தமிழகப் பொருளாதாரத்தைச் சுழற்றி வீசிய கடுமையான கஜா புயல் - பூங்குழலி - கவின் மலர் அச்சிடுக
புதன்கிழமை, 16 ஜனவரி 2019 12:30

சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வேகமாகப் பரவியது. ஒரு வாகனத்தின் பின் மக்கள் உணவுக்காகக் கையேந்தியவண்ணம் ஓடும் காணொளிதான் அது.

சென்னையை வெள்ளம் தாக்கிய போது உலகெங்கும் அதன் தாக்கம் உணரப்பட்டது. ஆனால் கஜாப் புயலின் தாக்கம் தமிழ் நாட்டளவிலேயே முழுமையாக உணரப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
தமிழக அரசு கஜாப் புயல் 8 மாவட்டங்களைத் தாக்கியதாக அறிவித்துள்ளது. இவற்றில் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பண்டைய சோழ நாட்டின் பகுதிகளான இந்த மாவட்டங்கள், காவிரி நீர்ப் பாசனப் பகுதியில் அமைந்துள்ளவை. சங்கத் தமிழ்ப் பாடல் வரியான சோழவள நாடு சோறுடைத்து என்ற சொல்லுக்கேற்ப, ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உழவை தங்கள் முதன்மைத் தொழிலாகக் கொண்டவை இம்மாவட்டங்கள்.  இன்று வரை தமிழகத்தின் நெற் களஞ்சியம் என்று தஞ்சைப் போற்றப்படுகிறது.
இயற்கையிலேயே வளமான நிலம் கொண்ட இம்மாவட்டங்கள், காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், வாய்க்கால்களை தங்கள் பாசனத்திற்கு நம்பி உள்ளன. 1960-க்குப் பிறகு காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் பல அணைகள் கட்டப்பட்டப் பின்னர் இம்மாட்டங்களுக்கான நீர் வரத்து பெருமளவு குறைந்தது.
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை
என்று மணிமேகலை காப்பியம் காவிரியை வற்றா நதி எனப் போற்றுகிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் காவிரியின் வற்றாத் தன்மை மாறிப் போனது.
இம்மாவட்டங்களில் பெரும்பாலும் ஆண்டுக்கு இரு முறை நெல் பயிரிடப்படுகிறது. குறுவை காலம் என்பது மே மாதம் தொடங்கி சூன், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். சம்பா காலம் என்பது ஆகஸ்டு மாதம் தொடங்கி சனவரி வரை நீடிக்கும். குறுவை காலம் என்பது தென் மேற்கு பருவ மழையைச் சார்ந்துள்ளது. சம்பா காலம் வடகிழக்குப் பருவ மழையைச் சார்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள இம்மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையே அதிகம் மழையைத் தரக் கூடியது. குறுவை காலத்தில் கர்நாடகம் அணையிலிருந்து நீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர் பயன்பெறும். அதனால்தான் குறுவை காலத்தில் காவிரி நீருக்கானப் போராட்டங்கள் பரவலாக நடப்பதைப் பார்க்கலாம்.
சம்பா காலம் பெரிதும் கர்நாடகத்தை நம்பி இராமல் வடகிழக்குப் பருவ மழையை நம்ப இருப்பதால், குறுவை காலத்தில் பயிரிடாதவர்கள் கூட சம்பா காலத்தில் பயிரிடுவார்கள். இவ்வாறு ஏறத்தாழ அனைத்து நிலங்களும் பயிரிடப்பட்டிருந்த சம்பா காலத்தில்தான் இந்த கஜாப் புயல் நெற்பயிர்களை அடியோடு தரை மட்டமாக்கியது.
கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின் படி 2015-16-ஆம் ஆண்டு சம்பா காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1,09,799 ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரி டப்பட்டிருந்தது. அதன்படி கஜாப் புயல், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 1 இலட்சம் ஹெக்டேர் நிலத்தில் இருந்த நெற்பயிர்களைச் சரித்துள்ளது. ஒரு ஹெக்டேரில் 1000 கிலோ நெல் விளையும். அப்படியாயின் 1 இலட்சம் ஹெக்டேரில் ஒரு இலட்சம் டன் நெல் சரிந்துள்ளது. இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும்.
