ஸ்டெர்லைட் விரட்டப்பட வேண்டும்! ஏன்? -ஆர்.கே. அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:00

ஆசுதிரேலியா  உள்ளிட்ட அந்நிய நாடுகள் சிலவற்றிலிருந்து அங்கு  வெட்டி எடுக்கப்படும் தாமிரத் தாதுவை கப்பல் மூலம் எடுத்து வந்து கழிவுகளை நீக்கி சுத்தத் தாமிரமாகப் பிரித்து அதனை மீண்டும் அந்நாடுகளுக்கே அனுப்பி வைப்பதுதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேலை.

தாமிரத்  தாதுக்களை கழிவுகள்  நீக்கி சுத்த தாமிரமாக மாற்றும்போது வெளியேறும் ஆலைக் கழிவுகள்தான் நச்சுத்தன்மைக்கும், சீர்கேடுகளுக்கும் காரணங்களாகும்.
தாமிரச் சுரங்கங்கள்  உள்ள குறிப்பிட்ட வெளிநாடுகளுக்குத்தான் சுத்தத் தாமிரமும் தேவைப்படுகிறது. அப்படியானால் அங்கேயே சுத்திகரிக்கலாமே? என்பது ஒரு நியாயமான கேள்விதானே! நாடுகளின் சூழ்ச்சியையும், ஆபத்தை நம்  தலைமீது சுமத்தும் பேரபாயத்தையும் நாம் புரிந்துகொண்டு எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை  முதலாளி அனில்  அகர்வால் இலண்டனைச் சேர்ந்தவர். இவரது பன்னாட்டு பகாசுரக் கம்பெனிதான்  வேதாந்தா குழுமம். அனில் அகர்வால் ஸ்டெர்லைட் ஆலை அமைத்திட 1990லிருந்து அரபிக்கடல் ஒரம் இடம்  தேடி அலைந்தார்.  குஜராத், கோவா, கேரளம், கர்நாடகம் இங்கெல்லாம் இடம்  தேடி சென்று விரட்டப்பட்டார். கடைசியாக 1994இல் மகாராஷ்டிராவில் இடம் பிடித்து பல கோடி செலவு செய்து ஆலை கட்டும் பணியை துவக்கினார்.  ஸ்டெர்லைட் ஆலை ஆபத்தை உணர்ந்து பெரிய அளவில் போராட்டம் வெடிக்கவே இடத்தைக் காலி செய்தார். அங்கிருந்து ஓடிவந்து அனில் அகர்வால் தேடிப்பிடித்த இடம் தான்  தூத்துக்குடி.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைத்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இரு கட்டுப்பாடுகள் விதித்துத் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. ஒன்று மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் ஆலை அமைக்கவேண்டும்.  அடுத்தது, ஆலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைத்திடவேண்டும் என்பது.  இரண்டுமே  மீறப்பட்டன.
1996இல் 40 ஆயிரம்டன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது.  உற்பத்தி செய்யப்பட்டதோ 1இலட்சத்து 70 ஆயிரம் டன் தாமிரம். இதில்  பெரும் அத்து  மீறல். விதிமீறல்களால் நச்சுக் கழிவு  அபாயம் பெருகியது. சூலை 1997இல் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சால் அருகாமையில் இருந்த நிறுவனம் ஒன்றில் பணி செய்த 165 பெண்கள் மயக்கமுற்றனர். சில  பெண்களுக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது.  ஆலையை அடுத்திருந்த அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 10க்கும்  மேற்பட்டோர் ஸ்டெர்லைட் நச்சால் மயங்கி வீழ்ந்தனர்.
இப்படி நச்சுக் கழிவு ஆபத்துகள் தொடர்ந்தன. நவம்பர் 1998இல் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடிடவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. பின்னர் ஸ்டெர்லைட் மேல் முறையீடு செய்து வேறு அமர்வுக்கு வழக்கை மாற்றி தீர்ப்பையும் மாற்றிப் பெற்றது.
அதே1998இல் நாக்பூர் நீரி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சு சுற்றுப்புற சூழலுக்கும், நிலம்,  நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும்  பா திப்பை ஏற்படுத்தும் என ஆய்வு அறிக்கை தந்தது. பின் 2003இல் அதே நீரி  நிறுவனம் ஆலைக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த மாற்றத்திற்குக் காரணம் நீரி அமைப்பு அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ரூபாய் 1.22  கோடி வழங்கியதுதான்.
