கருமமே கண்ணான அற்புதத் தாய்- பழ. நெடுமாறன் அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:30

தமது நூலில் வள்ளுவர் பெய்த பல்லாயிரக்கணக்கான சொற்களில் தேடித் துருவி பேரறிவாளன் என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்து அருமருந்தன்ன மகனுக்குச் சூட்டி பெற்ற பொழுதிலும் பெரிதும் மகிழ்ந்தனர் அப்பெற்றோர்.

ஆற்றொழுக்குப் போல அமைதியாகவும், அழகாகவும் சென்ற அவர்களது வாழ்வில் எதிர்பாராத சூறாவளி வீசிற்று.

பெரியார் காட்டிய பகுத்தறிவு பாதையில் பிறழாது சென்றுகொண்டிருந்த அக்குடும்பத்தினர் உள்ளத்தால்கூட யாருக்கும் தீங்கு இழைத்ததில்லை. அத்தகைய அறவாழ்வு வாழ்ந்த அக்குடும்பத்தின் மைந்தன் அடாத பழி ஒன்றிற்கு ஆளாக்கப்பட்டான். கொடிய நாகத்தினால் தீண்டப்பட்டவர்களாக அக்குடும்பம் துன்பச் சூழலில் சிக்கி துடியாய் துடித்தது

தங்களின் மைந்தன் கற்றறிந்த அறிஞனாக வலம் வந்து மக்களுக்குத் தொண்டாற்றுவான்; தங்கள் குடும்பத்தினருக்குப் பெருமை சேர்ப்பான் என அவர்கள் கண்ட கனவு சிதைக்கப்பட்டது. கொடிய சிறை கொட்டடியில் மைந்தனும், சிறையின் நெடிய மதில்களுக்கு வெளியே அந்தத் தாயும் சந்திக்க நேர்ந்த துன்பத்தைக் கண்டு துயரக் கடலில் வீழ்ந்தனர் தந்தையும், தங்கைகளும்.

ஓராண்டு, ஈராண்டுகளல்ல 31 ஆண்டுகள் மெல்ல மெல்ல நகர்ந்தன. நெஞ்சத்தில் எழும் துயரத்தை அடக்கிக் கொண்டு சோர்வு எதுவும் இல்லாமல் ஏறி இறங்காத படிகளில்லை; தட்டாத கதவுகளில்லை; அற்புதமான அந்த அன்னை தன் மகனின் விடுதலைக்காக அலைந்து திரிந்த நாட்களும், பூட்டிய இரும்புக் கதவுகளின் பின்னே வாழ்வின் வசந்தத்தை இழந்துகொண்டிருந்த மகன் கழித்த நாட்களும் ஒன்றுக்கொன்று சமமானவை. சமன் செய்து சீர்தூக்கும் கோல்கூட இருவரின் துன்பச் சுமையும் சமமாகவே கணிக்கும்.

ஆனால் இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைத்த மகன் புரியாத குற்றத்திற்காகத் தண்டனைக்குள்ளாகி தூக்கு மேடையின் நிழலில் வாழ்வைக் கழித்தான்.தான் பெற்ற மகன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைத்தெறியாமல் ஓய்வதில்லை என உறுதிபூண்டு அந்தத் தாய் அயராது பாடுபட்டாள்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்.

தாம் தொடங்கிய செயலை முற்றுப்பெற முடிக்க வேண்டுமெனக் கருதுபவர், தம் உடம்பிற்கு வரும் வருத்தத்தை நோக்கார்; பசி எடுப்பதையும் பார்க்க மாட்டார்; உறங்கவும் மாட்டார்; யார் தமக்குத் தீங்கு செய்தாலும் அதனைப் பொருட்படுத்தார்; காலத்தின் அருமையையும் எண்ணார்; பிறர் செய்யும் அவமதிப்பையும் மனத்தில் கொள்ளார்; என நீதிநெறி விளக்கம் கூறியது அந்தத் தாய்க்கே மிகப்பொருத்தமானதாகும்.

