தாய்த்தமிழ் வழிக்கல்விப் பள்ளிகளைக் காக்க முன்வருக! அச்சிடுக
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 15:59

உலக மயமாக்கல் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதின் விளைவாக முதலில் களபலியாக்கப்பட்டது கல்வியே ஆகும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை இலவசமாக இருந்த கல்வி வணிகமயமாகத் தொடங்கியது. குறிப்பாக 1970களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புற்றீசல் போல ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்'' என்ற முழக்கம் மறைந்து "எங்கும் ஆங்கிலம்' என்பதே நீக்கமற நிறைந்தது. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தாய்மொழியில் கல்வி என்ற கொள்கை தமிழ்நாட்டில் ஆழ குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. கிராமப்புறம் வரை ஆங்கில வழிப் பள்ளிகள் கால் ஊன்றின.
இதன் விளைவாக பணம் படைத்த குடும்பத்துக் குழந்தைகளுக்கே தரமான கல்வி என்னும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அரசும் இதற்கு ஒத்துழைத்தது. அரசுப் பள்ளிகள் வரிசையாக மூடப்பட்டன. ஏழைப் பெற்றோருக்கு வேறு வழியில்லை. பணம் கொடுத்தே தங்களது குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்துத் தீரவேண்டிய அவலம் உருவாக்கப்பட்டது.

அண்டை மாநிலங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தாய்மொழியில் கல்வி என்பது சட்டமாக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அது நடைபெறவில்லை. தொடக்கப்பள்ளிக் கல்வி தமிழில் அளிக்கப்பட வேண்டும் என தமிழ்ச்சான்றோர் நடத்தியப் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராயினது. ஒப்புக்காக அரசுப் பிறப்பித்த ஆணை உச்சநீதிமன்றத்தில் செல்லாததாக்கப்பட்டது.

தமிழ் உணர்வாளர்கள் பலர், தாய்த் தமிழ்ப் பள்ளிகளை தொடங்குவதற்கு முன்வந்தனர். இவர்கள் யாரும் பணம் படைத்தவர்கள் இல்லை. ஆனாலும், தங்களைப் போன்ற உணர்வாளர்களின் துணையுடன் இத்தகையப் பள்ளிகளைத் துவக்கினர். அரசுப் பள்ளிகளில் உள்ள அதே கல்வித் திட்டமும், பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டன. அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே சொல்லிக்கொடுக்கப்பட்டன. ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. தாய்த் தமிழ்ப் பள்ளிகளில் வரலாற்று அறிவு, சமூகம் குறித்தப் பார்வை, சுற்றுச் சூழல் குறித்த அக்கறை ஆகியவையும் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகளும், கட்டுப்பாடும் கற்பிக்கப்பட்டன.

1990களில் தமிழகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட தாய்த்தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் தொடக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன. ஆனால் கல்வி வணிகர்கள், அரசு அதிகாரிகள் இணைந்து இவற்றிற்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். உறுதியான கட்டிடம் இல்லாமல் பள்ளிகள் நடத்தக்கூடாது போன்ற விதிமுறைகளைக் காட்டிக் கெடுபிடி செய்தனர். எத்தகைய ஆதாய நோக்கமும் இல்லாமலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியும் இயங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளிகளால் அரசு நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லை. 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. இப்போது சுமார் 15 பள்ளிகள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஏன் இந்த அவல நிலை உருவானது? கீழ்க்கண்ட நிகழ்ச்சி அதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
1997ஆம் ஆண்டில் கோபிச் செட்டிப்பாளையத்தில் தமிழ் உணர்வாளரான கோ.வெ. குமணன் தாய்த்தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினார். நாளடைவில் அப்பகுதி மக்கள் மத்தியில் அப்பள்ளிக் குறித்து நன்மதிப்பு உருவாயிற்று. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என படிப்படியாக மக்கள் ஆதரவுடன் வளர்ந்தது.

