எங்கள் தந்தை - நீங்காத நினைவுகள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 13:07
எங்கள் தந்தையார் தம்மை முழுமையாகத் தமிழ்த் தொண்டிற்கு அர்ப்பணித்துக்கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. குடும்ப நலனைவிடத் தமிழன்னையின் தொண்டினை பெரிதாக மதித்தார். தமிழ்மீது அவர் கொண்ட பற்று பரம்பரையாக அவருக்குக் கிடைத்த பேறாகும். எங்கள் பாட்டனார் திரு. கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் மதுரையில் புத்தக வணிகம் செய்து வந்தார். விவேகாநந்தர் பெயரில் சொந்த அச்சகம் ஒன்றினையும் அவர் நடத்தி வந்தார். மதுரையின் மிகப் பழமையான அச்சகம் இதுவே.
இது 1921-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. மதுரைப் புதுமண்டபத்தில் சென்னை பி.நா. சிதம்பர முதலியார் புத்தகக் கடை ஒன்று இருந்தது. அதன் நிறுவாகப் பொறுப்பு முழுவதையும் எங்கள் பாட்டனார் கவனித்து வந்தார். சிறு வயதில் நான் என் பாட்டனாருடன் பலமுறை அந்தப் புத்தகக்கடைக்குச் சென்றிருக்கிறேன். புதுமண்டப வாயிலில் அவர் நுழைந்தால் வழி நெடுக இருக்கும் கடைக்காரர்களும் மக்களும் அவருக்குப் பயபக்தியுடன் வணக்கம் செலுத்துவார்கள்.
அந்நாளில் இருந்த தமிழ்ப் புலவர்களும், நாடக ஆசிரியர்களும் எங்கள் பாட்டனாரைக் கண்டு பேசுவதற்காக அடிக்கடி வருவார்கள். அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களையும் எங்கள் பாட்டனார் பதிப்பித்தார். குறிப்பாகத் தமிழ் நாடக உலகின் வழிகாட்டியும் மாபெரும் மேதையுமான தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் எழுதிய ஒன்பது நாடக நூல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட பெருமை எங்கள் பாட்டனாரைச் சாரும். மேலும் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளரான பி.c. முதன் முதல் எழுதிய ஆண்டாள் சரித்திரம் என்னும் நூலையும் எங்கள் பாட்டனாரே பதிப்பித்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின் தந்தையார் பெரும்புலவர் திரு. நடேச முதலியார் அவர்கள் எங்கள் தந்தையின் தமிழாசிரியராக விளங்கினார். அவர் ஊட்டிய தமிழறிவு எங்கள் தந்தையாரைச் சிறந்த தமிழ் அறிஞராக உருவாக்கிற்று.
இளமையில் "தமிழ்நாடு வாலிபர் சங்கம்' என்ற அமைப்பினை நிறுவி மதுரையில் தீவிரமாக வேலை செய்தார். இரண்டாவது உலகப்போரின்போது பர்மாவிலிருந்து உயிர் தப்பி ஓடிவந்த தமிழர்களுக்கு இச்சங்கம் பேருதவி புரிந்தது.
திருக்குற்றாலத்திருந்த திரு. தி. ப. சுப்பிரமணியதாசு அவர்களை மதுரைக்கு அழைத்துவந்து மதுரையில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி அதனுடைய செயலாளராகவும் தலைவராகவும் புரவலராகவும் இருந்து எங்கள் தந்தையார் ஆற்றிய தொண்டு தமிழகம் அறிந்தவொன்று.
(அதைப்போலவே மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பணியினை ஏற்று அதைப் புனர்நிர்மாணம் செய்தும், செந்தமிழ்க் கல்லூரியை நிறுவியும் செந்தமிழ் இதழை வெளியிட வழிவகுத்தும், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவை இந்த நாடே வியப்புற நடத்தியும் அருந்தொண்டாற்றினார்கள்.)
1942-இல் மதுரையில் முத்தமிழ் மாநாடு என்ற பெயரில் ஒரு மாபெரும் மாநாட்டினை நடத்த முன்னின்று பணியாற்றினார்.
1948-இல் சனவரி 1-2இல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள் விழாக்குழுவின் செயலாளராகப் பொறுப்பேற்றுச் சிறப்புற நடத்தினார்.
தாம் உருவாக்கி வளர்த்த திருவள்ளுவர் கழகத்தின் வெள்ளிவிழாவினையும் திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு விழாவினையும் கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தார்.
தமிழ் அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும் என்பதில் எங்கள் தந்தையாருக்கு இருந்த தனியாத ஆர்வத்தின் காரணமாக நாவலர், கணக்காயர், டாக்டர் ச. சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் ஆண்டு விழாக்குழுவின் செயலாளராகப் பொறுப்பேற்று அதைக் கண்டோர் வியக்கும் வண்ணம் மதுரையில் நடத்தினார். அதைப் போலத் தமிழ்ப் பெரியார் திரு. அ.கி. பரந்தாமனார், ஒளவை சு. துரைசாமி பிள்ளை, பேரறிஞர் கார்மேகக் கோனார், கல்வெட்டறிஞர் சதாசிவ பண்டாரத்தார், ஆட்சிச் சொற்காவலர் கி. இராமலிங்கனார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், குறள் வேந்தர் பண்டித மீ. கந்தசாமிப் புலவர், பேராசிரியர் திரு. அ.மு. பரமசிவானந்தம் போன்ற பலருக்கும் விழா எடுத்து மகிழ்ந்தார்.