செப்டம்பர் 2004இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்சநீதி மன்ற ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அனைத்து விதிகளும், கட்டுப்பாடுகளும் அடியோடு மீறப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அத்துடன் உற்பத்திச் சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு அந்த ஆலையில் இல்லை என்பதால் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரக் கூடாதென்றும், ஏற்கெனவே தரப் பட்டிருந்ததால் அதனைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், ஆச்சர்யம் என்னவெனில்  அடுத்த நாளே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கியது. அதேசமயம் நவம்பர் 2004இல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்களைச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றைத்  தந்தது.
விதிமீறல்கள்
1. 70ஆயிரம் டன்கள் ஆனோடைக்கு  உரிமம் பெற்று 1இலட்சத்து 64ஆயிரத்து 236 டன்கள் உற்பத்தி செய்தது.
2. அனுமதி பெறாமல் இரு உருளை வடிவு தாங்கு உலைகள், கழிவு கற்றும் ஒரு உலை, ஒரு ஆனோடு உலை, ஒரு  ஆக்ஸிஜன் பிரிவு, கந்தக அமிலப் பிரிவு,  ஒரு காஸ்டர் பிரிவு, ஒரு கன்வெர்ட்டர் ஆகியவற்றைக் கட்டியது.
3, இரு  பாஸ்பரஸ் அமிலப்பிரிவு, தொடர்ச்சியாக காஸ்ட்டர் ராட் உருவாக்கும் பிரிவு  இவற்றைக் கட்டும் பணியைத் துவக்கியது.
இது  போன்ற அத்துமீறல்களைச் செய்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தன்  அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
அத்துமீறி  கட்டப்பட்ட கந்தக  அமிலப்  பிரிவு அனுமதிக்கப்பட்ட 3 இலட்சத்து 71ஆயிரம் டன் கந்தக அமில உற்பத்தியை விடக் கூடுதலாக 5இலட்சத்து 46ஆயிரத்து 647 டன் கந்தக அமிலத்தை உற்பத்தி செய்தது ஸ்டெர்லைட்  ஆலை. இது வழங்கப்பட்ட உரிமத்தைவிட 47 சதம் அதிகம். இப்படி அத்துமீறல்கள் ஏராளமாய் இருக்க 2005இல் உச்சநீதிமன்ற  ஆய்வுக்குழு அனைத்தையும் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயாரித்தது. உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பல தளர்வுகளை ஏற்படுத்தி அதற்கேற்றவாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு அறிவுரையும், பரிந்துரையும் செய்தது.
இதற்கு மாறாக செப்டம்பர் 2010இல் ஆலைக்கு எதிரான வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தரமாக ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடவேண்டும் என ஆணை பிறப்பித்தது. மேல் முறையீடு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் செய்து நூறு கோடி ரூபாய்  அபராதம்  மட்டுமே கட்டிவிட்டு வேதாந்தா குழுமம் தீர்ப்பை மாற்றி முடிவைப் பெற்றது.
தாமிர உற்பத்தியின் போது வெளியாகும் கழிவு  நீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகக் கரைசல்கள்  உள்ளன. இவை  அப்பகுதி நீரை நேரடியாக  மாசுபடுத்தும்.                            இந்தஉலோகக்கரைசலின் நச்சுத் தன்மை அப்பகுதி மக்களிடையே  அலர்ஜி, தோல் நோய், புற்று நோய் முதலியவற்றை ஏற்படுத்தும். கொட்டப்படும் திடக் கழிவு நிலப்பகுதி பூராவற்றையும் நாசப்படுத்தும்.  இதெல்லாம் ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வுகளின் முடிவு.
