சிதைக்கப்படும் காந்தியக் கனவு - பழ. நெடுமாறன் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2018 11:05

"உழுவோர் உலகத்திற்கு அச்சாணி” என்பது வள்ளுவரின் வாக்காகும். ஆனால், "உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது” என்பது இன்றைய வழக்காகும். உற்பத்திச் செலவுகள் கூடுதல், உற்பத்திப் பொருள்களுக்குப் போதிய விலையின்மை, மழையின்மை, காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்சனைகள் ஆகியவற்றால் தமிழக உழவர்கள் வாழ வகையின்றி தத்தளிக்கிறார்கள்; மன வலிமையற்றவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் தமிழர்களில் 70%பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு வேளாண்மை ஒரு தொழில் மட்டுமல்ல, மரபு ரீதியான வாழ்க்கை முறையுமாகும். தமிழ்நாட்டு மொத்த உற்பத்தியில் வேளாண்மை தொழில்துறையின் பங்கு 21% ஆகும். தமிழக  பொருளாதாரத்தின் மிக முக்கிய துறையாக வேளாண்மை உள்ளது.
நகர்ப்புறங்களில் உருவாகியுள்ள விரைவான வளர்ச்சியின் விளைவாக நகரங்களையொட்டியுள்ள விவசாய நிலங்கள், வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் விவசாய நிலத்தின் பரப்பளவு சுருங்கி வருகிறது. தமிழகத்தின் இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் விவசாய நிலங்களைப் பறிக்கும் திட்டங்களாகவே அமைந்துள்ளன. காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஹைட்ரோ - கார்பன் திட்டத்திற்காக 2.5 இலட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. கடலூரிலிருந்து நாகப்பட்டினம் வரை பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்காக 15ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பாகூர் தொடங்கி கடலூர்,  தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாக திருவாரூர் மாவட்டம், இராச மன்னார்குடி தெற்குப்  பகுதி வரை நிலத்திற்குக்  கீழே 500 அடிமுதல் 1650 அடி வரை நிலக்கரிப் படிமங்கள் உள்ளன. இவற்றை வெட்டியெடுப்பதற்கு முன் நிலக்கரிப் படிமங்களின் இடுக்குகளில் உள்ள மீத்தேன் என்னும் எரிவாயுவை எடுக்க அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் துணையுடன் இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. எடுக்கப்படவுள்ள மீத்தேன் எரிவாயுவின் குறைந்தளவு மதிப்பு ரூபாய் 6இலட்சம் கோடிக்கு மேலாகும். அந்நிய நாட்டு நிறுவனம் ஒன்று கொள்ளையடிப்பதற்காக நமது விவசாயிகளின் நிலங்களை பாழ்படுத்தும் திட்டம் இதுவாகும்.  இத்திட்டத்திற்காக காவிரிப் படுகையில் உள்ள மாவட்டங்களில் 2,000 ஆழ்துளைக்  கிணறுகளை 1650 அடி ஆழத்தில் அமைத்து நிலக்கரியை மூடியிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்றப் போகிறார்கள். அடிமட்ட நிலத்தடி நீர் கடல் நீரைவிட 5 மடங்கு அதிகமான உப்பு நீராகும். வெளியேற்றப்படும் இந்த நீர் விவசாய நிலங்களின் பாசனக்  கால்வாய்களின் வழியே ஓடி அந்த நீர் செல்லும் வழியெங்கும் உவர் மண்ணாகும். மேலும் மேல் மட்டத்தில் உள்ள நல்ல நீர் கீழிறங்கிவிடும். அதுவும் சேர்ந்து வெளியேற்றப்படும். எனவே வேளாண்மைக்கோ,  குடிக்கவோ காவிரிப் படுகைப் பகுதியில் இனி நிலத்தடி நன்னீர் கிடைக்காது. மீத்தேன் எரிவாயு 40 ஆண்டுகள் எடுக்கப்படும். அதற்குப் பின்னர் 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி தோண்டி எடுக்கப்படும். காவிரிப் படுகைப் பகுதி மக்கள் வாழ முடியாத பாழ்பட்ட பகுதியாக மாறிப்போகும். வாழ வழியற்ற மக்கள் அகதிகளாக வெளியேறவேண்டிய நிலை உருவாகும். ஏற்கெனவே இத்திட்டங்களை எதிர்த்து நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் ஓராண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.  
