வள்ளலார் விதைத்தத் தமிழ்த் தேசியம் |
![]() |
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:13 |
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நாடெங்கும் பரவியிருந்த காலத்தில் வள்ளலார் வாழ்ந்தார். வணிகம் நடத்திப் பிழைக்க வந்த ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி ஆளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் துணிந்த சிற்றரசர்கள் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற பலர் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள். இதைக்கண்டு அஞ்சிய ஏனைய சிற்றரசர்கள் ஆங்கிலேயருக்கு அடிபணிந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் தலைநகரமாக கல்கத்தா ஆக்கப்பட்டது. இந்திய மொழிகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவை குறித்து ஆராய்வதற்காக சர். வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி 1785ஆம் ஆண்டில் ஆசியவியல் கழகம் ஒன்றினைத் தொடங்கினார். ஒருபோதும் பேச்சு மொழியாக இல்லாமல், புரோகித மொழியாக மட்டுமே இருந்து வந்த சமஸ்கிருதத்தை உலக அளவில் முக்கியத்துவம் பெறச் செய்ததில் சர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதில் அங்கம் வகித்த ஆங்கிலேய அறிஞர்கள் மொழியியல் உண்மைகளையோ, வரலாற்றையோ கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் கீழ்க்கண்ட முடிவுகளைச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த பார்ப்பன அறிஞர்களே இதற்கு முக்கிய காரணமாகும். 1. இந்திய மொழிகள் யாவும் சமஸ்கிருதத்திலிருந்தே பிறந்தன. சமஸ்கிருத பண்பாடே பாரதப் பண்பாடாகும். தமிழின் தனித்தன்மை தமிழ் வடமொழியின் துணையின்றி தனித்து இயங்க வல்லது என்பதையும், தமிழும் வடமொழியும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை யும், ஆங்கிலேய நாட்டு கிறிஸ்துவத் துறவியான கால்டுவெல் தனது ஆராய்ச்சியின் மூலம் நிலைநாட்டினார். 1875ஆம் ஆண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என அவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழின் தனித்தன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்தது. சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழிகள் வேறு தமிழிலிருந்து பிறந்த மொழிகள் வேறு என்பது நிலைநாட்டப்பட்டது. தமிழில் அ,இ,உ என்ற மூன்றும் சுட்டெழுத்துக்கள் எனப்படும். தொல் பழங்கால மாந்தனின் இயற்கையான ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சுட்டெழுத்துக்களும், அவற்றின் அடிப்படையில் தமிழ் சொற்கோவைகளும் தோன்றியுள்ளன. எனவே சுட்டெழுத்துக்கள் தமிழின் தொன்மையை புலப்படுத்துவதற்கான சிறந்த சான்றுகளாகும். தமிழ் சுட்டெழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்தோ ஐரோப்பிய மொழிகளில் சுட்டுச் சொற்கள் தோன்றியுள்ளன என்பது அறிஞர் கால்டுவெல்லின் கருத்தாகும். ரிக் வேதத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன என்று மொழியியல் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி கூறுவது சிந்துவெளி தமிழர்கள் வேதகாலத்திற்கு முன்பிருந்தே அங்கு தமிழ் பேசி வாழ்ந்தனர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். 1 பாவாணர் கருத்து வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியாவிற்குள்) கால் வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழியிலும், ஆரியம் என்னும் பேரே தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிப்து மொழியிலும், மறுக்க முடியாத தமிழ்ச் சொற்கள் அடிப்படையாயுள்ளன. ஆகவே, மேலையுலகில் (தோரா. கி.மு.5,000) முதன் முதலாக நாகரிகமடைந்த எகிப்து நாட்டு மொழியில், ஒரு சொல், இரு சொல் அல்ல பல சொற்கள் - அவையும் அடிப்படைச் சொற்கள், தமிழாயிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைசிறந்த இலக்கியச் சான்றாகும். வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின், அதனொடு நாற்பிரா கிருதங்களையுஞ் சேர்த்தமைத்த அரைச்செயற்கை யான இலக்கிய நடை மொழியே (Literary dialect) சமற்கிருதம். சுந்தரனார் கருத்து கன்னித் தமிழ் என்ற புராண கால மரபு வாழ்க்கையை ஓர் அறிவு மரபாக்கிய செல்வர் பேராசிரியர் சுந்தரனாரே.