கடந்த 15 ஆண்டு காலமாக அரசு உதவிபெறும் பள்ளியாகவும், தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியாகவும், கோபி நகர மக்களின் பேராதரவோடு நடைபெற்று வந்த இப்பள்ளிக்குச் சொந்த இடமோ, சொந்த கட்டிடமோ இல்லை என்ற காரணத்தைக் காட்டி இப்பள்ளியை மூடுவதற்கு முயற்சி நடைபெறுகிறது. இப்பள்ளிக்கான நிலத்தின் உரிமையாளர் இடத்தைக் காலிசெய்யும்படி கூறிவிட்டார். எனவே வேறு இடத்திற்கு பள்ளியை மாற்றுவதற்கு கீழ்க்கண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1. சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியின் சார்பில் பள்ளிக் குடிக்கணக்கு பகுதியில் அமைந்துள்ள மின்நகரில் நகராட்சி ஒதுக்கீட்டு இடம் கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பள்ளிக்கென ஒதுக்கப்பட்டது. ஒரு சிலரின் தவறான தூண்டுதலின் காரணமாக அங்கு கட்டிடம் கட்டி பள்ளியை மாற்றம் செய்ய இயலவில்லை.

2. கோபி நகராட்சி எல்லைக்குட்பட்ட தமிழ்நகரில் பழனி கோயிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் 40 சென்ட் இடத்திற்கு வாடகை ஒப்பந்தம் பெறப்பட்டு பள்ளிக்கான கட்டிடப் பணிகள் தொடங்குவது பொருட்டு ஆழ்துளைக் கிணறு போடப்பட்டது. மின் இணைப்பு பெற வேண்டி வருவாய் வட்டாட்சியர் அவர்களிடம் விண்ணப்பிக்கப்பட்டது. சில தனிமனிதர்களின் தூண்டுதலால் மின் இணைப்புப் பெற முடியாமல் பள்ளி கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டன.

3. பள்ளியிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான பாலவித்யாலயா தொடக்கப்பள்ளி பயன்படாத நிலையில் உள்ளது. இவ்விடத்தினை மீண்டும் பள்ளிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வகையில் நாங்களே மராமத்துப் பணிகளை செய்து தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளியாக செயல்படும் வகையில் இதற்கான வாடகையினை முறையாக நகராட்சியில் செலுத்துகிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் வைத்து பலமுறை நேரில் சந்தித்து மனுகொடுத்தோம். பயனில்லை. அல்லது பாலவித்யாலயா நகராட்சி தொடக்கப்பள்ளி இடத்தில் நகராட்சி பள்ளியாக செயல்படும் வகையில் எங்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். பயனில்லை.

4. ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிப்பாளையம் ஒன்றியம், லக்கம்பட்டி பேரூராட்சி - ல. கள்ளிப்பட்டியில் 40 சென்ட் இடத்துடன் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் பள்ளியானது மூடப்பட்டு பள்ளியின் இடம் மற்றும் கட்டிடங்கள் பயன்படுத்தாமல் உள்ளன. இவ்விடத்தில் எங்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மாற்றி தமிழக அரசின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியாகவே செயல்பட அனுமதி வழங்கும்படியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வேண்டுகோள் வைத்தும் பலனில்லை.

இந்த செய்தி பள்ளிக்கல்வித்துறை தொடக்கநிலை அதிகாரிகளில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரை அனைவரும் அறிவர். தற்போது பள்ளியை நடத்தப் போதுமான சான்றுகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை மூடும் முடிவை எடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள 5000 தொடக்கப்பள்ளிகளை அருகாமையில் உள்ள பள்ளிகளோடு இணைத்தல் என்ற பெயரில் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக அறிகிறோம். தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் 150 குழந்தைகள் தரமான கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையில் கோபிசெட்டிப்பாளையம் ஒன்றிய அளவில் முன்னிலையில் உள்ளது.

மாணவர் எண்ணிக்கை குறைவால் 5000 பள்ளிகளை தமிழக அரசு மூட இருக்கிறது. இந்நிலையில் எப்போதும் மாணவர் சேர்க்கையில் தொய்வில்லாமல் 150 மாணவர்கள் படிக்கும் தமிழ்வழி தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியை மூடக்கூடாது.

தமிழக அரசு இந்தப் பள்ளியை மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் தாய்த்தமிழ் வழிக் கல்விப் பள்ளிகளுக்கும் உதவி செய்து அவை தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகுக்க வேண்டும்.

- பழ. நெடுமாறன்