இப்போது சேலம் - சென்னை விரைவுச் சாலை திட்டத்திற்காக 4,750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் வேலை விரைவாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு 10ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் 250க்கு மேற்பட்ட ஏக்கர் காடுகள்  அழிக்கப்படும். இக்காடுகளில் வாழும் வன விலங்குகள்,  பறவைகள், பல்வேறு உயிரினங்கள் இடமாற முடியாமல் தத்தளிக்கும் அல்லது வாழ்வு இழக்கும். 25 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டாலே கானுயிர் பன்முகத்தன்மை பெரும் பாதிப்புக்குள்ளாகும் என இயற்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  250 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பதை எண்ணிப் பார்க்காமல் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை செல்லும் காடுகளில் உள்ள 14 கிராமங்களில் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வும் பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக வட தமிழ்நாட்டின் நுரையீரலாக இந்த காடுகள் திகழ்ந்து வருகின்றன. நுரையீரல் பாதிக்கப்படும் மனிதன் சிறுகசிறுக சாவை நெருங்குவதைப் போல வட தமிழ்நாட்டில் பேரழிவு ஏற்பட்டுவிடும்.
ஏற்கெனவே சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. அதில் சென்னை - வாணியம்பாடி சாலை 6 வழிச்சாலையாகும். மேலும் தொடர்வண்டிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவைகள் உள்ளன.
5 மாவட்டங்களில் உள்ள விவசாய மற்றும் வன நிலத்தை கையகப்படுத்தி 274.3கி.மீ. நீளமுள்ள 8 வழிச்சாலை அமைப்பதன் மூலம்  சென்னை - சேலம் சாலை வழிப்பாதை 57 கி.மீ. நீளம் மட்டுமே குறையும். பயண நேரத்தை குறைப்பதற்கு இந்தப் புதிய 8 வழிச்சாலை தேவை என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான சாலையாக இதை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது சம்பந்தமாக அந்த அமைச்சகத்துறை ஏப்ரல் 23-04-2018 ஆம் தேதி வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆய்வறிக்கைக்கான 53 நிபந்தனைகளைக் குறித்துள்ளது.
வனப்பகுதியை தவிர்த்து சாலை அமைக்க முடியுமா? விவசாயப் பகுதிகள் என்றால் அங்கு பயிர் செய்யப்படும் சாகுபடி முறைகள், மக்கள் வாழும் கிராமப் பகுதிகள், ஆறு, குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள்  போன்றவற்றைப் பாதிக்காதவண்ணம் உள்ள மாற்றுவழிகள் என்ன? சாலைக்காக வெட்டப்படவேண்டிய மரங்களின் எண்ணிக்கை, வனப்பகுதியில்  உள்ள விலங்குகள் பாதுகாப்பாக உலவும் வகையில் மாற்றுப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா?விவசாய குடியிருப்புகளை ஊடுருவி  இந்தச் சாலை செல்வதாக இருப்பின் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் சாலையைக் கடந்து செல்லவும், வேளாண் வண்டிகள் மற்றும் கருவிகளைக் கொண்டுசெல்லவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? இச்சாலை வழியில் அமைந்திருக்கும் பழமையான கோயில்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றையெல்லாம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரவேண்டுமென குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ள விவரம் எதுவும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.இந்த கேள்விகளுக்குரியவிடைகள் அளிக்கப்பட்டனவா?அல்லது அலட்சியப்படுத்தப்பட்டனவா? என்பவை இன்றளவும் யாருக்கும் தெரியாத மர்மங்களாகவே உள்ளன.
இத்திட்டத்தின் விளைவாக 5 மாவட்டங் களுக்குட்பட்ட 14 ஒன்றியங்களில் உள்ள 159 கிராமங்களையும், மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கி 120 கி.மீ. வேகத்தில் சரக்கு வாகனங்கள் செல்லும் 8 வழி விரைவுச்சாலை அமைப்பதில் இவ்வளவு அவசரம் காட்டப்படுவது ஏன்? என்ற கேள்விக்கு விடையை நாம் ஆராய்வோமானால் பல திடுக்கிடும் உண்மைகளை அறிய நேரிடும். இத்திட்டத்திற்குட்பட்ட சேலம் மாவட்டத்தில் பாக்சைட், டியூனைட், பைரோக்சைனைட்,  கிரானைட்,  லைம்ஸ்டோன், மாக்னசைட், குவார்ட்ஸ் , சிலிக்கா மண், ஸ்டீயடைட், கால்சைட், இரும்புத் தாது, டோலமைட் போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன. தருமபுரி மாவட்டத்தில் கிரானைட், மாங்கனசைட், குவார்ட்ஸ், சிலிக்கா மண், வெர்மிகுலைட், அப்பாடைட், சைனா களிமண்,  கோரண்டம்,  தங்கம், இருப்புத் தாது, மோலிப்டெனம், வோல்லாஸ்டோனைட் போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரும்புத் தாது, கிரானைட், சைனா களிமண் போன்றவை கிடைக்கின்றன. காஞ்சி மாவட்டத்தில் ஃபெல்ட்ஸ்பார், ஃபயர்கிளே, கிரானைட், லைம்ஸ்டோன், குவார்ட்ஸ், சிலிக்கா மண், சைனாகளிமண் ஆகியன கிடைக்கின்றன.
