எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? - நீதிநாயகம் கே. சந்துரு அச்சிடுக
வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2022 10:36

cபா.ச.க., ஒன்றிய அரசைக் கைப்பற்றிய பிறகு அந்தக் கட்சி தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு, ஒருவித திட்டத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது.

பதவியேற்றதிலிருந்து ஆளுநர் ரவிக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல். அவர் என்னதான் செய்வார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அவையில், அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையெல்லாம் கட்டிவைத்துவிட்டு கூட்டங்களில் உபன்யாசம் செய்வதிலேயே அவருக்குப் பாதி நேரம் செலவாகிவிடுகிறது!

அமைதியின்மையை உருவாக்குவதே ஆளுநரின் நோக்கமாக இருக்கிறது!

இந்திய காவல்துறை அதிகாரியான அவருக்கு அடித்தது யோகம். நாகாலாந்து ஆளுநராகப் பதவியேற்றதுடன், நாகாலாந்தில் தனி நாடு கோரி போராடிவரும் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் உறுப்பினரானார். பிறகு, அவர்களது எதிர்ப்பால் அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து விலகியதுடன், நாகாலாந்து ஆளுநராக இருந்த அவர், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கோகிமாவிலிருந்து புறப்பட்டபோது அவருக்கு அங்கு பிரிவு உபசார விழா எதுவும் அளிக்கவில்லை. அத்தனை புகழ் பெற்றவராக அவரது பணி இருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்த பிறகும் தனது பதவியின் தகுதியை உணர்ந்து அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. மாறாக, அவர் உதிர்க்கும் ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதுதான் மிச்சம். மேலும் சில பிரச்னைகளை அவர் கிளப்புவதைப் பார்த்தால், ஏதோ ஒரு திட்டத்துடன் இங்கு அனுப்பப்பட்டவராகத்தான் தெரிகிறார்.

இதர மாநிலங்கள்போல் நிலையற்ற ஆட்சி தமிழ்நாட்டில் இல்லாதபோதும், பிரச்னைகளைக் கிளப்புவதன் மூலம் அமைதியின்மையை உருவாக்குவதே ஆளுநரின் நோக்கமாக இருக்கிறது. இரண்டு சதவிகித வாக்குகள்கூட இல்லாதபோதும், தமிழக பா.ச.க ராஜ்பவனுக்குத் தங்களது தலைமையகத்தை மாற்றிக்கொண்டதுபோல் இருக்கின்றன அவரின் செயல்பாடுகள்.

“நீங்கள் தபால்களைப் பட்டுவாடா செய்யும் தபால்காரரா?”

தமிழக அமைச்சரவை இரண்டு முறை ஆலோசனை கூறியும், பேரறிவாளனின் கருணை மனுவில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதில் தொடங்கியது அவரது முதல் முட்டுக்கட்டை. ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவை, இராசீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் கழித்துவிட்ட ஏழு பேருக்கும் விடுதலை அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது அவருக்குத் தெரியாத விஷயமல்ல. ஆனாலும் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதித்தவர், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ‘நான் உரிய சட்ட ஆலோசனைகள் பெற்று முடிவெடுப்பேன். அதற்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது’ என்றும் கூறினார்.

பேரறிவாளன் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோதும், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க முற்பட்டபோதும், நீதிமன்றங்களின் முன்னால் தனது தரப்பை அவர் விளக்க முற்படவில்லை. வழக்கு விசாரணை தீவிரமடைந்தபோது, ‘கருணை மனுவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரிடமிருந்து அறிவுரை பெற்ற பிறகு முடிவெடுக்கப்போவதாக’ அவர் தரப்பில் கூறப்பட்டது.

இதைக் கேள்வியுற்ற உச்ச நீதிமன்றம் ஆளுநரை “நீங்கள் தபால்களைப் பட்டுவாடா செய்யும் தபால்காரரா?” என்று கேட்டதோடு, அந்த வழக்கில் நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இருப்பினும், அதே போன்று கருணை மனு தாக்கல் செய்த மற்ற அறுவருக்கும் முடிவெடுக்காமல் தாமதித்த ஆளுநரின் செயலைக் குறை கூறிய உச்ச நீதிமன்றம், அந்த அறுவருக்கும் விடுதலை வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ததைப் பார்க்கும்போது, ஆளுநரின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒன்றிய அரசின் தூண்டுதல் இருப்பது தெரியவருகிறது.

ஒன்றிய அரசின் ஊதுகுழல்கள்!