இல்லம் நாடி வரும் தமிழறிஞர்களை வரவேற்று உபசரிப்பதிலும், அவர்களோடு இலக்கிய உரையாடல் நிகழ்த்துவதிலும் எங்கள் தந்தையாருக்குத் தணியாத வேட்கை இருந்தது. எங்கள் தாய்வழிப் பாட்டனார் திருநெல்வேலி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவரான சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களிடம் எங்கள் தந்தையாருக்கு இருந்த பயபக்தி அளவிட முடியாதது. அவரும் மதுரை வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு வந்து தங்கி விருந்துண்டு உரையாடி மகிழ்ந்து செல்வார்.
வித்துவான் திரு. ரா. ராகவய்யங்கார், கோவை சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், திருவனந்தபுரம் இசைச்செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை, தமிழ்ப் பேரறிஞர் திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை, கா. சுப்பிரமணியபிள்ளை, பண்டிதமணி மு. கதிரேசஞ்செட்டியார், மறைமலை அடிகள், பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார், ஆ.மு. சரவணமுதலியார், திரு. அருணாசலம்பிள்ளை, ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், பாவநாசம் இலக்குமண சுவாமிகள், திரு. நடேச முதலியார், தமிழிசை வித்தகர் குடந்தைச் சுந்தரேசனார், அருணாசலக் கவிராயர், எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, அப்பனையங்கார், நல்லுசாமிப்பிள்ளை, சுந்தரமூர்த்தி ஓதுவார் அருணாசலக் கவுண்டர் போன்ற பழம்பெரும் தமிழறிஞர்களின் தொடர்பு எங்கள் தந்தையாருக்கு இருந்தது.
பசுமலை நாவலர் ச. சோமசுந்தரபாரதியார் அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் எங்கள் தந்தையாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. நாவலர் அவர்களின் தலைமகள் (திருமதி) இலட்சுமிபாரதி, மருமகன் எல். கிருஷ்ணசாமி பாரதியார், நாவலர் அவர்களின் மற்றொரு புதல்வி டாக்டர் லலிதா காமேசுவரன், மருமகன் டாக்டர் காமேசுவரன் போன்றோர் எங்கள் குடும்பத்துடன் இன்றளவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.
டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், டாக்டர் அ. சிதம்பரநாதனார், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், டாக்டர் மா. இராசமாணிக்கனார், பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், டாக்டர் மு. வரதராசனார், டாக்டர்
நா. பாலுசாமி, பேராசிரியர் அ.மு. பரமசிவாநந்தம், எஸ். ஆழ்வார் ஐயங்கார், டி.ஏ.வி. நாதன் திருவாசகமணி, பாலசுப்பிரமணியம், திருக்குறள் முனிசாமி போன்ற தமிழ் அறிஞர்கள் எங்கள் தந்தையாருக்குச் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள்.
எங்கள் தந்தையாருக்குப் பத்திரிகைத் துறையில் இருந்த ஈடுபாட்டின் விளைவாகக் கலைமகள் ஆசிரியர் திரு. கி.வா.ஜ., அகிலன், கல்கி திரு. கிருஷ்ணமூர்த்தி, சுத்தானந்த பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தீபம், நா. பார்த்தசாரதி போன்றவர்களுடன் நட்புப் பூண்டு உறவாடினார். எங்கள் அன்னையார் காலமான சோகத்தில் எங்கள் தந்தையார் ஆழ்ந்து இருந்தபோது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மதுரைக்கு வந்து சில நாட்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கி ஆறுதல் கூறியது இன்னும் என் நினைவில் நிற்கிறது.
மதுரையில் பெரும் தமிழ்த்தொண்டு புரிந்த கருமுத்து தியாராசச் செட்டியார் குடும்பத்துடன் எங்கள் தந்தையாருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. கருமுத்து அவர்களின் துணைவியார் டாக்டர் (திருமதி) இராதாதியாகராசன், புதல்வர்கள் கருமுத்து தி. சுந்தரம், கருமுத்து தி. மாணிக்கவாசகம், கருமுத்து தி. கண்ணன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல்வேறு தமிழ்ப் பணிகளில் இக்குடும்பத்தினரும் எங்கள் தந்தையாரும் ஒன்றுபட்டு நின்றனர்.
அதைப் போலத் தமிழ் நாடக உலகிலும் திரையுலகிலும் கொடிகட்டிப் பறந்த திரு. எம்.எம். தண்டபாணிதேசிகர் எங்கள் இல்லத்திலேயே ஒரு பகுதியில் வாழ்ந்தார். அதைப் போலவே திரு. எம்.கே. தியாகராச பாகவதர், கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.எஸ். சகோதரர்கள், திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரிடமும் எங்கள் தந்தையாருக்கு அளவு கடந்த அன்பும் நட்பும் இருந்தது. அந்தக் காலத்தில் நாடக உலகில் சிறந்து விளங்கிய நடிகர் திரு. எம்.எம். சிதம்பரநாதன், திரு.எம்.எஸ். சக்திவேலு ஆச்சாரியார், இராசா சண்முகதாசு, திருமதி. டி.எம். கமலவேணி போன்றோரிடமும் அவர்கள் அன்பு செலுத்தினார்கள். எங்கள் தந்தை தமிழுக்காக எடுத்த அத்தனை விழாக்களிலும் அவர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். எந்த வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு எங்கள் தந்தை அழைத்தபோதெல்லாம் அவர்கள் வந்தார்கள்.