நாகை மாவட்டம்தான் தமிழகத்திலேயே அதிகமாக நெல் பயிரிடும் மாவட்டமாகும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் குறிப்புப்படி நாகை மாவட்டத்தில் 1,54,040 ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது. இரண்டாவதாக திருவாரூர் மாவட்டத்தில் 1,51,629 ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது. இவற்றில் சரிந்த நெற் பயிர்களையும் கணக்கில் கொண்டால், குறைந்தது 4 இலட்சம் டன் நெற் பயிர்கள் கஜாப் புயலால் சரிந்துள்ளதை அறியலாம். இது நெற் பயிரில் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே.
1990-களில் காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல் அதிகரித்தக் காலகட்டத்தில், ஆற்றின் கடைமடைப் பகுதியில் உள்ள நாகை மாட்டத்தில் நெல் விளைந்த நிலங்களில் ஒரு கணிசமான அளவு தோப்புகளாக மாற்றப்பட்டன. குறிப்பாக தென்னை, மா, பலா மற்றும் முந்திரி தோப்புகள் பெருகின.
1994-95 காலப்பகுதியில், நாகை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 1,46,000 ஹெக்டேர் நிலம் தோப்புகளாக மாறியுள்ளதாக நெல் வளர்ச்சி ஆணையம் தெரிவிக்கிறது. தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகையும் புதுக்கோட்டையும் அதிக அளவு தென்னை மரங்களைக் கொண்டுள்ள மாவட்டங்களாகும். தமிழக அரசு ஏறத்தாழ 1 கோடி தென்னை மரங்கள் கஜாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்னமும் முழுமையான கணக்கெடுப்பு எடுக்கப் படவில்லை. 1 கோடி தென்னை மரங்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு மரம் ஆண்டொன்றிற்கு குறைந்தது 60 தேங்காய்கள் தரும் என்ற கணக்கின் படி இனி வரும் ஆண்டுகளில் 60 கோடி தேங்காய்கள் உற்பத்தி இருக்காது.
ஒரு ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு உருவாக்கக் குறைந்தது                       ரூ. 88,000-மும் 5 ஆண்டுகளும் ஆகும் என்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். தென்னையின் வகையைப் பொறுத்து குறைந்தது ஆறாம் ஆண்டில்தான் விளைச்சலைப் பார்க்க முடியும். அது வரை அந்த விவசாயிகளின் நிலை என்ன என்பது மிகப் பெரும் கேள்வியாகும்.
பொதுவாக தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சிறு விவசாயிகள் வகையில்தான் வருவார்கள். பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கிப் பயிரிட்டு, அறுவடைக்குப் பின் கடனை அடைப்பது வழக்கம். இந்தக் கடன்கள் பெரும்பகுதி தனிப்பட்டவர்களிடம் வாங்கப்பட்டவையாகவே உள்ளன. ஏற்கெனவே காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல் காரணமாக இப்பகுதியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து இருப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கஜாப் புயலின் பாதிப்பைப் பார்க்கும் போது, இந்த விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. பொதுவாக அதிக மழை, வெள்ளம் அல்லது வறட்சிப் போன்ற காரணங்களால் பயிர்கள் பாதிக்கப்படுவதற்கும் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. பிற காரணங்களினால் பயிர்கள் மட்டுமே பாதிப்படையும். விவசாயிகளும் ஏதோ ஒரு வகையில் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். ஆனால் இம்முறை கஜாப் புயல் பயிர்களை மட்டும் அழிக்கவில்லை. விவசாயிகளின் வீடுகள், கால்நடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், விவசாய உபகரணங்கள், நீர்ப் பாசன உபகரணங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட அவர்களின் நம்பிக்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டு நிற்கிறது. அதற்கு காரணம் தமிழக அரசின் பாராமுகம்.