பா.ஜ.க., ஒன்றிய அரசைக் கைப்பற்றிய பிறகு அந்தக் கட்சி தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு, ஒருவித திட்டத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது. தெலங்கானாவில் தமிழிசையும், கேரளத்தில் ஆரிஃப் முகமது கானும், தமிழ்நாட்டில் ரவியும் அப்படித்தான் செயல்பட்டுவருகிறார்கள். இவர்கள் மூன்று பேருமே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சட்டப்பேரவைகள் நிறைவேற்றிய சட்டங்களுக்கு இசைவு தராமல் தாமதிப்பதும், பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியைப் பயன்படுத்தி, தன்னாட்சி நடத்திவருவதும் கல்விக் கொள்கைகளில் ஒன்றிய அரசின் ஊதுகுழல்களாகச் செயல்பட்டுவருவதையும் பார்க்கும்போது, இவர்களது செயல்பாடுகளை ஊக்குவிப்பது மோடி-ஷா அரசுதான் என்பது உறுதிப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழகச் சட்டப்பேரவை நிறைவேற்றிய 21 சட்டங்களுக்கு ஆளுநர் இன்றுவரை இசைவு தராமல் இருப்பது அடிப்படையில் சட்டவிரோதச் செயல். அரசமைப்புச் சட்டம் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்படி, ஒரு சட்ட மசோதா ஆளுநரின் இசைவுக்கு அனுப்பப்படும்போது அவர் முன்னால் மூன்று வழிகள்தான் உள்ளன. இசைவு தருவது, இசைவு தர மறுப்பது அல்லது சட்டவரைவை குடியரசுத் தலைவரின் ஆலோசனைக்கு அனுப்பிவைப்பது. இந்த மூன்று வழிகள் தவிர சட்டவரைவு கோப்புகளை முடிவுக்குக் கொண்டுவராமல் காலதாமதம் செய்வது எந்தச் சட்டத்திலும் கூறப்படாத செயலாகும். அதனுடைய ஓர் அங்கமாகத்தான் ஆன்லைன் ரம்மிச் சீட்டு விளையாட்டை ஒழிக்கும் மசோதாவுக்கு இசைவு தராமல் காலம் கடத்தும் அவரின் செயல் இருக்கிறது.

3 ஆண்டுகளில் 24 பேர் தற்கொலை!

சீட்டு விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுவதை ஒழிப்பதற்கு, ஏற்கெனவே சட்டங்கள் இருக்கின்றன. கிளப்புகளில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டுகளில் சூதாட்டம் இருக்கக் கூடாது என்று சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பினும், அந்தச் சட்டங்கள் விளையாட்டுகளைத் தடைசெய்யவில்லை. மாறாக, சில ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கின. ஆனால், அந்தச் சட்டங்களின் வரையறைக்குள் ரம்மி விளையாட்டு வராது என்றும், அது சூதாட்டமல்ல, திறமையின் அடிப்படையில் அமைந்தது என்று நீதிமன்றங்கள் கூறிவிட்டன. இருப்பினும், அந்த விளையாட்டுகளைப் பணப் பந்தயமாக நடத்துவதற்கு உரிமையில்லை. இருப்பினும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை வலைதளங்கள் மூலம் நடத்திவருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. கணினி சூத்திரங்களின்படி, ஆரம்பத்தில் சில வெற்றிகள் மூலம் விளையாடுபவர்களுக்குப் பணம் கிட்டினாலும், இறுதியில் மொத்தப் பணமும் விரயமாவதே நடக்கிறது. இதில் முதலீடு செய்வதற்கென்றே சில நிதி நிறுவனங்கள் பண உதவி செய்கின்றன, அதனால் பலர் தங்களது சக்திக்கு அப்பாற்பட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியாகியிருக்கிறார்கள். இப்படியாக, கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 24 பேர் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூதாட்டத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடக அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டுவந்து தடைசெய்ய முற்பட்டபோது, அந்தந்த மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன. இதை எதிர்த்து, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. எனினும், இந்தச் சூதாட்டத்தைத் தடை செய்யும்படி தொடர்ச்சியாகப் பொதுக்கருத்துகள் உருவானதன்பேரில், தமிழ்நாடு அரசு எனது தலைமையில் குழுவொன்றை உருவாக்கி ஆலோசனை வழங்கும்படி கேட்டுக்கொண்டது. இதைப் பரிசீலித்த எங்களது குழு, ‘ஏற்கெனவே தடைசெய்த சட்டங்கள் ரம்மி விளையாட்டை ‘அது ஒரு சூதாட்டம் அல்ல’ என்று கூறித்தான் ரத்துசெய்தன. ஆனால், பொது ஒழுங்கு மற்றும் உடல்நலம் அடிப்படையில் அரசு ஒரு விளையாட்டைத் தடைசெய்வதற்கு எந்தவிதச் சிக்கலும் இல்லை’ என்ற கருத்தை முன்வைத்தது.