தமிழ் அறிஞர்களிடம் அவர் வைத்திருந்த பக்தியின் விளைவாகவோ என்னவோ டாக்டர் இராசமாணிக்கனார், ஒளவை துரைசாமிப்பிள்ளை. அ.கி. பரந்தாமனார் அதற்குப் பின்னர் டாக்டர் சிதம்பரநாதனார், டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோரிடம் தமிழ்க்கல்வி கற்க என்னை அனுப்பிவைத்தார்கள். எங்கள் வீட்டில் தமிழ் அறிஞர்கள் வருவதும் போவதும் எங்கள் தந்தை அவர்களிடம் அளவளாவுவதும் ஆகிய அப்போது அவர்களுக்குரிய சிறிய தொண்டுகளைச் செய்யும் பேறு எனக்கும் என் சகோதரர்களுக்கும் சிறுவயதில் கிடைத்தது. அந்த இனிய நாட்களை இன்றைக்கும் மறக்கவே முடியாது.
எங்கள் அன்னையும் கொஞ்சமும் முகம் கோணாமல் சளைக்காமல் வருகை தரும் தமிழ் அறிஞர்களுக்கு விருந்தோம்பும் தொண்டினைத் தொடர்ந்து செய்த வண்ணமே இருப்பார். தமிழ் மணம் நிறைந்த சூழலில் எங்களை வளர்த்ததுதான் எம் தந்தையார் எங்களுக்கு அளித்த பெரும் செல்வமாகும்.
இறைத்தொண்டு
இறைப்பணியிலும் எங்கள் தந்தையார் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டார். மதுரை மீனாட்சி திருக்கோவிலில் தேவாரம் நாள்தோறும் பாடப்படவேண்டுமென்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் விளைவாக 1944-ஆம் ஆண்டு முதல் அங்கு தேவாரம் பாடுவது தொடங்கப்பட்டது.
தமிழவேள் திரு. பி.டி. இராசன் அவர்களின் தலைமையில் மீனாட்சி திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றபோது அதில் எங்கள் தந்தையார் முழுமையாக ஈடுபட்டுப் பல சீர்திருத்தங்களை அந்தக் கோயிலில் செய்வதற்குக் காரணமாக அமைந்தார். அந்தத் தொண்டில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு நாள் மீனாட்சி கோயிலில் கோபுரத்தின் படி வழியாக மேலே ஏறிச் சென்று அங்கு நடைபெறும் வேலைகளைப் பார்வையிட்டுத் திரும்பும் வழியில் திடீர் என்று இருதயநோய் அவரைத் தாக்கிற்று. ஆனாலும் எவ்வித அபாயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.
அதைப்போல மதுரையில் சாயிபாபா வழிபாடு சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து, வழக்குரைஞர் திரு. இரத்தினசபாபதி முதலியார் அவர்களுடன் சேர்ந்து மதுரையில் சாயிபாபா வழிபாட்டு இயக்கத்தை நடத்தினார். முதன் முதல் மதுரை அன்னக்குழி மண்டபத்தில் சாயிபாபா வழிபாடு நிகழ்த்தப்பட்டது.
ஐயப்பன் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் திரு. பி.டி. இராசன் அவர்கள் நடத்தியபோது அவருக்கு எனது தந்தையார் உறுதுணையாக நின்றார்.
பழமுதிர் சோலையில் பாழடைந்து கிடந்த முருகன் திருக்கோவிலை மீண்டும் எழுப்ப எங்கள் தந்தை முயற்சி செய்தபோது அவருக்கெதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி விடா முயற்சியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்துக் குட முழுக்கும் நிகழ்த்தினார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து நின்று அவரின் ஆசியுடன் அருள்நெறித் திருக்கூட்டத்தின் முதல் தலைவராக விளங்கி அரும்பணியாற்றினார்.
பழைமையான மதுரைத் திருஞான சம்பந்த மடாலயம் சீர்குலையும் நிலையில் இருந்தபொழுது அதை மீண்டும் நிலை நிறுத்தப் பெரு முயற்சிகளை எடுத்துக் கொண்டார். எங்கள் தந்தையாரின் நெருங்கிய நண்பரும் கொழும்பு சுந்தரம் & கம்பெனியின் உரிமையாளரும் சிவநேசச் செல்வருமான திரு. சோமசுந்தரம்பிள்ளை அவர்களை மதுரைக்கு வரவழைத்து மதுரை ஆதீனகர்த்தர் பதவி ஏற்பதற்குச் சம்மதிக்க வைத்தார். மடாலயத்தின் பொறுப்பினை ஏற்க சோமசுந்தர சுவாமிகள் வந்தபோது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்துச் சிறப்பித்தார்.
அதைப் போலவே திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகிய பல்வேறு மடாலயங்களின் தலைவர்களுடனும் அவருக்குத் தொடர்பு இருந்தது.
சமுதாயத் தொண்டு
கூட்டுறவுத் துறையிலும் எங்கள் தந்தையாருக்கு ஈடுபாடு இருந்தது. மதுரை நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் தலைவராக இருந்து அதைச் சிறப்பாக நடத்தினார். பல்வேறு தமிழ் அறிஞர்கள் சொந்த வீடுகள் கட்டிக்கொள்ள இந்தச் சங்கத்தின் மூலம் உதவி செய்தார். இச்சங்கத்திற்குச் சொந்தக் கட்டிடம் ஒன்று கட்டி அதைத் திறந்து வைத்த பிறகு அப்பதவியிலிருந்து விடுபட்டுக்கொண்டார். அதைப்போல மதுரை நகர் கூட்டுறவு நில அடமான வங்கியின் செயலாளராகவும் பல காலம் தொடர்ந்து அவர் பணியாற்றினார். ரோட்டரி, லயன்ஸ் போன்ற அனைத்துலகச் சங்கங்களில் ஈடுபட்டு அவற்றின் போக்கில் ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தினார்.