தோப்போ, வயலோ, சரிந்துள்ள பயிர்களையும் மரங்களையும் அப்புறப்படுத்தி நிலத்தைத் தயார் செய்ய வேண்டிய பணமே இந்த விவசாயிகளிடம் இல்லை என்பதுதான் கொடுமையான நிலை. அதிலும் சரிந்துள்ள தென்னை மரங்களை அப்புறப் படுத்துவது என்பது எளிதான காரியமன்று. வேரோடு அதை பிடுங்குவதற்கு ஜே.சி.பி. போன்ற உபகரணங்கள் தேவை. அவற்றிற்கு வாடகை கொடுத்து ஆட்களை அமர்த்தி நிலத்தை சீர் செய்வது என்பது நினைத்தாலே மலைப்பான காரியமாக உள்ளது. இவ்வளவும் செய்து, மீண்டும் பயிரிட்டு விளைச்சலுக்காக 5 ஆண்டு வரை காத்திருப்பதற்கான பணமும் திடமும் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது பெரிய கேள்வி.
தமிழக அரசு இடிந்த வீடுகளைக் கணக்கெடுத்து வருகிறது. மிக மெதுவாக நடந்து வரும் அந்தப் பணியில், டிசம்பர் மாத முதல் வாரம் வரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் 4 தாலுகாக்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மட்டும் ஒரு இலட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. முழுதும் சேதமடைந்த வீட்டிற்கு ரூ.10,000 மற்றும் பகுதி சேதமடைந்த வீட்டிற்கு ரூ.4,000 தருவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பணம் எப்படி போதுமானதாக இருக்க முடியும்?
நாகப்பட்டினமும் புதுக்கோட்டையும் கடலோர மாவட்டங்கள். புயல் அடித்த போது கரையோரத்தில் உள்ள கிராமங்களில் இருந்த படகுகள் பெரும்பாலானவை தூக்கியெறியப்பட்டன. இன்று வரை கடற்கரையெங்கும் உடைந்த படகுகளை காணலாம். ஏறத்தாழ அனைத்துப் படகுகளிலும் மோட்டார் இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்ய இலட்சக்கணக்கில் பணம் தேவை. இதனால் மீன்பிடி தொழில் முழுவதுமாகப் படுத்துவிட்டது.
வார்தா புயல் சென்னையைத் தாக்கிய போது 10,000 மின்கம்பங்கள் சரிந்ததாக சொல்லப்பட்டது. அதை சீர் செய்ய 3- முதல் 10 நாட்கள் தேவைப்பட்டன. அதற்கே அரசு மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் புயல் அடித்து ஒன்றரை மாதம் ஆன போதும் இன்னமும் மின் வசதி மீட்டெடுக்கப்படாத கிராமங்கள் உள்ளன. ஆனால் அது குறித்துப் பேசுவார் இல்லை. மின் வசதி இல்லாத காரணத்தினால் பிற சிறு தொழில்களும் இயங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் நெசவு, இசைக் கருவிகள் செய்தல், சிற்பம் போன்ற பல சிறு தொழில்களுக்கு புகழ் பெற்ற மாவட்டங்களாகும். ஆனால் இன்று வரை இத்தொழில்களும் முழுமையாக இயங்க இயலா நிலையில் உள்ளன.
புயலில் அடிபட்டு எண்ணிலடங்கா கால்நடைகள் மாண்டு போயின. புயல் அடித்து ஒரு மாதத்திற்குப் பிறகும் கூட இறந்த ஆடு மாடுகளின் சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததை காண முடிந்தது. இந்த சடலங்களே தாங்கள் இந்த ஆடு மாடுகளை ஒரு காலத்தில் சொந்தமாக வைத்திருந்ததற்கான சான்றுகள் என்ற நிலையில் அதன் உரிமையாளர்கள் அரசு ஒருவேளை கணக்கெடுப்பு நடத்தி நட்ட ஈடு தருமோ என்ற நப்பாசையில் சடலங்களை அப்புறப்படுத்தாமல் இருக்கின்றனர். ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என்பதும் இந்த மாவட்டங்களில் முக்கிய தொழில்களில் ஒன்றாக இருந்தது. அதுவும் அழிந்தது.
விவசாயம், மீன் பிடி, சிறுதொழில்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என அனைத்துத் தொழில்களும் அழிந்த நிலையில், இத்தொழில்களில் அன்றாடக் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த உழைக்கும் மக்களின் நிலை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. அவர்கள் வாழ்ந்த குடிசை வீடுகளின் கூரைகள் பறந்து விட்டன. பெரும்பாலான சுவர்கள் இடிந்து விட்டன. வெறும் குட்டிச் சுவர்களாய் நிற்கும் வீடுகளுக்குள்ளும் உள்ளே நுழையவே முடியாத வண்ணம் சேறு சகதியும் மண்டிக் கிடக்கின்றன.
