கரம் கோர்ப்போம் - துயரத்தைத் துடைப்போம் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:23

தமிழக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு அடைமழையும் கரைபுரண்ட வெள்ளமும் சென்னை மாநகரத்தையும் மற்றும் திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களையும் சீர்குலைத்துவிட்டன.

சென்னை நகரில் மட்டும் குடிசை வாழ் 18 இலட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அரசு முகாம்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இம்முறை வெள்ளத்தில் நடுத்தர மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் இருந்த மதிப்புமிக்கப் பொருட்களுமே வெள்ளத்தில் வீணாகியோ, அடித்துச் செல்லப்பட்டோ விட்டன. இவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்திற்கு மேல் இருக்கும். இவர்களின் பொருள் இழப்பு பல நூறு கோடிகளைத் தாண்டி நிற்கும்

கிண்டி, அம்பத்தூர், வியாசர்பாடி, வில்லிவாக்கம், மாதவரம், திருவான்மியூர், பெருங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை வெள்ளம் அடியோடு சூறையாடிவிட்டது. இயந்திரங்கள் பாழாகிவிட்டன. மின் இணைப்புகளும் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இவற்றை சீர் செய்வதற்கு சில மாதங்கள் ஆகும். இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் இவைகளை சீர் செய்யும் வரை இங்கு வேலைபார்த்த தொழிலாளர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. எனவே, இவர்கள் வாழ்வுக்கும் உதவவேண்டும்.

ஐ.டி. தொழில் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு பல நிறுவனங்கள் பெங்களூருக்கு இடம் பெயர்ந்துவிட்டன. இவை மீண்டும் வந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி தேவை இருக்குமோ?

சென்னை தியாகராய நகரிலும் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான பதிப்பகங்களும் அவற்றின் கிடங்குகளும் உள்ளன. 20க்கும் மேற்பட்ட முதன்மையான பதிப்பாளர்களும் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுபதிப்பாளர் களும் வரப்போகும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக பல மாதங்க ட்ளாகத் தயாரித்திருந்த நூல்களின் பெரும்பகுதி வெள்ள நீரில் ஊறி கூழாகி விட்டன. பலநூறுகோடி ரூபாய் இழப்புகளுக்கு இவர்கள் ஆளாகி கண்கலங்கி நிற்கிறார்கள்.

கடலூர் மற்றும் காவிரி சமவெளி மாவட்டங்களில் பயிர்கள், கால்நடைகளின் சேதம், பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். இந்தப் பேரிழப்பை தாங்கிக் கொள்ள இயலாமல் கதறும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும்.
இதற்கிடையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெருமளவிற்குச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் பெரு மழை பெய்யும் அபாயம் உள்ளதாக ஐ.நா. ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது ஆன்றோர் பழமொழி. இந்த ஊழிக்கால பேரழிவின்போது மின்னல்கீற்றுபோல மின்னிய நம்பிக்கை இளைய சமுதாயம் ஆற்றிய அருந்தொண்டுகள்தான். சென்னை மாநகரில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அவற்றில் சிக்கி தப்புவதற்கு வழியில்லாமல் தவித்த ஏராளமானவர்களை மீட்டெடுப்பதற்கு ஆங்காங்கே இளைஞர்கள் அணி திரண்டு தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாமல் தொண்டாற்றி மக்களைக் காப்பாற்றினார்கள். மனித நேயம் வெள்ளத்தோடு போட்டிப்போட்டு பெருக்கெடுத்து ஓடியது. அரசு சார்பான உதவிகள் மக்களுக்குக் கிடைப்பதற்கு முன்னாலேயே இந்த இளைஞர்கள் வீரமுடன் வெள்ளத்தோடு போராடி நிகழ்த்திய சாதனைகள் கல்லின் மீது பொறிக்கப்பட வேண்டிய வீர காவியமாகும்.

2000-2001 முதல் 2004-2005 உள்ளிட்ட நிதியாண்டு முதல் தேசியப் பேரிடர் அவசர நிதித் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என இந்திய அரசு அறிவித்தது. தேசியப் பேரிடர் நிகழ்ந்த மாநிலங்களுக்கு மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் நிதியுதவி செய்யலாம், மற்றும் தொழி லதிபர்கள், நிறுவனங்கள் ஆகியோரும் நிதியளிக்கலாம் என குறிப்பிட்டது.