ரோட்டரி கிளப் என்பதைச் சுழற்குழு என்றும், லயன்ஸ் கிளப் என்பதை அரிமாச் சங்கம் என்றும், செந்தமிழிலில் பெயர் மாற்றம் செய்தார். அதைத் தமிழகம் எங்கும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிகாரிகளும் பெரும் தொழிலதிபர்களும் உரையாற்ற அமைக்கப்பட்ட இந்த அமைப்புகளில் தமிழ் அறிஞர்களும் பங்குபெற வழிவகை செய்தார். ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட இந்த அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தமிழில் நடத்த வழிகாட்டினார்.
அரசியல் தொண்டு
எங்கள் தந்தையாருக்கு அரசியல் துறையில் அவ்வளவு நாட்டம் இல்லை. என்றாலும் அவருடைய இளம்பருவத்து நண்பர்கள் பலரும் அரசியல் துறையில் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். காலஞ்சென்ற பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் என் தந்தையாரின் பள்ளித் தோழர். காந்தியத் தொண்டர் ஏ.என்.ராஜன் என் தந்தையாரின் இளம்பருவத்து நண்பர். அவரின் தமையனாரும் முன்னாள் மதுரை நகரவைத் தலைவருமான (திரு.) அ. சிதம்பர முதலியார், தியாகி ரெ. சிதம்பரபாரதியார் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் எங்கள் தந்தையாருடன் நெருங்கிய நட்புறவு கொண்டவர்களாக வாழ்ந்தார்கள். எனது தந்தை என் பாட்டனாருக்கு ஒரே பிள்ளையாக இருந்த காரணத்தினால் சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடமுடியவில்லையே தவிர காந்தியடிகள் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் அவருக்கிருந்த ஈடுபாட்டினை யாராலும் அளவிடமுடியாது. இளம் பருவத்திலிருந்தே இறுதிவரை தூய கதர் ஆடை அணிவதையே விரதமாகக் கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் பல்வேறு வகையிலும் உதவி செய்தார்.
தமிழரசுக் கழகத்தினைச் சிலம்புச் செல்வர் திரு. ம.பொ. சிவஞானம் அவர்கள் தொடங்கியபோது, அக்கழகத்தின் மதுரை நகரத் தலைவராக விளங்கினார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்கினாலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய நட்பும் தோழமையும் இருந்தது. பெரியார் ஈ.வே.ரா., இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு. எம். பக்தவச்சலம், கம்யூனிஸ்டத் தலைவர் பி. இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, தி.மு.க. தலைவர் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், மதுரை முத்து போன்ற பலருடன் நட்புப் பூண்டொழுகினார்.
தமிழவேளுடன் தொடர்பு
தமிழவேள் திரு. பி.டி. இராசன் அவர்களின் இணைபிரியாத நிழலாக எங்கள் தந்தையார் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. மதுரை மேலைமாசி வீதியில் இரண்டு குடும்பங்களின் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. தமிழவேள் அவர்களின் சிறிய தந்தையார் திரு. சுப்பிரமணிய முதலியாரும், எங்கள் பாட்டனார் கிருஷ்ணபிள்ளை அவர்களும் நட்புறவு கொண்டிருந்தவர்கள். தமிழவேளின் இளைய சகோதரர் திரு. சண்முகவேல்ராசன், எங்கள் தந்தையாரின் உற்ற தோழர். இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள். அடுத்தடுத்த வீட்டில் வாழ்ந்த குடும்பங்கள் என்ற முறையிலும் தமிழ்த்தொண்டில் ஒன்றாக ஈடுபட்டவர்கள் என்ற முறையிலும் தமிழவேள் அவர்களுடன் எங்கள் தந்தையாருக்கு இருந்த ஈடுபாடு நாளுக்குநாள் வளர்ந்தது. மதுரையில் எத்தகைய பெரிய நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர் தலைவராகவும் எங்கள் தந்தையார் செயலாளராகவும் பொறுப்பேற்பார்கள். எங்கள் தந்தையாரின் சம்மதமில்லாமல் எந்தக் காரியத்தையும் செய்வதற்குத் தமிழவேள் அவர்கள் துணியமாட்டார்கள். இதிலிருந்து தமிழவேள் அவர்கள் எங்கள் தந்தையாரிடம் எத்தகைய அன்பு வைத்திருந்தார் என்பது தெளிவாகும். இராமபிரானிடம் அன்பும் பாசமும் கொண்டு அவனது நிழல் போல எப்படி இலக்குவன் தொண்டாற்றினானோ, அதுபோலத் தமிழவேள் அவர்களுடன் எங்கள் தந்தையார் இணைபிரியாது நின்றார். எங்கள் குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழவேள் அவர்களின் தலைமையில்தான் நடைபெறும். அந்த அளவுக்கு தமிழவேள் அவர்களிடத்து எங்கள் தந்தையார் மதிப்புக் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து நின்று தமிழ்ச்சங்கப் பொன்விழா, மதுரைத் திருவள்ளுவர் கழக வெள்ளிவிழா, ஈராயிரம் ஆண்டுவிழா, திருக்கோயில் குடமுழுக்கு விழா, பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாக்கள் பல நடத்தியுள்ளனர். அவை இன்னமும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் நின்று நிலவுகின்றன. தமிழவேள் அவர்களின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்புகளில் தாம் வகித்து வந்த அத்தனை பதவிகளிலிருந்தும் எங்கள் தந்தையார் விலகி அவற்றிலிருந்து ஒதுங்கினார். தமிழவேள் இல்லாமல் இனி எந்தப் பொதுத் தொண்டிலும் ஈடுபடுவதில்லை என்பது அவரது முடிவாக இருந்தது. எனது தந்தையாரின் நெஞ்சத்தில் தமிழவேள் அவர்கள் எத்தகைய இடத்தினைப் பெற்றிருந்தார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
