள், அதன் உயர்ந்த பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இல்லாத வகையில் நமது அமைப்புகள் இருப்பதே தற்போது நடைபெறும் மோதலுக்கு ஓரளவு காரணமாக அமைந்துள்ளன என்று கூறலாம். இந்த நாட்டின் சில சிறப்புத் தன்மைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் என்று அதிகாரபூர்வமான ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், நமது கலாச்சாரம் பன்முகத் தன்மை கொண்டதல்ல என்பது உறுதி. அணியப்படும் ஆடைகளோ, பேசும் மொழிகளோ கலாச்சாரமல்ல. அடிப்படையான நிலையில் பரிசீலித்தால் கலாச்சார ரீதியில் நாடு ஒன்றுபட்டு நிற்பது தெரியவரும். எந்தவொரு நாடும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கக் கூடாது. இவைகளெல்லாம் மாறுதல் செய்யப்பட வேண்டியதன் தேவையைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் உயர் பண்புகளுக்கும் அறிவுத் திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும்” (இந்தியன் எக்ஸ்பிரஸ் – சனவரி 14, 1993)

அன்றைய பா.ஜ.க. தலைவரான முரளி மனோகர் ஜோஷி 1993ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் நகரத்தில் பேசும்போது, ‘அரசியல் அமைப்புச் சட்டத்தைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை வலியுறுத்தினார்’.

சங்கப்பரிவாரம் முழுமையும் அடிப்படையில் தாராமான சிந்தனைப் போக்கு கொண்டதல்ல. அவை அறிவாளிகளுக்கு எதிரானது. மேற்கத்திய அறிவுப் பாரம்பரியத்தை ஏற்க மறுக்கும் அமைப்புகள் அவை. “இந்தியாவின் கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் அறிமுகமில்லாத மேற்கத்தியபாணி சிந்தனை கொண்ட மக்களை உருவாக்கியதுதான் நமது அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறது இப்பிரசுரம். தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக இப்பிரசுரம் கண்டனம் தெரிவிக்கிறது. சிறுபான்மையினர் தொடர்பான விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. அதுவும் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக நிதானமற்ற சொற்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டமே ஒரு குப்பைக் குவியல் என்று வருணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் விரோதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் – நிர்வாகத்துறையும்

அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் யாப்பு அவையில் 1948ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் அதன் அடிப்படைகளை விளக்கினார்.

“அரசியல் அமைப்புச் சட்டம் எந்த வடிவில் அமைந்துள்ளதோ அதே உணர்வுடன் அதற்குப் பொருத்தமான முறையில் நிர்வாக அமைப்பு முறை வடிவமைக்கப்படவேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிடியிலுள்ள ஒரு நிருவாக அமைப்புத் துறை மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைச் செயற்படுத்த முடியாது. நிர்வாக அமைப்பின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வடிவத்தை மாற்றாமலே அதனைத் தவறான முறையில் துல்லியமாகப் பயன்படுத்த முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உள்ளுணர்வுக்குப் பொருத்தமற்ற முறையிலும் நேர் எதிராகவும் அதனைப் பயன்படுத்த முடியும்”.

1949ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று உரையாற்றிய அன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் படேல் இதே கருத்துக்களை எதிரொலித்தார். “நீங்கள் இந்த வழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பின்பற்ற மாட்டீர்கள். காங்கிரசு அரசியல் அமைப்புச் சட்டத்தையோ அல்லது ஆர்.எஸ்.எஸ். அரசியல் அமைப்புச் சட்டத்தையோ கொண்டு வருவீர்கள். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் தான் இந்த நாட்டைக் கட்டுக்கோப்பாக வைக்கப்போகும் ஒரு நிர்வாக அமைப்பு முறை”.

(உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும் -நூலிலிருந்து சில பகுதிகள்)