இந்தத் தாதுக்களை வெட்டி எடுத்து விரைவாக சென்னைத் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதற்கு வசதியாகத்தான் இந்த விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் விளைவாக மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள இயற்கை வளங்கள் வரைமுறையில்லாமல் சூறையாடப்படும். மேலும் இந்த சாலையின் இருபுறங்களிலும் அலுமினியம், கண்ணாடி, சிலிக்கான், செராமிக் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் திட்டமும் உள்ளது. இத்தொழிற்சாலைகளுக்காக விவசாயிகளிடமிருந்து மேலும் நிலம் பறிக்கப்படும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள  நிலம், வன நிலம், விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலம் ஆக எல்லாம் சேர்ந்து இத்திட்டத்திற்காக சுமார் 5,600  ஏக்கர் நிலம் தேவைப்படும்.
சேலம் எஃகு தொழிற்சாலை, நெய்வேலி  நிலக்கரி, அனல்மின் திட்டம் போன்ற திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.ஆனால், இத்திட்டங்கள் யாவும் அரசின் திட்டங்களாகும். இவற்றால் கிடைக்கும் ஆதாயம் அரசுக்கும், அதன் மூலம் மக்களுக்கும் போய்ச் சேருகிறது. ஆனால், தனிப்பட்ட பெரும் தொழில் நிறுவனங்களின் ஆதாயத்திற்காக சேலம் - சென்னை விரைவுச்சாலை திட்டம் நிறை வேற்றப்படுவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது.  
உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலம் அளிக்கும் விவசாயி களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எந்தத் திட்டத்திற்காக நிலம் எடுக்கப்படுகிறதோ,  அந்தத் திட்டத்திலிருந்து கிடைக்கும் ஆதாயத்தில் அவர்களுக்குப் பங்கு அளிக்கப் படுகிறது. அதுபோன்ற நிலைமை இத்திட்டத்தில் அறவே  இல்லை.
அ.தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையிலோ, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையிலோ இத்திட்டம் குறித்து குறிப்பிடப்படவே இல்லை. வேறு எந்தக் கட்சியும் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கவும் இல்லை. மக்களும் கேட்கவில்லை.  யாருக்காக இத்திட்டம் அவசரஅவசரமாக நிறைவேற்றப்படுகிறது?
இந்த அநீதியை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். கூட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இம் என்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம்! என பாரதி பாடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களையும் தங்களது வாழ்வாதாரமான  நிலங்களையும் காக்கப் போராடும் மக்களுக்கு எதிராகக் கடும் ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலைபெறவேண்டும் என்ற போராட்டத்திற்குத் தலைமை  தாங்கிய காந்தியடிகள் விவசாயிகளின் துயர் துடைக்கும் போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் என்பது வரலாறாகும்.  ஏனெனில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60% பேர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கிராமப்புற நிலங்களையே நம்பியிருக்கிறார்கள் என்ற உண்மையை அவர்  நன்கு  உணர்ந்திருந்தார்.  1917ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் சாம்பரான் விவசாயிகளை தங்கள் நிலத்தில் ஒரு பகுதியில் அவுரி பயிரிடுமாறு ஆங்கிலேய ஆட்சி வற்புறுத்தியது. இங்கிலாந்தில் உள்ள துணி நெசவாலைகளுக்கு வேண்டிய சாயம் அவுரி செடிகளிலிருந்து எடுக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள் கொடுமைப்படுத்தப்பட்டபோது அவர்களை மீட்பதற்காக சாம்பரான் விவசாயிகள் போராட்டத்தை  காந்தியடிகள் இராசேந்திர பிரசாத்  தலைமையில்  நடத்தினார். அதைபோல குசராத் பர்தோலி மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு அதிகமான நிலவரி விதிக்கப்பட்ட போது அதற்கு எதிரான போராட்டத்தை வல்லபாய் படேல் தலைமையில் காந்தியடிகள்  நடத்தினார். ஆனால் இந்தப் போராட்டங்களின் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்களுக்கு உணர்வூட்டினார். காந்தியடிகள் இயற்கையை நேசித்தார். தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க விரும்பினார். அவர் கண்ட கிராம அரசுக் கனவு அவரது 150ஆவது பிறந்த ஆண்டில் சிதைக்கப்படுகிறது. வாழையடி வாழையாக வாழ்ந்த தங்களின் மண்ணில்  இருந்தும், வேளாண்மை தொழில்களிலிருந்தும் மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். வளர்ச்சி என்ற பெயரால் இந்த அநீதியை இழைக்க இந்திய, தமிழக அரசுகள் துணிந்துவிட்டன. ஏழை உழவர்கள் சிந்தும் கண்ணீர் கூரிய வாளொக்கும் என்பதை உணரவேண்டியவர்கள் உணரவேண்டும்.
 நன்றி  - தினமணி - 23-07-2018