தொழிலிலும் தமிழ்
எங்கள் பாட்டனாருக்குப் பின் குடும்பத் தொழிலான அச்சகம், புத்தக விற்பனைக் கடை ஆகியவற்றைப் பொறுப்பேற்றுக் கொண்டு விரிவாக வளரச் செய்தார் என் தந்தையார். புத்தகக்கடைப்பிள்ளை வீடு என்று அந்தக் காலத்தில் எங்கள் குடும்பம் வழங்கப்பட்டு வந்தது. அந்தப் பெருமையை மேலும் வளர்த்தார். தொழிலையும் தமிழ்த்தொண்டாற்றுவதற்குரிய கருவியாகக் கருதினார். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் விவேகாநந்தாக் காலண்டர் தமிழ் நாடெங்கும் புகழ்பெற்றது. மக்கள் விரும்பி விலை கொடுத்து வாங்கும் காலண்டராக அது இன்றளவும் திகழ்கிறது. குறிப்பாக மத்திய, தென் மாவட்டங்களில் அது இல்லாத வீடே இல்லையென்று நிலைத்த புகழ்பெற்ற அந்தக் காலண்டரை விவேகாநந்தா நாட்காட்டி எனத் திருத்தி அதிலுள்ள குறிப்புகள் அத்தனையும் தமிழாக மாற்றி வெளியிடச் செய்தார். தமிழகத்தில் வேறு எந்த நாட்காட்டியிலும் இல்லாத முறையில் அதில் தமிழ் எண்களைப் பயன்படுத்தித் தமிழ் எண்களைப் பற்றித் தெரியாத இந்த காலத்தில் அதை எல்லோரும் சுலபமாகப் புரிந்துகொள்ள அந்தத் தமிழ் எண்களுக்கு நடுவில் குறியீடுகளுக்குள்ளே ஆங்கில எண்களைப் போட்டு வெளியிட்டார். அதைப்போல "டைரி' என்று வழங்கப்பட்டதை நாட்குறிப்பு எனத் தமிழில் வெளியிட்டார்.
நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் இடம் பெறவேண்டும். அதன் மூலம் குறள் வீடுதோறும் பரவுவதற்கு வழி ஏற்படும் எனத் திட்டமிட்டுத் திருக்குறள் நாட்காட்டி என்ற பெயரில் ஒரு நாட்காட்டியும் வெளியிட்டார். அதில் ஒவ்வொருநாளும் ஒரு திருக்குறளையும் அதன் கருத்தையும் வெளியிடச் செய்தார். தமிழகத்தில் வெளியாகும் நாட்காட்டிகளில் பொதுவாகக் கோயில் திருவிழாக்கள், அரசு விடுமுறை நாட்கள் போன்றவை மட்டுமே இடம்பெறும். ஆனால் விவேகாநந்தா நாட்காட்டியில் தேசியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள், தமிழ் அறிஞர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் ஆகியவற்றையெல்லாம் குறிக்கச் செய்தார்.
பல்வேறு தமிழறிஞர்களின் நூல்களையெல்லாம் தமது அச்சகத்தின் மூலம் பதிப்பித்தார். தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கென்று புதுமையான முறையில் படங்கள் நிறைந்த பாடப் புத்தகங்களை முதன் முதலாகத் தமிழகத்தில் வெளியிட்ட பெருமை எங்கள் தந்தையாருக்கு உண்டு. அதிலும் அவர் தமிழை மறக்கவில்லை. தமிழ்க்கொடி வாசகம் என்ற பெயரிட்டு 1-வது முதல் 5-வது வகுப்பு வரை பாடப்புத்தகங்களாக வெளியிட்டார்.
அவரே நூல் ஆசிரியராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். அந்த நாளில் வெளிவந்த குடியரசு, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு விஷயங்கள் குறித்துக் கட்டுரைகள் அடிக்கடி எழுதினார். விவேகாநந்தம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றினையும் "மதுரை மலர்'' என்ற பெயரில் வார இதழ் ஒன்றினையும் பலகாலம் நடத்தினார். சிறந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதச் செய்து அவற்றில் வெளியிட்டார்.
தியாக வாழ்வு
எங்கள் தந்தையாரும் அன்னையாரும் நடத்திய இல்வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியான இல்வாழ்க்கை ஆகும். எனக்கு நினைவு தெரிந்தவரை ஒருமுறைகூட எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் இருவரும் வாதமிட்டதை நான் கண்டதே இல்லை. எங்கள் தந்தையார் விருப்பம் எதுவோ அதைத் தம் தலையாய கடமையாகக் கொண்டு நிறைவேற்றி அதில் மகிழ்ச்சி கண்டவர் எங்கள் அன்னையார். அதைப்போலக் குடும்பத்தைப் பற்றிய சகல விஷயங்களையும் எங்கள் அன்னையாரின் முழுப் பொறுப்பிலே எங்கள் தந்தையார் விட்டிருந்தார். செழுங்கிளை தாங்குதல் என்ற சொற்றொடருக்கு இருவரும் இலக்கணமாகத் திகழ்ந்தனர். உறவினர்கள் பலரும் எங்கள் வீட்டிலேயே வளர்ந்தனர். எப்பொழுதும் உறவினர்களின் வரவால் எங்கள் வீடு நிறைந்து இருந்தது. எங்கள் தந்தையாரைக் காண வரும் தமிழ் அறிஞர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று விருந்தோம்பும் பண்பினை எங்கள் அன்னையார் இயற்கையாகவே பெற்றிருந்தார்.