உலகப்புகழ் பெற்ற அமெரிக்க சுற்றுச்சூழல் ஆய்வாளர் டாக்டர் மார்க் செர்னைக் என்பவர் தனது  ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலை  மற்றும் அதன் வளாகத்திலும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஆலைக்கழிவு இவற்றின் மாதிரிகளை சேகரித்து சோதனைச் சாலையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கையினை தந்திருக்கிறார்,
அதில் "நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களின் தாக்கம் நிலம், நீர், காற்று  இவற்றில் நிறையவே பாதிப்புகளை ஏற்படுத்தும். மண் வீரியமற்றுப்  போகும். கால்நடைகள் மடியும். மனிதர்கள் தோல் நோய்,  காசநோய்,  புற்றுநோய்  போன்றவற்றால் பாதிக்கப்படுவர். ஆயுட்காலம் குறையும்.  குழந்தைகளின் உடல் வளர்ச்சி  குன்றும். கருத்தரிக்கும் தன்மை குறைந்து  போகும்” என்று குறிப்பிட்டுக் கூறித் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மார்ச் 2013இல் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு காற்று மண்டலத்தில் கலந்ததால் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்  திணறலுக்கு ஆளாகினர். நச்சுக்காற்றால் பூக்கள், செடிகள் கருகின.  மரங்களிலிருந்து இலைகள் முழுதும் உதிர்ந்தன. அதே நாளில் ஆலைக்குள்  வேலை செய்த பீகாரைச்  சேர்ந்த கைலாஷ்மேத்தா என்பவர் மூச்சுத் திணறி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
1994-2004க்கு இடையேயான பத்து ஆண்டுகளில் 139 தொழிலாளர்கள்  படுகாயமுற்றனர். சுமார் 15 பேர் மாண்டே  போயினர். இதற்கெல்லாம் காரணம் விதிமீறல்கள் தான். எனினும் அவ்வப்போது அபராதம் கட்டிவிட்டு ஸ்டெர்லைட் விதிமீறல்களைத் தொடர்ந்தன.
புற்று நோய், சிறுநீரகக் கோளாறு இவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையில் தூத்துக்குடி மாவட்டமே தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளதாக ஒரு புள்ளி  விபரம் கூறுகிறது.
குழந்தைகள் வளர்ச்சி   பாதிப்புக்கான பல வியாதிகள், சுவாசக்  கோளாறு,  கண் எரிச்சல், மலட்டுத் தன்மை,  சிறுநீரகப் பாதிப்பு,  தோல் நோய், புற்று நோய் என பலவற்றிற்கும் ஆலையின் நச்சுக் கழிவே காரணம் என  மருத்துவ ஆராய்ச்சி தெளிவு  படுத்திவிட்டது.
அதுமட்டுமல்லாது, அமெரிக்கா, சிலி போன்ற நாடுகள் பயனற்றது என தூக்கியெறிந்த பழைய இயந்திரங்களையே ஸ்டெர்லைட் பயன்படுத்துகிறது. எழுபதாண்டுக்கும் முந்தையதான மிகப் பழைய தொழில் நுட்பமே  எந்த மாற்றமும் இன்றி ஸ்டெர்லைட் ஆலையில் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் நகர்ப்புற  மேம்பாட்டு அமைச்சக ஆய்வின்படி சுற்றுச்சூழலிலும், நிலத்தடி மாசு பாட்டிலும் இந்தியாவிலேயே மிக  மோசமான நகரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளஇந்த தூத்துக்குடி தான். அதனால்தான்,  அப்பகுதி மக்கள் தங்களின் உயிர் காத்திட,  மண் காத்திட, நீர்  காத்திட, மாசற்ற காற்றைப் பெற்றிட, தலைமுறை காத்திட தொடர்  போராட்டங்களை சொல்லொணாத்துயருடன் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  
மக்கள் மாண்டால் என்ன? மண்ணும் நீரும் நச்சானால்  என்ன? நோய்கள் பல பெருகி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் எப்படி அவதிப்பட்டால்  என்ன? எங்களுக்கு பல கோடி ரூபாய் லாபமே குறி என வேதாந்தா குழுமம் கவலையற்று செயல்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையின் அத்தனை அக்கிரமங்களையும் அத்துமீறல்களையும் கண்டும் காணாமலும் இருந்து  அவை தொடர காரணமாய் துணை நிற்கும் அரசுகளுக்கும் மக்கள் நலன் பற்றியோ,  அவர்களின் போராட்டங்கள் பற்றியோ அக்கறையேதுமில்லை.
அரசு  தலையிடும், ஆலையை மூடும், மண்ணையும்  மக்களையும் காப்பாற்றும்  என நம்பி நம்பி ஏமாந்துவிட்ட நிலையில்தான் இன்றைய தொடர்போராட்டம் சுற்றுப்புற கிராம மக்களின் கூட்டுப்போராட்டம். ஆண்களும், கூடுதல் எண்ணிக்கையில் பெண்களும் தங்களின் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வீதியில் நின்று  போராடி வருகின்றார்கள். மக்களின் நியாயத்திற்கான நிலம்,  நீர், காற்று  மற்றும் மக்களின் வாழ்க்கை காத்திடக்கோரி நடைபெறும் போராட்டமே  இது. இது தோற்காது. தோற்கக் கூடாது.
நன்றி - ஜனசக்தி  - 29-04-2018