என்று அவர் மனோன்மணிய நாடகத்தின் பாயிரத்தில் பாடுகின்றனர். இந்தியாவிலேயே தேசியக்குரல் எழுவதற்கு முன் அவர் எழுப்பிய தமிழ்த் தேசியக் குரல் இது. அதில் தமிழ்த் தேசியத்தின் பழங்கால வரலாறும், அவர் வருங்கால முன்னறிவும், நம் வருங்கால ஆக்கமும் செறிந்து பொதிந்துள்ளன. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் ஒரே திராவிட மொழிக்குழு சார்ந்தவை என்றும், அதன் மிகப் பழமையான மூலம் தமிழே என்றும் டாக்டர் கால்டுவெல் ஆய்ந்து ஒப்பியல் மொழி நூல் வெளியிட்ட காலம் அதுவே. அம்முடிவைக் கவிதை உருவில் தெரிவித்தார் பேராசிரியர். சங்க இலக்கிய ஏடுகள் அப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருந்தன. அதற்குள் அதை மதிப்பிட்டு விட்டார் பேராசிரியர். பத்துப்பாட்டையும் திருக்குறளையும கற்றவர் வேதபுராணங்களையும் சாதி அநீதி வகுத்த மனு சுமிருதியையும் தீண்டுவரோ என்று வினாவினார். சமஸ்கிருதம் அன்றுமட்டுமன்றி இன்றுகூடப் பலரால் வட இந்தியத் தாய்மொழிகளின் தாய் என்று கருதப்படுகிறது. வடநாட்டுத் தாய்மொழிகளை ஈன்ற சமஸ்கிருதம் அழிந்துவிட, தென்னாட்டுத் தாய்மொழிகளை ஈன்ற தமிழ் அழியவில்லை என்ற வரலாற்றுண்மையைக் கண்டே அவர் கன்னித்தாய்க் கருத்தைக் கட்டுரைத்தார்.2 மேற்கண்ட அறிஞர்களின் கருத்துக்கள் யாவும் வள்ளலார் அவர்கள் மறைவுக்குப் பின்னர் கண்டறிந்து கூறியவையாகும். அதாவது, வள்ளலார் 1874ஆம் ஆண்டில் மறைந்தார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் மறைந்து ஓராண்டு கழித்துதான் கால்டுவெல்லின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்னும் நூல் வெளியாகிறது. அதற்குப் பின்னர்தான் மற்ற அறிஞர்களின் ஆய்வு முடிவுகள் வெளிப்பட்டன. பற்றற்ற பரம ஞானியாகிய அடிகள் தமிழின் மாட்டுத் தணியாத பற்றுக்கொண்டிருந்தார். அகப்பற்று, புறப்பற்று இரண்டையும் அறவே அறுத்த அடிகள் தமிழ்ப்பற்றை அறுத்தாரில்லை. மற்றைப் பற்றுகளை விடற்கும், பற்றற்றா பற்றினைப் பற்றுதற்கும் தமிழ்ப்பற்று ஓர் துணையாதலாற் போலும். அடிகள் மற்றெல்லாப் பற்றுகளைத் துறந்தும் தமிழ்ப் பற்றைத் துறந்தாரிலர். தமிழ்ப் பற்றைத் தமக்கு இறைவனே தந்தான் என்பர். தமிழ்நாட்டிற் பிறப்பித்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் அடிகள், தமிழ்ப் பற்றைத் தந்ததற்காகவும் நன்றி கூறுவர். சத்தியப் பெரு விண்ணப்பத்தில், நமக்குத் தமிழ்ப்பற்றை உண்டாக்கியதற்காக அடிகள் இறைவனுக்கு நன்றி கூறும் பகுதி வருமாறு- எல்லா மானவராயும் ஒன்று மல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கு மறிதற்கும் மிகவு மிலேசுடையதாய்ப்பாடுதற்கும் துதித்தற்கு மிகவு மினிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர். தமிழ் மொழியினிடத்தே மனம் பற்றச் செய்ததற்கு இறைவனைப் பாராட்டும் அடிகள் ஆரிய முதலிய மொழிகளில் ஆசை செல்லவொட்டாது தடுத்ததற்காகவும் பாராட்டுகின்றார். தமிழின் இனிமையைக் கூறுகின்றவர் ஆரிய