எங்கள் தந்தையாரின் மனைத்தக்க மாண்புடைய மனையாட்டியாக வாழ்ந்த எங்கள் அன்னையார் வாழ்வரசியாக எங்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தார். அப்பொழுது நாங்கள் எல்லோரும் சிறிய பிள்ளைகள். ஆனாலும், எங்கள் அன்னையார் மறைந்த பின் நண்பர்களும் உறவினர்களும் எவ்வளளோ வற்புறுத்தியும் கூட எங்கள் தந்தையார் மறுமணம் செய்துகொள்ளப் பிடிவாதத்துடன் மறுத்துவிட்டார். எங்களுடைய எதிர்கால நல்வாழ்விற்காகத் தியாக வாழ்வு வாழ்ந்தார்.
பிள்ளைகளைப் பேணிய பாங்கு
தாம் பெற்ற பிள்ளைகளை ஒருமுறைகூட எங்கள் தந்தையார் அடித்ததாக எனக்கு நினைவே இல்லை. சிறுவயதில் வேண்டுமானால் எங்கள் அன்னையாரிடம் அடிபட்டு இருப்போமே தவிர எங்கள் தந்தையாரிடம் அத்தகைய தண்டனையை நாங்கள் ஒருபோதும் பெற்றதில்லை. பிள்ளைகளுக்கு அவர் கொடுத்த சுதந்திரத்தை வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது. படிப்பு விஷயத்தில் ஆகட்டும் அல்லது வளர்த்தபின் நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட துறைகளிலாகட்டும், எதிலும் எங்கள் தந்தையார் தலையிட்டதில்லை. அவ்வப்போது அறிவுரைகள் கூறுவார்களே தவிர எந்தத் துறையில் ஈடுபடவேண்டும் என்பதைப் பற்றி ஒருபோதும் அவர் வற்புறுத்தியதில்லை.
எனது சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றபோது அவற்றைத் தமிழ்த் திருமணங்களாக நடத்தி மகிழ்ந்தார். வரதட்சினை கொடுப்பதையும் வாங்குவதையும் அறவே வெறுத்தார். எங்கள் தந்தையார், தம் பெண் மக்களின் திருமணங்களிலும், புதல்வர்களின் திருமணங்களிலும் இந்தக் கொடுமை தலைகாட்டாதபடி செய்தார்.
அரசியல் துறையில் நான் தீவிரமாக ஈடுபடுவதற்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை என்னுடைய பொதுவாழ்வில் குறுக்கிட்டு எந்த வகையிலும் எத்தகைய தடையையும் அவர் விதித்ததில்லை. மாறாக என்னைப் பல வகையிலும் ஊக்குவித்தார். அவ்வப்போது அரசியல் நிலைமைகளைப் பற்றி மனம் திறந்து பேசி எனக்குப் பல விஷயங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். எனது தந்தையார் ஆற்றிய தமிழ்த் தொண்டும், பொதுத் தொண்டும் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரால் பெரிதும் மதித்துப் பாராட்டப்பட்டுள்ளன. இன்னமும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மூத்த அரசியல் தலைவர்களும் மூத்த தமிழ் அறிஞர்களும் என்னிடம் செலுத்தும் அன்பிற்கு அடிப்படையே எனது தந்தையின் மீது அவர்கள் வைத்திருக்கிற மதிப்பின் விளைவாகும். பொது வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு வாய்ப்புகளுக்கு அவருடைய தன்னலம் கருதாத தொண்டு அடித்தளமாக அமைந்தது.
சீர்திருத்த செம்மல்
எங்கள் தந்தையார் தெய்வ பக்தி நிரம்பியவர்கள். ஆனால் அதே நேரத்தில் மூட நம்பிக்கைகளுக்கும் மத வேறுபாடுகளுக்கும் அடிபணிபவர் அல்லர். மாறாக அவற்றை முழுமூச்சாக எதிர்த்துச் சீர்திருத்தச் செம்மலாக ஆரம்ப நாள் முதல் விளங்கி வந்தார். எந்தக் கட்டத்திலும் சாதிப் பாகுபாடோ, மதப் பாகுபாடோ அவருடைய சிந்தனையில்கூட தோன்றியது கிடையாது. சகல மதத்தினரையும் சகலச் சாதியினரையும் அவர் சமமாகவே நடத்தி எங்கள் வீட்டில் உபசரிப்பதை இயற்கையான வழக்கமாகக் கொண்டிருந்தார். அதை அவர் எங்களுக்கும் கற்பித்தார்.
என்னுடன் படித்த நண்பர்கள் பலர் கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டவர்கள். அந்தக் கலப்புத் திருமணங்களை நானே முன்னின்று நடத்தவேண்டியவனானேன். எங்கள் தந்தையாரிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற வேண்டுமென்று நான் அணுகியபோது மிக்க மகிழ்ச்சியுடன் அதை ஏற்று, அந்தத் திருமணங்களை தனது இல்லத்திலேயே நடத்தி, அந்தத் தம்பதிகளைப் பல மாதங்கள் வரை எங்கள் வீட்டிலேயே தங்கி இருக்கவும் செய்தார். எனது இளமைப் பருவ நண்பர் திரு. ஆ. செல்வராசன் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். அவர் இந்து மதத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றினர். அதைப்போலவே, என்னுடன் படித்த திரு. வீ. பாலகிருஷ்ணன் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். அவர் எங்களுடன் படித்த மும்தாஜ் என்ற முஸ்லீம் பெண்ணைக் காதலித்தார். திரு. பாலகிருஷ்ணன் கல்லூரிப் பேராசிரியராகவும், திருமதி. பாலகிருஷ்ணன் மகளிர் கல்லூரியில் முதல்வராகவும் விளங்கினர். இந்து நாயுடு வகுப்பைச் சேர்ந்த டாக்டர் விசய வேணுகோபாலன் பிராமண வகுப்பைச் சேர்ந்த சரசுவதியை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் டாக்டர் பட்டங்களைப் பெற்று மதுரைப் பல்கலைக் கழகத்தில் உயர் பதவி வகித்தார்கள். அவர்களின் திருமணங்களை நான் முன்னின்று நடத்த வேண்டியவனானேன் திருமணமான தம்பதிகள் எங்கள் இல்லத்திற்கு வந்தபோது எங்கள் தந்தையார் முகமலர்ச்சியுடன் அவர்களுக்கு ஆசி வழங்கியதும் அவர்கள் பல மாதங்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கி இருந்ததும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும். மேற்கண்ட தம்பதிகளின் குடும்பத்தினர் அவர்களை உதாசீனப்படுத்தியும்கூடத் தமது சொந்தப் பிள்ளைகளைப்போல அவர்களையும் அரவணைத்து எங்கள் தந்தையார் காத்தார்.