பூந்தமல்லியிலிருந்த சிறப்புச் சிறையில் மகனுடன் மற்றும் 25பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த வளாகத்தை ஒட்டியே தடாச் சிறப்பு நீதிமன்றம் இருந்தது. வழக்கு நடைபெற்ற நாட்களில் சோலையார்பேட்டையிலிருந்து தொடர்வண்டி மூலம் புறப்பட்டு சென்னை வந்து பேருந்தில் ஏறி நீதிமன்றம் சென்று மகனையும் மற்றவர்களையும் பார்ப்பதோடு, வழக்கு விசாரணையையும் பதைபதைப்போடு பார்க்க அந்தத் தாய் ஒருபோதும் தவறியதில்லை.

தடா நீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக 26பேர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது என்றும் அடையாத பேரதிர்ச்சிக்குத் தமிழகம் ஆளானது. எனக்கே இப்படி என்றால், அந்தத் தாயும், தந்தையும், குடும்பமும் நிலை குலைந்துப் போனார்கள். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் வழக்கை நடத்துவதற்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் சார்பில் வாதாடுவதற்கு மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் முன் வந்தார். வழக்குச் செலவிற்காக மக்களிடம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்போது நாடெங்கும் காவல்துறையின் கெடுபிடி அதிகமாக இருந்தது. அதையெல்லாம் மீறி மக்கள் நிதியை அள்ளி அள்ளித் தந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது அந்த விசாரணையை அந்தத் தாய் பார்த்தால் மன ஆறுதலும், நம்பிக்கையும் பெறுவார் என்பதனால் அவரை பலமுறைக்கு தில்லிக்கு அனுப்பி வைத்தோம். நாட்கள் நகர்ந்தன. ஆனால் உச்சநீதிமன்றம் 19பேரை விடுதலை செய்தது. மூவருக்கு ஆயுள் தண்டனையும், மகன் உள்பட நால்வருக்குத் தூக்குத் தண்டனையும் விதித்த போது அந்தத் தாய் மனம் நொறுங்கிப் போனார்.

பின்னர் மக்கள் மன்றத்தில் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள், மரண தண்டனை ஒழிப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. எல்லாவற்றிலும் முன்னணியில் அந்தத் தாய் நின்றார். சோகம் ததும்பும் அந்த முகத்தைப் பார்க்கும் மக்கள் அவருக்கு ஆறுதல் சொல்வதோடு, மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்திற்கும் பேராதரவு தந்தனர்.

உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 19பேரை தமிழகம் முழுவதிலும் அழைத்துச் சென்று மக்கள் திரள் கூட்டங்களுக்கு முன்னால் நிறுத்தி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கவும், தூக்குமேடையின் நிழலில் வாடுபவர்களை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றிலும் அந்தத்தாய் உள்ளத்தில் துயரத்தைத் தேக்கிக்கொண்டுப் பங்கெடுத்துக்கொண்டார்.

முன்னாள் நீதியரசர்கள் அரசியல் தலைவர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகிய அனைவரையும் சந்தித்து மகனுக்காகவும், மற்றவர்களுக்காகவும் மன்றாடினார். அவரே ஒரு இயக்கமாக இயங்கினார். அவரின் தவ நோன்பு வீணாகவில்லை. காலம் மாறிற்று. 31 நீண்ட நெடிய ஆண்டுகளுக்குப் பின்னால் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் பேரில் சிறைக் கதவுகள் திறந்தன. இளம்பருவத்தினனாக சிறை புகுந்த மகன் நடுவயதானவனாக வெளியே வந்தான்.

நீதி நிலைநிறுத்தப்பட்டது. நாள்தோறும் துயரக் கண்ணீர் வடித்த அந்தத் தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓடியது. சிறையில் வாடும் மற்ற ஆறுபேரின் குடும்பத்தினர் வடிக்கும் துயரக் கண்ணீருக்கும் விரைவில் முடிவு வருமாக!