வழக்கறிஞர்களின் போராட்டம் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:00

நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் மோதிக் கொள்ளும் வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.

நீதிமன்றங்களில் முறைகேடாக செயல்படும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 1925ஆம் ஆண்டு இந்திய பார் கவுன்சில் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நாட்டு விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக ஆங்கிலேய நீதிபதிகள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய நிகழ்ச்சிகள் நடந்தன.

எனவே பார் கவுன்சிலுக்கு சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரத்தை வழங்கும் வகையில் 1961ஆம் ஆண்டு வழக்கறிஞர்களின் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி முறை தவறி நடக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மற்றும் சில நீதிபதிகளும் இணைந்து தங்களுக்குள்ள அதிகாரத்தை வழக்கறிஞர்கள் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து அதை அரசிதழில் வெளியிட்டனர்.

இதன்படி நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு வழக்கறிஞர் குடிபோதையில் இருந்தாலோ, நீதிபதிகள் மீது பொய்யானக் குற்றச்சாட்டை சுமத்தினாலோ, நீதிபதியைச் சூழ்ந்துநின்று முழக்கமிட்டாலோ, நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்றாலோ, நீதிமன்ற அரங்கில் கோரிக்கைத் தட்டிகளைப் பிடித்து நின்றாலோ அவர்கள் மீது அந்தந்த நீதிபதியே நடவடிக்கை எடுக்கலாம். வழக்காடும் உரிமையை இரத்து செய்யலாம் என்பதுதான் வழக்கறிஞர் சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளாகும்.

நீதிமன்ற வளாகத்தில் மேற்கண்டவாறு தவறுகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரத்தை நீதிபதிகளே கையில் எடுத்துக் கொள்வது பழிவாங்கும் நடவடிக்கையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது எனக்கூறிப் போராடும் வழக்கறிஞர்கள் அதே வேளையில் தங்களிடையே நடமாடும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு பார் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

"நீதிமன்றத்திற்குள் எத்தனையோ பட்டியலிடமுடியாத அசிங்கங்கள் அரங்கேறுகின்றன'' என நீதிநாயகம் சந்துரு அவர்கள் கவலை தெரிவித்திருப்பதையும் வழக்கறிஞர்கள் தங்கள் கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். இத்தகைய அசிங்கங்கள் நீதிமன்றத்தின் பெருமையையே குலைத்துவிடும்.

சமுதாயத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு உயர்மதிப்பு உள்ளது. மக்கள் அவர்களைச் சான்றோர்களாகக் கருதி மரியாதைக் கொடுக்கிறார்கள். மக்கள் அளிக்கும் இந்த மரியாதைக்கு உகந்தவர்களாக நீதித்துறையில் அங்கம் வகிக்கும் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் வரம்புமீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் போன்ற வழிமுறைகள் உள்ளன. இவற்றை புறந்தள்ளிவிட்டு வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நீதிபதிகள் மேற்கொள்வது வழக்கறிஞர்களின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை பறித்துவிடும். மேலும் தவறு செய்யும் நீதிபதியைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகவும். இவ்விதிமுறைகள் அமைந்துவிடக்கூடும்.

உயர்நீதிமன்ற நீதிபதி முதல் மாவட்ட நீதிபதி வரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதால், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாககூட வழக்கறிஞர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகலாம்.

தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது எதிர் தரப்பின் குற்றச்சாட்டாகும். வழக்கறிஞர்கள் தேர்தல் மூலம் பார்கவுன்சில் தலைவரையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பார்கவுன்சில் முறையாகச் செயல்படவில்லை என்றுகூறி அதன் கையில் உள்ள அதிகாரத்தை நீதிபதிகளே மேற்கொள்வது சனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கடமை தவறிய பார்கவுன்சில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவர்களை வெளியேற்றவேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உண்டு. ஆனால், தமிழக பார்கவுன்சில் அந்த கடமையை நிறைவேற்றத் தவறியக் காரணத்தினால் தற்போது அகில இந்திய பார்கவுன்சில் தலையிட்டு 1961ஆம் ஆண்டு - வழக்கறிஞர்களின் சட்டத்தை மீறிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணைப் பிறப்பித்திருக்கிறது.

இது தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சிலின் இணைச் செயலாளர் அசோக் குமார் பாண்டே விடுத்திருக்கும் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அகில இந்திய பார்கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தப்பட்ட விதிகளை மறு பரிசீலனை செய்து திருத்தி அமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வழக்கறிஞர்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதும் விதிகள் குழுவிற்கு இப்பிரச்சினையை அனுப்பவும் அதுவரை விதிமுறைகளை செயற்படுத்துவதை நிறுத்தி வைப்பதாகவும் கூறியிருக்கிறார்.''

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளியிட்ட ஒரு கருத்தினை நீதித்துறையைச் சேர்ந்த அனைவரின் சிந்தனைக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

"தற்போது நிலவும் சூழ்நிலைக்கேற்ப பொருத்தமானவை எனக் கருதியும் அவை நமக்குத் பெரிதும் உதவும் என்ற நோக்கத்துடனும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சூழ்நிலைகள் மாறுமானால், பழையசட்டங்கள் ஒருபோதும் பொருந்தியவை ஆகாது. மாறும் சூழ்நிலைக்கேற்ப அச்சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அல்லது அவை நமது கால்களைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலிகளாக மாறிவிடும். உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் போது. நாம் பின்தங்கி விடுவோம். எந்தச் சட்டமும் மாற்ற முடியாத சட்டங்கள் அல்ல. அறிவு வளர வளர சட்டங்களும் அதற்கேற்ற வகையில் வளர வேண்டும்.''

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சட்டங்களின் அடிப்படையிலும், அறஉணர்வின் அடிப்படையிலும் மக்களுக்கு நீதிகிடைக்க உதவ வேண்டிய புனிதமான கடமையை மேற்கொண்டிருக்கிறார்கள். காசுக்காகவும் வேறு ஆதாயங்களுக்காகவும் இந்தப் புனிதக் கடமைக்கு எதிராக செயல்படுவர்கள் யாராக இருந்தாலும் நீதிநெறிக்கு இழுக்குத் தேடுபவர்கள் ஆவார்கள்.