எங்களது கடைசித் தம்பி கோமதிநாயகம் காதல் வழிக் கலப்புத் திருமணம் செய்து கொண்டபோது அதையும் அவ்வாறே ஏற்றுக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் ஏற்க வைத்துக் கொஞ்சம் கூட வேற்றுமை பாராட்டாமல் அரவணைத்துக் காத்த பெருமை அவரைச் சாரும்.
அதைப்போலச் சாதி - சமயங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவர்களின் வாழ்க்கை இருந்ததற்கு எவ்வளவோ சான்றுகள் கூறலாம். அழகர்மலையில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் எழுப்ப அவர் முனைந்து நின்றபோது வைணவர்களில் சிலர் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். நீதிமன்றம் வரை சென்று வழக்காடவும் செய்தார்கள். அந்த நேரத்தில் சைவமும், வைணவமும் வெவ்வேறு அல்ல; இரண்டுமே ஒன்றேதாம் என்ற நிலையை எடுத்துக்கூறி அந்தச் சிக்கலைத் தீர்த்துப் பழமுதிர்ச்சோலை மலையில் முருகன் கோவில் நிலைபெறச் செய்தார்.
குணநலன்கள்
காலந்தவறாமை அவருடைய சிறந்த பண்பாடுகளில் ஒன்றாகும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் குறித்த நேரத்தில் முடிப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. காலத்தைப் பொன்போல் கருதிப் போற்றியவர் அவர். காலம் தவிர்ப்பவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது. அதை ஒரு ஒழுக்கக் கேடாக நினைப்பவர் அவர்.
கடுஞ்சொல் இன்மை என்பது அவருடன் பிறந்ததாகும். யாரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் கடுமையான சொற்களைக் கையாண்டது கிடையாது. தவறு செய்பவர்களைத் திருத்தும் வகையில் மென்மையான சொற்களால் ஆனால் உறுதியுடன் தமது கண்டனத்தை அவர் தெரிவிப்பார். கேட்பவர்கள் நொந்து போவார்கள். இனி ஒரு முறை இத்தகைய தவற்றைச் செய்யக்கூடாது என்ற உணர்வை அந்தக் கணமே அவர்கள் பெறுவார்கள்.
செய்நேர்த்தி எங்கள் தந்தையாருக்குக் கைவந்த கலை. எந்தக் காரியம் செய்தாலும் அதை நேர்த்தியாகப் பிறர் பாராட்டும் விதத்தில் செய்ய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார். ஏனோ தானோ என்று எந்தக் காரியத்தையும் செய்வது அவருக்கு அறவே பிடிக்காது. செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும் என்பது அவர் கடைப்பிடித்த கொள்கை. மற்றவர்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்பினார்.
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்ப்பது அவருடைய பண்பாகும். விருந்தினர் இல்லாத நாள் வீணான நாள் என்று எண்ணுவார். விருந்தாளிக்குரிய வசதிகள் எல்லாம் சரிவரச் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தாமே நேரில் பார்வையிடுவார். அதிலும் தமிழ் அறிஞர்கள் விஷயத்தில் மிகக் கவனம் செலுத்துவார். நோய்வாய்ப்பட்ட தமிழ் அறிஞர்கள் பலரை எங்கள் இல்லத்திற்குக் கூட்டி வந்து பெற்ற தாயினும் சாலப் பேணிடுவார். நோய் முற்றிலும் தீர்ந்த பின் அவர்களை அனுப்பி வைப்பார்.
இன்னா செய்தார்க்கும் நன்னயம் என்ற பெருங்குணக்குன்றாக விளங்கினார். தந்தையாருக்கோ அல்லது அவர் பொறுப்பேற்றிருக்கிற பல்வேறு அமைப்புகளுக்கோ எதிராகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தவர்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக எங்கள் தந்தையாரை அணுகும்போது தவறிழைத்தவர்கள் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டுத் தம்மாலான உதவியைச் செய்து அனுப்பி வைப்பார். இதைக் கண்டு நானே பலமுறை வியந்திருக்கிறேன். எங்கள் தந்தையாரின் நெருங்கிய நண்பர்கள் அத்தகைய நேரங்களில் அதைச் சுட்டிக்காட்டியும் கூட அதை அவர் ஏற்றுக்கொள்ளுவது இல்லை. தவறு செய்தவர்கள் பின்னர்த் திருந்தலாம். அதை நாம் பெரிது படுத்தக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள்.
நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள், மற்றொரு வீட்டுக் குழந்தைகள் என்ற வேறுபாடு அவருக்கு என்றைக்கும் கிடையாது. எல்லோர் நலனிலும் அவர் அக்கறை காட்டுவார்.