ஆனால், இந்த நிதியை நிர்வகிக்க மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எனவே இத்தகைய குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

பேரழிவிற்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தைத் துடைக்க தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களால் இயன்ற அளவுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. ஆனாலும், சில பகுதிகளுக்கு உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை. பல பகுதிகளில் உதவிகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. உதவிப் பணிகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். கட்சி வேறுபாடுகளைக் களைந்துவிட்டு அனைவரும் கரம் கோர்த்து ஒன்றுபட்டு தொண்டாற்ற வேண்டிய வேளை இதுவாகும். எனவே கீழ்க்கண்டவற்றை ஆராய்ந்து பார்க்க முன்வருமாறு தமிழக முதல்வரையும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

1. தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், வேளாண்மை, தொழில், பாசனத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

2. சென்னை மாநகரம் மற்றும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் அமைச்சர் ஒருவர் தலைமையில் அனைத்துக்கட்சிக் குழு அமைக்கப்பட வேண்டும்.

மாநிலக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட முறையைப் பின்பற்றி நாடாளுமன்ற குழுக்களுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தந்தத் தொகுதிகளைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம்பெறுவர்.

3. மத்திய அரசு தரும் நிதி, மாநில அரசு தரும் நிதி, பிற மாநில அரசுகள் அளிக்கும் நிதி மற்றும் தனியார் அளித்த நிதி மற்றும் உதவி பொருட்கள் ஆகிய அனைத்தும் மாநிலக் குழுவின் மூலமாக நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டு அக்குழுக்களின் மேற்பார்வையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
4. 2002ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த மழைநீர் சேகரிப்புத் திட்டம் மிகச்சிறந்த திட்டமாகும். இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் தற்போதைய வெள்ளச் சேதம் ஏற்பட்டிருக்காது. நிலத்தடி நீர்வளம் பெருகியிருக்கும். எனவே மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாகச் செயற்படுத்த வேண்டும்.

5. தென்னாட்டு நதிகளை இணைக்கும் திட்டம் இப்போதைக்கு நிறைவேறுவதாகத் தெரியவில்லை. எனவே தமிழ்நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறியிருந்த ஆலோசனை உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டும். தென் பெண்ணை-செய்யாறு; கோரையாறு- அக்கினியாறு; தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு; காவிரி-வைகை- குண்டாறு-வைப்பாறு ஆகிய நதி இணைப்புத் திட்டங்களின் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சில திட்டங்களில் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. எனவே இவற்றை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.

6. தமிழக ஆறுகள் அனைத்திலும் எங்கெங்கு தடுப்பணைகள் கட்டப்படவேண்டுமோ அங்கெல்லாம் உடனடியாகக் கட்ட வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர் வளம் பெருகும், வெள்ளச் சேதங்கள் தடுக்கப்படும்.

7. ஏரிகளையும், குளங்களையும் அவற்றின் நீர்வழிகள், பாசனக் கால்வாய்கள், இணைப்புக் கால்வாய்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி அவற்றை ஆழப்படுத்திச் செப்பனிட்டு அவற்றிற்கு உயிரூட்ட வேண்டும். இவை யாவும் கிராம பொதுச் சொத்தாக அறிவிக்கப்பட வேண்டும். அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

8. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்காமல் அவற்றை தென் மாவட்டங்களில் அமைக்க அனுமதிக்க வேண்டும்.

9. போர்க் கால நடவடிக்கை போல வெள்ள நிவாரண நடவடிக்கைகள் அமைய வேண்டும். யாரையும் யாரும் குற்றம்சாட்டி பேச இது நேரமல்ல." என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.

10. கட்சிக் கண்ணோட்டமோ, அரசியல் நோக்கமோ சிறிதும் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது. அனைவரும் கரம்கோர்த்து இணைந்து செயல்பட வேண்டும். நமது இளைஞர்கள் இதற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அக்டோபர் 28ஆம் நாள் வடகிழக்கு பருவ மழை தொடங்கி டிசம்பர் 1 வரை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 383 டிஎம்சி மழை நீர் கிடைத்தது. மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் மொத்த கொள்ளவான 56 டிஎம்சியில் 54 டி.எம்.சி. மட்டுமே சேமிக்க முடிந்தது. மீதமுள்ள 329 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலுக்கு அனுப்பப்பட்டது. மேற்கண்ட திட்டத்தின் 5, 6, 7 ஆகியவற்றை நிறைவேற்றியிருந்தால் மழை நீர் முழுவதையும் நாம் சேமித்திருக்க முடியும்.

