தமிழ் - சொல்லாட்சி அச்சிடுக
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:55

தமிழ் எனும் சொல்லாட்சி நமது இலக்கியங்களில் எவ்வாறு பயின்று வந்திருக்கிறது என்பதை முனைவர் ப. கிருஷ்ணன் எழுதிய "தமிழ் நூல்களில் தமிழ்மொழி-தமிழ் இனம் - தமிழ் நாடு'' என்னும் நூலில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.

கி.மு. 2500ல் தோன்றிய தொல்காப்பியத்தில் 5 இடங்களிலும் அதற்குப் பின் கி.பி. 200 வரை எழுந்த சங்க இலக்கியத்தில் 21 இடங்களிலும், கி.பி. 500 முதல் 900 வரை எழுந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பாடல்கள், நாலாயிரத் திவ்யபிரபந்தம், நந்திக் கலம்பகம், பாண்டிக்கோவை, பெருங்கதை, முத்தொள்ளாயிரம், சீவகசிந்தாமணி, கம்ப இராமாயணம், திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களில் 475 இடங்களிலும், கி.பி. 900 முதல் 1200 வரை எழுந்த கல்லாடம், பதினோராம் திருமுறை, பெரிய புராணம், அம்பிகாபதிக் கோவை ஆகிய நூல்களில் 381 இடங்களிலும், கி.பி. 1200 முதல் 1900 வரை இயற்றப்பட்ட திருவாரூர்க் கோவை, மதுரைக் கோவை, தஞ்சை வாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், குமரகுருபரர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, தமிழ்விடுதூது, திருவருட்பா, திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ், கோமதியம்பிகைப் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களில் 341 இடங்களிலும் தமிழ் எனும் சொல்லாட்சி குறிக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை தமிழ் எனும் சொல் மொழியை மட்டுமல்ல அம்மொழி பேசிய மக்களையும் குறித்தது.