விளம்பரம் அவர் விரும்பாத ஒன்று. எவ்வளவு அரிய செயலினைச் செய்து முடித்தாலும் அதைப்பற்றி விளம்பரமாகப் பேசுவது அவரது இயல்பில்லை. மற்றவர்கள் அவ்வாறு பேசினாலும் அதைக் குறுக்கே நிறுத்தி விடுவார். எவ்வளவோ பெரிய விழாக்களைத் தமிழகமே பாராட்டிக் கொண்டாடும் விதத்தில் அவர்கள் நடத்தியபோதும் கூட எந்த விஷயத்திலும் தொண்டருக்குத் தொண்டராக அடக்கமாக இருப்பாரே தவிர, இருந்த இடத்திலே இருந்து கொண்டே மற்றவர்களை ஏவி வேலைகளைச் செய்யச் சொல்லவே மாட்டார். அவரே பல்வேறு தொண்டுகள் செய்வதைப் பார்த்து மற்றவர்களெல்லாம் பரபரப்புடன் ஓடிப்போய்க் கடமைகளைச் செய்வார்கள். 1956ஆம் ஆண்டில் அவர் செயலாளராக இருந்து நடத்திய மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா மகத்தான விழாவாகத் திகழ்ந்தது. அது சம்பந்தமாக வெளியிடப்பட்ட தமிழ்ச் சங்கப் பொன்விழா மலரில் தம்முடைய புகைப்படம் வெளியிடப்படுவதை அவர் விரும்பவில்லை. அதை அவர் தடுத்து நிறுத்திவிட்டார். அதைப்போலப் பல்வேறு நிகழ்ச்சிகளில் தம்மை முதன்மைப் படுத்திக்கொள்வது அவருக்குத் தெரியாத கலை.
ஆடம்பரம் அவருக்குப் பிடிக்காதவொன்றாகும். உடை, உணவுப் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் எளிமை அவரிடம் குடிகொண்டிருந்தது. படாடோபமாகவும் ஆடம்பரமாகவும் எதையும் செய்வதை அறவே வெறுத்து ஒதுக்கியவர் அவர். எங்கள் வீட்டு விழாவானாலும் ஆடம்பரம் துளியும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார். காட்சிக்கு எளியராக விளங்கும் அவரிடம் காந்தியப் பண்பாடுகள் குடிகொண்டிருந்ததைப் பார்க்க முடியும்.
வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட அவர்களையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்தி மரியாதை காட்டி அளவளாவுவது அவரது பண்பாடு. வயதில் பெரியவர்கள் அல்லது பெரும் பதவியில் இருப்பவர்களாயினும் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போவது அவரது வழக்கமன்று. மாறாக சம்பந்தப்பட்டவர்களிடமே அதைச் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை. யாரிடமும் பகைமை பாராட்டாத பேருள்ளம் அவருடைய உள்ளம். இன்னார், இனியர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரிடமும் இனிமையாகப் பேசும் பண்பாடு நிறைந்தவர்.
நட்பு
"செயற்கரிய யாவுள நட்பு'' என வள்ளுவப் பெருந்தகை கூறினார். அத்தகைய நட்புக்கு இலக்கணமாக என் தந்தையார் விளங்கினார். நண்பர்கள் இல்லாமல் அவருக்குப் பொழுது போகாது. இளமைக் காலம் முதல் இன்று வரை பழகிய நண்பர்களைக் கண்டால் நெகிழ்ந்து போவார். நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் பண்பு அவரிடம் குடிகொண்டிருந்தது. நண்பர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால் ஓடோடிச் சென்று உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.'' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப நட்பைப் பெரிதாக மதித்தார். அவருடைய இளமைக்கால நண்பர்களான திரு. சச்சிதானந்தம், திரு.ஏ.என். இராசன் போன்ற எண்ணற்ற நண்பர்களுடன் இளமைப்பருவத்தில் எத்தகைய அன்போடு பழகினார்களோ, அதே அன்புடன் தொடர்ந்து பழகியதைக் கண்டு நான் வியந்துபோயிருக்கிறேன். நண்பர்களுக்குச் செய்யும் உதவியினைப் பிறர் அறியாமல் செய்கின்ற அருங்குணம் அவருக்கே உரித்தானவொன்று.
நுண்மாண் நுழைபுலம் மிக்கவராக, செந்தமிழ்க் கவிஞராக, சிந்தனையாளராக, எழுத்தாளராக, இதழாசிரியராக, நாடக ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, ஓவியராக, பேச்சாளராக, எல்லாவற்றுக்கும் மேலாகச் செயல்வீரராகத் திகழ்ந்த எங்கள் தந்தையாரின் வாழ்வு எங்களுக்கு மட்டுமன்று, எத்தனையோ பேருக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு எனக்கோ, எனது சகோதரர்களுக்கோ அல்லது எங்கள் குடும்பத்தில் வளர்ந்த மற்றவர்களுக்கோ பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருக்கிற பெருமைகளுக்கெல்லாம் எங்கள் தந்தையார் எங்களுக்கு ஊட்டிய பண்பாடுதான் அடிப்படைக் காரணமாகும்.
அண்மையில் நான் அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்தபோது நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது "Anybody can be a Father but it takes someone to be a Daddy".
யார் வேண்டுமானாலும் தந்தையாகலாம். ஆனால் அன்பு நிறைந்த அப்பாவாக இருப்பது அரிதினும் அரிது. அந்த வகையில் எங்கள் தந்தையார் அன்பினை அள்ளிச்சொரியும் அரிதினும் அரிய அப்பாவாக எங்களுக்கு விளங்கினார்கள்.
 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.