வீட்டையும் பொருட்களையும் இழந்து ஏதிலிகளாக அம்மக்கள் நிற்கின்றனர். பேருந்து நிறுத்தக் குடைகளிலும் எஞ்சிய மரங்களுக்கு அடியிலும் தஞ்சம் புகுந்து நிற்கின்றனர். முதலில் சில நாட்கள் அரசு முகாம்கள் நடத்தியது. அதிலும் கூட்டம் நிரம்பி  வழிந்தது. பெண்களும் குழந்தைகளும் அதனுள் தங்க வாய்ப்புத் தந்து ஆண்கள் தெருக்களில் தூங்கியதை காண முடிந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த முகாம்கள் இயங்கி வந்த பள்ளிகளைத் திறக்க வேண்டும் என கூறி இம்மக்களை வெளியேற்றியது அரசு. இரவு மட்டும் தங்க மக்கள் அனுமதி கேட்ட போது அதையும் இரக்கமின்றி அரசு மறுத்து விட்டது. அதன் பிறகு மக்கள் உண்மையாகவே தெருவிற்கு தள்ளப்பட்டனர். ஓரளவு தப்பித்த வீடுகள் பல குடும்பங்களுக்கு தஞ்சம் அளித்தன. தார்பாலின் விரிப்புகள் கூரைகளாகப் பயன்படுகின்றன. மழை பெய்தால் மக்களின் நிலை, குறிப்பாக குழந்தைகளுடன் இருப்பவர்களின் நிலை மிகவும் மோசமானதாக ஆகிவிடுகிறது.
தங்க இடமின்றி, வேலையின்றி, வருமானமுமின்றி உழைக்கும் மக்கள் உணவின்றி வாடுகின்றனர். அதன் விளைவே நாம் இக்கட்டுரையின் தொடக்கத்தில் விவரித்தக் காட்சியாகும். மக்கள் உணவுக்காக கையேந்தி ஓடும் வாகனத்தின் பின் ஓடுகின்றனர்.
பரப்பு நீர் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் பரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்
என்று சிலப்பதிகாரம் சோழ நாட்டு மக்களைப் பற்றிக் கூறுகிறது. அதாவது காவிரியாற்றின் புதல்வர், உணவுத் தேவைப் படும் அனைவருக்கும் மட்டுமல்லாது, அரசனின் தேவைக்கும் சேர்த்து விளைவிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். அந்த சோழநாட்டு மக்களைத்தான் இன்று ஒரு வேளை உணவிற்கு கையேந்தும் நிலைக்கு நாம் தள்ளியிருக்கிறோம். கஜாப் புயல் மட்டுமே இதற்கு காரணமல்ல. உடனடியாக உதவிக்கு வராத அரசும் பாதிப்பை முழுதும் உணராத தமிழ்நாட்டின் பிறப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் உலகத் தமிழர்களும் அனைவரும் இதற்குப் பொறுப்பாவோம்.
இன்று பலரும் அந்த மக்களுக்கு உணவளிக்கவும் உதவி செய்யவும் முன் வந்துள்ளனர். ஆனால் எத்தனை நாளைக்கு உணவளிக்க முடியும்? அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதே இன்றையத் தேவை. அது நடக்க வேண்டுமெனில் இந்திய அரசுக்கு தமிழக அரசு போதுமான அழுத்தம் தர வேண்டும்.
4 இலட்சம் டன் நெல் பயிர் இழப்பும் ஏறத்தாழ இனி வரும் 5 ஆண்டுகளுக்கு 6 கோடி தேங்காய்கள் இழப்பும் தமிழகப் பொருளாதாரத்தையே உலுக்கக் கூடியவை. இதை தமிழக அரசு உணர்ந்து இந்திய அரசுக்கும் உணர்த்த வேண்டும். அது உடனடியாக நடக்காவிட்டால் பல விவசாயிகளின் தற்கொலைகளையும் உழைக்கும் மக்கள் இடம் பெயரும் அவலத்தையும் நாம் காண நேரும்.
பல நூற்றாண்டுகளாக நமக்கு உணவளித்த மக்களை மீட்பது நம் கையில்தான் உள்ளது.