மேலும், மனிதர்கள் மட்டுமே குழுமி விளையாடுவதுபோல் அல்லாமல், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் பணம் பறிக்கும் செயல்களிலும், வசதியற்றவர்களுக்கு போதையூட்டி கடன்கள் மூலம் விளையாடத் தூண்டுவதுமாக இருக்கின்றன. எதிரில் யாருமற்ற இயந்திரத்தன்மையிலான சூத்திரங்களின் அடிப்படையில் இந்த விளையாட்டு நடைபெறுவதும், அந்தச் சூத்திரங்களின் அடிப்படையைப் பரிசீலனை செய்ய அந்த நிறுவனங்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதையெல்லாம் எங்கள் குழு அறிந்துகொண்டது. எனவே, ஆன்லைன் ரம்மியை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென்ற அறிக்கையைத் தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தோம்.

எங்கள் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மீண்டும் பொதுவெளியில் இது குறித்து கருத்து கேட்டு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளித்தார். ஆனால், அவசரச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுப்பதற்கான விதிமுறைகளை அரசு உருவாக்காததால் அது உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை.இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவையின் மாரிக்காலக் கூட்டம் நடைபெறத் தொடங்கியதால், அரசமைப்புச் சட்டம் 213(2)-ன் கீழ் அந்த அவசரச் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்பட்டு, அது ஆளுநர் ரவியின் இசைவுக்காக அனுப்பப்பட்டது.

ஆன்லைன் ரம்மி... விளையாடும் ஆளுநர்!

இங்கேதான் ஆளுநரின் புதிய விளையாட்டு தொடங்கியது. அவசரச் சட்டத்துக்கும், சட்டப்பேரவை இயற்றிய புதிய சட்டவரைவுக்கும் எந்தவித வேறுபாடும் இருக்கவில்லை. இருப்பினும், ஆளுநர் ரவி வேண்டுமென்றே புதிய சட்டத்தைப் பரிசீலிப்பதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக அந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல் நிறுத்திவைத்திருக்கிறார். இதற்கிடையில் மேலும் மூன்று பேர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் சட்டத்தைக் கொண்டுவர விடாமல் ஆளுநரால் நிறுத்திவிட முடியாது. அவர் தனக்கு அதில் சில தனிப்பட்ட கருத்து இருந்தால், மீண்டும் அந்தச் சட்ட வடிவை மறுபரிசீலனை செய்ய சட்டப் பேரவைக்குத் திருப்பியனுப்பலாம். அதன்படி சட்டப்பேரவை மறுபடியும் அதே சட்டத்தை நிறைவேற்றினால், ஆளுநர் கட்டாயமாக அந்தச் சட்டத்துக்குத் தனது இசைவை அளித்துத்தான் தீர வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது. இது அவருக்கும் தெரியும். ஆனால், தான் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய அவசரச் சட்டத்தின் புதிய பிரதியில், தனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன என்று இசைவு தராமல் காலம் தாழ்த்திவருகிறார். இதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்?

தங்க முட்டை இடும் வாத்து... பின்னணியில் இருப்பது யார்?

ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்குப் புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசனை வழங்கும்படி, என் தலைமையில் அமைந்த குழு அறிக்கை தருவதற்கு, இரு வார காலமே அவகாசம் தரப்பட்டது. அந்த இரு வார காலத்தில், சில ஆன்லைன் கம்பெனிகள் எங்கள் குழுவின்மீது கொண்டுவந்த அழுத்தத்தை இங்கே தெரிவிக்க முடியாது. அதேபோல் ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்கு, தமிழக பா.ச.க கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால், அவர்களது அகில இந்தியத் தலைமைகள் அதே கருத்தில்தான் இருக்கிறார்களா என்று கூற முடியாது. தங்க முட்டை இடும் வாத்தை யார்தான் வெட்டி உணவு சமைப்பார்கள்?

ஒரு பக்கம் ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில், வருமான வரியைக் கோடிக்கணக்கில் பெற்றுக்கொள்கிறது ஒன்றிய அரசு. மறுபக்கம் மாநில அரசுகளுக்கும் ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் 28 சதவிகித வரி வசூலிக்கும் உரிமையையும் வழங்கி, அவர்களுக்கும் தீனி போட்டிருக்கிறது. இது தவிர, சட்டத்தின் மூலமாகத் தடையைக் கொண்டு வராமலிருப்பதற்கு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் ரவி தடைபோட மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

‘தான் தலையாட்டி பொம்மை இல்லை’ என்று ஆளுநர் ரவி தொடர்ந்து கூறிவந்தாலும், அவரை நியமனம் செய்தவர்களின் கைப்பாவையாகத்தான் அவர் இருக்க முடியும். ஒன்றிய அரசின் அமைச்சரவை விரும்பும் வரை மட்டுமே ஆளுநர் பதவி நீடிக்கும் என்று அரசமைப்புச் சட்டம் 156(1) பிரிவு விளக்குகிறது. எனவே எய்தவன் இருக்க... அம்பை நோவதேன்?

-நன்றி! – ஜூனியர் விகடன் – 11.12.22