கதிராமங்கலம் மக்கள் பிரச்சனை... தமிழக அரசியலில் புதிய வரலாறு படைப்பு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி ஆதரவு! அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:23

"கதிராமங்கலம் பிரச்சனையில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் ஒன்றுபடுத்தி வரவழைத்த கதிராமங்கலம் மக்களை மனமாறப் பாராட்டுகிறேன். மாநில ஆளுங்கட்சி,  மத்திய ஆளுங்கட்சி ஆகியவற்றைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களும் கைகோர்த்து இம்மேடையில் தோன்றியுள்ளனர். தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. அதற்கான பெருமை இம்மக்களையே சாரும்.

கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களான பெரியார், இராஜாஜி, காமராசர், அண்ணா, பி. இராமமூர்த்தி, ஜீவா, ம.பொ.சி. போன்றவர்கள் தங்களுக்குள்  எத்தனை கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளில் ஒன்றுபட்டு நின்று குரல் கொடுத்தனர்.  அதன் விளைவாகத் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. ஆனால், அந்த மாபெரும் தலைவர்களுக்குப் பிறகு அந்த ஒற்றுமை நீடிக்காமல் போய்விட்டது. கட்சிகளால்  பிளவுபட்டு நின்ற காரணத்தினால் தமிழகம் எவ்வளவோ இழப்புகளுக்கு ஆளானது. 

இந்தச் சூழ்நிலையில் ஓ.என்.ஜி.சி. அமைத்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு கதிராமங்கலம் கிராம வயல்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு நிலமும், குடிநீரும் பாதிக்கப்பட்டு  அதற்கெதிராக அம்மக்கள் ஒன்றுபட்டு நின்று போராடியபோது மிகக் கடுமையான அடக்குமுறையை தமிழக அரசு ஏவி ஒடுக்க முயன்றது. பேரா. த. ஜெயராமன்  உட்பட 10 பேர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை  செய்யவேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். அம்மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காணப்படவேண்டும்.  இல்லாவிட்டால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மீண்டும் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கலந்தாலோசிப்போம் என அனைத்துக்கட்சிகளின்  ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் எச்சரித்தார்.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவிடை மருதூர் இராஜாங்கம்  (த.மா.கா.), திமுகவைச் சேர்ந்த இராமலிங்கம், கல்யாணம், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழுவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன், அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி  மாநில அமைப்புச் செயலாளர் அஸ்லாம் பாட்சா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு, ஏரி மற்றும் ஆற்று நீர் பாசன  விவசாயிகள் சங்க தலைவர் பூ. விசுவநாதன், தமிழ்த் தேசிய மக்கள் கட்சி தலைவர் தமிழ்நேயன், திரைப்பட இயக்குநர் கெளதமன், நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேசிய பாதுகாப்பு இயக்க தலைவர் கார்த்திகேயன், ஐஜேகே மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், பேரழிப்பிற்கு எதிரான  பேரியக்க நிர்வாகி லெனின், சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி பாலன், வளமான தமிழகம் நிர்வாகி ஜெகதீசன், காவிரி ஆறு பாதுகாப்புச் சங்க தலைவர் முருகன்,  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் பாதுஷா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய  முன்னணியின் துணைத் தலைவர்கள் அய்யநாதன், ஜி.எஸ். வீரப்பன், பொதுச் செயலாளர்கள் சி. முருகேசன், பழநியாண்டி, முத்துக்கிருஷ்ணன், நெடுமான், தஞ்சை  மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிசெல்வன், நாகை மாவட்டத் தலைவர் பேரா. முரளி, கடலூர்  மாவட்டத் தலைவர் பழமலை உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், தோழர்களும் மற்றும் கதிராமங்கலம் பொது மக்களும் மயிலாடுதுறை - குத்தாலம் சாலை  சிவராமபுரத்திலிருந்து நடைப் பயணமாக காவிரி ஆறு மற்றும் விக்ரமன் ஆறு, கடைத்தெரு வழியாக கதிராமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் திடலுக்கு  முழக்கமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். அய்யனார் கோவில் திடலில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அனைத்துக்கட்சிகள் மற்றும்  விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினார்கள். கூட்டத்தில் கதிராமங்கலம் மக்கள் குறிப்பாக தாய்மார்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.