முதலியவற்றின் இன்னாமையையும் இயம்புகின்றார். இதனின்றும் பின்வரும் செய்திகள் தெளிவாகப் பெறப்படும். ஆரியம் முதலிய மொழிகள் இடம்பத்தை உண்டுபண்ணுவன. தமிழில் இடம்பம் இல்லை. தமிழில் மனம் பற்றச் செய்ததற்கு அடிகள் மகிழ்கின்றார். ஆரிய முதலியவற்றில் ஆசை செல்ல ஒட்டாது தடுத்ததற்கும் மகிழ்கின்றார். தென்மொழியினிடத்தே மனம் பற்றச் செய்து என்று கூறாது தென்மொழி ஒன்றனிடத்தே எனக் கூறுவதால், அடிகள் தமிழ்மொழி ஒன்றிலேயே பற்றுக்கொண்டிருந்தாரென்பது பெறப்படும்.3 உரைநடை சங்கக் காலத்திலிருந்து பிறந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவத்திலேயே இருந்தன. இலக்கணங்கள், நிகண்டுகள் போன்றவைகூட செய்யுள் வடிவத்தில்தான் அமைந்தன. உரைநடை என்பது ஆங்கிலத்தின் தொடர்புக்குப் பின் ஏற்பட்டதாகும். தமிழ் வளர்ச்சியின் எதிர்காலம் உரைநடை இலக்கியத்தின் வளர்ச்சியில் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட்டவர் வள்ளலார் ஆவார். அடிகள் மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற இரண்டு உரைநடை நூல்களை எழுதினார். மனுமுறைகண்ட வாசகம் அடிகள் காலத்திலேயே பதிப்பிக்கப்பட்டது. ஜீவகாருண்ய ஒழுக்கம் அடிகளது சித்திக்குப் பின்னர் அச்சாயிற்று. அடிகள் தமது ஒழிவிலொடுக்கப்பதிப்பில் எழுதிய பாயிர விருத்தியும், தொண்டமண்டல சதகப் பதிப்பில் எழுதிய நூற்பெயரிலக்கணமும் உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கமும் இன்ன பிறவும் அடிகளின் உரைநடைத் திறத்தைக் காட்டுவனவாம். குறள் தொண்டு இராமலிங்க அடிகள் தமது பாடல்களுள் பலவிடங்களிற் குறட்பாக்களையும் தொடர்களையும் கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளனர். அடிகள் அருளிய நெஞ்சறிவுறுத்தலில் தமது நெஞ்சுக்கு அறிவுறுத்தலாகப் பல குறட்பாக்களை எடுத்துக் கூறுகின்றார். "வள்ளுவன்தனை உலகிற்கே தந்து தமது மாணவர் உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக்கொண்டு வள்ளலார் திருக்குறள் வகுப்பை நடத்தினார். பெரும் புலவர் முதுமுனைவர் இளங்குமரனார் அவர்கள் "வள்ளுவர் வகுத்த அறம் இலக்கணம் என்றால் அவ்விலக்கணத்திற்கு அமைந்த இலக்கியம் வள்ளலாரின் வாழ்க்கை'' என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், வள்ளுவர் சுட்டும் அடைமொழி ஒன்றை விளக்கும் அருமையைக் கற்பார் களிப்புறுமாறு பலபக்க அளவுகளில் தனிப் பரப்பெனக் காட்டுகிறார். (எ-டு) அழிபசி, உடற்றும் பசி . அசைதானும் வள்ளுவர் வாக்கில் பொருளின்றி வருவது இல்லை எனப் பளிச்சிட்டுக் காட்டுகிறார். (எ-டு) முதற்றே. ஓதாக் கல்வி, சாவாக் கல்வி, பேரா இயற்கை, இன்ன திருக்குறளில் உண்மையைக் கண்டு கொள்ளுமாறு தம் ஆய்வால் துலக்குகிறார். வாழ்வால் நாட்டுகிறார். வள்ளுவர் வாக்கின் ஒரு பகுதி கொண்டு, அதன் மறுபகுதி ஈதெனக் காண வள்ளலார் உதவுகிறார். வள்ளலார் சொல்லை மேற்கொண்டு, அதனை வேறோர் பொருளுக்கு வேறொரு வகையில் பயன்படுத்தியும் வியப்புறுத்துகிறார். |