நம்மைப்போல உலக நாடுகளில் மிகப் பழமையான நாகரீகத்திற்கு உரியவர்கள் சீனர்கள். சீனாவில் ஓடும் மிக நீளமான ஆறான மஞ்சள் ஆற்றின் கரையில்தான் சீன நாகரீகம் தோன்றியது. எனவே இதை சீன நாகரீகத்தின் தொட்டில் என சீனர்கள் அழைக்கிறார்கள். சீனர்களின் பெருமிதத்திற்கு இந்த ஆறு உரியதானாலும், சீனாவின் துயரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 3000-4000 ஆண்டுகளில் இந்த ஆற்றில் 1593 முறை பெரு வெள்ளங்கள் புரண்டோடி பேரழிவுகள் தொடர்ந்தன. 1887 மற்றும் 1931ஆம் ஆண்டுகளில் இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 60 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர் என்பதிலிருந்தே சீனாவின் துயரம் என அம்மக்கள் இந்த ஆற்றை அழைப்பது ஏன் என்பது புலனாகும்.

4000 ஆண்டு காலமாக சீன மக்களுக்கு அளவில்லாத துயரத்தையும், சேதத்தையும் அளித்த இந்த ஆற்றை கட்டுப்படுத்தி மக்களுக்கு வளம் சேர்க்கும் திட்டத்தை செஞ்சீன அரசு வகுத்தது.மக்களின் ஒத்துழைப்போடு வெள்ளத் தடுப்பிற்காக மாபெரும் திட்டம் ஒன்றை செயற்படுத்தியது.

1960ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 12 அணைகள் கட்டப்பட்டன. இப்போது ஒரு அணை கட்டப்பட்டு வருகிறது. அந்த அணை 2016ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும். கடந்த 56 ஆண்டுகளில் 13 அணைகள் கட்டப்பட்டு 7 புனல் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 5618 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன் விளைவாக வெள்ளம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டதோடு 74 ஆயிரம் சதுர கீலோமீட்டர் நிலம் பாசன வசதி பெற்றது. 14 கோடி மக்கள் பெரும்பயன் பெற்றனர்.

4 ஆயிரம் ஆண்டு காலமாக யாருக்கும் கட்டுப்படாமல் பொங்கி எழுந்து பெருக்கெடுத்து ஓடி மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய இந்த ஆற்றினை 56 ஆண்டுகளுக்குள் மக்களின் உதவியோடு செஞ்சீனம் கட்டுப்படுத்தியுள்ளது. சீனத்தின் துயரம் இப்போது சீனத்தின் மகிழ்ச்சியாக மாற்றப்பட்டுவிட்டது.

சீனர்களைப் போலவே தமிழர்களும் பழம் பெரு நாகரிகத்திற்கு உரியவர்கள். அவர்களைப் போலவே தமிழர்களும் கடும் உழைப்பாளிகள். சீனம் சாதித்ததை நம்மாலும் சாதிக்க முடியும். தமிழகத்தின் ஆறுகளை இணைத்தல், ஏரி, குளங்களை மீட்டுருவாக்கும் செய்தல் ஆகிய மகத்தான பணிகளை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட குழுக்களின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவேண்டும்.

ஆறுகளைச் சுரண்டியவர்களும், ஏரி, குளங்களை ஆக்கிரமித்த வர்களும் ஒதுக்கப்பட்டு இப்பணிகள் நடைபெறுமானால் வளமான தமிழகம் உருவாக்கப்படுவது உறுதி.

மழையை வென்று காட்டிய நமது இளைஞர்கள் தமிழகத்தை வளமாக்கும் மகத்தானப் பணியையும் செவ்வனே நிறைவேற்றும் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்கள். அவர்களை நம்பிச் செயல்பட தமிழக அரசும், கட்சிகளும் இணைந்து முன்வர வேண்டுகிறேன்.

நன்றி : தினமணி 18-12-2015