சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு உலக நாடுகள் தடை! -ஆனால் இந்தியாவில் பயிற்சி அச்சிடுக
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 11:05

இலங்கையில் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது அப்பாவித் தமிழர்கள் பலரை ஈவுஇரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இராணுவ அதிகாரிகள் இருவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் தனது நாட்டிற்குள் நுழையக் கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு மட்டுமல்ல, மேலும் 12 நாடுகளும் இந்த அதிகாரிகள் மீது இத்தகைய தடையை விதித்துள்ளனர்.

சந்தனா எட்டியராச்சி என்பவர் சிங்கள கடற்படை அதிகாரியாவார். திரிகோணமலையைச் சேர்ந்த 11 தமிழர்களை கடத்திச் சென்று காவலில் வைத்தார். அவர் கேட்ட பணத்தை இந்தத் தமிழர்களின் குடும்பங்கள் கொடுக்க முடியாத நிலையில் ஈவுஇரக்கமின்றி அவர்களைப் படுகொலை செய்தார்.

இரத்தின நாயகே என்பவர் சிங்கள இராணுவ அதிகாரியாவார். இவர் நான்கு குழந்தைகள் உள்பட 8 தமிழர்களைக் கொன்று குவித்தவர்.

இவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இலங்கை உச்சநீதிமன்றமும் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது. ஆனால், இலங்கை அதிபரான இராசபட்சே இவர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

அப்பட்டமான மனித உரிமை மீறலைச் செய்திருக்கும் இவர்களை விடுதலை செய்தது குறித்து உலகெங்கும் கண்டனம் எழுந்தது. அதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் அரசுகள் இந்த கொலைகார அதிகாரிகளுக்கு எதிரான தடை விதித்துள்ளன.

சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாநிலத்தில் சிறுபான்மை இனத்தவரான உய்கர் முசுலீம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள். அம்மாநில அரசின் நிர்வாகத் தலைவராக இருந்த சென் குவாங் குவோ அப்பட்டமான மனித மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தங்கள் நாடுகளுக்குள் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நுழையக் கூடாது என்ற தடையை விதித்தன.

இலங்கையில் இராசபட்சே தண்டிக்கப்பட்ட அதிகாரிகளை விடுதலை செய்ததற்கு மாறாக, சீன அரசு அம்மாநில நிர்வாகத் தலைவர் சென் குவாங் குவோவை பதவி நீக்கம் செய்துள்ளது.

இலங்கையிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அமெரிக்கா மற்றும் 12 நாடுகள் மனித மீறல்களில் ஈடுபட்ட சிங்கள இராணுவ அதிகாரிகள் மீது தடைவிதித்தன. அந்நாடுகளைப் பின்பற்றி அண்டை நாடான இந்தியா தடை விதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்படுவதை நிறுத்துவதற்காவது இந்திய அரசு முன்வருமா?